முஸ்லிம்கள் பணிப்பெண்களாக வருவதைக் குறைப்பது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து: இலங்கையின் துபாய் தூதரக முதன்மைப் பொறுப்பதிகாரி றஹீம்
Posted by Kattankudi Web Community (KWC) on 03/01/2012
- Kattankudi.info Exclusive -
இலங்கை வெளிநாட்டு வர்த்தக சேவையில் கடந்த இருபது வருடங்களாக சேவையாற்றிவரும் காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் றஹீம் அவர்கள் துபாயில் (Dubai) உள்ள இலங்கை தூதுவராலயத்தின் முதன்மை பொறுப்பதிகாரியாக (Consul General) கடமையாற்றி வருகின்றார்கள்.
எமது காத்த மண் ஈன்றெடுத்த கல்விமான்களில் இவரும் ஒருவர். எமது காத்த மண்ணுக்கு தனது பதவியால் புகழ் சேர்த்த இவரை காத்தான்குடி இன்போ நேர்காணலுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நாம் சந்திக்கின்றோம்.
மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் விடுக்கப்பட்ட எமது நேர்காணலுக்கான வேண்டுகோளை தனது வேலைப்பழுவுக்கு மத்தியில் ஏற்றுக்கொண்டிருந்தார்.
உங்களைப்பற்றி ஒரு சுருக்கமான அறிமுகத்தை எமது வாசகர்களுக்கு தர முடியுமா?
எனது வீடு காத்தான்குடி மில்லத் மகளிர் மகாவித்தியலயத்திற்கு முன்பாகவுள்ள புலவர் வீதியில்தான். நான் பிறந்து வளர்ந்தது எல்லமே அங்கேதான்.
எனது ஆரம்பக்கல்வியை நான் 1970 ஆம் ஆண்டு மில்லத் மகளிர் மகாவித்தியாலத்திலேதான் கற்றேன். அப்போது மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தை பெண்கள் பாடசாலை என்று அழைத்தார்கள்.
அது ஒரு பெண் பாடசாலையாக இருந்தாலும் தரம் இரண்டுவரை ஆண்களும், தரம் ஐந்துவரை பெண்களும் கல்வி கற்றுக்கொள்ளும் வாய்ப்பிருந்தது.
தரம் மூன்று தொடக்கம் ஐந்து வரை காத்தான்குடி அல்-ஹிறா வித்தியாலயத்திலும், தரம் ஆறு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரம் வரை காத்தான்குடி தேசிய பாடசாலை மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றேன்.
அக்காலகட்டத்திலே க.பொ.த. உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்கு வெளியூர் சென்றுதான் கற்கவேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது. க.பொ.த. சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொன்ட நான் க.பொ.த. உயர் தரத்திற்காக கணிதத் துறையை தெரிவு செய்து மட்டக்களப்பு சென்-மைக்கல் பாடசாலையில் ஆறுமாதங்கள்வரை பயின்றேன். பின்பு அதை கைவிட்டுவிட்டு மீண்டும் காத்தான்குடி மத்திய மகா வித்தியலயத்தில் சேர்ந்து வர்த்தகத் துறையில் கல்வி பயின்றேன்.
1984 இல் க.பொ.த. உயர் தரத்திலே வர்த்தகத்துறையில் மாவட்ட மட்டத்தில் மிகச்சிறந்த பெறுபேறுகளை பெற்றேன். இதனை பாராட்டி பரிசளிப்பு விழா நடாத்தப்பட்டு சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டேன். அப்போது பாடசாலையின் அதிபராக ஜனாப் சின்னலெவ்வை (பீ.ஏ.) அவர்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் யாழ் பல்கலைக் கழகத்திலே வணிக நிர்வாகத்துறையில் (Business Administration) பட்டம் பெற்று 1990 இல் வெளியாகினேன்.
