காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

இன விரிசலின் பின்புலத்தில் நிலவும் அறிவீனம்

Posted by Kattankudi Web Community (KWC) on 23/02/2013

-writeஅஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)-

இலங்கை முஸ்லிம்களுக்கும் சிங்கள சமூகத்துக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் குறிப்பிடுகிறார்.

கடந்த 09.02.2012 வெளியிடப்பட்ட ‘முஸ்லிம் நீதிய’ எனப்படும் அவரது 1046 பக்கங்களைக் கொண்ட நூலின் இறுதிப் பந்தியில் அவர் அவ்விரு காரணங்களையும் பின்வருமாறு விளக்குகிறார்.

‘‘இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்கள இனத்தவருக்கும் இடையிலான சகவாழ்வு சீர்குலைந்து போனதற்கு ஏதுவாக அமைந்த காரணிகளாக முஸ்லிம் அரசியல் தனித்துவத்தை கட்டியெழுப்புவதற்காக முஸ்லிம் இனவாத அரசியல் சக்திகள் உருவாகியமை மற்றும் முஸ்லிம் இனம் பற்றியும், இஸ்லாமிய மதம் பற்றியும் ஏனைய மதத்தவர்களுக்கு மத்தியில் போதிய தெளிவின்மை என்பவற்றை குறிப்பிடலாம். இந்த தெளிவின்மையை நிவர்த்தி செய்ய இந்த நூலின் வாயிலாக ஏதாவது பங்களிப்பு கிட்டுமாயின் இந்த ‘முஸ்லிம் நீதிய’ நூலை எழுதுவதற்கு நான் எடுத்த அதி தீவிர முயற்சி பற்றி நான் சந்தோசமடைய முடியும்’’ எனக் கூறுகிறார். (பக்: 1009)

அவர் இந்நூலுக்கு வழங்கியுள்ள முகவுரையில் இஸ்லாம் பற்றிய தப்பான கருத்துக்கள் நிலவுவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்:

‘‘இலங்கையிலுள்ள முஸ்லிம் பக்தர்கள் அல்லாத சகலரும் ஏன் நானும் கூட இஸ்லாம் பற்றிய சொற்பமான அறிவையே பெற்றிருப்பதன் காரணமாகவும், இலங்கை முஸ்லிம் பக்தர்கள் அந்த மார்க்கத்தை மூடுண்ட நிலையில் பின்பற்றுவதன் காரணமாகவும், அந்த மதம் பற்றி இலங்கை மக்களுக்கிடையே பிழையான அபிப்பிராயம் தான் நிலவுகிறது என்ற உண்மையை இந்த ஆய்வினூடாக என்னால் புரிய முடிகிறது’’ எனக் கூறுகிறார்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் வழக்கறிஞர்கள் செய்திருக்க வேண்டிய பணியில் ஈடுட்ட ஒரு பெளத்தரான ஹேரத் அவர்கள் முஸ்லிம் சமூகம் பற்றிய தனது கண்ணோட்டத்தை இவ்வாறுதான் முன்வைக்கிறார். அவரது கருத்து மிகவுமே தெளிவானதும் சரியானதுமாகும். அதாவது தற்போது நாட்டில் நிலவும் முஸ்லிம், சிங்கள இன விரிசல்களுக்கான காரணங்களில் பிரதானமாக இரண்டு காரணங்களை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

1. முஸ்லிம்களது வாழ்வில் இஸ்லாமிய போதனைகள் இல்லாமை.

2. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவு இல்லாதிருப்பது.

இதில் முதலாவது பகுதி பற்றி ஏலவே பலரும் பேசியும் எழுதியும் வருவதனால் இரண்டாவது பகுதி பற்றி சற்று ஆராய வேண்டியிருக்கிறது.

