முன்னாள் அமைச்சர் மஜீத்தின் மறைவு கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்: ஹிஸ்புழ்ழாஹ்
Posted by Kattankudi Web Community on 01/12/2011
முன்னாள் அமைச்சரும், சம்மாந்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.ஏ. அப்துல் மஜீட் அவர்களுடைய மறைவு குறிப்பாக கிழக்கு மகாண மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும் என்று பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலே ஆகக்கூடிய காலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற அல்ஹாஜ் அப்துல் மஜீட் அவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுப் பாலமாக இருந்தார். தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே மிக மோசமான நிலைமைகளின் போது சம்மாந்துறை தொகுதியிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலும், தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும், தமிழ் முஸ்லிம் மக்களுடைய இன்ப துன்பங்களை துடைப்பதிலும் முன்னாள் அமைச்சர் மிகவும் பங்குகொண்டவராவார்.
முன்னாள் அமைச்சர் மஜீத் மிகவும் எளிமையான முறையில், மிகவும் பண்பான, எல்லோரோடும் நன்றாக பழகுகின்ற ஒரு சுபாவத்தைக் கொண்ட ஒருவர். தன்னுடைய அரசியல் காலத்திலே, குறிப்பாக சம்மாந்துறை தொகுதி மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலே மிகவும் முன்னின்று உழைத்தார். விஷேடமாக நீர்ப்பாசனம், வயல், குடிநீர் போன்ற அவரது திட்டங்கள் இன்றும் அம்மக்கள் பயன்பெறும் திட்டங்களாகும். முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கெதிராக கடுமையான போக்கை கடைப்பிடிக்காத ஒரு அமைச்சர் என்ற வகையில் நாங்கள் மிகவும் சந்தோசமடைகின்றோம்.
முஸ்லிம் காங்கிரஸை உருவாக்குகின்ற காலத்தில், ஏனைய அமைச்சர்கள் எதிர்க்கின்ற போதும் அவர் மறைமுகமாக ஆதரவளித்த ஒரு அமைச்சராவார். அந்தவகையிலே அவர் மரணித்தாலும் அவருடைய சேவைகள் தொடரும். குறிப்பாக அவருடைய சேவைகளையும், கனவுகளை, சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவர், கௌரவ தவிசாளர் நௌஷாத் அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதோடு, இறைவன் அவர்களது பாவங்களை மண்ணித்து அவர்களது நன்மைகளைக் கொண்டு அவரது கபுரை சொர்க்க பூஞ்சோலையாக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதோடு, அவரது குடும்ப உறுப்பினர்கள் பிள்ளைகள் எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை இந்த சந்தர்ப்பத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.







