நிலையற்ற மனித வாழ்வு
Posted by Kattankudi Web Community on 16/02/2012
சொத்து சுகம் கொண்டு
சுகதேகியாய் வாழ்ந்தாலும்
முதுமை தேசத்திலொருநாள்
முகாமிடத்தான் வேண்டும்.
கருவண்டுச்சிறகு போல
கார்கூந்தல் இருந்தாலும
வெண்பஞ்சு முகிழ்போல
வெளுத்துத்தான் ஆகவேண்டும்;.
கருங்காலி மரம்போல
கட்டுடம்பு இருந்தாலும்
வாழைத்தண்டு போல
வழுவிழந்து போகவேண்டும்
சிப்பிக்குள் முத்துபோல
சிங்கார பல்லிருந்தும்
சிறுபிள்ளை வாய்போல
ஆகியே தீரவேண்டும்.
நெஞ்சுநிமிர்த்தி அரிபோல
நிமிர்ந்து நடந்தாலும்
தொலைத்தபொருள் தேடல்போல்
வளைந்தே ஆகவேண்டும்.
ஆதியிலே இருப்பதையும்
அருகினிலே பார்த்துணர்ந்தும்
அருகில் இருப்பதையும்
தடவியே அறியவேண்டும்.
ஊசி விழுந்தாலும்
உணரும் உன்காது
கூவி அழைத்தாலும்
கேட்காது இருக்கவேண்டும்.
மடைதிறந்த வெள்ளமாக
அகத்தினை சுற்றிவந்த
உன்குருதி ஒருநாளில்
உறைந்தே ஆகவேண்டும்.
ஒடியாடி விளையாடி
உல்லாசமாயிருந்த
மாடிமனை விட்டொருநாள்
பிரிந்தே ஆகவேண்டும்.
கூடிக்குலாவி கூடவேயிருந்த
சொந்தபந்தம் அத்தனையும்
விட்டொருநாள் தனிமையிலே
பயணித்தே ஆகவேண்டும்.
மமதை தற்பெருமை
நான்என்ற அடக்குமுறை
நாளை உன்னோடு
குழியிலே புதைக்கவேண்டும்.
அகிலத்தில் உருவாகும்
உயிரினங்கள் அத்தனையும்
மரணம் எனும் மருந்தை
அருந்தியே ஆகவேண்டும்.
சுழலும் உலகமொருநாள்
சிதைந்து சிதறுண்டு
சிறுதூசி போலாகி
அழிந்தே ஆகவேண்டும்.
காலையில் மலர்ந்து
மாலையில் மரித்துதிரும்
மலர்களின்நிலையே-உலகில்
நிலையற்ற மனிதவாழ்வு.








nizarmsm said
வாழ்வின் படித்தரங்களை தத்துருபவமாக உணர்த்துகின்ற வாசகங்கள் அருமையிலும் அருமை