இரு நபர்களுக்கிடையில் இரு குடும்பங்க ளுக்கிடையில் இரு சமூகங்களுகிடையில் நல்லுறவும் சமாதான, சகவாழ்வும் நிலவ வேண்டுமாயின் அங்கு பரஸ்பர புரிந்துணர்வு மிகவுமே அவசியப்படுகிறது. பரஸ்பர புரிந்துணர்வு பணத்தாலோ, அதிகாரத்தாலோ, பலாத்காரத்தாலோ கட்டியெழுப்பப்படுவதில்லை. அதற்கு அறிவுதான் துணை செய்யும். இன நல்லுறவும் அப்படியானதே. ஓர் இனம் மற்றைய இனத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள், வரலாற்றுத் தடயங்கள் போன்றன பற்றி தெளிவாகத் தெரிந்திருப்பது அவசியமாகும். அந்த அறிவு பரஸ்பர நல்லுறவுக்கும் நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அறிவு சந்தேகங்களை களைய உதவும் என்பதுடன் கருத்துப் பரிமாறலுக்கான வாயில்களைத் திறந்துவிடும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த உண்மை பொருந்தும். அந்தவகையில் சட்டத்தரணி ஹேரத் சமாதான சகவாழ்வு பாதிக்கப்பட்டமைக்கான காரணத்தை மிகச் சரியாக இனம் கண்டுள்ளார்.

முஸ்லிம் சமூகம் பிற சமூகங்கள் பற்றி அறிந்திருப்பது மிகவுமே குறைவு என்பது ஒரு புறமிருக்க இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தும், இன்னும் தம்மைப் பற்றிய சரியான அறிவை சிங்கள சமூகத்துக்கு வழங்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதற்கான பல சான்றுகள் உள்ளன.

1. ஹலால், ஹராம் பற்றி இப்போது தான் நாம் சிங்களத்தில் விளக்க முயற்சிக்கிறோம். உணவில் மட்டுமின்றி குடும்ப வாழ்வு, ஆடை, சம்பாதிப்பு அனைத்திலும் இஸ்லாத்தில் ஹலால், ஹராம் பார்க்கப்படுகிறது என்று தெளிவுபடுத்த அதி தீவிர முயற்சி எடுக்கிறோம்.

2. அல்குர்ஆனுக்கான தரமான மொழிபெயர்ப்புக்கள் சிங்கள மொழியில் ஓரிரு வருடங்களுக்குள் தான் வெளிவந்தவண்ணமுள்ளன.

3. நாம் அறிந்த வகையில் ரியாளுஸ் ஸாலிஹீனுக்கான மொழி பெயர்ப்பை தவிர்ந்து வேறு எந்த ஹதீஸ் நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை.

4. இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய தெளிவை நாம் இதுவரை சிங்கள மொழியில் வழங்காததனால், இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் பற்றிய மிக மோசமான தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ரிஸானா நபீக்கின் விவகாரத்தைத் தொடர்ந்துதான் ஆங்காங்கே சில தெளிவுகள் வழங்கப்படுகின்றன. இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிக் கூட முஸ்லிம் அல்லாத ஒருவர் நூலை எழுதும்வரை நாம் எதுவும் செய்யவில்லை.

5. முஸ்லிம் பெண்களது ஆடை, குர்பான் கொடுக்கும் முறை, பள்ளிவாயலுக்குள் இடம்பெறும் இபாதத்துக்கள், நோன்பிருக்கும் விதம் பற்றியெல்லாம் கிளப்பப்படும் ஐயங்களுக்கு நாம் தெளிவுகளை வழங்காததால் பெரும்சங்கடங்களில் சிக்கி வருகிறோம்.

முஸ்லிம்கள் சூடேற்றப்பட்ட ஒரு கல்லின் மீது ஏறி நின்றுதான் மிருகங்களை கொடூரமாக அறுக்கிறார்கள் என அண்மையில் ஒரு கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறினார். முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் ஆடையானது சவூதி அரேபிய கலாசாரமென்று சிலரும், அது தாலிபானிய மரபு என்று வேறு சிலரும் எழுதியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னால் ரமழான் மாத பகல் காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் தேநீர் பரிமாறப்பட்ட வேளை முஸ்லிம்கள் அதனை குடிக்காததை அவதானித்த பெளத்த மத குரு ஒருவர், உங்களது நோன்பின்போது நீர் ஆகாரத்தை எடுப்பதும் அனுமதிக்கப்படவில்லையா என்று கேட்டார். அவருக்கு உண்மையாக அது பற்றி தெரிந்திருக்கவில்லை என அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நண்பர் என்னிடம் கூறியது ஞாபகம் வருகிறது.

6. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுக்காக வழங்கப்பட்ட கருத்துக் கணிப்பு வினாக்கொத்தில் முஸ்லிம்கள் வணங்கும் இறைவனின் பெயர் யாது என்ற ஒரு வினா இருந்தது. அதற்கு ஒரு சிங்கள பாடசாலையின் அதிபர் ‘‘முஹம்மத்’’ என பதிலளித்திருந்தார்.

நாம் வணங்கும் இறைவனின் பெயரைக்கூட இந்த நாட்டின் பெளத்தர்களில் ஒருவர் அதுவும் ஒரு கல்விமான் தெரியாதிருப்பது பெரும் விந்தையாகும்.

7. ‘‘இணை வைப்பாளர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள்’’ என்ற குர்ஆனிய வசனத்தை அரபியில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் இணைத்து குளியாப்பிட்டிய சம்பவத்தின்போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் விநியோகத்தார்கள். அந்த வசனம் முஸ்லிம் அல்லாத சகலரையும் கொலை செய்யும்படி நேரடியாவே கூறுவதாக பெளத்தர்களின் சிலர் கூறுகிறார்கள். இது மக்கத்து காபிர்கள் பற்றி வந்த வசனமேயன்றி உலகிலுள்ள எல்லா பிற சமயத்தவர்களையும் பற்றிக் கூற வந்ததல்ல என்று அது இறங்கிய பின்னணியை பார்த்தால்தான் புரியலாம்.

மேற்சொன்ன சான்றுகளை வைத்து நோக்கும்போது இந்த நாட்டில் சுமார் 90% ஆன பிற சமயத்தவருக்கு எமது மார்க்கம் பற்றிய போதிய தெளிவு கிட்டவில்லை என்று கூற முடியும். இதற்கு நாம் மூடுண்ட ஒரு வாழ்வை மேற்கொள்வதும் ஒரு காரணமாகும். பிற சமயத்தவரோடு நாம் பழகுவது குறைவு என்பதுடன் அவ்வாறு பழகினாலும் மார்க்கத்தின் போதனைகளைப் பற்றி கூறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டினாலும் அதனைச் செய்யாதிருக்கிறோம். இஸ்லாம் பற்றி அவர்கள் சிலபோது சில கேள்விகளை எழுப்பும்போது உரிய பதில்களைக் கொடுப்பதற்கு முதலில் அது விடயமான தெளிவு எமக்கிருப்பதில்லை. அந்தத் தெளிவு இருந்தாலும் மொழியும் ஒரு தடையாக இருக்கிறது. சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பாலானோருக்கு இஸ்லாம் பற்றிய தெளிவு போதாமலிருப்பதால் அவர்களுக்கு மொழியறிவு இருந்தும், விடயதானம் சம்பந்தமான அறிவு பற்றாக்குறையாக இருப்பதால் இந்த நிலை உருவாகிறது.

சிங்கள மொழியில் வெளிவந்துள்ள இஸ்லாமிய நூல்கள் இலங்கை சிங்கள சமூகத்தின் தேவையோடு ஒப்பிடுகையில் 5% ஐயும் எட்டவில்லை எனலாம். சிங்கள மொழியிலான வெப் தளங்கள் விரல் விட்டு எண்ணத் தக்கவை மாத்திரமே. அவற்றை ஆய்வு செய்து பார்க்கையில் இஸ்லாத்தை துறை போகக் கற்ற அதேவேளை, சிங்கள மொழியிலும் தேர்ச்சிமிக்கவர்களது ஆக்கங்கள் அங்கு மிகக் குறைவாக இருப்பதனால் சிலபோது இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்து மேற்கோள்காட்டி நவீன தேவைகளோடு அவற்றை ஒப்பு நோக்கி அவை எழுதப்படாத குறையை அவதானிக்க முடிகிறது.

