காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

ரிஸானா நபீக்மரண தண்டனை தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை

Posted by Kattankudi Web Community (KWC) on 15/01/2013

PMGG cap-Official Press Release-

மூதூரைச் சேர்ந்த பணிப்பெண் ரிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையானது இலங்கை மக்களை மட்டுமன்றி மனிதாபிமானமுள்ள முழு உலக மக்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

2005 ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது, அவர் விடுலையடையக் கூடிய சாத்தியங்களே அதிகம் என்றே பலராலும் நம்பப்பட்டது. ரிஸானாவை குறித்த தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தமையே இந்த நம்பிக்கைக்குக் காரணமாகும்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட ரிஸானா விடுலையாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என இலங்கைக்கான சவூதி தூதுவர் நம்நாட்டு நீதியமைச்சரிடம் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் அத்தனை நம்பிக்கைகளும் இன்று வீண் போகிவிட்டன.

ரிஸானாவின் மறைவானது இன்று தேசிய, சர்வதேசிய ரீதியில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருப்பதுடன் இலங்கைப் பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்துமளவுக்கு முக்கியத்துவமும் பெற்றிருக்கிறது.

சவூதி அரேபியாவில் நடைமுறையிலுள்ள ‘ஷரீஆ’ சட்டத்தின் அடிப்படையிலேயே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற பிழையான தோற்றப்பாடு துரதிஷ்டவசமாக இங்கு ஏற்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் மீதான காரசாரமான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன. ஆனால் உண்மையில், முழுமையான மற்றும் நீதியான இஸ்லாமிய சட்ட வழிமுறைகளன்றி சவூதி நாட்டில் நடைமுறையிலுள்ள பாரபட்சமான, வெளிப்படைத் தன்மையற்ற சட்ட வழிமுறைகளின் காரணமாகவே ரிஸானா நபீக்கிற்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.

ரிஸானா மீதான குற்றச்சாட்டை விசாரித்து தண்டனையை உறுதி செய்வதில் சவூதி அரேபிய நீதித்துறை தவறிழைத்திருக்கின்றது என்பது உறுதியாகத் தெரிகிறது. ரிஸானா கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது வரை பொது நீதியினதும், இஸ்லாமிய சரீஆ சட்டங்களினதும் அடிப்படையாக கருதப்படுகின்ற ‘நியாயமான நடைமுறைகள்’ (Due process) பின்பற்றப்படவில்லை என்பது வெளிப்படையாகும்.

எந்தவொரு குற்றத்தையும் விசாரித்து தீர்ப்பளிக்கும்போது அதனுடன் சம்பந்தப்படும் சகலரையும் நீதியாகவும் நியாயமாகவும் நடாத்துமாறும், அல்லது நடந்து கொள்ளுமாறும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது தரப்பு நியாயங்களை எவ்வித அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடிய முழுமையான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதும், குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு நம்பகமான முழுமையான ஆதாரங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்றும் இஸ்லாம் ஏவுகிறது. இதனையே உலகின் பொது நீதி வழிமுறைகளும் வலியுறுத்துகின்றன. அதுபோலவே குற்றம் எவ்வாறான சூழ்நிலையில் நடந்திருக்கிறது என்பதுவும் அது வேண்டுமென்றே திட்டமிட்ட ஒன்றா அல்லது தற்செயலாக – விபத்தாக நடந்ததொன்றா என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆராயப்படவேண்டும் என்பதுவும் இஸ்லாமிய சட்டங்களினதும் உலக பொது நீதியினதும் அடிப்படை விதிகளாகும். ஆனால் ரிஸானா விடயத்தில் அவ்வாறு நீதியும் நியாயமுமான நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை என்பதற்கு பல சான்றுகளை முன்வைக்க முடியும்.

  1. நான்கு மாத குழந்தை ஒன்றுக்கு புட்டிப்பால் ஊட்டுவதற்கான அனுபவமோ தகைமையோ இல்லாத ஒருவரிடம் தமது குழந்தையை ஒப்படைத்துவிட்டுச் சென்றது குறித்த குழந்தையின் பெற்றோரது தவறும் கவனயீனமுமாகும். ஏனெனில் ரிஸானா குழந்தையைப் பராமரிப்பதற்கான எந்தவித பயிற்றுவிப்புக்களையும் பெற்றிருக்கவில்லை. அத்துடன் அவள் வீட்டுப் பணிப்பெண்ணாக (Housemaid) அங்கு சென்றாளே தவிர குழந்தை பராமரிப்பாளராக (Child Care worker) செல்லவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

  2. இது கொலையா அல்லது விபத்தா? அல்லது தற்செயல் நிகழ்வா என்பதை உறுதி செய்வது மருத்துவ அறிக்கையேயாகும். ஆனால் இங்கு குறித்த குழந்தையின் மரணம் தொடர்பில் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை என்பதும் அந்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இதுவரை வெளியாகிய பல அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

  3. தன்னை அச்சுறுத்தியும் துன்புறுத்தியுமே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்பதனை ரிஸானா எழுதிய கடிதம் ஒன்று உறுதிப்படுத்துகிறது. இஸ்லாமிய சட்டமோ அல்லது ஏனைய சட்டங்களோ இவ்வாறு அச்சுறுத்தியோ துன்புறுத்தியோ வாக்குமூலம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவ்வாறு பெறப்படும் குற்ற ஒப்புதல்கள், குற்றத்தை நிரூபிப்பதற்கான சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை.

  4. ரிஸானா அறபு மொழியில் பரிச்சயமோ அனுபவமோ இல்லாவர் என்றவகையில் அவரது கருத்துக்களை மொழிபெயர்ப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் எவரையும் அந்நாட்டு நீதித்துறை நியமிக்கவில்லை. செம்மறி ஆடு மேய்க்கும் கேரளாவைச் சேர்ந்த சாதாரண தொழிலாளி ஒருவரே ரிஸானாவின் வாக்குமூலத்தை ஆரம்ப விசாரணையின்போது மொழியெர்த்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

  5. விபரமறியாத வயதில் தனக்கு முற்றிலும் அந்நியமான ஒரு சூழலில் பாரிய கொலைக் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொண்டிருந்த றிஸானாவுக்கு தமது பக்க நியாயங்களையும் வாதங்களையும் ஆரம்பம் தொட்டே முன் வைப்பதற்கான சட்ட உதவிகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

  6. சம்பவம் நடந்த சூழலில் நேரில் கண்ட சாட்சியாக எவருமே இல்லாத நிலையிலும் பிரேதப் பரிசோதனை தொடர்பான அறிக்கைகள் எதுவும் இல்லாத நிலையிலும் அச்சுறுத்தல் மூலம் றிஸானாவிடம் பெறப்பட்ட வாக்கு மூலம் மாத்திரமே மரண தண்டனைக்கு அடிப்படையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மரணம் எப்படி நிகழ்ந்தது அதற்குக் காரணம் யார்? அல்லது எது? என்கின்ற சந்தேகம் இவ்வழக்கில் மிக அடிப்படையாக இருந்தது. எனவே சந்தேகத்தின் அனுகூலம் (Benefit of the doubt) குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பொதுவான சட்டவிதி இங்கு தெளிவாகவே மீறப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

ஆக, முழுக்க முழுக்க உலக நீதி ஒழுங்குகளுக்கும் இஸ்லாமிய நீதி ஒழுங்குகளுக்கும் முரணாகவே றிஸானாவின் கொலைக்குற்ற வழக்கில் சவூதி அரேபிய நீதித்துறை நடந்துகொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே இங்கு விமர்சிக்கப்படவேண்டியதும் கண்டிக்கப்படவேண்டியதும் சவூதி நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிழையான நீதி மற்றும் விசாரணை வழிமுறைகளேயன்றி இஸ்லாமிய ‘ஷரீஆ’ சட்ட ஒழுங்கு முறைகள் அல்ல.

உண்மையில் தமது நாட்டில் ‘ஷரீஆ’ சட்டத்தை அமுல்படுத்துவதாகக் கூறும் சவூதி அரேபியா தனது தேவைக்கேற்ப இஸ்லாமிய சட்ட ஒழுங்குகளை பயன்படுத்திக் கொள்கிறது என்பது நாம் கவனிக்கத் தவறும் உண்மையாகும்.

வயதுக்கு வந்த பெண்கள் ஆண் துணையின்றி (மஹ்ரம்) பயணிப்பதை இஸ்லாமிய ‘ஷரீஆ’ தடைசெய்துள்ளது. அவ்வாறான நிலையில் மஹ்ரமியல்லாத பணிப்பெண்களை வேறு நாடுகளிலிருந்து தருவித்து தமது நாட்டிலுள்ள வீடுகளில் பணியாற்ற அனுமதிப்பதனை ஒருபோதும் இஸ்லாமிய ஷரீஆவின் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்த முடியாது.

மஹ்ரமியான ஆண்களின் துணையின்றி ஹஜ் கடமைக்காக வந்த சுமார் 400 நைஜீரியப் பெண்களை கடந்த ஹஜ்ஜின்போது திருப்பியனுப்பிய வரலாற்றைக் கொண்ட சவூதி அரேபியா தமது வீடுகளில் வீட்டுப் பணிப் பெண்களை நியமிக்கும் விடயத்தில் மாத்திரம் ‘ஷரீஆ’ விதிகளைக் கண்டுகொள்ளாதிருப்பது ஏன்? கொலைகளுக்கு தண்டனை கொடுப்பற்கு மாத்திரம் ‘ஷரீஆ’ சட்டத்தைப் பயன்படும் சவூதி, மஹ்ரமி விடயத்தில் மாத்திரம் அதனைப் புறந்தள்ளலாமா? எனவே இஸ்லாமிய சட்டங்கள் என்ற போர்வையில் தமக்கு சாதகமான பாரபட்சமான நடைமுறைகளையே சவூதி அமுல்படுத்தப்படுகிறது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

துரதிஷ்டவசமாக இன்று ரிஸானாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதன் மூலமாக சவூதி அரேபியா தனது நாட்டிற்கும் இஸ்லாத்துக்கும் பெரும் இழுக்கைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளதுடன் ரிஸானாவின் விடுதலைக்காக ஏங்கிய ஒட்டுமொத்த உலக மக்களையும் ஏமாற்றத்திலும் விரக்தியிலுமே ஆழ்த்தியுள்ளது. சமத்துவத்தினையும், பொது நீதியினையும் தனது அடி நாதமாக வலியுறுத்துகின்ற இஸ்லாம் ஒரு போதும் இதுபோன்ற பாரபட்சமான தர்மத்திற்கு முரணான நீதி நடைமுறைகளையும் தண்டனைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதனையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை ரிஸானா விவகாரத்தில் எவ்வாறு சவூதி அரேபியா அநீதியழைத்துள்ளதோ அதேபோன்று இலங்கை அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் தமது கடமைகளை பொறுப்புடன் செய்யவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்றே.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விடயத்தில் தனது அடிப்படை கடமைகளைச் செய்வதற்குக்கூட அக்கறைகாட்டவில்லை என்பது கண்டிக்கப்படவேண்டிய நியாயமான குற்றச்சாட் டாகும்.

தமது நாட்டுப் பிரஜை ஒருவர் சிறைவைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சேம நலன்களை முழுமையாக கவனிக்க வேண்டிய பொறுப்பு அந்நாட்டின் தூதுவராலயத்திற்கே இருக்கிறது. அக்கடமையினை இலங்கை தூதுவராலய பிரதிநிதிகள் முழு அக்கரையுடனும் நிறைவேற்றவில்லை என்று உணர முடிகிறது.

