புதுக்குடியிருப்பில் ஒருவர் சடலமாக மீட்பு
Posted by Kattankudi Web Community on 22/02/2012
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பில் ஒருவர் இன்று (22.2.2012) அதிகாலை கொல்லப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் வசித்து வரும் சின்னத்தம்பி இளையதம்பி (வயது 64) என்பவர் நேற்று மாலையில் அவரது விவசாய தோட்டத்திற்கு வேலைக்காக சென்றவர் நேற்றிரவு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு புங்கையடி வீதியில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றிரவு வீடு திரும்பாததால் இவரை தேடிய அவரின் உறவினர்கள் இன்று காலை 6 மணியளவில் மேற்படி வீதியில் இவரின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். இதையடுத்து காத்தான்குடி பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.அஜித் பிரசன்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
பொலிசாரின் தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.அப்துல்லா சடலத்தை பார்வையிட்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதணை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இறந்தவரின் கழுத்துப்பகுதில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
This slideshow requires JavaScript.