‘பிரபோதய’ எனும் சஞ்சிகை காத்திரமான ஒரு பங்களிப்பை செய்த போதிலும் சமூகத் தேவைக்கு முன்னால் அது எவ்வகையிலும் போதாது என்று கூறலாம்.

இந்நாட்டில் 20 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்தும் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிங்களத்தில் கலந்துரையாடல்கள், விவாதங்களைச் செய்வதற்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஆட்களைத் தேடுவது மிகவும் கடினமான காரியமாகிவிட்டது. சிங்கள மொழியில் நல்ல தேர்ச்சி இருக்கும். ஆனால் இஸ்லாமிய ஞானங்களில் ஆழமிருக்காது. அல்லது இஸ்லாமிய அறிவு ஞானமிருக்கும். சிங்கள மொழிப் பாண்டித்தியமிருக்காது. அல்லது இரண்டுமிருக்கும். சமயோசிதமோ வாதத்திறனோ, சமகாலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக தீட்டப்படும் சதிகள் பற்றிய தெளிவோ இருக்கமாட்டாது. அதாவது ஒன்றிருந்தால் இன்னொன்றில்லை என்ற நிலை தோன்றியிருக்கும்.

எமது கையில் உள்ள சத்தியமான இஸ்லாத்தை பிறருக்கு சேர்ப்பிப்பதற்கான சரியான உத்திகள் கையாளப்பட வேண்டும். இந்த நிலையைப் பற்றி கருத்து வெளியிடும் நவீன கால அறிஞர் அஷ்ஷெய்க் அல்- கஸ்ஸாலி, ””இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் பக்கமே நியாயமிருக்கிறது. ஆனால் அதற்கு சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள்தான் கையாலாகதவர்களாக இருக்கிறார்கள்’’ என்கிறார். அதாவது சத்தியத்தின் காவலாளிகளாக இருப்போர் பலவீனர்களாக இருப்பதனால் சத்தியமும் சேர்ந்து தோற்றுப் போகிறது என்பது அவரது அபிப்பிராயமாகும்.

இலங்கையின் குடித்தொகையில் சுமார் 75 சதவிகிதமானவர்களான சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்ட பெளத்த, கிறிஸ்தவ சமயத்தவர்களுக்கு நாம் எமது மதத்தை எத்தி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். குர்ஆன் ‘‘மனிதர்களுக்கான வழிகாட்டி’’. முஹம்மது (ஸல்) அவர்கள் உலகத்தாருக்கான அருட்கொடை என்றுதான் குர்ஆன் கூறுகிறது. அந்த வகையில் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்ற முதுமொழிக்கு அமைய மாத்திரமின்றி தஃவாப் பணி ஒவ்வொரு முஸ்லிமின் மீதான பர்ளு கிபாயாவாக இருப்பதால் குர்ஆனை சுன்னாவை அவை எமக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடும் உரிமை எந்த முஸ்லிமுக்கும் இல்லை. இஸ்லாத்தை மறைப்பது பயங்கர குற்றமாகும். அவ்வாறு மறைப்பவர்களை அல்லாஹ் தனது அருளைவிட்டும் துரத்திவிடுவதாக குறிப்பிடும் வசனம் சூரா பகராவில் இடம்பெற்றுள்ளது. (2:159)

இஸ்லாமிய தஃவாப் பணியைச் செய்வது பற்றித்தான் நாம் சிந்திக்காது விட்டாலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய சந்தேகங்களைக் களைவதற்காவது முயற்சி எடுப்பது காலத்தின் தேவையும் மார்க்கக் கடமையுமாகும். தப்பபிப்பிராயங்கள் நிலவும் காலமெல்லாம் சந்தேகங்கள் வலுவடையும். சந்தேகங்கள் நிலவ ஆரம்பித்தால் பரஸ்பர உறவு பாதிக்கப்படும்; உதவி, ஒத்தாசைகள் இடம்பெறாது. சமூக வாழ்வில் விரிசல்கள் ஏற்பட்டு ஈற்றில் அது வன்முறைகளுக்கு இட்டுச் செல்லும். இலங்கையில் நாம் அந்தக் கட்டத்துக்கு வந்திருக்கிறோம் எனலாம்.

