‘பன்’பாயும் வேப்ப மரமும்
Posted by Kattankudi Web Community (KWC) on 22/11/2011

காத்தநகர் முகைதீன்சாலியின் வாழ்தல் மீதான வன்முறைகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து மற்றுமொரு சிறுகதை இன்போ வாசகர்களுக்காக.
‘இன்னைக்கி ஆட்கள வரச்சொல்லியிருக்கன் பைரூஸா. இந்த வேப்ப மரத்த தறிச்சாத்தான் நம்ம வீடு வெளியால தெரியும், வீதியில இருந்து பார்த்தா காடு மாதிரி தெரியுது. இப்ப எந்த வீட்ல இப்பிடி மரமெல்லாம் வளர்க்கிறாங்க வளகு நிறைய சருகெல்லாம் கொட்டி அசிங்கமா கிடக்குது’
‘ஏங்க, வாப்பா கேள்விப்பட்டா மனவேதனப்படுவாரு, பக்கத்து வீட்டு ஆதங்காக்காட வளவுக்குள்ள மரத்தின்ட ஒரு கிளை நீண்டிருக்குதெண்டு அவரு சண்டைக்கு வந்தப்போ கூட இந்த மரத்தின்ட கிளையை வெட்ட விருப்பமில்லாம வாப்பா நம்மிட ரெண்டடி நிலத்த அவருக்கு விட்டுக்கொடுத்ததா உம்மா சொல்லிருக்காங்க. இப்ப நாம மரத்தையே தறிச்சிட்டா அவரால எப்பிடிங்க தாங்க முடியும்?’
‘ஆமா , அவரே இன்னைக்கா நாளைக்காண்ணு இழுத்துட்டு கிடக்காரு இந்த லட்ச்சனத்துல அவருக்கு மரத்த வெட்டினா என்ன வெட்டாட்டி என்ன தெரியவா போகுது’
‘…………..’
மகளும் மருமகனும் கதைத்துக் கொள்வது காலைக்காற்றின் வழியே என் காதுக்குள் நுழைகிறது. தாயையும் இழந்து தனிமைப்பட்டுப் போன என் மகளுக்கு இதையும் தாண்டி எவ்வாறு மருமகனுடன் எனக்காக பரிந்துரைக்க முடியும்? என் மனசு மரத்துப்போகிறது. என்னால் என்னதான் செய்யமுடியும்? உடம்பையும், வாயையும் முதுமை தன் கோரக்கரங்களினால் கட்டிப்போட்டிருக்கும்போது, கட்டுடைத்து எவ்வாறு என்னால் மரத்தை தறிக்க வேண்டாமென்று வற்புறுத்த முடியும். என் இயலாமையை நினைத்து எனக்குள் நானே அழுதுகொள்கிறேன். என் கண்கள் சிந்திய உணர்ச்சிக் கண்ணீரால் தலையணை நனைந்து கொண்டிருக்கிறது.
அப்போது எனக்கு பத்து வயசிருக்கும் என்வாப்பா வெள்ளத்தம்பி ஹாஜியார் படுவான்கரைக்கு வள்ளத்தில ஊருல இருந்து பன்பாய்கள கொண்டு போய் கொடுத்திட்டு அங்கேயிருந்து ஆடு, கோழி, தயிரு எல்லாம் வாங்கி வந்து எங்கட மார்க்கட்டுல விப்பாரு. அன்டைக்கும் அப்பிடித்தான் படுவான்கரைக்கு போனவரு யாவார சாமான்களோட ஒரு மரத்தையும் கொண்டு வந்தாரு, ‘இந்த மரம் ஏது வாப்பா’ என்டு நான் கேட்டப்போ அந்த மரத்த அவர்ர கூட்டாளி கந்தப்பு தந்ததா சொன்னாரு. அவங்கட நட்புக்கு அடையாளமா இந்த மரத்த தந்ததா சொன்னாரு.
