சிப்லி பாருக் கிழக்கு மாகாண சபையில் ஆற்றிய உரை
Posted by Kattankudi Web Community (KWC) on 27/01/2013
புதிதாக கட்டப்பட்ட பாடசாலையின் கூரையில் 4 ஓடுகள் உடைக்கப்பட்டிருந்தது, அந்த நான்கு ஓடுகள் இரண்டு வருடங்களாக மாற்றப்படாமல் கூரை பழுதடைகின்ற அளவிற்கு ஓர் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,
“நமது நாட்டை பொறுத்தவரை நம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தருவதில் மிகப்பெரிய பங்கை வகிப்பது கல்வித்துறைதான். கல்வித்துறையில் பயிற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்ற பட்டதாரிகளின் மூலமாக எங்களது நாடு கணிசமான அளவு அந்நியச் செலாவணியை ஈட்டுகின்றுத. ஆகவே நாங்கள் இங்கு செலவு செய்கின்ற ஒவ்வொரு ரூபாவும் எதிர் காலத்தில் எமது நாட்டிற்கு வருமானத்தை ஈட்டித்தருகின்ற ஓர் விடயமாகவே இருக்கின்றது என்பதை நான் முதலில் சுட்டிக் காட்ட ஆசைப்படுகின்றேன்.
அதே நேரத்தில் நான் சிறிய பாடசாலையிலிருந்து பொறியியல் பீட பட்டப்படிப்பு செல்லும் வரை இந்த அரசாங்கமும் இதற்கு முன்பிருந்த தலைவர்களும் இலவசமாக கல்வியை கற்றுத்தந்த வாய்ப்பிற்காக இந்த தலைவர்களுக்கும் தாய்மண்ணிற்கும் நன்றியை செலுத்த ஆசைப்படுகின்றேன். உதாரணத்திற்கு இங்கிலாந்தை பொறுத்தவரை ஒரு பொறியியலாளரை உருவாக்குவது என்றால் 10 மில்லியன் தொடக்கம் 16 மில்லியன் வரை அதாவது கிட்டத்தட்ட 1 கோடி ரூபாவில் இருந்து ஒன்றரை கோடி ரூபா வரை செலவு செய்து ஒரு பட்டத்தை பெறுகின்ற அதே நேரத்தில் ஒரு தகுதி மிக்க பட்டத்தை இலவசமாகவும் எங்களுக்கு கொடுப்பனவுகளும் கொடுக்கப்பட்டு நாங்கள் பொறியியலாளர், வைத்தியர் என்று உருவாக்கப்படுவதற்கு நான் இந்த நாட்டுத்தலைவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கின்றேன்.
அது மட்டுமல்லாமல் மிகக்குறுகிய காலத்தில் நாங்கள் எதிர் நோக்குகின்ற மிகப்பெரிய பிரச்சினை இதுதான், எங்களுடைய சமூகத்தில் குறிப்பாக இந்த கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்களுடைய சமூகத்தில் கணிதம், விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் இருக்கின்றது, என்னவென்றால் இங்கு பட்டப்படிப்பை முடிக்கின்ற மாணவர்கள் மேலதிகமாக சம்பாதித்துக் கொள்வதற்காக குறுகிய கால அதாவது உதாரணமாக Quantity Surveyor, Draftsman என்றும் செய்து கொண்டு அவர்கள் வெளிநாடு செல்கின்றார்கள் இவ்வாறு செல்வதன் மூலம் தகுதியான ஆசிரியர்களை பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்று நான் முன் கூட்டியே கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். இதற்காக நான் கௌரவ அமைச்சர் அவர்களுக்கு இரண்டு பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
முதலாவது உயர்தரத்தில் கணிதப்பிரிவிலும், விஞ்ஞானப்பிரிவிலும் மூன்று பாடங்களில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்காமல் இருந்தால் நீங்கள் வீணாக செலவழிக்க வேண்டியது அவசியமில்லை. அவர்களை ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழில்பயிலுனராக உள்வாங்கி அவர்களை பயிற்றுவிப்பதன் மூலம் ஆசிரியர்களாக 5 வருடத்திற்கோ அல்லது 3 வருடத்திற்கோ அவர்கள் கட்டாய சேவை செய்கின்ற விதத்தில் அவர்களை உள்வாங்க முடியும். அது மட்டுமல்லாமல் பல்கலைகழகத்திற்கு செல்கின்ற மாணவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் scholarship களை கொடுக்கலாம். அவர்களது பட்டப்படிப்பு முடிந்த பிறகு இந்த கிழக்கு மாகாணத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலையில் அவர்களை வலுக்கட்டாயமாக அவர்களுடைய பல்கலைக்கழக செலவீனங்களுக்காக scholarship என்ற ரீதியில் ஏதாவது பணத்தை ஒதுக்கிக் கொடுத்து அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை நீங்கள் செய்து கொண்டால் நிச்சயமாக மாணவர்கள் வெளியே செல்லாமல் எங்களது பிரதேசத்திற்கு சேவை செய்யக்கூடிய மிகப்பெரிய பாக்கியம் கிடைக்குமென நான் நம்புகின்றேன்.
அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து பாடசாலைகளிலும் சிங்களம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாத குறையை உங்கள் முன் கொண்டு வர ஆசைப்படுகின்றேன். எங்களுடைய கல்வித்தரத்தினை உயர்த்துவதற்காக கல்வி வலயங்களுக்கிடையில் பலவிதமான போட்டிகளை ஒவ்வொரு வலயத்திற்குள் வைப்புது போல் ஒவ்வொரு பிராந்தியத்திற்குக் கீழும் போட்டிகளை வைப்பீர்களாக இருந்தால் கல்வி மேம்பாட்டை இன்னும் உயர்த்திச் செல்ல முடியுமென்று நான் நம்புகின்றேன். அதைவிட மிக முக்கியமான விடயம் என்னவெனில் நாங்கள் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து கட்டுகின்ற கட்டுமாணங்களை பாராமுகமாக பராமரிப்பு இல்லாமல் விட்டுவிடுகின்றீர்கள். நான் இந்த கல்வித்துறையில் சில வேலைகளை செய்வதற்காக கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பாடசாலைகளுக்கும் விஜயம் செய்த பொழுது நான் கண்ட ஒரு துர்ப்பாக்கிய நிலை புதிதாக கட்டப்பட்ட பாடசாலையின் கூரையில் 4 ஓடுகள் உடைக்கப்பட்டிருந்தது.அந்த நான்கு ஓடுகள் இரண்டு வருடங்களாக மாற்றப்படாமல் கூரை பழுதடைகின்ற அளவிற்கு ஓர் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளுது
ஆகவே இரண்டாயிரம் ரூபா செலவு செய்து 4 ஓட்டை மாற்றுவதற்கு பதிலாக இரண்டு கோடி ரூபா செலவழித்து செய்த ஒரு கட்டடத்தை நாங்கள் பாவனைக்கு உதவாதது என்பது துர்ப்பாக்கியமான விடயமாகும். ஆகவே இதனை உங்களது வரவு செலவுத்திட்டத்தில் கணக்கெடுத்து இவ்வாறான பராமரிப்பு என்ற அந்த விடயத்தை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்று நான் மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன். அதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு வருட காலங்களாக தளபாடங்கள் எந்த பாடசாலைகளுக்கும் கொடுக்கப்படவில்லை நான் கண்ட கசப்பான விடயம் வெள்ளைச்சட்டை அணிந்த மாணவர்கள் வெறும் தரையில் அமர்ந்து கொண்டு அசுத்தமான உடையுடனே வெளியே செல்கின்றார்கள். ஆனால் இந்த ஏழைச்சமூகம் 10,15 உடைகளை தைக்க முடியாமல் ஒரே உடையை வைத்துக்கொண்டு வருட இறுதியிலும் அடுத்த வருடமும் அதே உடையை அணிந்து வருகின்ற காட்சியை நான் உங்களுக்கு கூற விரும்புகின்றேன். ஆகவே நீங்கள் இவ்வாறான விடயங்களில் நீங்கள் கவனமெடுக்க வேண்டும் என இங்கு மேலும் தெரிவித்தார்.








sadikin said
U said exactly but your short term thinging wont effect man. So far there are no vacancy for teachers but you planing to produce teachers..
According to you you have mentioned about qs and draftsman?…
Didn’t you find any others going abroad and working as labour? Y dnt you stop them and put into training ?
Do you know how many families are living good life after they doing qs or draftsman?
Hon shibly farook you are talking this not for social benefit but for your political benefit?
Mohamed Jalaludeen Jk said
Al hamthu lilla
silmi thajudeen said
it is the important speech to cover our society education needs. I also suggest to more admission to Maths and Science student to the college of education, I think it may covers shortage of teachers in the Maths and science. Thanks Eng Shible for your advisable speech in the PC
PMAMF Mohammed H.I.R.A.Z said
இங்கே ஆசிரியர்களுக்கு கொடுக்கபடும் ஊதியம் அவர்களின் குடும்ப சுமையை தீர்க போதுமானதாக இல்லை இதனாலேயே அதிகமான பௌதீக விஞ்ஞானம் படித்த மாணவர்கள் ஆசிரியர் தொழிலை விரும்புவதில்லை குறைந்தது ஆங்கில மூல கணித விஞ்ஞான ஆசிரியர்களுக்கான ஊதியங்களாவது குறிப்பிட்ட தொகையாக் அதிகரிக்கபடாதவரை என்ன ஊக்குவிட்பை கொண்டும் இந்த பிரச்சினைக்கி தீர்வு காணமுடியாது ஆக ஆசிரியர் பற்றாகுறைக்கி தீர்வுகாண நவீன கட்பித்தல் முறை மூலம் ஒன்லைன் மூலமான் கட்பித்தல் பிரிதொறு பாடசாலையில் கட்பிக்கும் திறமையான் ஆசிரியரின் வருடம் முழுவதுமான போதனைகளை தெளிவாக ஒளிப்பதிவு செய்து இருவட்டுகளாக மாணவர்களுக்கு வழங்கி வைத்தல் அவைகளை ஆசிரியர் பற்றா குறை உள்ள பாட்சாலைகளில் பாணவர்களுக்கு அந்த பாட வேளைகளின் போது ஒளிபறப்பி காடுதல் போன்ற தட்காளிக இடைகால தீர்வுகளுடன் ஆசியர்களை கவர்வதட்கான கவர்ச்சி கரமான சம்ம்பளதிட்டம் குறித்து முன் மொழிவுகளை சாத்தியபடுத்துவது நிறந்தர தீர்வாக அமையும்
avathaani said
முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகி வரும் சூழலில் உங்களைப்போன்ற படித்தவர்களாவது, மாகாண சபையிலேனும் குரல் கொடுப்பீர்களா என நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். இந்த விடயத்தில் இப்பொழுதாவது ஏதேனும் நீங்கள் பேசியிருப்பது சந்தோசம். கணித விஞ்ஞான பாடத்துறைகளில் போதுமான, தகுதியான ஆசிரியர்கள் இல்லையென்பது ஒரு நீண்ட காலப்பிரச்சனைதான். உண்மையில் ஆசிரியர் தொழிலானது, அடிப்படைத்தேவைகளைக்கூட பூர்த்திசெய்யும் அளவிற்கு வருமானம் தருகிற தொழிலாக இல்லை என்பதுதான் இதற்கான அடிப்படைக்காரணமாகும். பாடசாலைகளில் மாத்திரமன்றி பல்கலைக்கழகங்களிலும்கூட இந்த நிலமைதான் தொடர்கிறது. இதனால்தான் தகுதி வாய்ந்த கலாநிதிகளும் பேராசிரியர்களும் வெளிநாடு சென்று விடுகிறார்கள் என்று சொல்லப்படுகின்றது. இந்த சம்பள சீர்கேடுகளை நிவர்த்த்p செய்வதற்காக அண்மையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடாத்திய நூறு நாள் போராட்டம் நமக்குத்தெரியும். எந்த தகுதியும் இல்லாமல் மக்களை ஏமாற்றி, பதவிகளைப்பெற்றுக்கொள்கின்ற அரசியல்வாதிகளுக்கு கிடைக்கின்ற சம்பளமும் ஏனைய சலுகைகளும் படித்துப்பட்டம் பெற்று ஆசிரியர்களாகவும,; பேராசிரியர்களாகவும் கடமையாற்றுகின்ற நமது கற்றோர்களுக்கு கிடைப்பதில்லை என்பது நாம் எல்லோரும் தெரிந்து கொண்டே, அனுமதித்துக்கொண்டிருக்கின்ற பெரும் அநீதியாகும். இந்நிலையில் சில ஆயிரம் ரூபாய்களை புலமைப்பரிசில் தொகையாகக் கொடுப்பதன்மூலம் பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் வலுக்கட்டாயமாக அமர்த்த்pவிடலாம் எனும் உங்கள் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மாறாக போதுமான வருமானம் தரக்கூடியதாக ஆசிரியர் தொழிலின் சம்பள கட்டமைப்பு சீர் செய்யப்படுவது மாத்திரமே இதற்கான நிரந்தரத்தீர்வாகும். இது முறையாக நடக்குமாயின் தகுதியும் திறமையும் கொண்ட நிறையப்பேர் ஆசிரியர்த் தொழிலுக்கு விருப்பத்துடன் வந்துவிடுவார்கள். ஆதன் பின்னர் யாரையும் ஆசிரியர்த்தொழிலில் பலாத்காரமாக அமர்த்தும் எந்த திட்டமும் தேவைப்படாது. ஆனால் இதனைச்செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை. பல்கலைக்கழக பேராசிரியர்களின் போராட்டத்தினை பேச்சுவார்த்தை என்ற பெயரிலும் ஏனைய வழிமுறைகளிலும் இந்த அரசாங்கம் எப்படி ஏமாற்றி நசுக்கியது என்பது நமக்குத் தெரியும். ஒரு பக்கம் பல பில்லியன் தொகைப்பணத்தினை வீண் விரயம் செய்து கொண்டும், பாரிய ஊழல் மோசடிகளை அங்கீகரித்துக்கொண்டும் உள்ள இந்த அரசாங்கம்,மறு புறத்திலே அத்தியவசியமான பாடசாலை மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கு தங்களிடம் பணமில்லை என்று சொல்கிறது. எனவே ஆசிரியர் தொழிலுக்கு தரமானவர்களை கொண்டு வர வேண்டுமென உண்மையிலேயே நீங்கள் அக்கறை கொண்டிருந்தால் அரசாங்கம் ஆசிரியர் தொழிலின் சம்பள கட்டமைப்பை கணிசமாக உயர்த்த வேண்டுமென நீங்கள் குரல் கொடுக்கவேண்டும். அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற உங்கள் அத்தனை பேரின் அடிப்படைக்கடமையாகவும் இதுவேயுள்ளது. செய்வீர்களா??
