றிஸானா நபீக்கின் இழப்பை ஒட்டி வை.எல்.எஸ். ஹமீட் விடுத்துள்ள அறிக்கை
Posted by Kattankudi Web Community on 15/01/2013
சவூதியில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்ட றிஸானா நபீக்கின் இழப்பை ஒட்டி அவரது குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, அவருக்கு இறைவன் ஜன்னதுல் பிர்தௌசை வழங்க பிரார்த்திக்கின்றோம். என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏழு வருடங்கள் தமது மகள் வருவாள், வருவாள் என வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த அவரது குடும்பத்திற்கு அதிர்ச்சி செய்தியே கிடைத்தது. அதன் பின் அக்குடும்பம் ஒடிந்துபோய் இருக்கும் ஒவ்வொரு இதயமும் உணர்ந்து கொள்ளும்.
இத்தருணத்தில் எம்மால் அளிக்கக்கூடிய ஒரேயொரு ஆறுதல் அக்குடும்பத்திற்கு மன ஆறுதலை அழிக்கும்படி இறைவனிடம் பிரார்த்திப்பதேயாகும்.
றிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அரசாங்கமும், முஸ்லிம் அமைச்சர்களும் பலதரப்பட்ட முயற்சிகளை எடுத்தனர். சவூதி அரசாங்கமும் இவ்விடயத்தில் சாதகமான அணுகு முறையையே கடைப்பிடித்தது. இருப்பினும் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்கள் மன்னிப்பு வழங்க முன்வராதமையால் ஷரீஆ சட்டத்தின் கீழ் தண்டனை நிறை வேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ஷரீஆ சட்டத்தின் தீர்ப்பை முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இருப்பினும் விசாரணைகள் சரியான ஷரீஆ சட்டத்தின் கீழ்தான் நடாத்தப்பட்டனவா? என்ற ஒரு பாரிய கேள்வி இருக்கின்றது. ஏனெனில், ஒரு நாடு முஸ்லிம் நாடு எனபதற்காக அது உண்மையான ஷரீஆ சட்டம்தான் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது. ஷரீஆ சட்டம் என்ற பெயரால் எத்தனையோ பிழையான சட்டங்கள் உலகின் பல பாகங்களிலும் அமுல்படுத்தப்படுவதனை நாம் காண்கின்றோம். முஸ்லிம்களைப்பற்றிய மேற்குலகின் தப்பபிப்பிராயத்திற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
உண்மையான ஷரீஆ சட்டத்தின் கீழ் விசாரணை நடாத்தினால் அதில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் இங்கு இக்கேள்வி எழுவதற்கான காரணம் உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும் உளறும் நெஞ்சத்துடன் தன் தங்கைகளின் எதிர்காலத்திற்காக தன் எதிர்காலத்தை தியாகம் செய்து இளம் பருவமான 14 வயதிலேயே சவூதி சென்ற றிஸானா குழந்தையை கொலை செய்யும் அளவுக்கு ஒரு கொடூர மனமுடையவராக இருந்திருப்பதற்கான வாய்ப்பில்லை. பெரும்பாலும் குழந்தையின் மரணம் ஒரு விபத்தாக இருப்பதற்கான வாய்ப்புத்தான் சாதாரண ஒரு பகுத்தறிவு ரீதியாகப்பார்க்கின்ற பொழுது ஊகிக்கக்கூடிய ஒரு சாத்தியமாகும்.
இந்த பின்னணியில்தான் றிஸானா நபீக்கின் விசாரணையின் நம்பகத்தன்மை தொடர்பாகப் பல மட்டங்களிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. ஆனாலும் இறைவனின் நாட்டம்போலும் எடுத்த முயற்சிகள் எதுவும் கை கூடாத நிலையில் றிஸானா நபீக் இறைவனடி சேர்ந்துவிட்டார். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்“.
றிஸானாவின் இழப்பையிட்டு இந்த நாட்டில் இன மத வேறுபாடுகளுக்கப்பால் சகலரும் வேதனையடைவதோடு அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர். அதுபோன்று, அவரின் விடுதலைக்காகவும் இவர்களெல்லாம் குரல் எழுப்பியிருக்கின்றார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். அதேநேரம் மான்பு மிகு ஜனாதிபதி அவர்கள் இலங்கையின் சவூதி அரேபியாவுக்கான துதுவரை திருப்பி அழைத்து தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். எனவே, இதுவரை ஜனாதிபதி அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு அவர்களுக்க நன்றி தெரிவிக்கின்றோம்.