‘இந்த மரத்த உன்ட வளவில நட்டு வை வெள்ளத்தம்பி. நம்மிட நட்புக்கு பாத்திரமா இந்த மரம் பரம்பர பரம்பரயா இருக்கட்டும்’
என்று வாப்பாட்ட சொன்னதா வாப்பாசென்னாரு. வாப்பாவும் நானுமா சேர்ந்து அந்த மரத்த நட்டு நீர் வார்த்தம். அப்ப வாப்பா சொன்னாரு, ‘மகன் இது சாதாரன மரமில்ல நம்மிட இன நல்லுறவுக்கு அடையாளமா கந்தப்பு மாமா தந்த மரம். இதக்கொண்டு நம்ம பரம்பரயெல்லாம் இதன் நிழலையும் பயனையும் அடயணும் உன்ர உசிருள்ளவரைக்கும் இத நீ அழியாமப் பாதுகாக்கணும்’.
மரத்த நட்டு ஒரு வருசத்துக்கு பின்னால கந்தப்பு மாமா எங்கட வீட்ட வந்தப்போ இந்த மரத்த பாத்து ரொம்ப சந்தோசப் பட்டாரு ‘நம்மிட நட்புச் சின்னம் நல்லா வளர்ந்திருக்கெண்டு வாப்பாகிட்ட சொன்னாரு. நான் ஒவ்வொரு நாளும் தண்ணி ஊத்தி இந்த மரத்த வளர்க்கிறத வாப்பா கந்தப்பு மாமாட்ட சொன்னப்போ கந்தப்பு மாமா என்ன கட்டியணைத்து என் நெத்தியில முத்தமிட்டு ஒரு சதம் காசு தந்தாரு. அந்த ஒரு சதம் என்ட தைலா பெட்டியில இப்ப கூட பத்திரமாயிருக்குது.
ஒரு நாள் ஒரு பெரும் புயலொன்று வந்து எங்கட குடிசையெல்லாம் அழிஞ்சு போயிட்டுது ஆனா இந்த மரம் மட்டும் கம்பீரமா நின்னிச்சி. கொஞ்ச நாட்களா இந்த மரத்தடிதான் எங்கட வீடாக மாறிப்போயிருந்தது. அந்த மரத்தின் அடி ஒரு தாயின் மடியை போல எங்கள் குடும்பத்தை தாங்கியதை என்னால இன்றைக்கும் மறக்க ஏலாது. எட்டுத்திசையும் கிளைபரப்பி பரந்து கிடந்த இந்த மரத்தினால எங்கட ஊருல எத்தனையோ பேரு நிறைய பிரயோசனப்பட்டிருக்காங்க.
கூவைக்கட்டு, நெருப்புக்காய்ச்சல், தலைக்குத்து போன்ற நோய்களுக்கு செஞ்சந்தனம் உரைச்சி பூசுறதுக்கு வேப்பம் பட்டை எடுக்கிறதுக்காக இந்த ஊரில உள்ள அனேகபேரு எங்கட வீட்டுக்கு வருவாங்க. அதுமட்டுமில்லாம சொறி சிரங்கு வியர்க்குரு போன்ற நோய்களுக்கு வேப்ப இலையை அரைச்சி பூசுறதுக்கு இலை பறிக்க வருவாங்க. அதுமட்டுமில்லாம வைத்தியம் பாக்கிறவெங்க குளையடிப்பதற்கு கொத்து கட்ட இலை பறிக்க வருவாங்க. எப்பவுமே எங்க மரம் இலையுதிர்ந்து போறதில்ல அட்சய பாத்திரம் போல வாறவங்களுக்கெல்லாம் கொடுத்தாலும் எப்பவும் குறையுறதில்ல.
