2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் ஆற்றிய உரை
Posted by Kattankudi Web Community on 30/11/2011
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்திலே கலந்துகொள்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த 30 ஆண்டுகள் யுத்தத்திலே சிக்கி, சின்னாபின்னமாகி அழிந்துபோன, ஒவ்வோர் இனமும் முட்டி மோதிக் கொண்டு வாழ்ந்த இந்த நாட்டை இன்று ஒரு சொர்க்கபுரியாக மாற்றியவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழித்து, அமைதி சமாதானத்தை ஏற்படுத்தி, எல்லா இன மக்களும் இன, மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருதாய் மக்கள் போல் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கியவருமான எங்களுடைய மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைதியான இந்த நாட்டிலே பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற ஒரு பாரிய பணியையும் இந்த நாட்டை ஆசியாவிலேயே ஆச்சரியமிக்க ஒரு நாடாக மாற்றுகின்ற மிகப் பாரிய பொறுப்பையும் தன்னுடைய தலையிலே சுமந்துகொண்டு இந்த வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்திருக்கிறார்.
கடந்த காலங்களில் பல நிதி அமைச்சர்கள் வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்தார்கள். ஆனால், கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை விட இது முழுக்க, முழுக்க வித்தியாசமானது. ஏனென்றால், இந்தத் தடவை எங்களுடைய ஜனாதிபதி அவர்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக சம்பந்தப்பட்டகளுடன் கலந்துரையாடி, தனியார் துறையினர், அரச துறையினர், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்படப் பல்வேறு துறையினருடனும் 57க்கு மேற்பட்ட சந்திப்புக்களை நடத்தி, இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகல துறையினரதும் ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்று, நாட்டுக்குப் பொறுத்தமான ஒரு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருக்கிறார். முதலீடுகளை அதிகரித்து, உல்லாசப் பயணத்துறையை மேம்;படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற வகையில் பாரிய வேலைத்திட்டங்களுடன் இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக கல்வியிலே, தொழில்நுட்பதுறையிலே இளைஞர்-யுவதிகளை முன்னேற்றி அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த வரவு செலவுத்திட்டம் அமைந்திருக்கின்றது. மொத்தத்தில் இது இந்நாட்டுக்குப் பொருத்தமான ஒரு வரவு செலவுத்திட்டமாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் எங்களுடைய ஜனாதிபதி அவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம்.
புதிய கல்விப் கொள்கையையும் புதிய நடைமுறைகளையும் கொண்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டமானது, இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக, எதிர்காலச் சந்ததி ஒரு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக, எதிர்காலத்திலே ஆசியாவிலேயே முன்னேறிச் செல்லக் கூடிய ஒரு நாடாக நமது நாட்டைக் கட்டியெழுப்புதற்காக உருவாக்கப்பட்டதாகும். ஆனால் அவ்வாறான ஒரு வரவு செலவுத் திடட்டத்தை இந்த நாட்டினுடைய தலைவர் அவர்கள் இந்தச் சபையிலே கொண்டுவந்து சமர்ப்பித்தபோது எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் மிகவும் கவலைக்குரியதாகும். எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்க்கின்ற கட்சிகளாக இருக்காமல் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்களும் அரசாங்கமும் எடுக்கின்ற நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டு, பிழையானவற்றை மட்டும் விமர்சிக்கின்ற கட்சிகளாக இருக்க வேண்டுமே தவிர, வெறுமனே எல்லா விடயங்களையும் எதிர்த்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளாக இருக்கக்கூடாது.