பெரும்பான்மை பெளத்தர்கள் முஸ்லிம்களைப் பற்றி மனதில் கொண்டிருக்கும் கருத்துக்கள் பாரதூரமானவையாகும். இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை கிடையாது. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது; இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை; இஸ்லாத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே பெளத்த நாடுகளாக இருந்த பல நாடுகளின் மக்கள் படுமோசமாகக் கொல்லப்பட்ட பின்னரே அங்கு இஸ்லாம் நுழைந்தது போன்ற கருத்துக்களை சர்வதேச ரீதியாக இஸ்லாமிய எதிரிகள் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். இந்த சந்தேகங்கள் நமது நாட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டன. இந்த பின்னணியிலிருந்துதான் பெளத்தர்கள் முஸ்லிம்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது அவர்களது தவறாகும் என்று நாம் கூறினாலும் போதிய தெளிவை நாம் இதுவரை வழங்காதிருப்பது நிலைமையை மோசமடையச் செய்திருக்கிறது. பாமியான் புத்தர் சிலை உடைப்பு, பங்களாதேஷில் சிலைகள் உடைப்பு, ரிஸானா நபீக் மரண தண்டனை, தலிபான்களதும் அல்-கொய்தாக்களதும் நடவடிக்கைகள், Innocence of Muslim, விஸ்வரூபம் போன்ற திரைப்படங்கள், சாத்தானிய வசனங்கள், லஜ்ஜா போன்ற நூல்கள் , டென்மார்க் காட்டூன்கள் என்பன வெளி வந்தன. பின்னால் இந்த நாட்டில் இஸ்லாத்திற்கெதிரான வெறித்தனமான சூறாவளிச் சிந்தனைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இஸ்லாம் அறிவுக்கு முக்கியத்துவமளிக்கும் மார்க்கம் என்ற வகையிலும் கலந்துரையாடலுக்கு அது தூண்டுதல் வழங்கியிருக்கிறது என்ற வகையிலும் தூய மார்க்கத்தை காப்பாற்றும் பொறுப்பை நாம் சுமந்திருக்கிறோம்.

சர்வ உலகங்களது இரட்சகன் அல்லாஹ்விடமிருந்து வந்த இஸ்லாத்தில் அணுவளவேனும் பிழைகள் இல்லை என்றும் அதனை அமுல் நடத்தும் மக்கள் விடும் தவறு, இஸ்லாத்தின் தவறால் பார்க்கப்படாலாகாது என்றும் நாம் விரிவாகத் தெளிவுபடுத்த வேண்டும். சகல தொடர்பு சாதனங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். ””அவர்களோடு நீங்கள் மிகவுமே அழகிய வழிமுறையைப் பயன்படுத்தி கருத்துப் பரிமாறல் செய்யுங்கள்’’ என்று உரையாடலின் (Dialogue) அவசியத்தை அல்லாஹ் வலியுறுத்தினான். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக குறைஷியர்கள் வசைக் கவிபாடிய போது இஸ்லாத்தின் தரப்பை பலப்டுபத்த ஹஸ்ஸான் பின் தாபித் போன்ற கவிஞர்களை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். யூதர்களுடன் கடிதத் தொடர்பு வைக்கவும் அவர்களிடமிருந்து வரும் கடிதங்களை வாசிக்கவும் வசதியாக யூதர்களது ஸுரியானி மொழியைக் கற்கும்படி ஸைத் பின் தாபித் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பணிக்க அவர் இரு வாரங்களில் அம்மொழியைக் கற்றதாக வரலாறு கூறுகிறது. வலீத் இப்னு முகாரா முன்வைத்த வாதங்களை முறியடிக்க அல்லாஹ் சூறதுல் கலமில் சிறந்த அணுகுமுறைகளைக் கையாளுகிறான்.