அத்துடன் உங்கள் பேச்சில் இன்னும் ஒன்றினையும் குறிப்பிட்டுள்ளீர்கள். பலகோடி செலவில் கட்டப்படும் பாடசாலைக்கட்டடங்கள் உரிய பராமரிப்பின்றி வெகு சீக்கிரமாகவே பயனற்றுப்போவதாக குறைப்பட்டுள்ளீர்கள். உண்மைதான் புதிதாக கட்டப்பட்ட எத்தனையோ பாடசாலைக்கட்டடங்களின் சுவர்கள் வெடித்தும், பூச்சுக்கள் சிதைந்தும், தரைகள் உடைவடைந்தும்,கூரைகள் ஒழக்குகளுடனும் காணப்படுகின்ற நிலமைகளை சாதாரணமாக அவதானிக்கின்றோம். பொதுப்பணங்களில் கட்டப்படுகின்ற கட்டடங்களின் நிலையே இப்படி இருக்கின்றது. ஆனால் நாம் சொந்தப்பணத்தில் நமக்காக கட்டுகின்ற நமது சொந்தக்கட்டடங்கள் மிக நேர்த்தியாக நீண்ட காலங்களுக்கு நீடித்து நிற்கின்றது. இதற்குக்காரணம் பராமரிப்பு பிரச்சனையல்ல. அபிவிருத்தி என்ற பெயரால் பொதுப்பணம் செலவு செய்யப்படுகின்ற பொழுது மேற்கொள்ளப்படும் கட்டுக்கடங்காத ஊழலும் மோசடியும்தான் இதற்கு காரணமாகும். ஒவ்வொரு அபிவிருத்தியிலும் சராசரியாக 20 வீதம் வரையில் அரசியல் வாதிகள் கொமிசனாக பெற்று விடுகின்றார்கள். இதனைத்தெரிந்து கொள்கின்ற அதிகாரிகள் 5 தொடக்கம் 10 வீதமான கொமிசன்பணத்தினை தாங்களும் பெற்று விடுகிறார்கள். இதற்கும் மேலாக அபிவிருத்தி வேலைக்காக நியமிக்கப்படுகின்ற கொந்தராத்துக்காரரும் நானும் ஏன் விட்டு வைக்கவேண்டும் எனும் மனோ நிலையில் 25 தொடக்கம் 30 வீதம் கொள்ளை லாபம் கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட வேலையினை செய்து முடிக்கின்றார். இவ்வாறான நிலமையினால் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டமொன்று இறுதியில் 5 லட்ச ரூபாய் செலவில் மட்டுமே செய்து முடிக்கப்படும் நிலை இருக்கிறது. எனவே இப்படியாக ஊழலும் மோசடியும் மலிந்து காணப்படும் நிலையில் எப்படி தரமான பாடசாலைக்கட்டிடங்களை, தரமான வீதிகளை, தரமான வடிகாண்களை நாங்கள் எதிர்பார்க்க முடியும்? இதனை மற்றவர்களைவிட நீங்கள் இலகுவாக புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் ஏனைய அரசியல் வாதிகளைப்போலல்லாது நீங்களோ ஒரு பொறியியலாளராகவும். ஒரு கொந்தராத்துக்காரராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறீர்கள்.எனவே இந்நிலமையை மாற்றுவதற்கு பாடசாலை கட்டடங்களின் பராமரிப்பு சீராக வேண்டுமென குரல் கொடுப்பது வழியல்ல. பதிலாக அபிவிருத்தி என்ற வார்த்தைக்குப்பின்னால் மறைந்து கிடக்கும் பாரிய ஊழல் மோசடிகளை ஒழித்துக்கட்டுவதற்கு உங்களைப் போன்றவர்கள் முன்வர வேண்டும் என்பதையே மக்களாகிய நாம் எதிர்பார்க்கின்றோம். செய்வீர்களா??