அதன் பின்னர் ஆறு மாதங்கள் டெலிக் எனும் ஆங்கில கற்கை நெறியில் பயின்றேன். அதன்போது அரச வர்த்தமானியில் வர்த்தக துறையில் (Department of Commerce) வர்த்தக உதவி இயக்குநர் (Assitant Director of Commerce) பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அழ்ழாஹ்வின் உதவியால் அரசாங்கத்தால் கோரப்பட்ட அனைத்து தகமைகளும் என்னிடம் இருந்தது அதைக்கொண்டு விண்ணப்பம் செய்து பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகப்பரீட்ச்சையிலும் தெரிவாகி இப்பதவியை பெற்றுக்கொண்டேன்.
இந்த பதவியில் இணையும்போது இப்பதவி பற்றியோ இப்பதவியினுடைய எதிர்காலத்தைப்பற்றியோ நான் அறிந்திருக்கவில்லை. இப்பதவியில் அனுபவப்பட்டவர்களைக்கூட எனக்கு தெரியாமலிருந்தது. இருந்தாலும் எனது நண்பர்களும் இப்பதவியில் இணைந்துகொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்.
1991 இல் இந்த பதவியில் இணைந்த பின்னர்தான் இதனுடைய எதிர்காலம், வெளிநாட்டு பயிற்சி, வெளிநாடில் கடமைபுரிய வேண்டிய தேவை பற்றி அறிந்துகொண்டேன்.
1991 இல் இருந்து பதவி நிமித்தம் காரணமாக கொழும்பிலேயே வதிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டிலும் வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்து. கடந்த பல வருடங்கலாக ஊரைவிட்டும் பிரிந்து வாழ வேண்டிய நிலையினால் எனக்கு ஊரோடு உள்ள தொடர்பில் சில தடங்கல்கள் ஏற்பட்டுவிட்டன.
இருந்தாலும் அங்குள்ள உறவினர்கள், நண்பர்கள் மூலம் அவர்களைப் பற்றியும் ஊர் நிலவரங்கள் பற்றியும் தெரிந்துகொண்டு, ஊரோடுள்ள தொடர்பு முழுதாக அற்றுப்போகாமல் பார்த்துக்கொள்கிறேன்.
புதிய தலைமுறையினருக்கு என்னைப்பற்றி தெரியாமலிருந்தாலும் தற்போதுள்ள பாடசாலை அதிபர்களும்.அரசியல் துறை சார்ந்தவர்களும் எனது நண்பர்களகவும் உறவினர்களாவும் உள்ளனர்.
வெளிநாட்டுத் தூதரகங்கள் இரண்டுவகையான சேவைகளில், அதாவது நிர்வாகம் மற்றும் வர்த்தகம் (Aadministration and Trade) சார்ந்த சேவைகளில் ஈடுபடுவதாக அறிகின்றோம். இவற்றுக்கிடையிலான வித்தியாசம் என்ன, இதுபற்றி சிறு விளக்கம் தர முடியுமா?
என்னுடைய சேவையானது இலங்கை வெளிநாட்டு வர்த்தக சேவை (Sri Lanka Foreign Trade Service). இது ஒரு Close Departmental Service. நான் அறிந்த வகையில், 1970 ஆம் ஆண்டு ஒரு மலே முஸ்லிமை தவிர, எனக்கு முன்பு எந்த ஒரு முஸ்லிமும் இந்த சேவையில் இருந்ததில்லை.
எனக்கு பின்பும் எந்த முஸ்லிமும் இந்த சேவையில் இணையவில்லை. இந்த வெளிநாட்டு வர்த்தக சேவை பற்றி எமது சமூகத்தில், அதிலும் விசேடமாக இளம் பட்டதாரிகளுக்கு தெரியாமல் உள்ளது. இப்போது வர்த்தக துறையில் (Commerce) பல மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றார்கள். இந்த சேவைகளுக்குள் எமது சமூகத்தவர் வரவேண்டிய தேவையுள்ளது. எனவே இந்த வெளிநாட்டு வர்த்தக சேவை பற்றி எமது சமூகத்திற்கு அறிவூட்டவேண்டிய தேவையுள்ளது.