மதக் கலந்துரையாடல்களது (Interfaith Dialogue) யுகத்தில் நாம் வாழுகிறோம். பிறருக்கு கூறுவதற்கு மட்டுமின்றி, பிறரிடமிருந்து செவிமடுக்கவும் நாம் பழக வேண்டும்.

ஆயுதத்தால் செய்யப்படும் யுத்தத்தை விட பேனாவால் சிந்தனையால் செய்யப்படும் யுத்தம் தாக்கமிக்கதும் நீடித்த விளைவுகளை தரவல்லதுமாகும். எனவே சிங்கள மொழியிலான நூல்கள், மத்ரஸாக்கள், வெப்தளங்கள் சஞ்சிகைகள், ஆய்வுகள், உபந்நியாசங்களுக்கான தேவை உள்ளது. பெளத்த முஸ்லிம் சகவாழ்வுக்கான அடித்தளங்களில் ஒன்றாகவும் இது அமையும்.

சிங்கள மொழியில் தேர்ச்சிமிக்க தாஇக்களை உருவாக்கவும் தரமான ஆய்வு ரீதியான நூல்களை வெளியிடவும் மனம்கவர் இஸ்லாமிய உபந்நியாசங்களை சிங்களத்தில் நிகழ்த்தும் பேச்சாளர்களை உருவாக்கவும் சகல ஊடக சாதனங்களை பயன்படுத்தி இஸ்லாத்தை தெளிவுபடுத்தவும் முஸ்லிம்களது பணம் செலவிடப்படவேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

சுன்னத்தான காரியங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செலவளிப்பதும் ஆடம்பரமான வைபவங்களுக்காக செலவளிப்பதும் இடைநிறுத்தப்பட்டு நாம் மேற்சொன்ன அறிவு மற்றும் தஃவா பணிகளில் மறுமையின் கூலியை எதிர்பார்த்து பயன்மிக்க அறிவுக்காவும் ஸதகதுல் ஜாரியாவுக்காகவும் எமது சொத்து செல்வங்கள் செலவளிக்கப்பட வேண்டும்.

அறிவை அறிவால் வெல்வது;கருத்தைக் கருத்தால் எதிர்ப்பது; ஆதாரங்களை ஆதாரங்களால் முறியடிப்பது என்ற நிலைப்பாடுகளுக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் வரும்போது மாத்திரமே முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்ப முடியும்.

-vidivelli-

About these ads

3 Responses to “இன விரிசலின் பின்புலத்தில் நிலவும் அறிவீனம்”

  1. Jaufar Mohd. Haneefa said

    right though…… i am ready bear my part to the society who is ready to join with me, we need to act and it is a long journey i need the support of all brothers plz come forward…

  2. Anver K. said

    A very good article. I hope our community will think about the various points given seriously.

  3. நடைபெறுகின்ற அத்தனை நிகழ்வுகளுக்கும் காரணம் முஸ்லிம்களே இந்த நாட்டில் 1,300 வருடங்களுக்குமேல் இஸ்லாம் வாழ்ந்திருந்தும் இன்னும் இந்த நாட்டின் பெரும்பானையினரின் மொழியில் அதன் அடிப்படை மூலாதாரங்கள் கூட மொழிபெயர்க்கபடாதது வெட்க கேடானதே தென் இலங்கை முஸ்லிம் மாணவர்களில் 30 வீததிட்கு மேல் சிங்கள மொழி மூலமே கல்வி பயில்வோராகவும் தென் இலங்கையில் இருக்கும் எத்தனையோ முஸ்லிம் பாடசாலைகள் சிங்கள மொழியிலேயே பிரதானமாக கடந்த பல்லாண்டுகளாக இயங்கி கொண்டிருந்தும் என்ன பிரயோஜனம்??? சிங்கள மொழியில் ஆளுமை உள்ள இஸ்லாமிய சிந்தனையாளர்களை மார்க அறிஞர்களை இதுவரை போதிய அளவு உருவாக்காத தவரை இனியாவது நிவர்த்தி செய்யுமா நம் சமூகம்???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,368 other followers

%d bloggers like this: