ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் மூன்றுமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது
Posted by Kattankudi Web Community on 25/02/2012
-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-
கல்வி அமைச்சின் அனுசரணையில் யுனிசெப் நிறுவனத்தின் 320 இலட்சம் ரூபா நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்துடனான மூன்றுமாடிக் கட்டடம் 24.02.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் ஐனுல் நயீமா அப்துல் ஸலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் நான் பாராளுமன்றத்திற்கு 1989ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டேன். அதே போன்று ஹிஸ்புல்லாஹ்வும் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் இருவரும் அருகில் ஒன்றாக இருந்தோம். எமக்கு முன்னால் பெருந் தலைவர் அஷ்ரப் அமர்ந்திருந்தார். அன்று தொடக்கம் காத்தான்குடியைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். 1990ஆம் ஆண்டு பள்ளிவாயலில் புலிகள் கொடுரமாக கொலை செய்ததன் மூலம் காத்தான்குடியின் பெயர் எனது மனதில் ஆழமாக பதிந்திருந்தது. இச்சம்பவம் உலக வரலாற்றில் கரைபடிந்த வரலாராகும் .இன்றுதான் நான் காத்தான்குடிக்கு முதற்தடவையாக வந்திருக்கின்றேன். இதனை நான் பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். காத்தான்குடியின் அபிவிருத்தியைக்கண்டு நான் மிகவும் பெருமையடைகின்றேன்.
இன்று சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சினைகளை உறுவாக்கியுள்ளனர். ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டிலே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக என்ன அநியாயங்களை புலிகள் செய்தார்கள் என்பதை சொல்வதற்காக ஜனாதிபதி அவர்களினால் இலங்கை அரசின் சார்பில் ஜெனீவாவில் பேசுவதற்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று இரவு வெளிநாடு பயணமாகின்றார். அவரை நான் வாழ்த்துகிறேன். இப்பாடசாலையினதும் இவ்வூரினதும் வளர்ச்சியிலும் என்னுடைய முழுப்பங்களிப்பையும் வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
This slideshow requires JavaScript.