றிஸானா வைத்திருந்த கடவுச்சீட்டின்படி குற்றம் நடந்த தருணத்தில் அவருடைய வயது 21 என்பதன் அடிப்படையிலேயே றிஸானா மீதான மரண தண்டனைத் தீர்ப்பு தவிர்க்க முடியாமல் போனதாக தற்போது சவூதி நாட்டின் உத்தியோக பூர்வ பேச்சாளர் ஒருவர் தெரிவித்து இதனை நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறார். ஆனால் றிஸானா நீதி மன்ற வழக்குகளின்போது தனது உண்மையான வயது அதுவல்லவென்றும் தான் உண்மையில் அப்போது பதினேழு வயதைக் கொண்ட ஒரு சிறுமியே எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவரின் உண்மையான வயதை நரூபிப்பதற்கான சட்டபூர்வ ஆவணங்களை ஏன் நம் நாட்டு தூதுவராலய அதிகாரிகள் நீதி மன்றத்திற்கு சமர்ப்பித்து இவரைக் காப்பாற்றவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

அதுபோலவே இலங்கையுடன் நட்புறவைக் கொண்டுள்ள நாடான சவூதி நாட்டு அதிகாரிகள் ஏன் தமது தூதுவராலய தொடர்புகளைப் பயன்படுத்தி றிஸானாவின் உண்மையான வயதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை யென்பதும் இங்கு கேட்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இந்தப் பின்னணியில் பார்க்கின்றபோது றிஸானா தொடர்பில் கடமையுடைய நம்நாட்டு மற்றும் சவூதி நாட்டு அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்வதில் பொடுபோக்காக இருந்ததன் காரணமாகவே இன்று ஒரு ஏழை யுவதியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்றே நாம் கொள்ள முடியும்.

ரிஸானா போன்றவர்களின் உழைப்பின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதில் அரசாங்கம் காட்டுகின்ற அக்கறையை அவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்தோ தண்டனைகளிலிருந்தோ பாதுகாப்பதில் காட்டுவதில்லை. றிஸானாவின் நலன்களை தொடர்ச்சியாகக் கவனிக்கின்ற ஒருவராக டாக்டர் கிபாயா இப்திகார் தன்னார்வ அடிப்படையில் செயற்பட்டார். ஆனால் இந்தக் கடமையினை செய்திருக்க வேண்டியது எமது அரசாங்கப் பிரதிநிதிகளும் இலங்கை தூதரக அதிகாரிகளுமேயாவார்கள். ஆனால் அவ்வாறு நடந்ததனை எம்மால் காண முடியவில்லை.

றிஸானாவின் வழக்கை மேன் முறையீடு செய்வதற்கான செலவுகளைப் பொறுப்பேற்பதற்கு இலங்கை அரசு முன்வரவில்லை என்றும் மரணித்த பெண்ணின் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து றிஸானாவின் விடுதலைக்கான எந்த நடவடிக்கைகளையும் அமைச்சர்கள் எவரும் செய்யவில்லை என்றும் றிஸானாவின் பெயரால் சவூதியில் சுற்றுப்பயணம் செய்து விட்டே இவர்கள் திரும்பி வந்தார்கள் என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது என்பதுவும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆக பல்வேறு தரப்பினரின் பொடுபோக்கும் பாரபட்சமான சட்ட ஒழுங்கும் வறுமைக்கு எதிராக போராடி வாழ்வில் ஒரு சிறிய மறு மலர்ச்சியைக்காண பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து உழைக்கச் சென்ற ஒரு வறிய ஏழை யுவதியின் உயிரை காவு கொண்டுள்ளது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய ஒவ்வருவரும் மற்றவரை நோக்கியே விரலை நீட்டுகின்றனர் ஆனால் இந்த துக்ககரமான நிகழ்விற்கு பொறுப்பானவர்கள் என்றோ ஒருநாள் பதில் கூறியாக வேண்டும்.

இதில் துரதிஷ்டமானது என்னவென்றால் இந்த ஏழைச் சிறுமியின் மரணத்திலும் பலர் அரசியல் செய்ய முயற்சிப்பதுதான்.

இவ் ஏழை யுவதியின் பரிதாப மரணம் பற்றி அறிக்கை வெளியிட்டு பிரபல்யம் தேடிக் கொள்வதில் நமது அரசியல் வாதிகள் காட்டிய அக்கறையினையும், அவசரத்தினையும் றிஸானாவின் மரண வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி முடியுமான உதவிகளை செய்வதில் இவர்கள் காட்டவில்லை என்பதும் கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாகும்.