பொதுவாக வெளிநாட்டு தூதுவரலயங்களில் நிர்வாகம் மற்றும் வர்த்தகப் பிரிவுகள் வெவ்வேறாக காணப்படும். வர்த்தகப் பிரிவானது வர்த்தக சேவை அதிகாரியால் (Trade Officer) நிர்வகிக்கப்படும். நிர்வாக அடிப்படையில் இந்த வர்த்தக சேவையானது வெளியுறவு அமைச்சின் கீழ் வந்தாலும் உண்மையில் எங்கள் சேவையானது வணிக மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் வரும்.
தூதுவரலயங்களில் உள்ள நிர்வாகப் பிரிவானது (Aadministration) வெளியுறவு அமைச்சின் கீழ் மாத்திரம் காணப்படும்.
இலங்கையின் நான்கு தூதுவராலயங்கள், அதாவது துபாய், கராச்சி, மும்பை மற்றும் சிட்னி மாத்திரம் கொன்சுலேட் (Consulate) ஆகும். இந்த தூதுவராலயங்களின் பிரதான அதிகாரி வணிக மற்றும் வர்த்தக அமைச்சினால் நியமிக்கப்படுவார். இவர் ஒரு வர்த்தக சேவை அதிகாரியாக (Trade Officer) காணப்படுவார்.
இந்த நான்கு நகரங்களும் பிரதான வர்த்தக நகரங்களாக காணப்படுவதால் இங்கு வர்த்தக சேவை அதிகாரி நியமிக்கப்படுகின்றார்கள்.
இந்த நகரங்களில் வர்த்தக சேவை அதிகாரி (Trade Officer) நியமிக்கப்பட்டாலும், இவர் வர்த்தக சேவையுடன் சேர்த்து நிர்வாக சேவையையும் செய்யவேண்டிய தேவையுள்ளது. இந்தவகையில் நான் துபாயில் இந்த இரு சேவைக்குமுரிய கவுன்செல் ஜெனெரல் (Consul General) ஆக நியமிக்கப்பட்டுள்ளேன்.
நான் ஆரம்பத்தில் கராச்சி மற்றும் மும்பையில் கடமையாற்றியுள்ளேன். அந்த அனுபவம் இங்கு கடமைபுரிவதற்கு மிகவும் உதவியாக உள்ளது.
இலங்கைக்கான ஒரு தூதரக அதிகாரி என்ற வகையில் இலங்கைத்தூதரகம் எவ்வாறான சேவைகளை இங்கு தொழில் புரியும் நமது நாட்டவருக்கு வழங்குகின்றது என குறிப்பிட முடியுமா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தமாக 250,000 இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். இதில் அபுதாபி தவிர்ந்த துபாய் மற்றும் வடக்கு அமீரகத்தில் 220,000 இலங்கையர்கள் உள்ளானர். இவர்கள் அனைவரும் துபாய் தூதுவராலயத்தின் கீழ் வருகின்றானர்.
துபாய் தூதுவராலயத்தில் ஐந்து உப காரியாலயங்கள் காணப்படுகின்றது. அதாவது நிர்வாகம், வணிகம், தொழிலாளர் பிரிவு, நெறிமுறை மற்றும் அறிவுரை (Administration, Trade, Labour, Protocole and Counsel) பிரிவுகள் காணப்படுகின்றது. இந்த உப பிரிவுகளுக்கு ஏற்ப பாஸ்போர்ட், வீசா, பிறப்பு இறப்பு அத்தாட்சிப்பத்திரம், தொழிலாளர் பிரச்சினை போன்ற சேவைகளை வழங்கி வருகின்றோம்.
இங்கு வேலைசெய்பவர்களில் 55% மேற்பட்டோர் உதவியாளர்களாக (Domestic Helpers) அதாவது வீட்டுப் பணிப்பெண், வாகன ஓட்டுனர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இங்கு உள்ள தொழிலார் சட்டத்தின்கீழ் உள்வாங்கப்படவில்லை. இவர்கள் தவிர்ந்த ஏனைய தொழில்சார் ஊழியர்கள் (Skilled Labourers) தொழிலார் சட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
எனவே தொழிலார் சட்டத்தின்கீழ் உள்வாங்கப்படாத இந்த உதவியாளர்களாக (Domestic Helpers) வேலைபுரியும் எமது நாட்டவர்கள், அவர்களுடைய பல்வேறுபட்ட தொழில்சார் பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் செல்லமுடியாத நிலையில் காணப்படுகின்றனர். இதனால் இவர்கள் தனது எசமானருக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையுள்ளது.
இவர்களுடைய பிரச்சினைகளை தூதுவராலயத்தினாலும், போலீஸ் மற்றும் குடியேற்ற (Immigration) அலுவலகத்தாலும் மாத்திரமே தீர்த்துவைக்க முடிகின்றது. இவ்வாறான பிரச்சினைகளே இங்கு கூடுதலாக தீர்வுக்கு வருகின்றது.
பொதுவாக ஒவ்வொரு நாளும் 5 தொடக்கம் 8 வரையிலான வீட்டுப் பணிப்பெண்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் காரணமாக அபயம் தேடி எமது தூதுவரலாயத்திற்கு வருகின்றனர். இவர்களுக்கு நாம் இலங்கை தொழில் அமைச்சுடன் இணைந்து பாதுகாப்பான ஒதுங்குமிடம் வழங்குவதோடு இலங்கை திரும்புவதற்கான உதவிகளையும் வழங்குகின்றோம்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்புரியவரும் எமது நாட்டவர்களுக்கு உங்களுடைய ஆலோசனைகள் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கும்போது, 2008 ஆம் ஆண்டுக்கு முதல் பொருளாதாரம் மிகவும் செழிக்கும் நிலையில் காணப்பட்டது. அந்தநேரத்தில் மிகவும் கூடுதலான வேலைவாய்ப்புகள் காணப்பட்டதுடன் சம்பளமும் அதிகமாக காணப்பட்டது.
ஆனால் இப்போது பொருளாதார நிலைமை சிறு மந்தமாக காணப்படுகின்றது. இதனால் தொழில்வாய்ப்பும் மந்தமாகவே காணப்படுகின்றது. இப்போது தொழில்சார் திறமையாளர்கள் இங்கு இருந்து கத்தார் மற்றும் ஓமான் நோக்கி செல்வதை அவதானிக்கமுடிகின்றது.
எனது அறிவுரை என்னவென்றால் இங்கு வருபவர்கள் தொழில்சார் திறநாளிகளாக மாத்திரமாகவே (Skilled Labours and Professional) வரவேண்டும். இவ்வாறு இல்லமால் உதவியாளர்களாக (Domestric Workers) வருபவர்கள் சரியான சம்பளத்தை பெறமுடியாது. இவர்கள் எடுக்கும் சம்பளத்தில் செலவுபோக மீதமிருப்பது மிகவும் சிறிய தொகையேயாகும். இதைவிட இலங்கையில் உழைப்பது சாலச்சிறந்தது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
தொழில்சார் திறநாளிகளாக (Skilled Labours and Professional) வருபவர்கள் அவர்களுடைய தொழில் விபரம், சம்பளம், வசதிகள், வேலை நேரம், விடுமுறை என்பன போன்ற விடயங்களை உறுதிப்படுத்தி வந்தார்கள் என்றால் இங்கு வந்து வருந்தத் தேவையில்லை.
பொதுவாக வீட்டுப் பணிப் பெண்களாக வருபவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கின்றது ஆனால், பலருக்கு அவ்வாறு அமைவதில்லை.
எமது நாட்டு சில வீட்டுப் பணிப்பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள துன்பகரமான செய்தியையும் இங்கு பதிவு செய்யவேண்டும். நான் இங்கு வந்தபின் மூன்று முஸ்லிம் பணிப்பெண்கள் தற்கொலை செய்துகொண்ட துன்பகரமான சம்பவமும் நடந்துள்ளது.
