ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் புனர்வாழ்வு பெற்ற சிறுவர் போராளிகளை சந்திப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 25/01/2012
விடுதலைப்புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்களிலிருந்து விலகி பல்வேறு வழிகளிலும் ஜனநாயக வழிக்குத் திரும்பி அரசாங்கத்தின் அனுசரணையுடன் புனர்வாழ்வுபெற்று மீள்வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள சிறுவர் போராளிகள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்க்கை முறையை கண்டறிந்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயவென ஐக்கியநாடுகள் சபையின் உயர்மட்ட குழுவினர் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சித்திட்ட நிர்வாகி அலெக் வார்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதிய மனித உரிமைகள் திட்ட ஆய்வாளர் காரி ரிஸ்ஸர் ஆகியோரே இன்று விஜயம் செய்தவர்களாவர்.
சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதயம் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இவர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு வரவழைக்கப்பட்ட மீள் வாழ்க்கையிலீடுபட்டுள்ள முன்னாள் போராளிகளுடன் இவர்கள் நேரடியாக அவர்களது தேவைகளைக்கேட்டறிந்தனர்.
இச்சந்திப்பில் சர்வோதயம் சர்வதேச தொழில் அமைப்பு உலக கனேடிய உலக பல்கலைகழக நிறுவனம் ஆகிய உள்நாட்டு வெளிநாட்டு தொண்டர் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் சுமார் 800 முன்னாள் போராளிகளும் சிறுவர் போராளிகளும் ஆயுதக்குழுக்களிலிலிருந்து விலகி மீள்வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This slideshow requires JavaScript.