இந்நிலையில், அக்குடும்பத்திற்கு செய்யக்கூடிய முடிந்த உதவிகளை நல்மனம் கொண்ட தனவந்தர்கள் தானாக முன்வந்து நேரடியாகச் செய்ய வேண்டுமென்று இச்சந்தர்ப்பத்தில் வேண்டுவதோடு, பிரார்த்திக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.









jesmin said
ஒங்கட அனுதாபச் செய்தி லேட் ,அதுவும் டு லேட் .இப்பதான் கேளிவிப்பட்டியலோ .ஏழாம் கத்தமும் ஒதியாயிட்டு .
Jawahir Saly said
09ம் திகதி நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு 15ம் திகதி அனுதாப அறிக்கை அனுப்பியுள்ளார். இது அவரது கட்சி அறிக்கையா? அல்லது தனிப்பட்ட அறிக்கையா? என்பது புரியவில்லை, உண்மையில் அறிக்கை எழுத 07 நாட்கள் பிடித்ததா! அல்லது Jesmin சொல்லியுள்ளது போல இப்பதான் கேள்விப்பட்டாரோ தெரியாது. 1988.02.02 இல் பிறந்து 2005.05.04 இல் சவூதி சென்ற றிசானா இருந்த வீட்டுக்குழந்தை 22.05.2005இல் இறந்தது. அப்போது றிசானாவின் உண்மையான வயது 17 வருடங்கள், 03 மாதங்கள், 20 நாட்கள் ஆகும். அதுசரி இவர் எப்படி 14 வயது என கணக்குப்பார்த்தார்? இப்படித்தான் தொடர்ந்து கணக்குப்பார்த்து வருகிறாரோ?
மேலும் சவூதி அரசுக்கு தனது எதிர்ப்பை காட்டுவதற்காக ஜனாதிபதி அவர்கள் சவூதி அரேபியாவிற்கான தனது தூதுவரை திருப்பி அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் தூதுவராக கடமையாற்றிய அஹமட் ஜவாத் அவர்கள் தனது காலம் முடிந்ததனால்தான் வந்ததாக கூறியுள்ளார். இது காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது. இதேவேளை புதிய தூதுவர் ஒருவர் விரைவில் அனுப்பப்படுவார் என்றும் , சவூதி அரசுடன் உள்ள ராஜதந்திர தொடர்பு தொடர்ந்திருக்குமென வெளிவிவகார அமைச்சும், சவூதிக்கு பணிப்பெண்கள் தொடர்ந்து அனுப்பப் படுவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் தெரிவித்துள்ளன.
அரசாங்கமும் , முஸ்லிம் அமைச்சர்களும் றிசானாவை விடுவிக்க அதிக முயற்சி எடுத்ததாகவும் , ஆனாலும் ஷரீஆ சட்டம் அங்கு சரியாக இல்லை என்றும் கூறுகிறார். பிரதம நீதியரசர் விடயத்தில் கருத்துச்சொல்ல தைரியமற்றவர்கள் ஷரீஆ சட்டத்தைப் பற்றி கருத்துக்கூற அதை நாம் வாசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதுதான் கவலையாக உள்ளது. அண்மையில் சவூதியில் 86 வயது முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியை இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்த விடயம் சர்வதேச ரீதியில் பெரிதாகப்பேசப்பட்டது . தற்போது அந்த சிறுமிக்கு சவூதி அரசிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு மனித உரிமை இயக்கம் விவாகரத்து பெற்றுக்கொடுத்துள்ளது. இவ்வாறான மனித உரிமை இயக்கங்களோடு தொடர்பு கொண்டு இவர்கள் றிசானாவின் விடுதலைக்காக முயற்சி செய்திருக்கலாமே , அது செய்தோம் , இது செய்தோம் என்று சொல்கிறார்கள் ஆனால் ஒன்றையும் சரியாகச் செய்யவில்லை என்றே புரிகிறது. றிசானா விடுதலையாகி இருந்தால் எல்லோருமே தனித்தனியே உரிமை கொண்டாடத் தொடங்கியிருப்பார்கள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டப்படி மரண தண்டனை கொடுக்கப்பட்டதால் ,தங்களுக்குள் ஒற்றுமையாகி அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
எது எப்படியோ எமது நாட்டில் இன,மத,மொழி,பிரதேச பேதமின்றி எல்லோரும் கவலைப்பட்ட , எல்லோரும் பிரார்த்தித்த ஒரேயொரு ஜீவன் இந்த றிசானா நபீக்தான். எனவே இனிமேலாவது தனிப்பட்டவர்களின் அதிலும் அரசியலோடு தொடர்பானவர்களின் அனுதாப அறிக்கைகளை kattankudi info பிரசுரிக்காது என நம்புகிறேன். Alhamthulillaah.