காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் சாதிக்கப்போவது என்ன.

Posted by Kattankudi Web Community on 22/02/2013

images- இலங்கையன் -

ஒரு நாட்டின் எழுச்சியில், வளர்ச்சியில் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பு எவ்வாறாக இருக்கவேண்டும் என்பதை ஆழமாக ஆராய்ந்தால் அதில் எந்தப் பல்கலைக் கழகமாவது இலங்கையில் அந்தப் பங்களிப்பை முழுமையாகச் செய்கின்றனவா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

அப்படியானால் நிகழ்காலத்தை வைத்துப் பேசும் போது இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவை தற்போது எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்துகொண்டிருக்கின்றன என்பதைப் பட்டியலிட முடியும்.

  1. வருடா வருடம் பெருமளவில் பட்டதாரிகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன.
  2. அரசாங்கத்திடம் தொழில் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் குறை ஆளுமைகளை அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
  3. பரீட்சைக் கல்விக்குள் பதுக்கி வைத்திருந்து நடைமுறைப் பிரயோகம் தெரியாதவர்களாய் சமூகத்திற்குள் பிதுக்கி விடுகின்றன
  4. ஒழுக்கக் கலாசாரத்தை ஒழுங்காகக் கட்டியெழுப்பாமல் எப்படியும் வாழ முடியும் என்கின்ற எண்ணக்கருவுடன் பட்டதாரிகளை வெளியேற்றுகின்றன.

அப்படியானால் இவைதானா நாட்டின் பல்கலைக் கழகங்கள் செய்கின்ற பங்களிப்புக்கள்….?

நாட்டின் தேவையை மையப்படுத்தியதாக உயர்கல்வித்திட்டமிடல் அமைய வேண்டும். இது எமது நாட்டைப் பொறுத்த வரையில் எந்தளவு நடைமுறையிலுள்ளது என்றால் ஏறாழமான குறைகளை முன் வைக்கலாம். இவை பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதலாம் என நினைக்கின்றேன். தற்போது பேச வந்த விசயத்திற்கு வருகிறேன்.

எல்லா மாடுகளும் ஓடுகிறதென்று வயிற்று மாடும் வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடிய கதையாய் அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அரங்கேறிய விடயமொன்றைச் சுட்டிக்காட்டுதலே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள பொறியியல் பீடத்தைத் திறந்து வைத்தார். இவ்விடயம் குறித்து ஊடகங்கள் பல சந்தோசமான செய்திகளையும் வெளியிட்டிருந்தன. அதில் இணையத்தளமொன்றில், ஷஷகிழக்கு வாழ் மக்களின் நீண்ட கால கனவாக இருந்த தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்தை ஒலுவில் வளாகத்தில் திறந்து வைத்ததன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்பகுதி வாழ் கல்விமான்கள், புத்திஜீவிகள் மத்தியில் மற்றுமொரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளார்….|| என அந்தச் செய்தி அமைந்திருந்தது.

அங்கு பொறியியல் பீடம் உருவாக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வந்ததென்றால் அதற்கான காரணம் யாது என்பது புரியவில்லை. தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் உருவாக்கப்பட்டமையினால் இனிவருகின்ற காலங்களில் குறித்த பிரதேசத்திலிருந்து பொறியியல் பீடத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதா…? என்றால் அதுவும் இல்லை.

அவ்வாறானால் எந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நீண்ட காலக் கனவு காணப்பட்டதாகவும் அது தற்போது நிறைவேறியுள்ளமையினால் மகிழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது…?

1. தமது பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள்களின் பிரயாண தூரம் இலகுபடுத்தப்படும்.

2. மாணவர்கள் வீட்டிலிருந்தே பல்கலைக் கழகம் சென்று வரலாம்.

3. கலாசாரப் பாதிப்பிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கலாம்.

இவைகளைத்தவிர வேறு எந்த விடயங்களை வைத்தும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் உருவாக்கப்பட்டமை குறித்து மகிழ்வடைய முடியும் என்று தெரியவில்லை. அதிலும் மூன்றாவது சொல்லப்பட்ட விடயத்தில் பல்கலைக் கழகத்தால் மாணவர்களை நெறிப்படுத்த முடிந்திருக்கிறதா என்றால் அதற்கும் பதில் ஷஷஇல்லை|| என்பதுதான்.