முஸ்லிம்கள் பணிப்பெண்களாக வருவதை குறைத்துக்கொண்டால் மிகவும் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். பல நேரங்களில் நவீன அடிமைத்தனம் (Modern Slavery) போலவே பணிப்பெண்கள் நடத்தப்படுகின்றனர். இதனால் வரும் பொருளாதார நலத்தைவிட சமூக சிக்கல்கள் மற்றும் கஷ்டங்களே அதிகமாகும்.
அண்மையில் லண்டன் நகரில் பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் பீ.எம். அம்ஸா அவர்களின் ஆலோசனையில் காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க லண்டன் கிளை ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு அமீரகத்தில் பழைய மாணவர் சங்க லண்டன் கிளை அமைப்பதற்கு உங்களது ஆலோசனைகள் என்ன?
நான் இங்கு வந்து சிறிது காலமே ஆகின்றது. இங்கு உள்ள காத்தான்குடி சகோதரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுடனான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் சகோதரர் மாஹிர் கூட இது தொடர்பாக என்னிடம் கூறினார்.
இது நல்ல விடயம் மற்றும் கட்டாயம் செய்யப்படவேண்டிய விடயம் கூட. அதற்கு முதலில் இங்கு உள்ள காத்தான்குடி சகோதர்களை எல்லாம் ஒன்று சேர்க்க வேண்டும். இதற்கு காத்தான்குடி இன்போவை பயன்படுத்தலாம் என்று நான் நினைக்கின்றேன்.
எனது தொழில் கட்டுப்பாடு காரணமாக என்னால் நேரடியாக இதில் ஈடுபடமுடியாது. ஆனால், வசதி ஏற்படுத்துபவராக (Facilitator) என்னால் செயற்படமுடியும்.
எமது ஊரைச்சேர்ந்த சில சகோதரர்கள் முன்வருவார்கள் என்றால் பழைய மாணவர் சங்க கிளை அமைப்பதற்கு என்னால் முடிந்த சகல உதவிகளையும் செய்ய முடியும்.
தாங்கள் தற்போது வகிக்கும் இந்த உயர் பதவியினூடாக காத்தான்குடி மக்களுக்கு உங்களால் எவ்வாறான சேவைகளை ஆற்ற முடியும் என்று நினைக்கின்றீர்கள்?
எங்களுடைய துறையை பொறுத்தவரையில், நாங்கள் இங்கு செய்வது நாட்டின் ஊக்குவிப்பு (Country Promotion) என்பதாகும். அதாவது நமது நாட்டினுடைய வணிகம், தொழில், சுற்றுலா (trade, labours, tourism) போன்றவற்றை விருத்தி பண்ணுவதே (Promote) எங்களுடைய பிரதான பணி.
இந்த வகையில் பார்க்கின்றபோது நாங்கள் பெரும்பாலும் தொடர்புபடுவது அமைச்சுக்கள் மற்றும் அமைச்சர்களுடனேயேயாகும். ஆகவே அவர்கள் எங்களுக்கு வழங்கும் திட்டங்களின் அடிப்படையிலேயே எம்மால் இயங்க முடியும். எனேவேதான் காத்தான்குடிக்கென்று எம்மால் எவ்வாறு குறிப்பிட்டு இயங்க முடியும் என்பது சாத்தியமற்றதாகவே இருக்கும்.
