சோகம் தந்த சுனாமி
Posted by Kattankudi Web Community (KWC) on 25/12/2011
பின்னோக்கிப் போனாயே பெருங்கடலே – விழி
பிதுங்காமல் வேடிக்கை பார்த்தோமே
முன்னோக்கிப் பாய்ந்தாயே மான்போலே – நாம்
மூழ்கிவிட்டோம் தண்ணீரில் மீன்போல
இல்லமெல்லாம் இல்லையென்று ஆச்சே – எங்க
இடுப்புத் துணி தண்ணீரோடு போச்சே.
பல்பேரும் விட்டாரே மூச்சை – நெஞ்சு
பதறிடுமே சொன்னால் அப்பேச்சை
நிலமெல்லாம் பாளமென வெடிக்க – அன்று
நிலை கெட்டு எல்லோரும் துடிக்க
கடல்நீரை எல்லோரும் குடிக்க – இந்தக்
காவியத்தை எப்படி நான் வடிக்க
எல்லோரும் தறி கெட்டு ஓட – சிலர்
ஸ்கூலில்; பள்ளிகளில் கூட
அகதி எனும் பட்டம் வந்து சூட – இந்த
அவலங்களை எப்படி நான்; பாட
செழிப்பான கடலோரம் சிதைய – எங்க
செல்வங்கள் கடலோடு புதைய
வேதனையை பாடுகிறோம் கேளாய் – இனி
வெடித்திடுமே இதயங்கள் தூளாய்.
கூடார வாழ்க்கையிலே வந்து – குடி
நீர்கூட இல்லாமல் வெந்து
அடிபட்டு திரும்பி வரும் பந்து – போல
ஆனதனால் அழுகின்றோம் நொந்து
நிவாரணத்தைத் தேடித் தேடி அலைந்தோம் – நாங்க
நிம்மதியே கெட்டுப் போய் குலைந்தோம்
எறிபட்ட தேன்கூடாய்க் கலைந்தோம் – நாங்க
எப்படியோ எங்கெங்கோ தொலைந்தோம்.
ஊரிலுள்ள தலைவர்களே போங்க – பல
உதவிகளைப் பெற்றுவந்து தாங்க
ஒலமிடும் அவலங்கள் நீங்க – உதவி
செய்திடுக எம் வாழ்வு ஓங்க
செல்வந்தர் எமைக் கண்டு உருக – பல
சிறப்பான உதவிகளும் பெருக
அல்லாஹ்வே உனதருளைத் தருக – இனி
என்னாளும் இன்பங்கள் வருக.








misbah said
Very Nice..