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்திலே மிகவும் மோசமாகப் பாதிக்க்பப்பட்டிருந்தன என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு வீதிகள் இருக்கவில்லை, அநேகமான கிராமங்களுக்கு மின்சாரம் இருக்கவில்லை, குடிநீர் வசதி இருக்கவில்லை. அங்குள்ள மக்கள் பல்வேறுபட்ட கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் வாழ்ந்தார்கள். அந்த மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு, ஜனாதிபதி அவர்களுடைய ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பஸில் ராஜபக்ஷ அவர்களுடைய தலைமையில் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளால் இன்று அம்மாகாணங்கள் பாரியளவில் முன்னேற்றமடைந்துகொண்டிருக்கின்றன. பாரிய வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதிகளால் உடைத்தெறியப்பட்ட பாலங்கள், மதகுகளெல்லாம் செப்பனிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முன்னர் பொத்துவிலில் இருந்து திருகோணமலைக்கு ஒருவர் வர வேண்டுமாக இருந்தால் இரண்டு மாகாணங்களைக் கடந்துதான் வரவேண்டியிருந்தது. அதற்காக பல மணித்தியாலங்களைச் செலவு செய்யவேண்டியிருந்தது. இப்போது அங்கு பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘கார்ப்பட்’ பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறுகிய நேரத்திற்குள்ளேயே அந்த மக்களால் தங்களுடைய போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, அந்த மக்கள் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினைகளை எதிர்நோக்கினார்கள். யாழ் மாவட்டத்திற்கென்று பாரிய நீர் விநியோகத் திட்டம், அம்பாறை நீர் விநியோகத் திட்டம் என்பன இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 800 போடி ரூபாய் செலவிலே செய்து முடிக்கப்படட்ட மட்டக்களப்புக்கான பாரிய நீர்த் திட்டம் அண்மையிலே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதே போன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மின்சார வசதியில்லாத அனைத்துக் கிராமங்களுக்கும் மின் விநியோகம் வழங்குவதற்கான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று இன்று சுகாதாரத்துறையும் அங்கு மிகவேகமாக முன்னேறி வருகின்றது. எல்லா வைத்தியசாலைகளும் நவீன கட்டிடங்களுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த அரசாங்கத்தினால் ‘சமாதானத்தினூடான அபிவிருத்தி’ என்கின்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஊடாக அந்தப் பிரதேசங்களிலே முழுமையான அபிவிருத்தியை நாங்கள் காணக்குகூடியதாக இருக்கின்றது. விஷேடமாக பௌதீக வளங்களை மாத்திரமன்றிப் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘திவிநெகும’ வேலைத்திட்டம் மிகவும் வேகமாக முன்னேற்றமடைந்திருக்கின்றது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே நிலவிய யுத்தத்தின் காரணமாகப் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்ததனால் வருமானம் குன்றி வறுமையினால் வாடிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று ‘திவிநெகும’ வேலைத்திட்டத்தின் மூலம் தமது சொந்தப் பொருளாதார நிலையை மேம்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருந்ததும் நீங்கள் அறிந்ததே. ஆனால், இன்று மரக்கறிகளினதும் பழங்களினதும் விலைகள் முப்பது சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே ஏற்படுத்தப்பட்டுள்ள ‘திவிநெகும’ வேலைத்திட்டம் விவசாயத்துறையில் அங்கு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் தங்களது வீட்டுக் காணிகளிலும் தோட்டக் காணிகளிலும் வீட்டுத் தோட்டம், சிறு பயிர்ச் செய்கை மற்றும் நெற்செய்கை போன்றவற்;றில் ஈடுபடுவார்கள். இந்த ‘திவிநெகும’ வேலைத்திட்டத்தின் ஊடாக அம்மக்களின் வறுமையை நீக்கி, அவர்களது சொந்த வருமானத்தை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. அந்த மக்கள் மீண்டும் கல்வித் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். இலங்கையின் நகரப்புற பாடசாலைகளில் மட்டும் கல்வியை மேம்படுத்துவதை விடுத்து, கல்விக் கொள்கையில் மாற்றத்தை ஏறபடுத்தி, புதிய கல்வித்திட்டத்தினூடாகக் கிராமப் புறங்களில் உள்ள பாடசாலைகளிலும் கல்வியை மேம்படுத்தும் நொக்கில் ‘ஆயிரம் பாடசாலைகள் திட்டம்’ எனும் செயற்றிட்டத்தை மேதகு ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார். நாங்கள் இவ்வாறு ஒவ்வொரு துறையைப் பற்றியும் சொல்லிக்கொண்டே செல்லலாம்.