எமது பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், அங்கு தொழிற்சாலைகள் என்று சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை. நமது பெரும்பாலான சகோதரர்கள் பொருட்களை வாங்கி விற்கின்ற வியாபாரிகளாகவே (Traders) இருக்கின்றார்கள். உற்பத்தி (Manufacturing ) என்று சொல்வதற்கு பெரிதாக அங்கு ஒன்றும் இல்லை. இருந்தபோதும் காத்தான்குடியில் இருக்கின்ற ஒரு உற்பத்திப்பொருளை ஏற்றுமதி செய்வதற்கோ அல்லது அங்குள்ள மீன் மற்றும் மரக்கறிகளை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கோ தயாராக இருந்து, அதற்குரிய தகமைகள் மற்றும் வசதிகள் அவர்களிடம் இருக்குமாக இருந்தால் அவர்களுக்கு எம்மால் வழிகாட்டல்களை வழங்க முடியும். ஆனால் அவ்வாறு செய்கின்ற வசதிகள் உள்ளவர்கள் பெரிதாக இல்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
இருப்பினும், அவ்வாறு செய்யக்கூடிய சாத்தியம் உள்ளவர்கள் இருந்தால், அவர்களை கொழும்பிலுள்ள கம்பனிகளோடு தொடர்புபட வைத்து துணை ஒப்பந்தக்காரர்ககளாக (Sub Contractors ) அவர்களை இயங்க வைப்பதற்குரிய வாய்ய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
உதாரணமாக, இங்குள்ள கம்பனி ஒன்று ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருளை இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ள எம்மை நாடுகின்றபோது எங்களது தரவுத்தளத்தில் (Database) உள்ள கொழும்பை சேர்ந்த விநியோகஸ்தர்களை எம்மால் அறிமுகப்படுத்த முடியும். இங்குள்ளவர்கள் கேட்கின்ற பொருட்களை எவ்வாறு காத்தான்குடியைச் சேர்த்த விநியோகஸ்தர்களால் வழங்க முடியும் என்பது கேள்விக்குறிய ஒன்றாக இருக்கின்ற நிலையில் எம்மால் நேரடியாக நமது விநியோகஸ்தர்களை இணைக்க முடியாது.
இங்குள்ளவர்கள் எம்மிடம் நம்பகமான மற்றும் குறிப்பிட பொருளை விநியோகிப்பதற்குரிய சக்தி வாய்ந்த நல்ல விநியோகஸ்தர்களையே கேட்கின்றார்கள். எனவே குறிப்பிட்ட சந்தையிலுள்ள மேற்குறித்த தகமையுள்ள விநியோகஸ்தர்களையே எம்மால் அறிமுகப்படுத்த முடியும். மாறாக, நாம் ஒருவரை அறிமுகப்படுத்தியபின் அவரால் அக்குறிப்பிட்ட பொருளை விநியோகிக்க முடியாமல் போகின்ற பட்சத்தில், மீண்டும் இங்குள்ளவர்கள் எம்மை அணுக முன்வரமாட்டார்கள். ஆகவேதான், விநியோகஸ்தர்களை இணைக்கின்றபோது இங்குள்ளவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துகொள்ள கூடிய தகுதி அவர்களிடம் உண்டு என்பதை எம்மால் முற்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
எனவே காத்தான்குடியை பொறுத்தவரை, கொழும்பிலுள்ள எமது விநியோகஸ்தர்களோடு இணைந்து துணை ஒப்பந்ததாரராக (Sub-contractors) தொழில்படுவதென்பது சத்தியமான ஒன்று. இவ்வாறுதான் நிறையவே ஊர்களை சேர்ந்த சகோதரர்கள் இயங்குகின்றார்கள். இந்தவகையில் எம்மால் முடிந்த உதவிகளை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.
உங்களுடைய பார்வையில் காத்தான்குடி இன்போ மேலும் எவ்வாறான சேவைகளை நமது சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள்?
காத்தான்குடியிலுள்ள பெரும்பாலானவர்கள் காத்தான்குடி இன்போவை பார்க்கின்றார்கள். காத்தான்குடி இன்போவை தினமும் அவதானிப்பதன் ஊடாகவே பெரும்பாலான தகவல்களையும் செய்திகளையும் நமது சகோதர சகோதரிகள் அறிந்து கொள்வதை என்னால் அறிய முடிகின்றது. இந்தவகையில் பார்க்கின்றபோது, நமது சமூகத்திற்கு அவசியமான மேலதிக தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும் காத்தான்குடி இன்போ தனது சேவைகளை வழங்க வேண்டும்.