நாட்டிலுள்ள பழைமை வாய்ந்த ஏனைய பல்கலைக் கழகங்களுக்கு இணையாக எமது பிரதேசப் பல்கலைக் கழகத்திலும் எல்லா வகையான துறைகளையும் கற்றுக்கொள்ளுமாறான வசதிகள் கிடைக்க வேண்டும் என்கின்ற நியாயமான எதிர்பார்ப்பையும் இங்கு குறிப்பிடலாம். ஆனால் அவ்வாறு எதிர்பார்ப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்தப்படும் போது மட்டும்தான் கனவு மெய்ப்பட்டதாகவோ ஆசை நிறைவேறிவிட்டதாகவோ சந்தோசிக்க முடியும்.

ஆனால் ஏதோ ஜனாதிபதி பல்கலைக்கழகத்திற்கு வருகிறார், கட்டிடத்தைத் திறந்து வைத்தோம் என்று மட்டும் யாரும் இவ்விடயத்தில் மகிழ்வடைய முடியாது. ஏனெனில் பல்கலைக் கழகமொன்றின் பொறியியல் பீடம் என்பது ஆசைக்கு ஆரம்பித்து மாணாக்கரை ஏமாற்றி விடுவதாய் அமைந்துவிடக் கூடாது.

நான் இவ்வாறு கூறுவதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.

1. ஏற்கெனவே கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ பீடமானது போதியளவு வசதிகளின்றி அந்தக் குறைபாடுகளுக்குளிருந்து குறைபாடுகளுடன் கற்றே ஒரு தொகுதிப் பட்டதாரிகள் வெளியாகியிருக்கிறார்கள். (இவ்விடயத்தை நான் சொல்லும் போது, கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறிய முதற் தொகுதி மருத்துவப் பட்டதாரிகளில் தேசிய ரீதியிலான மதிப்பீட்டில் சிறந்த 100 பேரினுள் மூவர் அடங்குகிறார்களே என வினாவெழுப்ப முடியும். கல்வி கற்பதற்கான வசதிகளே இல்லாத பின்தங்கிய பிரதேசங்கள் சிலவற்றிலுள்ள மாணவர்கள் அசாதாரணமாகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுவிடுவதொன்றும் நடக்காத காரியமல்ல. அதற்காக குறித்த ஒரு சில பெறுபேறுகளை வைத்து அந்த அந்தப் பிரதேசம் போதிய வசதி வாய்ப்புக்களைக் கொண்டது என யாரும் கூறிவிடமுடியாது)

2. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் உருவாக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் போதிய வளங்கள் உத்தரவாதமளிக்கப்படாமையால் இலுபறி நிலையிலுள்ளது.
3. மொரட்டுவப் பல்கலைக் கழகத்தில் உள்ள பொறியியல் பீடத்துடன் ஒப்பிடும் போது பேராதனைப் பல்கலைக் கழகப் பொறியியல் பீடத்திலேயே வளக்குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

4. தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஏற்கெனவே உள்ள நான்கு பீடங்களிலிருந்து வெளியேறுகின்ற பட்டதாரிகளுக்கும் பழைமை வாய்ந்த ஏனைய பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறுகின்றவர்களுக்குமிடையில் பாரிய ஆளுமை வித்தியாசம் உணரப்படுவதாக ஒரு விமர்சனமிருக்கிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடம் சாதிக்கப்போவது என்ன…?

கலை மற்றும் முகாமைத்துவப் பட்டதாரிகளைக் கூட முழு ஆளுமையுள்ளவர்களாக உருவாக்குவதில் பல்வேறு சவால்களை இன்னும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் சர்வதேசத் தொழிற் சந்தையில் கேள்வி மிகுந்த பொறியியலாளர்களை உருவாக்குமா?
தென்கிழக்குப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்களில் காணமுடிகிற மிகப்பெரிய ஆளுமைக் குறைபாடாக அவர்களது மொழியாளுமையைக் குறிப்பிடலாம். அது கலைப்பிரிவாக இருந்தாலும் சரிஇ முகாமைத்துவப் பிரிவாக இருந்தாலும் சரி. அத்தோடு சேர்த்து இதர விடயங்களிலும் கொழும்பு மற்றும் பேராதெனிய போன்ற பல்கலைக் கழகப் பட்டதாரிகளுடன் ஒப்பிடும் போது பல்வேறு விடயங்களில் வித்தியாசப் படுவதாக தனியார் தொழில் வழங்குனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கிழக்குப் பல்கலைக் கழகமோ அல்லது தென்கிழக்குப் பல்கலைக் கழகமோ உருவாக்கப்படுவதற்கு முன்னர் பல்கலைக் கழகம் தெரிவாகும் மாணவர்கள் நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களில் கற்று வெளியேற முடிந்தது. ஆனால் இந்தப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் ஏராளமான வாய்ப்புக்களை மாணவர்கள் இழந்துவிட்டார்கள் என்றே சொல்ல முடியும்.

ஆனால் மருத்துவத்துறைக்கும் பொறியியல் துறைக்கும் அந்த வாய்ப்புக்கள் கிடைத்துக்கொண்டிருந்த போதும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவ பீடமும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள பொறியியல் பீடமும் மாணவர்கள் தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சவால்களாகவே அமையும் சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றன.

அவ்வாறானால் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் பல்கலைக் கழகம் அமைந்திருக்கவே கூடாதா என்கின்ற கேள்வி எழலாம். பல்கலைக் கழகம் உருவாக்கப்படுவது தவறல்ல. ஆனால் அங்கு வழங்கப்பபடுகின்ற கல்வியின் தரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். மாணவர்களின் கற்றலுக்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்கள் என்பன திருப்தியான முறையில் பிற பல்கலைக் கழகங்களுக்கு ஈடாக ஏற்படுத்திக்கொடுக்கப்படல் வேண்டும். அதைவிடுத்து வெறுமனே ஊரின் பெயரில் பல்கலைக் கழகம் உருவாக்கிப் பெருமைப்படுதல், குறித்த பிரதேச மாணவர்களின் ஆளுமையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதோடு தொழிற்சந்தையில் அவர்கள் பாரிய சவால்களையும் எதிர்கொள்ளவே வழி வகுக்கும்.

பொறியியல் துறையைப் பொறுத்த வரைக்கும் அது வெறும் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேசத் தொழிற் சந்தைக்கு ஏற்றாற் போல வடிவமைக்கப்படவேண்டிய ஒரு விடயமாகும். அதற்கான மனித வளங்கள் தொடக்கம் எல்லா பௌதீக வளங்களும் ஏற்படுத்தப்படல் வேண்டும். பழைமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் கூட இவ்வாறான விடயங்களில் சிறு சிறு குறைபாடுகள் இருந்து வருகின்ற நிலையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பொறியியல் பீடத்திற்கான வளங்களை எப்போது, எங்கிருந்து, எவ்வாறு ஏற்பாடு செய்வது?

மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வளங்களை சேர்த்துக்கொள்ளலாம் என்றால் குறித்த மாணவர்களைப் பலிக்கடாவாக்குதும் தரமற்ற பொறியியலாளர்களாய், பேருக்கு அவர்களுக்குப் பட்டம் வழங்கி வெளியேற்றுவதும் நியாயமானதா?

இந்தப் பொறியியல் பீடத்தின் மூலம் நீண்ட காலக் கனவு நிறைவேறுவதாகவும் இதைத் திறந்து வைத்த ஜனாதிபதிக்கு குறித்த பிரதேச மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிப்பதற்கும் இதுவொன்றும் பாலமோ வீதியோ அல்ல இது எமது சந்ததிகளின் கல்வி, எதிர்காலம் தொடர்பான விடயம்.

எல்லா வகையான வளங்களும் தலைநகரிலே குவிக்கப்படுகின்றன. அங்குள்ள எந்த மனித வளமும் வளர்ந்து வருகின்ற பிரதேசங்களில் தங்கியிருந்து சேவையாற்ற விரும்புவதில்லை. ஆனால் அவ்வாறான தருணங்களில் தலைநகருக்குச் சென்று அந்த வளங்களின் பயனைப் பெற முடிந்தது. அத்தகைய வாய்ப்பினைக் கூட இத்தகைய ஏற்பாடுகள் இல்லாமல் செய்கின்றன.

எனது இந்தக் கருத்தை உறுதிப்படுத்த ஒரு விடயத்தை உதாரணம் காட்ட முடியும். கிழக்கிலுள்ள ஒரு மாணவன் அகில இலங்கை மட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் (ஆநசவை) பெறும் போது அவனது ஆற்றலை கௌரவித்து அவனுக்கு வழங்கும் பரிசாய் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்ற மாணவர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கற்க நேரிடுகிறது. அப்படியானால் கிழக்குப் பல்கலைக் கழகத்திலுள்ள மருத்துவ பீடத்தின் தரத்தினை அரசாங்கமே குறைத்துத்தான் மதிப்பீடு செய்துவைத்திருக்கிறது.

பேரினவாதத்தின் போக்கினைப் பார்க்கும் போது இவைகள் கூட சிறுபான்மையினரின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான திட்டமிட்ட முன்னெடுப்புக்களாகவே கருத முடிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினர் பொறியியல் பீடத்தைத் திறக்க ஆர்வமின்றியிருக்க இதுவே பிரதான காரணமோ தெரியவில்லை. ஆனால் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தினரோ அதை வரப்பிரசாதமாகக் கருதுகிறார்கள்.
முஸ்லிம் தலைமைத்துவங்கள் அமைச்சுப் பதவிகளுக்காகச் செய்யும் ஆளும் அரசு சார் அரசியல் போலவே இந்தப் பல்கலைக் கழகத்தினரும் ஏதோ தமக்கான பதவிகளுக்காகவே இதனைச் செய்ததாகவே கருதக்கிடக்கிறது.இதில் பலிக்கடாவாவது பெரும்பாலும் முஸ்லிம் சமூகம்தான்.

பொறியியல் பீடத்தைத் திறந்துவைத்திருப்பது இங்கு முக்கியமல்லஇ அதைத் தரமான வளங்களைக் கொண்டு முன்னெடுத்துச் செல்வதில்தான் தென் கிழக்குப் பல்கலைக் கழகம் அதிக சவால்களைக் கொண்டுள்ளது. சிறுகச் சிறுக எற்பாடு செய்யலாம் என்று கதையளந்தவாறே ஒரு தொகுதி மருத்துவ மாணவர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தமது படிப்பை முடித்திருக்கிறார்கள். ஆனால் தற்போது கூட அங்கு போதிய வளங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வாறானதொரு நிலைதான் இங்கும் வருமானால் அது சமூகத்திற்குச் செய்யும் பாரிய துரோகமாக அமைந்துவிடும்.

இந்தக் கட்டுரையில் நான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அத்தனையினையும் தகர்த்து அவைகளைச் சமூகத்திற்கு சாதகமாக அமைத்துக் காட்டவேண்டுமானால் இங்கு நிறுவப்பட்டுள்ள பொறியியல் பீடத்திற்கான சகல வளங்களையும் (மனித வளம் பௌதீக வளம் ஆகியவற்றை) மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்யும் கையோடு அதீத பிரயத்தனம் எடுக்கவேண்டும். ஆனால் பொறியியல் பீடத்தைப் பொறுத்த வரையில் இலங்கையில் அது அவ்வளவு இலகுவான காரியமல்ல, காலந்தாழ்த்தாமல் அதைச் செய்து முடித்துவிட்டால் அது மெச்சும்படியான சாதனைதான்!

About these ads

3 Responses to “தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் சாதிக்கப்போவது என்ன.”

  1. Mm said

    Well said we wait and see

  2. பொதுவாக இந்த பல்கலைகழகம் குறித்து நாட்டின் அணைத்து முஸ்லிம் புத்திஜீவிகளுக்குமே அதீத அக்கரை இருப்பதால் நீங்கள் கூறுவதுபோல் நடக்க சாத்தியம் இல்லை யாழ்பல்கலைகழகதிட்கு முன்னர் மின்னால் முழங்காமல் பொறியியல் பீடத்தை நிறுவியதுபோல் அதட்குறிய சகல வளங்களையும் அதன் தரத்தை சர்வதேச தரத்தைவிட உயர்வடைய செய்யவும் நிச்சயமாக முயட்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன பாரம்பரிய பல்கலைகழகத்தில் இருந்து இந்த விடயத்திலும் வித்தியாசபட்டு தென்கிழக்கு பல்கலைகழகம் சாதிக்கும் அதட்கு சர்வதேசம் எங்கும் பறந்திருக்கும் நம்மவர்களும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் கண்டிப்பாக கைகொடுக்கும் கொய்ரோவை போல் மலேசியாவைபோல் இரான் இராக்கைபோல் பொறியியல் துறையில் தென் கிழக்கு பல்கலைகழகத்தின் தரம் உலகை நிச்சயம் விஞ்சும் இன்ஸாஹ் அல்லாஹ்

  3. vinitha said

    MOHAMED………………………… TO ACHIVE THe target we have to nominate a qualified vice chancellor other then present nominal v.c

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,372 other followers

%d bloggers like this: