மழையது ஓய்ந்த தென்று…
Posted by Kattankudi Web Community (KWC) on 08/01/2012
மழையது ஓய்ந்த தென்று
மகிழ்விலே நாங்க ளெல்லாம்
திளைத்துமே இருந்த வேளை
திரும்பவும் பெய்யும் மழையால்
முளைத்திடும் நுளம்பு மற்றும்
முடிவிலா நோய்கள் தன்னால்
பிழைத்திட வழிகள் இன்றி
பெருந்துயர்க் கடலில் உள்ளோம்
கொட்டிய மழை நீராலே
குடிசையும் நிறைந்து போச்சி!
பட்டிணி வாழ்க்கை யோடு
பல நாட்கள் கடந்து போச்சி
எட்டியும் பார்ப்ப தற்கு
எவருமே வருவ தில்லை
கட்டிய கணவ னுக்கும்
கடற் தொழில் ஏது மில்லை
தொடர்ச்சியாய் பெய்யும் மழையால்
தொற்று நோய் டெங்கு என்று
இடர்படும் மக்களுக் காய்
இடம்பெறும் சேவை கண்டோம்
நடப்பது நன்று – இன்னும்
நம்மவர் உணவுக் காக
இடப் பெயர் முடிவுக்காக
இறங்கிட வேண்டும் நாமே..!
தேர்தல் காலம் என்றால்
தேடியும் வருவார்! – எம்மை
ஆர்வமாய் நலமும் கேட்டு
அரிசியும் பருப்பும் தருவார்!
பார்வையில் நஞ் சென்றாலும்
பாசத்தை மழையாயப் பொழிவார்.!
வார்த்தையில் ஜாலம் காட்டி
வாக்கையும் பெற்றுக் கொள்வார்.!
தேர்தலும் இல்லை - இப்போ
தேடியும் வரலை யாரும்
ஆர்வமாய் தொண்டு செய்யும்
அணிகளும் காணவில்லை
சோர்ந்தவர் துயர் துடைக்க
சோதரா சேர்ந்து வாராய் !
தீர்ந்திடா இறைவன் அருளை
தினமும்நீ பெற்றுக் கொள்வாய்.!
இயற்கையின் அனர்த்த மெல்லாம்
இறைவனே உந்தன் அருளே !
துயர்வரின் சகித்துக் கொண்டு
துதிக்கிறோம் உன்னைத் தினமே..!
பயன்தரும் உந்தன் அருளைப்
பணிவுடன் வேண்டு கின்றோம்








Ahamed Rizvi said
Well done..