மேலதிக தகவல்கள் என்று சொல்கின்றபோது, குறிப்பாக நமது மாணவ சமூகத்திற்கு தெரியாத ஆனால் அவர்களுக்கு கட்டாயம் தேவைப்படுகின்ற தகவல்கள் நிறையவே இருக்கின்றது. இன்று நமது ஊரை எடுத்துக்கொண்டால், உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு தான் எதிர்பார்த்த பொறியியல் பீடத்தையோ, வைத்திய பீடத்தையோ அல்லது ஏனைய தங்களது எதிர்பார்ப்புகளையோ பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிறையவே சிக்கல்களையும் உரிய வாய்ப்புகள் தெரியாமல் அலைகின்ற பரிதாபகரமான நிலைமைகளையும் எதிர்நோக்கி நிற்கின்றார்கள்.
எனவே இப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் புதிதாக அறிமுகமாகி நல்ல தொழில் வாய்ப்போடு இருக்கின்ற துறைகள் தொடர்பில் சிறந்த தகவல்களை வழங்குவதனூடாக காத்தான்குடி இன்போ இன்னும் செவையாற்ற முடியும்.
இன்று நமது ஊரில் நிறையவே பொறியியலாளர்கள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய உயர் பதவிகளை வகிப்பவர்கள் இருக்கின்றார்கள். இது கடந்த காலத்தை ஒப்பிடும்போது எண்ணிக்கை ரீதியல் அதிகமாக இருந்தாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படல் வேண்டும். இதற்கு தேவையான தகவல்களை, வழிகாட்டல்களை வழங்குவதற்கு காத்தான்குடி இன்போ தயாராக இருக்க வேண்டும். அதேபோன்று இன்று படித்து நல்ல நிலையில் உள்ள நமது சகோதரர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல பதவிகளை வகிக்கின்றார்கள்.எனவே இவர்களை ஒரு வலையமைப்பினூடாக (Network) இன்போவோடு இணைப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு ரீதியான தகவல்களை பெற்று நமது சமூகத்திற்கு வழங்க முடியும்.








Malik said
Dear Mr. Abdul Raheem…. Kattankudi really proud of u…
mmsa said
Ma Sha Allah
Mohamed imthiyas said
MashAllah
Abdul Muksith said
Masha-Allah
badurzaman u.k said
Dear Mr. Abdul Raheem…sir. i. really proud of u… masha-allah
siddeeq ALM said
முஸ்லிம் பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்வதை குறைப்பதை விட அதை முளுமையாக ஒழிப்பதே சிறந்ததாகும்.
தற்போது திருமணமான,திருமணமாகாத பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதர்க்கு ஆண்வர்க்கத்தினரும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்ரனர்.
சீதனக்கொடுமை,விவாகரத்து,குடும்பத்தகராரு,வறுமை,கடன் சுமை,போன்றவைகளினால் பெண்கள் வெளிநாடுசெல்வது அதிகமாகிவிட்டது.
இதனை ஒழிப்பதர்க்கு ஒவ்வொரு தனிமணிதனுட்பட பள்ளிவாயல் மு.நி.சம்மேளணம்,ஏனைய சமூகநல அமைப்புகள் முன்வரவேண்டும்
பெண்கள் மேலதிக வகுப்புகளுக்கு வெளியூர் செல்வதை தடுப்பதர்காக சம்மேளணமும், ஏனைய அமைப்புகளும் செய்கின்ற பணிகளைப்போன்று வெளிநாடு செல்லும் பெண்களை தடுப்பதர்காகவும் சம்மேளணமும் பொதுநல அமைப்புகளும் இணைந்து சில நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
வெளிநாடு செல்ல நேரிடும் ஏழைப்பெண்களின் தேவைகளை கண்டறிந்து அவற்றை பூர்த்தி செய்வதன்மூலமும் தடை செய்யமுடியும்,பெண்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால் ப.மு.நி.சம்மேளணத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்ற சட்டம் சம்மேளணத்தினால் உருவாக்கப்படல் வேண்டும்.
இதன் மூலம் வெளிநாடு செல்லும் பெண்களை இனங்கண்டுகொள்ளவும் முடியும்.
fareed said
well said ..
I wish u achieve more succus in ur live.