உம்மாவுக்கொரு கவிதை
Posted by Kattankudi Web Community on 22/12/2011
இதய அறைகளிலே
இதமாய் உறைந்திருக்கும்
ஈரம் கசிகின்ற ஊரின்
உணர்வு என்னை
உசுப்பேத்தி விடும்போது
இதயம் அமைதிபெற
உனக்கொரு கவிதை உம்மா!
செல்லும் இடமெல்லாம்
சிறப்பைக் கொண்டுவரும்
சீர் கல்விச் சிறப்புகளை
அடைந்திட அடியேனின்
வாழ்நாள் முழுவதையும்
வாரி வழங்குதற்கு
நீ தந்த பாசத்தை
நானும் அறிவேன் உம்மா!
சீர்கெட்ட நாடகமும்
சினிமாப் பைத்தியமும்
சீர் குலைக்கும் பாடல்களும்
நம் கிராம வீடுகளை
சீர் குலைத்த நிலைகண்டு
உள்ளத்தால் போராடும்
உன் உணர்வை நானும்
அறிவேன் உம்மா!
மழலைச் செல்வங்கள்
மடைதிறந்த வெள்ளம் போல்
கலகலவென்று நாளும்
மறையோதும் சத்தத்தை
மஹ்ரிபு வேளைகளில்
நம் மனைகளில்
கேட்க முடிவதில்லை உம்மா!
குடிசைக்குள் விளக்கு வைத்து
கூக்குரலிட்டபடி நாளும்
குதூகலத்துடன் படிக்கும் நம்
குழவிகளின் குரல்வளையை
நசுக்கியது இந்ந
நாசமாய்ப் போன
சீரியல்தானே உம்மா!
அல்லசல் காரரோடு
அலவலாவும் நோக்கோடு
அந்தியானா நடைபயிலும் நம்
அன்னையரும் இன்று
அப்பெட்டி முன்னாலே
அமர்ந்திருக்கும் அநியாயத்தை
என்னவென்பேன் நான் உம்மா!
பாங்குச் சத்தம் கேட்டவுடன்
முக்காடு போட்ட நம்
மூத்தம்மா கூட இப்போ
பாங்கு ஒலிக்கையிலும்
றிமோல்ட்டெடுத்து
சத்தம் குறைத்து
சனியனைப் பார்க்கும்
சங்கதியை
என்னசொல்ல நான் உம்மா!
பணம் பண்ணும் நோக்கோடு
பட்டி தொட்டியெல்லாம்
படையெடுத்து வந்திருக்கும்
நாடகச் சத்தந்தான்
நம் கிராமத்து வீதிகளில்
நயமாய் ஒலிக்கிறது உம்மா
மனசும் வலிக்கிறது உம்மா!
அம்மி அரைச்ச கையும்
உலக்கை பிடிச்ச கையும்
கல்லில் துவைச்ச துணியும்
கொள்ளி கொத்திய உடம்பும்
இயந்திரங்கள் முன்னாலே
தோற்றுப்போய் நிற்கையில்
உடல் கொழுப்பை எப்படி
குறைக்கிறது உம்மா!
வீட்டிலே உள்ள
வேலைகளைத் தினமும்
மாச்சல் இல்லாத
மனதுடன் செய்து
மாட்சிமை பொருந்திய
இறைவனைத் தினமும்
மகிமையோடு தொழுது வந்தால்
உடலும் உள்ளமும்
நலமாய் இருக்கும்
நம் முன்னோரைப் போல உம்மா!








Mohamed Fashan. (@fashan89) said
நாடகச் சாத்தானை விரட்டி அடிக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
#மழலைச் செல்வங்கள்
மடைதிறந்த வெள்ளம் போல்
கலகலவென்று நாளும்
மறையோதும் சத்தத்தை
மஹ்ரிபு வேளைகளில்
நம் மனைகளில்
கேட்க முடிவதில்லை உம்மா!#
உண்மைதான்
நல்லதொரு படைப்பு! வாழ்த்துக்கள்.
siddeek said
இதய அறைகளில் ”இதயமாய்” என்பதை இரத்தமாய் என்றுவாசிக்கவும். இன்போ வினருக்கு நன்றி.
Mohideen Saly said
இதய அறைகளில் இதமாய் என்பதுதான் சரியானது. இரத்தமாய் என்று வந்தால், இதயத்தில் இரத்தம் உறையும் போது அது இறப்பை குறிக்கும். வாசகர்கள் கவிதைக்கான விமர்சனத்தை முன்வைக்க முடியும் ஆனால் மற்ற வாசகர்களை திருத்தி வாசிக்க கோரமுடியாது ஏனெனில் கவிதையைத் திருத்தும் உரிமை கவிஞருக்கு மட்டுமானது. மற்றப்படி எனது கவிதையை வாசித்து “பதில்“ எழுதிய நண்பர் சித்தீக் அவர்களுக்கு எனது நன்றிகள்
siddeek said
உங்கள் அடுத்த தொகுப்பை எதிர் பார்க்கிறோம்
sabu said
nice
Ramees mohamed said
Kavithai super