முஸ்லிம் சமுகத்தில் ஆழ ஊடுருவியுள்ள வறுமை, சமூகத்தின் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ளாமலும் அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் பற்றி சிந்திக்காமலும் தமது வசதிக்கு ஏற்றாப்போல் செயல்படும் முஸ்லிம் சமூக மற்றும் சமய கட்டமைப்புகள், தூய்மையும் தூரநோக்குமற்ற சுயநலமிக்க அரசியல் தலைமைகள், எதையுமே விழிப்புணர்வோடு சிந்தித்து செயற்படாத பொதுசனம் என எத்தனையோ காரணிகள் எமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் உள்ளதுபோல் றிசானா என்கின்ற ஒரு அபலையின் உயிரையும் குடித்துள்ளது. இந்த இழப்பிற்கு றிசானா சார்ந்த சமூகமான முஸ்லிம்கள், அவளின் தாய் நாடான இலங்கை, இறுமாப்போடும் இறுகிய மனதோடும் செயற்பட்ட சவூதி நீதித்துறை என எல்லோரும் பொறுப்புக்கூறியாக வேண்டும்.

றிஸானாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை நாம் கவலை மட்டும் கொள்ளுகின்ற ஒரு சம்பவமாக மட்டுப்படுத்திக் கொள்ளாமல் இதனை பொறுப்புக் கூற வேண்டிய அத்தனை தரப்பினரும் விழித்துக் கொள்ளுகின்ற ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இனிமேலும் இது போன்ற துயரங்கள் நிகளாதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து மட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இல்லாது போனால் இது போன்ற சம்பவங்களும் கவலை தெரிவிக்கும் கண்டனங்களும் தொடருகின்ற அவலம் மாத்திரமே மிஞ்சும்.

இலங்கை அரசாங்கமும், மத்திய கிழக்கிலுள்ள இலங்கை தூதுவராலயங்களும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் நமது வெளிநாட்டு தொழிலாளர்களின் சேம நலன் தொடர்பில் தமது முழுமையான கடமைகளை பொறுப்புடன் செய்வதற்கு முன்வர வேண்டும். றிஸானா போன்று சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நம் நாட்டுத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமென சட்ட உதவி நிதியமொன்றினை அரசாங்கம் உடனடியாக நிறுவ வேண்டும்.

அதே போன்று றிஸானா வழக்கோடு தொடர்புட்ட ஆவணங்களையும் தீர்ப்புகளின் பிரதிகளையும் சவூதி நீதி மன்றத்திலிருந்து பெற்று இதில் அக்கறை கொண்ட அத்தனை பேருக்கும் கிடைக்கச் செய்ய இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் றிஸானா வழக்குத் தொடர்பில் இலங்கை தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் வெளிப்படையான விசாரணை ஒன்றை நடாத்தி இதில் தமது கடமைகளை செய்யத்தவறிய அத்தனை பேரும் தண்டிக்கப்படவேண்டும்.

இறுதியாக, தனது குடும்பத்தின் மீட்சிக்காக பல்லாயிரம் மைல்கள் பயணித்து இறுதியில் மரண தண்டனையை சந்தித்த றிஸானாவின் மறுமை வாழ்வுக்காக எமது இயக்கம் பிரார்த்திக்கின்றது. அதேபோல றிஸானாவின் பிரிவால் ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ள றிஸானாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் மன அமைதிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரார்த்தனை செய்கிறது.

About these ads

7 Responses to “ரிஸானா நபீக்மரண தண்டனை தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை”

  1. வந்துட்டுது… அறிக்க……………….

    கண்டது, கேட்டது, பாத்தது, வாசிச்சது எல்லாத்தையும் வச்சி ஒரு அறிக்க…… லேட்டா வந்தாலும் ரொம்ப லெந்தா வந்துட்டுது……..

    சகோதரி ரிசானவுக்கு நடந்த கொடுமைய கண்டிச்சி கண்டனந்தெரிவிச்ச அந்த நோக்கத்துக்கு நன்றிகள்….!!!!

  2. அரசியல் கட்சிகள் என்ற அடிப்படையில் முதல்முதலாக வந்த கண்டன அறிக்கை மிக நிதானமானவும் எதார்தமாகவும் அறிக்கை செய்யபட்டுள்லது நன்றி கூறதக்கதும் வரவேட்க வேண்டியதுமே இந்த அறிக்கை சர்வதேச ஊட்கங்களில் வெளி வர உரியவர்கள் முயட்சிக்க வேண்டும்

  3. habeeb mohamed said

    இவர் கூறுவது என்ன? எது உண்மை?

    Link :http://www.youtube.com/watch?v=eASeh-ALTpk

    கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள எத்தனையோ குற்றச் சாட்டுக்கள் மறுக்கப் படுகின்றது.எமக்குல்தான் எத்தனை கருத்து வேற்றுமைகள் ரிசானாவின் விடயத்தில்.
    இதில் வேறு எத்தனையோ அரசியல் வாதிகள் ஊடகங்கள் மூலமாக நான் தான் முதலில் பேசியவன் அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்பதும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் நாங்கள்தான் எல்லாம் செய்தோம் என்பதுமாக பிற சமூகத்தவர்கள் எம்மையும் எம் சரீயாவையும் பற்றி பேசுவதற்கு நாம் இடமளிப்பதா?
    வேண்டாம் அரசியல் ரிசானாவின் விடயத்தில்.
    தம் மகளை இழந்து துயருறும் அக் குடும்பத்திற்கு நாம் ஆறுதல் வார்தகைகள் சொல்வதா அல்லது உங்கள் மகளின் விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர்களை இன்னும் மனம் சோர வைப்பதா?
    யா அல்லாஹ மரணித்த அப் பெண்ணுக்கு நீ ஈடேற்றம் அளிப்பாயாக. அவரது குடும்பத்திற்கு ஈருலகிலும் சிறந்ததைக் கொடுப்பாயாக.

    • பதினைந்து நாட்களில் அந்த குடும்பத்துடன் சண்டைபிடித்தாலாம் கோபித்துகொண்டு இருந்தாலாம் குழந்தையை கொண்றுவிடுவேன் என்று மிரட்டினாலாம் என மூலைக்கும் முன்னானுக்கும் சம்மந்தமில்லாமல் அவர்தான் ஜுஃம்மா மேடையென்றும் பாராமல் விசுவாச வெறியால் உளருகிறார் என்றால் நீங்களும் அதனை பெரிதாக பிடித்துகொண்டு வக்காலத்து வாங்க வருகிறீர்களே??? ஏழு வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்துகூட அறபு பேச தெறிந்திராத அந்த பெண் அந்த வீட்டுக்கு போய் 15 நாட்களில் சண்டை பிடிக்கும் அளவுக்கு சரளமாக அறபை பேச பலகி இருப்பதாக சொல்லாமல் சொல்லுவதை எந்த மடத்தனத்தின் உளரளாக வரிசைபடுத்துவது எங்கள் ஊருக்கு வந்து இவரை இப்படி உளர சொல்லுங்கள் இவரது உளரளுக்கு எங்கள் உஓர் மக்கள் நல்ல வைதியம் செய்து அனுப்புவர்

    • ஆக அந்த பெண்ணை கொலைகாரியாக நிரூபித்து பிரச்சாரபடுத்தி இன்னும் அந்த குடும்பத்தை உச்சாக படுத்த வேண்டும் எங்கிறீர்களா???

  4. muwais said

    rizana vuku nadanthathu alahvivin erpadu nadanthu mudinthu vidathu en intha arasiyal vairu ungal arasiyal thuimai ilai muthalil isthipar sai yavum alah pothumanavan

  5. aslam said

    இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை : அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்

    குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.

    தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

    டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

    போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

    பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

    ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?

    சிறுமிக்கு தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், மைனர் வயதை 14ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.

    சவூதியில் அதுதான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.

    டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்க்கிறார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

    இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள், ஜோசப் பாபா பையன்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தை இவர்கள் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப்பார்ப்பதுதான் சரியான பார்வையாகும்.

    அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.

    அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.

    ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் நட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.

    குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்யவேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?

    லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.

    அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?

    கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?

    இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

    பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில்மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

    சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான். நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.

    கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்? மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.

    கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.

    மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள்.

    இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.

    இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வெளியீடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,374 other followers

%d bloggers like this: