இங்கிலாந்து, பிரான்சுக்கான எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்: ஈரான்
Posted by Kattankudi Web Community (KWC) on 20/02/2012
இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிரடியாக நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கிறது என்று கூறி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
இதனால் கோபம் அடைந்த ஈரான் பிரதமர், பொருளாதார தடை விதித்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் சப்ளையை நிறுத்துவோம் என்று எச்சரித்தார். எனினும், பொருளாதார தடையை அந்த நாடுகள் கொண்டு வந்தன.
பொருளாதாரத் தடை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்ததற்கு பதிலடியாக ஈரான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரான் எண்ணெய்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜூலை 1-ந் தேதி முதல் இத்தடை முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சு, இங்கிலாந்து நாடுகளுக்குப் பதில் வேறு நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதிசெய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த முடிவு மிகப்பெரிய எதிர்விளைவு ஏற்படுத்தாது. ஏனெனில் பிரான்சு கடந்த ஆண்டு தமது இறக்குமதியில் 3 விழுக்காட்டை மட்டுமே ஈரானில் இருந்து பெற்றது. இங்கிலாந்தும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை.
ஈரான் முடிவால் எந்த பாதிப்பும் இருக்காது என்று அந்த நாடுகள் கூறியுள்ளன. எனினும், இத்தாலி 13 சதவீதம், ஸ்பெயின் 12 சதவீதம், கிரீஸ் 30 சதவீத கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தன.
இருப்பினும் எண்ணெய்க்காக ஈரானை அதிகம் சார்ந்திருக்கும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை இது.






