காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

அறிவியல்: நீலத் திமிங்கிலம் – The Blue Whale (Balaenoptera musculus)

Posted by Kattankudi Web Community (KWC) on 30/01/2012

- அபூ அஹ்மத் -

இதுவரை உலகில் வாழ்ந்ததாக அறியப்பட்டிருக்கும் மிகப் பெரிய அளவுள்ள விலங்கினமாக நீலத் திமிங்கிலம் விளங்குகிறது. சமுத்திரத்தை ஆளும் பாரிய முலையூட்டியான நீலத் திமிங்கிலம் ஏறத்தாள 100 அடி (30 மீற்றர்) வரை நீளம் கொண்டதாகவும் 200 தொன் வரை எடையுடையதாகவும் இருக்கும். இந்த அளவுகள் முற்றாக வளர்ந்த திமிங்கிலத்துக்குரியவை.

இவ்வாறான திமிங்கிலம் ஒன்றின் நாக்கு மட்டும் ஒரு யானையையும் விட அதிக எடை உடையதாகவும் அதன் இதயம் சாதாரண கார் ஒன்றின் எடையை அணுகும் என்றும் ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று எமது கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலம் நீலத் திமிங்கில வகையை சேர்ந்ததாக இருக்கும் என்ற சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. அதன் உருவ அமைப்பு அவ்வாறே தென்படுகின்றது. மேலும் அதன் அளவு பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கவில்லை எனினும் அது 24 தொடக்கம் 30 அடி வரை நீளமுடையதாக இருக்கலாம் என கிடைக்கும் தகவல்களில் இருந்து ஊகிக்க முடிகிறது.

திமிங்கிலம் மீன் வகையைச் சேர்ந்தது என்ற பொதுவான தவறான கருத்து நிலவுவதை இங்கு குறிப்பிட வேண்டும். திமிங்கிலம் மீன் அல்ல. அது உயிரியல் ரீதியான பாகுபாட்டின் அடிப்படையில் குட்டி ஈன்று பால் கொடுக்கும் முலையூட்டி (Mammal) வகையைச் சேர்ந்தது. அதனது பாரிய உடல் அளவு காரணமாக அது கடல் வாழ் வழக்கத்தை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஊனுண்ணி (Carnivore) உணவுப் பழக்கத்தை உடைய நீலத் திமிங்கிலங்கள் krill என அழைக்கப்படும் சிறிய இறால் போன்ற உயிரினங்களை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆண்டின் சில காலப் பகுதிகளில் ஒரு நீலத் திமிங்கிலம் நாள் ஒன்றுக்கு 4 தொன் அளவில் இவ்வாறான உணவை உண்ணும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நீலத் திமிங்கிலங்கள் baleen திமிங்கில வகையைச் சேர்ந்தவை. Baleen எனப்படுவது மேல் தாடை பற்களுக்கு பதிலாக வளரும் கொம்பு போன்ற தகட்டெலும்பு ஆகும். உணவு உட்கொள்வதற்காக நீலத் திமிங்கிலம் முதலில் பாரியளவு நீரை உள்ளெடுக்கும் பின்னர் நாக்கைப் பாவித்து வாயை பகுதியாக மூடிய நிலையில் இந்த baleen தட்டுகளின் ஊடாக நீரை வெளியே பீச்சி வெளியேற்றும் போது ஆயிரக்கணக்கான krill வகை உயிரினங்கள் தட்டுகளில் சிக்கிக் கொள்ளும். பின்னர் இவற்றை திமிங்கிலம் விழுங்கும்.

நீரின் கீழ் நீலத் திமிங்கிலம் உண்மையான நீல நிறத்தில் தோன்றும் ஆயினும் மேற்பரப்புக்கு வரும் போது புள்ளி புள்ளியாக நீலம் கலந்த நரை (Grey) நிறமாகக் காணப்படும். கீழ் வயிற்றுப் பகுதியில் தோலில் வாழும் மில்லியன் கணக்கான நுண்ணங்கிகள் காரணமாக அங்கு ஒரு மஞ்சள் சார்ந்த நிறம் தோன்றும். நீலத் திமிங்கிலங்கள் விரிந்த, அகலமான மற்றும் தட்டையான தலைப் பகுதியையும், தலைப் பகுதியில் இருந்து பின் நோக்கி குறுகும் உடற்பகுதியையும் அதன் இறுதியில் முக்கோண வால் அமைப்புகளையும் கொண்டிருக்கும்.

உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் நீலத் திமிங்கிலங்கள் வாழும். அடிக்கடி கூட்டமாக நீந்திச் செல்லும் ஆயினும் தனியாக அல்லது ஜோடிகளாக நீந்துவதே வழமையாகும். கோடைக் காலங்களில் துருவப் பகுதிகளில் வாழ்ந்து வரும் நீலத் திமின்கிலச் சமுதாயங்கள் மாரி காலம் ஏற்படும் போது நீண்ட தூர இடப்பெயர்வை மேற்கொண்டு மத்திய கோட்டை அண்மித்த கடல் பகுதிகளுக்கு வருகின்றன.

மணித்தியாலத்துக்கு எட்டு கிலோமீற்றர் தூரமளவில் வழமையாக நீந்திக் கடக்கும் இவை குழப்பமடையும் போது மணித்தியாலத்துக்கு 32 கிலோமீற்றர் வரை நீந்த வல்லவை. புவியில் அதிகம் சப்தம் எழுப்பும் விலங்குகளுள் நீலத் திமிங்கிலமும் ஒன்றாகும். தொடரான pulse, groan & moan எனும் வகையான சப்தங்களை அவை எழுப்பும். நல்ல நிலைகளில் 1,500 கிலோமீற்றர் வரையிலான தூரங்களில் இருந்து எழுப்பப்படும் தனது இனத்தின் சப்தங்களை நீலத் திமிங்கிலத்தால் கேட்க முடியும். இந்தச் சத்தங்கள் தொடர்பாடலுக்கு மட்டும் அன்றி வெளிச்சமற்ற ஆழ் கடலில் தமது பாதைகளை வகுத்துக் கொள்ளவும் உதவுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நீலத் திமிங்கிலக் குட்டிகள் கூட உலகின் பாரிய உயிரினங்களுள் அடங்குகின்றன ஒரு வருடம் கருப்பையினுள் வளரும் இவை பிறக்கும் போது 3 தொன் வரையான எடையையும் 25 அடி வரையான நீளத்தையும் அடைகின்றன, மாத்திரமன்றி பிறந்த முதல் வருடம் தாய்ப்பாலை மட்டுமே உட்கொள்ளும் இவை நாள் ஒன்றுக்கு 90 கிலோவுக்கும் அதிகமான எடை அதிகரிப்பை காட்டுகின்றன.

உலகில் அதிக காலம் உயிர் வாழும் விளங்கினங்களுக்குள்ளும் நீலத் திமிங்கிலங்கள் அடங்குகின்றன. ஆய்வாளர்களின் கருத்துப்படி இறந்த நீலத் திமிங்கிலத்தின் மெழுகுத் தன்மையான காத்து மடலில் உள்ள படை அமைப்புகளின் எண்ணிக்கையில் இருந்து அதன்  கிட்டிய வயதை கணிக்க முடியும். இம்முறையைப் பாவித்து வயது கணிக்கப்பட்ட கூடிய வயதுடைய நீலத் திமிங்கிலம் 110 வயதுடையதாகும். சராசரி ஆயுட்காலம் 80 முதல் 90 வயதுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

10,000 முதல் 25,000 வரையான நீலத் திமிங்கிலங்கள் இன்றும் சமுத்திரங்களில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1900ம் ஆண்டு காலப் பகுதியில் தீவிரப்படுத்தப்பட்ட திமிங்கில எண்ணெய்க்காக திமிங்கிலங்களை வேட்டையாடும் குழுக்கள்  காரணமாக அறுபது ஆண்டுகளுக்குள் 360,000 நீலத் திமிங்கிலங்கள் கொல்லப்பட்டன எனினும் 1966 ல் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச திமிங்கிலப் பாதுகாப்பு ஆணைக்குழுவினால் இவை பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்ட போதும், அதன் பின்னர் பாரியளவு சனத்தொகை அதிகரிப்பை இவை காட்டவில்லை.

நீலத் திமிங்கிலங்கள் சில கொன்று உண்ணும் விலங்குகளின் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. அத்துடன் Killer Whale மற்றும் சுறாக்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் இவை பாரிய கப்பல்களினால் மோதுண்டு காயங்களுக்கு உள்ளாகியும் இறந்தும் போகின்றன.

IUCN நிறுவனத்தின் அழிவுறும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் பட்டியலில் நீலத் திமிங்கிலங்களும் உள்ளடக்கப் பட்டுள்ளன.

நீலத்திமிங்கிலங்கள் தொடர்பான இயங்கும் விவரணத்தை வாசகர்கள் இந்த இணைப்பில் காணலாம்.

(நன்றி: National Geographic Website)

One Response to “அறிவியல்: நீலத் திமிங்கிலம் – The Blue Whale (Balaenoptera musculus)”

  1. Aliyar Mohideen said

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s