எப்பவுமே வாப்பா வீட்டுத் தோட்டத்தில காய்கறிகள பாதிக்கிற பூச்சிகள கட்டுப்படுத்த பூச்சிநாசினி பாவிக்கிறதில்ல. மரம் காய்க்கத் தொடங்கிட்டென்டா வேப்பம் பழத்தையெல்லாம் என்ன சேகரிச்சு வைக்க சொல்வாரு. பின்னாடி சேகரிச்ச வேப்பங் கொட்டைகள இடிச்சி மாவாக்கி அத தண்ணீருல கலக்கி பூச்சி மருந்தா பாவிப்பாரு. இப்பிடி செஞ்சா காய்கறி இயற்கைத் தன்ம மாறாம இருக்குமெண்டு சொல்வாரு. இரவையில நுளம்புக் கடியில இருந்து காப்பாத்துறது கூட இந்த வேப்ப இலதான். இரவானா சட்டியில உரிச்சதேங்கா மட்டய பத்தவெச்சி அதில வேப்ப இலய போட்டு புகைய வெச்சா நுளம்பெல்லாம் தல தெறிக்க ஓடிடும்.
நான் என்னைக்குமே பற் பசையால பல்துலக்கினது கிடையாது. நானும் வாப்பாவும் உம்மாவும் எப்பவுமே வேப்பங் குச்சியாலதான் பல் துலக்குவம். அதனாலதான் இந்த தள்ளாத வயசிலையும் என் பல்லெல்லாம் கெட்டியா இருக்குது. இப்பிடி எல்லா வகையிலேயும் பிரயோசனமே தந்துக்கிட்டிருக்கிற இந்த மரத்த மருமகன் வெட்டப் போறனெண்டு சொன்னத என்னால தாங்க முடியல்ல. என்ட வாப்பா உம்மா மனைவி எல்லோருமே என்னை தனியா விட்டுட்டு போயிட்டாலும் இந்த வேப்பமரம் மாத்திரம் இன்னும் என் கூடவே வாழ்ந்திட்டிருக்குது.
என் மனைவி பாத்தும்மா இந்த மரத்தடியில இருந்துதான் தன்ட பாய் இழைக்கும் தொழிலை செய்வா. தாழங்குடாவில இருந்து இளைய தம்பி தான் பன்புல்லு கொண்டு வருவாரு. மத்தவங்க கொண்டுவார புல்லை விட இளையதம்பி கொண்டுவார பன் நல்லா காய்ஞ்சி இருக்கும். அதனால வாடிக்கையா பாத்தும்மா இளையதம்பிட்டதான் பன் வாங்கிறது வழக்கம். வாங்கின பன்கள பாத்தும்மா இந்த மரத்தடியில குந்தி பன்னின் நுனியில இருக்கிற பூவ நோண்டுவா. பன்னின்ட அடியில இருக்கிற குழல உருவுவா. மகள் பைரூஸா அப்போது சின்னபிள்ள உம்மா கூட இருந்து குழல் உருவுவது இன்னும் ஞாபகங்களில உறைஞ்சி கிடக்கு. பூ நோண்டி குழல் உருவி துப்பரவாக்கிய பன்னை பாத்துமா அடுக்கி உதறிக் கட்டி உயரத்துக்கு தக்கன பிரிச்சி கத்தை கத்தையா கட்டுவா. கட்டின பன் கத்தைகள கூட காச்சிறது இந்த மரத்தின் அடியில அடுப்பு மூட்டித்தான். கோழிச் சாயம்போட்டு காய்சின பன்கள அவ சிவப்பு, பச்சையெண்டு இந்த மரத்தின்ட கிளையிலதான் காயப்போடுவா. அது பாக்குறதுக்கு நல்ல வடிவாயிருக்கும். கட்டின பன்கள வேப்ப மரத்தடியில சாக்கு விரிச்சி குந்தியிருந்து ‘பருத்துமணை’யில பன் அரைப்பா. பருத்துமணை எழுப்புற சத்தம் எனக்கு எரிச்சலா இருக்கும்
‘என்ன புள்ள இது பழய விதானையார்ர சைக்கிளப்போல கரகரன்னு கத்துது’ என்டு நான் சொன்னா ‘அந்த எண்ண குப்பிய கொஞ்சம் கொண்டாங்க’ எம்பா. நான் எண்ணெய்ய கொடுத்ததும் அத பருத்துமணையின் கதிருல ஊத்தினா சத்தமெல்லாம் அடங்கி புள்ளய போல வேல செய்யும். நானும் அவவோட சேந்து மரத்தடியில இருந்து வம்பளக்கும் போது நேரம் போறதே தொரியிறதில்ல.
இந்த வேப்ப மரத்தடிதான் பாத்திமாவின் குடிசைத்தொழிற்சாலை. பக்கத்து வீட்டு காசறாம்மா, பத்தினிம்மா, வெள்ளக்கண்டு எல்லாரும் அந்தியானா இந்த மரத்தடிக்கு வந்துருவாக. எல்லாருஞ் சேர்ந்தாங்கென்னா ஊர்பளாயோடு சேர்ந்து வேலையும் நல்லாப் போகும். பருத்துமணையில அரைச்ச பன்னை சிவப்பு பச்சை வெள்ளையென கலர் கலரா பிரிச்சு பாத்தும்மா பாயை அடியிடுவா. எப்பிடியும் காலையில அடியிட்டா மத்தியானத்துக்கிடயில முதலாவது ஆரம்பிச்ச பன்கள இழைச்சி கொட்டானாக்கி முதல் குத்த முடிச்சிடுவா. பாய் இழைக்கும் போது அது ஒடுங்கிப் போகாம இருக்கிறதுக்காக பாத்தும்மா பாரத்திற்கு வெக்கின்ற திருகைக் கல்லின் துண்டு இப்போதும் இந்த வேப்ப மரத்தடியில என்ட பாத்துமாவின் நினைவாக கிடக்கிது. மத்தியானம் சாப்பாட்ட முடிச்சிட்டு மரத்தடியில குந்தினாவெண்டா அஸருக்கு வாங்கு சொல்றதுக்கு முன்னால அடுத்த குத்து குத்தி பாயை தலக்கட்டிருவா. நீண்ட பன்னாயிருந்தா ரெண்டு குத்தோட பாய்முடிஞ்சிடும். கொட்டான் பன்னாயிருந்தா மூணு நாலு குத்து குத்தனும்.
அஸர்தொழுகைக்கு பின்னால நானும் பள்ளியில இருந்து வந்துருவன். பாத்தும்மா மரத்தடியில இருக்கிற அடுப்பில மண் பானயில தேயில காச்சி முட்டாசோட தருவா. நானும் சின்ன மகளும் அவவுமா குடிப்பம். அந்த தேத்தண்ணி ருசிய இன்டெக்கி நினச்சாலும் நாக்கு ஊருது. தேத்தண்ணிக்கு பின்னால இழைச்சி முடிச்ச பாயில மிச்சமா நீட்டிக்கொண்டிருக்கிற பன்னையெல்லாம் பிலேட்டீன் மூலமா கட்டறுத்து சுருளாகச் சுத்தி கட்டி முடிக்கவும் அசனாரு மாமா வந்துருவாரு. பாத்துமாவின் பாய்களென்டா யாவாரி மாரிடம் நல்ல கிராக்கி. ஆனா வழமையா பாத்தும்மா அசனாரு மாமாக்குத்தான் பாய விப்பா.