இன்று நாங்கள் அனைவரும் தேசிய ரீதியில் ஒன்றுபட்டிருக்கின்றோம். எமது நாட்டில் இருந்த பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று எமது நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டுக்கு வெளியில் உள்ள எல்.ரி.ரி.ஈ யினரின் சர்வதேச வலைப்பின்னல் எமது அரசுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நாங்கள் அவற்றிலிருந்து நமது நாட்டைக் காப்பாற்ற வெண்டும். அவ்வாறு எமது நாட்டைக் காப்பாற்றினால்தான் எதிர்காலத்தில் எமது சந்ததி இந்த மண்ணிலே நிம்மதியுடன் வாழமுடியும். கடந்த முப்பது ஆண்டுகளிலும் நாங்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்களுடன் வாழ்ந்த அகதி வாழ்க்கை, அடிமை வாழ்க்கை என்பவற்றை நாங்கள் மீண்டும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுவைக்கக்கூடாது. நாங்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் எங்களுடன் முடிவடைய வேண்டும். எங்களுடைய குழந்தைகள், எமது எதிர்கால சந்ததியினர் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்ட, அபிவிருத்தியடைந்த நாட்டிலே நிம்மதியுடன் வாழவேண்டும் என்பதுதான் எமது மேதகு ஜனாதிபதி அவர்களின் ஆசையாக இருக்கின்றது. அதற்காக நாங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இன்று பொதுசன ஐக்கிய முன்னனி ஆட்சியில் இருக்கின்றது. நாளை ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரலாம். எனவே, நாங்கள் அரசியல் கட்சி பேதத்தை மறந்து, எமது நாடு என்கின்ற ஒரே உணர்வுடன் செயற்பட வேண்டும். எமது நாட்டிலே பயங்கரவாத செயல்கள் உருவானபோது மதிப்பிடமுடியாத ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைமைகள் அழிக்கப்பட்டன. அந்த நிலைமை இந்த நாட்டிலே மீண்டும் உருவாகுவதற்கு நாங்கள் எவரும் அனுமதியளிக்க முடியாது. ஆகவே, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயற்பட வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற சிந்தனைகளுக்கப்பால் இந்த நாட்டில் எவ்வாறு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதோ, அதேபோன்று எமது நாட்டுக்கு வெளியிலே இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற சதி முயற்சிகளுக்கு எதிராகவும் நாங்கள் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியிலே ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அப்பொழுதுதான் அத்தகைய சதி முயற்சிகளுக்கு நாங்கள் முகங்கொடுக்க முடியும்.
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, இந்த நாட்டை ஒரு நிலையான அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற அத்தனை முயற்சிகளின்போதும் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு நாங்கள் முகம்கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
அதேபோல், எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளினால் நாசப்படுத்தப்பட்ட மீன்பிடித்துறை, கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை, கைத்தொழிற்துறை, மற்றும் பாதைகள், பாலங்கள், மதகுகள், துறைமுகங்கள், புகையிரதப் பாதைகள், விமான நிலையங்கள் என்பவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டாக வேண்டும். அந்த வகையில், நேற்று மேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமானது, நமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குக் கிடைத்திருக்கின்ற ஒரு வரப்பிரசாதமாகும். ஆகவே, எதிர்வரும் 2012ஆம் ஆண்டில், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இத்திட்டத்தை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவதற்கும் நமது நாட்டை மீண்டும் சர்வதேச ரீதியிலே புகழ்மிக்க, பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்த ஒரு நாடாகக் கட்டியெழுப்புவதற்கும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய தலைமையில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று கேட்டு விடைபெறுகின்றேன். நன்றி.








Alm Rifas said
very good speech minister best of luck.
Fasmy said
நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆள்………………..?