வின்சன்ட் பாடசாலையில் சரஸ்வதி உருவச்சிலை நிர்மாணித்தற்கு திருச்சபையினால் வன்மையான கண்டனம்
Posted by Kattankudi Web Community (KWC) on 24/02/2012
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையினுள் சரஸ்வதி உருவச்சிலை நிர்மாணித்த விவகாரமானது கிஸ்த்தவ மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் செயலாகுமென வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவையின் செயலாளரான அருட்தந்தை ஷாம் சுரேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையினுள் கடந்த புதன் இரவு (22.2.2012) 12 மணியளவில் சரஸ்வதியின் உருவச்சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டு அது நேற்று (23.2.2012) அமைச்சர் பசில் ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவிருந்தது.
இந்நிலையில் இந்த உருவச்சிலையை உடனடியாக அகற்றுமாறு மட்டக்களப்பு மெதடிஸ்த்த திருச்சபை பாடசாலை நிருவாகத்தை கேட்டுக்கொண்டதுடன் இதற்கான கண்டனத்தையும் பாடசாலை நிருவாகத்திடம் தெரிவித்தது.
இது அகற்றப்படாத நிலையில் நாம் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வந்தோம்.
இதையடுத்து நேற்று (23.2.2012) வியாழக்கிழமை காலை இந்த உருவச்சிலை அகற்றப்பட்டது.
இந்தப்பாடசாலை 1820 ஆம் ஆண்டு அருட்தந்தை வில்லியம் ஓல்ட் எனும் இங்கிலாந்து மிஸனரியினால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்பாடசாலை கிறிஸ்த்தவ மெதடிஸ்த்த திருச்சபையின் ஆலோசனைப்படியே வழிநடாத்தப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்திற்கு 1963 ஆம் ஆண்டு மெதடிஸ்த்த திருச்சபையினால் பாடசாலைகளை கொடுக்கும்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடசாலையின் வழமையான நடைமுறைகளுக்கு மாறான விதத்தில் எந்தவொரு புதிய காரியத்தையும் அறிமுகப்படுத்தும் போது மெதடிஸ்த்த திருச்சபையை கலந்து ஆலோசிக்க வேண்டுமென்பதே அந்த ஒப்பந்தத்தின் சரத்தில் ஒன்றாகும்.
இது ஒரு கிறிஸ்த்தவ பாடசாலையாகும் இந்த பாடசாலையில் சகல சமயத்தையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தேவையற்ற விதத்தில் சமய முறுகலான நிலையை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது.
இந்த பாடசாலை நிருவாகம் இந்த செயலை மேற்கொண்டுள்ளது. ஒற்றுமையாக வாழ்கின்ற சமய சமூகங்களுக்கிடையில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்த இந்த பாடசாலை நிருவாகம் இவ்வாறான விடயங்களை ஏற்படுத்துகின்றது.
இது இந்துக்களுக்கெதிரான செயற்பாடல்ல கிறிஸ்த்தவ மக்களும் இந்துக்களும் ஒன்றாகவே செய்றபடுகின்றோம்.
ஆனால் மெதடிஸ்த்த திருச்சபையின் எந்த வித ஆலோசனைகளையும் பெறாமல் இந்த உருவச்சிலை நிர்மானிக்கப்பட்டது. இவர்கள் இந்த உருவச்சிலையை நிர்மானித்து இருக்கக் கூடாது.
இது நிர்மாணிக்கப்பட்டமைக்கு எமது திருச்சபையினால் வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
இப்பாடசாலையை பொறுத்தவரைக்கும் இங்கு இவ்வருட புதிய மாணவர்கள் அனுமதியின் போது கிறிஸ்த்த மாணவர்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றனர்.
ஓவ்வொரு வருடமும் புதிய மாணவர்கள் அனுமதியின் போது கிறிஸ்த்தவ மாணவர்கள் திட்டமிட்டு குறைக்கப்படுவதை மக்கள் எமது திருச்சபையிடம் முறையிட்டு சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இவ்வருடம் இப்பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட 134 புதிய மாணவர்களில் 12 கிறிஸ்த்தவ புதிய மாணவர்கள் மாத்திரமே இவ்வாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு மாணவர் கல்வியமைச்சுக்கு சென்று அனுமதி பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே பல் சமய சூழலில் இவ்வாறு இவர்கள் நடந்து கொள்வதை கண்டிக்க வேண்டியுள்ளது.
மெதடிஸ்த்த திருச்சபை சமய சமூக வேறுபாடின்றி சகலருக்கும் திருப்பணி மற்றும் உதவிகளையும் வழங்கி வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.