விதவிதமா பாய் இழைக்கிறதில பாத்தும்மா கில்லாடி. ஒத்தப்பாய், புனிப்பாய், பிலேட்டின்பாய், கரிக்குருவிப்பாய், ஒத்தக்கொடிப்பாய், றவுன் பாய், மெத்தப்பாய், கைமாறிப்பாய், சாதப்பாய், சீத்தறவுன்பாய், சில்லுறவுன்பாய், ஒத்தறவுன்பாய், ஒக்கத்திதட்டுப்பாய், பூப்பாய், மாராப்பு பாய், காதுப்பாய் இப்பிடி ஒரு நாளைக்கு ஒரு பாயின்னு பாத்தும்மா இழைப்பா. ஒரு நாள் நான் பாத்துமாவிட்ட கேட்டன்
‘ஏன் புள்ளஇவ்வளவு பாய்தான் இருக்கா இல்ல வேற பாய்களும் இருக்கா’
‘நான் சொன்னா நீங்க சிரிப்பீங்க’
‘பரவாயில்ல புள்ள வெக்கப்படாமச் சொல்லு’
‘தேவடியாப் பாயென்டும் ஒரு பாய் இருக்குது’
ஊருல கலியான சீசனெண்டா பாத்தும்மாக்கு ஓய்விருக்காது, கலியாணம் முடிச்சி முதலிரவுல பொண்ணும் மாப்பிள்ளையும் தூங்குறதுக்கு ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாய் விரிக்கிறது அப்போ எங்கட ஊரு வழக்கம். அதோட மாப்புள்ள இருக்கிறதுக்கு மாப்பிள்ளப்பாய் உணவுச்சாமான் வைக்கறதுக்கு எச்சிப்பாய் எண்டு பாத்துமாட்டதான் எல்லா ஓடரும் வரும். அவவும் அழுப்பில்லாம எல்லாத்தையும் இழைச்சி கொடுத்திடுவா.
பாத்தும்மா ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகிட்டா. அத்தோட இந்த வீட்ல இருந்து பாய் பின்னல் என்ற இந்தக்கலையும் மங்கிப் போயிட்டு. நோய்வாய் பட்டிருந்த பாத்தும்மா அவட உசிர இந்த வேப்ப மரத்தடியிலதான் விட்டா. என்ட உசிரு கூட என் வாப்பா என்உம்மா என்மனைவி எல்லோரோடும் ஒரு நண்பனாகவே வாழ்ந்திட்டிருக்கிற இந்த மரத்தடியிலதான் பிரியணும் எங்கிறதுதான் என்ட ஆசையும். அது இப்போ நிறைவேறாமற் போகுமோ எங்கிறதுதான் என்னோட ஆதங்கம், இத நான் ஒரு மரமா பார்க்கல்ல. என் அப்பாவோட நண்பர் கந்தப்புவாகத்தான் பார்க்கிறன்.
வீடு வெளியால தெரியணும் எங்கிற ஒரு சின்ன காரணத்துக்காக பரம்பர பரம்பரயா நம்ம கூடவேயிருக்கிற உசிர அழிக்கிறதுக்கு மருமகனுக்கு எப்பிடி மனசு வந்திச்சி? என்னால முடியல்ல நினைக்கையில நெஞ்சு வெடிக்குமாப் போல இருக்கு. எழுந்து சென்று தடுக்கவோ, வாயினால் சொல்லி தடுக்வோ முடியாதவாறு உடம்பையும் வாயையும் கட்டிப்போட்ட இந்த முதுமைக்கு கண்களையும் காதுகளையும் மனசையும் கட்டிப்போட முடியல்ல.
என்ட உசிரு தங்கியிருக்கிற இந்த மரத்த வெட்றத பாத்திட்டு எப்பிடி நான் உசிரோட இருக்கிறது. என் உணர்வுகளை எப்படி நான் அவர்களுக்கு புரிய வைப்பேன் . என்னால் அழுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. என் நெஞ்சுக்குள் ஒரு பந்து உருள்வதாக உணர்கிறேன். என் தொண்டையில் நீர் வற்றி வரண்டுபோகவே என் உடம்பு என்னையறியாமலே அசைகிறது. நான் அவதியுறுவதை அவதானித்த எனது மகள் தூக்க மாத்திரையுடன் வந்து என் உணர்வுகளை உணராமல் என் வாயினுள் மாத்திரைகளை திணித்து தண்ணீரையும் பருக்கிவிட்டு போகிறாள். உலகம் எனக்கு இருளாகிப் போகிறது.
மயக்கம் தெளியும் போது வேப்ப மரம் வெட்டப்பட்டிருந்தால் அநுபவிக்கப் போகும் வேதனையை விடவும் இந்த மயக்கமே மரணமாகிப் போவது நல்லது என மனசு நினைத்துக்கொண்டபோது என் உணர்வுகள் அற்றுப் போகின்றன…. மரணத்தின் இடைவெளியில்.






