அநாதரவான ஏழைச்சிறார்கள் முஸ்லிம் எய்ட் வானவில் குடும்பத்துடன் இணைவு
Posted by Kattankudi Web Community on 12/02/2013
- முஸ்லிம் எய்ட் ஊடக அறிக்கை -
வறுமையினாலும் யுத்தம் காரணமாகவும் பாதிப்புக்குட்பட்ட பிரதேசங்களான வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய ஊர்களில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட தந்தையை, அல்லது தாய்தந்தை இருவரையும் இழந்த அநாதரவான 71 சிறார்கள் முஸ்லிம் எய்ட் ‘வானவில் குடும்பம்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தினுள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டனர். இந் நிகழ்ச்சித்திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட சிறார்களுக்கும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கும் விளக்களித்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் பெப்ரவரி 8ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல், ஏறாவூர் E.D.I.மண்டபத்திலும், காத்தான்குடி மஸ்ஜித் உமர் ஷரீப் மண்டபத்திலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பயனாளிகளான சிறார்கள், அவர்களின் தாய்மார் மற்றும் பாதுகாவலர்களுடன், சமூக சேவை அலுவலர் ஏ.எம். அலியார், மாவட்ட செயலக கணக்காளர் எம்.எஸ்.பசீர், வலயக் கல்வி அலுவலக அதிகாரி ஏ.எல்.எம்.சரிப்தீன் ஆகியோரும் முஸ்லிம் எய்ட் நிகழ்ச்சித்திட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தினை அந்தந்த ஊர்களில் நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பான பங்காளர் அமைப்புகளான ஏறாவூர் அஸ்ஸலாமா அமைப்பின் உறுப்பினர்கள், வாழைச்சேனை ஹியூமன் எய்ட் அமைப்பின் உறுப்பினர்கள், காத்தான்குடி ஸீறா அமைப்பின் உறுப்பினர்கள் மேற்படி நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
உண்மையில் யாருக்கு இவ்வாறான உதவித்திட்டம் கிடைக்க வேண்டுமோ அவர்கள் சரியான முறையில் அடையாளங் காணப்பட்டு இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், இத்திட்டம் வெற்றியடைய பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்களும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார் M. பசீர் அவர்கள். ‘மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் முஸ்லிம் எய்ட் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. நீங்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னேற்றத்தை பெறுவீர்கள் எனின் இதுபோன்ற மேலும் பல சிரார்கள் எதிர்காலத்தில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வர்’ என்றார் இந்நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளர் ஜனாப் பஸ்லான்.
‘வானவில் குடும்பம்’ நிகழ்ச்சித் தி;ட்டம் என்பது தாய்தந்தையரை அல்லது தந்தையை இழந்த சிறார்கள் மற்றும் மோசமான வறுமையில் வாடும் சிறார்கள் தமது கல்வியைத் தொடரவும், அவர்களது உணவு, உடை மற்றும் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யவும் மாதந்தம் நிதியுதவி வழங்கப்படும் திட்டமாகும். நிதியுதவி மாத்திரமல்லாது, குறிப்பிட்ட சிறார்களின் கல்வி மற்றும் ஆளுமை மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை வழங்கி அவர்களின் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் ஏற்பாடுகளும் இத்திட்டத்தில் உள்ளடங்கப்பட்டுள்ளது. வானவில் குடும்பத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் சிறார்கள் தொடர்ந்தும் சிறப்பாக கல்விகற்பார்கள் எனின் அவர்கள் 18 வயதை அடையும் வரையிலும் இத்திட்டம் இச்சிறார்களுக்கு ஒரு ஆதாரமாக அமையும். 2007ம் ஆண்டு 30 சிறார்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் தற்போது மூதூர், தோப்பூர், புல்மோட்டை, கந்தளாய், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏராவூர், காத்தான்குடி,மன்னார், முல்லைத்தீவு, மொனராகல, கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 265சிறார்கள் பயனடைந்து வருகின்றனர்.










mmsajp said
Al Hamdulillah May Almighty Allah accept your intention and help you all to be pioneers to the followers