சம்மேளனத்தின் வாராந்த கூட்டம் (12-02-2012) – ஒரு பார்வை
Posted by Kattankudi Web Community on 13/02/2012
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் வாராந்த கூட்டம் நேற்று காலை 7.00மணிக்கு சம்மேளன சபா மண்டபத்தில் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது. சம்மேளன உதவிச் செயலாளர் ஏ.எம்.சாதிக்கீன் அவர்களால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டடு அவை அங்கீகரிக்கப்பட்டன.
கடந்த வாரம் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தலைவர் தெரியப்படுத்தினார். உலவு இயந்திரத்தின் இலுவைப் பெட்டியின் அளவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு மண் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக 09.02.2012 திகதி சம்மேளனத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் 14உலவு இயந்திர உரிமையாளர்களும் நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பரும் கலந்து கொண்ட கூட்ட தீர்மானத்தின்படி அனைத்து உலவு இயந்திர உரிமையாளர்களும் ஒரே அளவான பெட்டியை பாவிப்பது என்றும் அது 10அடி நீளமும், 6அடி அகலமும், 13.5 அங்குல ஆழமும் கொண்ட சம அளவான பெட்டிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் இதனை எதிர்வரும் மார்ச்மாதத்திற்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும் இதை மீறுவோர்களுக்கு அனுமதியினை ரத்துசெய்வது எனவும் தொடர்ச்சியாக இவ்விடயத்தினை நகரசபை கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு மொடன் பாம் வீட்டுத்திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சிக்கு அமைய இங்கு வசிக்காத 14ஆம் இலக்க வீடு தொடர்பாகவும் பேசப்பட்டது. மொடன் பாம் வீடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு 17.02.2012 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேவேளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் புதிய காத்தான்குடி பத்ரியா ஜும்ஆ மஸ்ஜித் நம்பிக்கையாளர் தெரிவினை மீள நடாத்த தீட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக புதிய காத்தான்குடி பத்ரியா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதி சம்மேளனத்திற்கு பிரதியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சம்மேளனத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்குமிடத்தில் எதிர்வரும் 2012.03.02 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையின் பின் நடைபெறும் புதிய நம்பிக்கையாளர் தெரிவில் சம்மேளனத்தின் பள்ளிவாயல் நிருவாகசபைத் தெரிவுக் குழுவினர் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
இதேவேளை சிகரம் ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக உறுப்பினர்கள் தெரிவு நிகழ்வில் சம்மேளனத்தின் பள்ளிவாயல் நிருவாகசபைத் தெரிவுக் குழுவினரை கலந்து கொள்ளுமாறு சிகரம் பள்ளிவாயலினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக சபையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் இடம்பெற்ற இப்பள்ளிவாயலின் நிருவாகத் தெரிவின் போது பட்டாசுகள் கொழுத்தப்பட்டது தொடர்பாகவும் தெரிவு செய்யப்பட்ட நிருவாகத்திடம் பள்ளிவாயல் தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய நம்பிக்கையாளர் சபைத் தெரிவில் சம்மேளனத்தின் பள்ளிவாயல் நிருவாகசபை தெரிவுக் குழுவினர் கலந்து கொள்வதற்கு முன்பாக தற்போதைய சிகரம் ஜும்ஆ பள்ளிவாயலின் நிருவாகத்துடன் 14.02.2012ஆம் திகதி ஒரு கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 02.02.2012 வியாழன் தொடக்கம் 07.02.2012 செவ்வாய்கிழமை வரை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் ஜம்மியதுஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்ற கண் சத்திர சிகிச்சை முகாமில் தொண்டர்களாக பணியாற்றிய 30 பேர்களுக்கு காலை பகல் உணவுகள் இரு தினங்களுக்கு வழங்கப்பட்டது எனவும் 10,600.00 ரூபா இதற்காக செலவு செய்யப்பட்டது தொடர்பான செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதே போன்று கூட்டு உழ்ஹியா, நோய் நிவாரணம், வாராந்த பள்ளிவாயல் வசூல் என்பன உள்ளக கணகக்காய்வு செய்யப்பட்டு சபையில் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையினால் சத்தியக் குரல் ஆசிரியருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் கண்டன அறிக்கையின் பிரதி வாசிக்கப்பட்டது. சத்தியக் குரல் பத்திரிக்கையில் வெளிவந்த செய்திக்கும் தமது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் இச்செய்தியினால் 23.12.2012ஆம் திகதி நடைபெறவிருந்த காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் வருடாந்த பொதுச் சபைக்கூட்டம் நிறுத்தப்பட்டு பல அசௌகரியங்களை சந்தித்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கும் அதன் கிளை நிறுவனமான காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்ததாகவும் சத்தியக் குரல் ஆசிரியருக்கு ஜம்மியாவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகரசபை பிரிவிற்குள் நாளாந்தம் சேருகின்ற திண்மக்கழிவுளை ஒன்று சேர்த்து அதை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக காணி ஒன்றினை கொள்வனவு செய்வது தொடர்பாக பேசுவதற்காக காத்தான்குடி நகர முதல்வரினால் சம்மேளனத்திடம் நேரம் ஒன்றினை ஒதுக்கித்தருமாறு கோரப்பட்டிருந்தது. அதற்கமைய 15.02.2012ஆம் திகதி புதன்கிழமை சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேசத்தில் வட்டியோடு தொடர்புடைய வியாபாரங்கள் பல்வேறு பெயர்களில் அதிகரித்து வருவதை சபையில் பலரும் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா இணைந்து இவைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை எதிர்வரும் 20ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எமது பகுதியில் அதிகமான தனியார் வைத்தியசாலைகள் போட்டித்தன்மைக்கு மத்தியில் இயங்குவதால் தம்மிடம் வரும் நோயாளர்களுக்கு வீரியம் கூடிய மாத்திரை வகைகள் சிறுவர் பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் வழங்கப்படுவதாகவும், அவைகளை உட்கொள்ளும் நோயாளர்களுக்கு உடன் சுகம் கிடைப்பதால் பலரும் இவ்வாரான வைத்தியர்களை தொடர்ந்து நாடுகின்றார்கள். இதனால் நோயாளிக்கு தற்காலிக சுகம் கிடைத்தாலும் பிற்காலத்தில் பல்வேறு பிற தாக்கங்களுக்கு இவர்கள் உட்படுவார்கள் எனவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.
தலைவலி, தடுமல் என்று வைத்தியர்களிடம் செல்கின்ற போதும் மிகவும் வீரியம் கூடிய Rednisolone மற்றும் Dexamethasone போன்ற மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாகவும் இம்மாத்திரைகள் காத்தான்குடியிலுள்ள சில வைத்திய நிலையங்களில் அதிகமாக வழங்கப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் ஆகியோருடன் இதன் தாக்கங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்று மக்களை விழிப்பூட்டல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டம் 10.00 மணிக்கு ஸலவாத்துடன் முடிவுற்றது








sadik said
Al hamdhulillah, Allah intha urai paathu haappan
anwer said
unkal pani paarata kudiawai