காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,236 மொத்த வருகைகள்

மாப்புள்ள விற்கப் போறம்

Posted by Kattankudi Web Community (KWC) on 16/11/2011

காத்தநகர் முகைதீன்சாலியின் வாழ்தல்மீதான வன்முறைகள் சிறுகதைத்தொகுப்பிலிருந்து மற்றுமொரு சிறுகதை இன்போ வாசகர்களுக்காக….

‘இந்தாங்க சம்மந்தி முதல்ல வாயில போடுங்க மத்தத மறுகா கதைப்பம்’

தேசிக்காயும் சாம்பலும் சேர்த்து தேங்காய்ச் சும்பினால் தேய்த்துக் கழுவிய அரசிலை வட்டாவை மாப்புள்ளட உம்மா மரியம்பு முன்னால கொண்டு வந்து வெக்கிறா செய்னம்பு நாச்சி.

‘என்ன, செய்னம்பு நாச்சி அதுக்குள்ள உறவுமுற செல்லிக் கூப்பிர்றிங்க. பேச்சுவார்த்த முடியுமுன்னாலேயே சம்மந்தியென்டு முடிவுகட்டிட்டிங்களா?’

மரியம்பு திடீரென்டு கேட்கவும் செய்னம்பு நாச்சி பயந்தே போறா. பரிதாபகரமாக புறோக்கர் நஸிலாவத் திரும்பி பாக்கிறா. புறோக்கர் நஸிலா முன்னமே சொல்லித்தான் இருந்தாள்.

‘மரியம்பு கறார் பேர்வழி. எதுக்கெடுத்தாலும் நாயாத்தான் பாய்வாள். அவள அடக்கணுமென்டா முதல்ல வட்டாவ குடுத்து வாயில போடச் சொல்லணும். வெறும் வாயோட இருந்தா அவள்ற வாயில இருந்து என்ன வருமென்டு சொல்லேலாது. ஆனா மரியம்புட புள்ள சாதிக்கீன் தங்கமான புள்ள. கிழிச்ச கோட்டத் தாண்ட மாட்டான். அஞ்சௌத்தும் உடாம தொழப்போவான். பீடி சிக்கிரட்டும் கிடையாது. ஒரு நாளும் ஊட்டுல சும்மா கிடக்க மாட்டான். என்ன தொழிலென்டாலும் கிடைக்கிறத செஞ்சி சம்பாதிப்பான். பேங்கில கூட காசெல்லாம் போட்டு வெச்சிருக்கானாம். கலியாணத்துக்குத் தாலி கட்ட அஞ்சு பவுனுல மால வாங்கி வெச்சிருக்கானாம். அவன் மரியம்புவ போல சிடு மூஞ்சி கிடையாது. வாப்பா அவக்கரப் போல அமைதியான புள்ள. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது எப்பிடியென்டாலும் மரியம்புவ சமாளிச்சு இந்த சம்மந்தத்த பேசி முடிச்சிக்க’.

மரியம்பு வட்டாவ கூர்ந்து பார்க்கிறா. பூசிக்கழுவிய வட்டா குழந்தப்புள்ளயின் முகம் போல பளபளன்டு கிடக்கு. வட்டாவின் கீழால் தொங்கும் அரசிலை காற்றுப்படவும் சலங்கை ஒலி எழுப்பிற்று. வட்டாவின் மேலால் பூப்போட்ட சீத்தையினால் வெள்ளை கட்டிய தட்டு கண்களைப் பறிக்கின்றது. தட்டை உசத்தி வட்டாவை உற்றுப்பார்க்கிறா மரியம்பு.

களுதாவளை பெரிய வெத்திலை அரைப்பகிளி அப்பிடியே வைக்கப்பட்டிருக்கிறது. மெலிபன் பிஸ்கத் சைஸில் ரெண்டு ஏறாவூர் கைப்பு இருக்கிறது. சீவப்பட்ட கொட்டைப்பாக்கு குளிசைக் குப்பியில் நேர்த்தியாய் அடைக்கப்பட்டிருக்கிறது. துண்டுதுண்டாய் நறுக்கிய புகையிலை வெளிநாட்டு கிறீம்வாற டப்பாவில் அடைக்கப் பட்டிருக்கிறது. நறுக்கிய தென்னை ஓலையில் பதமான சுண்ணாம்பு மடிக்கப்பட்டிருக்கிறது. மரியம்புவின் கண்கள் வட்டாவைப் பார்த்ததும் அகல விரிகிறது. லேசாக கொடுப்புக்குள்ளால் புன்னகை படர்கிறது. இதைப் பார்த்ததும் செய்னம்பு நாச்சியின் படபடப்பும் குறைந்து போகிறது.

வெத்திலையைக் கையில் எடுத்து அதன் காம்பை நோண்டிய வாறே மரியம்பு கேட்கிறா.

‘நீங்க வட்டாக்க பாக்கு வெட்டியெல்லாம் வெக்கிறதில்லையா’

‘இல்ல… பாக்கெல்லாம் வெட்டித்தான வெச்சிருக்கம் அதான்…….’

‘என்னதான் வெட்டி வெச்சாலும் வட்டாவில பாக்குவெட்டி வெக்கிறது வழக்கந்தான’

சொல்லியவாறே, சீவியபாக்கை சுண்ணாம்பு தடவிய வெற்றிலையில் வைத்து அளவாக புகையிலையும் சேர்த்து மடித்து வாயில் திணித்து நாக்கினால் தள்ளி கைப்பை கடித்தவாறே,

‘வட்டாவப் பாத்ததும் உங்குட குடும்பத்த எனக்கு புடிச்சிப் போச்சி. இனி மத்த விசயத்த பேசிக்குவம். வட்டாவ பாத்து குடும்பத்திட தலவிதிய நான் செல்லிப்புடுவன். படிக்கத்த கொஞ்சம் தாங்க சம்மந்தி’

மரியம்பு ‘சம்மந்தி’ யென்றதும் செய்னம்பு நாச்சியின் உள்ளம் குளிர்ந்து போகிறது. புறோக்கர் நஸீலாவும் கொடுப்புக்குள் சிரித்துக் கொள்கிறாள். செய்னம்பு நாச்சி படிக்கத்தை கொண்டு வந்து மரியம்பு முன்னால் வைக்கிறா.

‘என்ன சம்மந்தி இப்பவே மரியாத குறையுற மாதிரித் தெரியுது’
செய்னம்பு நாச்சி பதறிப்போய் கேட்கிறா.

‘எதச் செல்றிங்க சம்மந்தி’

‘இந்த அலுமினிய படிக்கத்தத்தான் செல்றன். மாப்புள்ளட உம்மாக்கு குடுக்க உங்குட்ட ஒரு இனாமல் படிக்கமில்லையா?’

‘இரிக்கி சம்மந்தி, இதுவும் புதிசுதான் அத கலியாணத்துக்கு பாவிப்பமென்டு வெச்சிருக்கன்’

‘செரி உடுங்க, பொண் வெளிநாட்டுக்கு போய்வந்ததா நஸீலா சென்னா. அதப்பத்தி எனக்கு கவல இல்ல ஆம்புளயல போல பொம்புளயெலும் சம்பாதிக்கத்தான வேணும். மருமக வெளிநாட்டுல இருந்து என்னென்ன சாமான் கொண்டு வந்திருக்கா?’

கொடுப்பினால் வடிந்த வெற்றிலை எச்சிலை முந்தானையால் துடைத்துக்கொண்டே மரியம்பு கேட்கிறா.

‘ஒரு அய்சுபொட்டி, உடுப்பு கழுவுற மிசினொண்டு, கலர் டீவியொண்டு, டெக்கொண்டு, பெரிய பாட்டு பொட்டியொண்டு மறுகா அவக்குத் தேவையான உடுப்பு, கிறிம், மணம், சின்ன சின்ன சாமானென்டு கொள்ளயா கொண்டு வந்திருக்கா சம்மந்தி’

மரியம்புவின் கண்கள் புதயலைக் கண்டது போல் அகல விரிகிறது.

‘கொண்டு வந்த சாமானெல்லாம் அவக்குத்தான குடுப்பீங்க’

‘ஓஞ்சம்மந்தி, அவட சாமான் ஒரு தூசும் நமக்கு வானா அவ ரெத்தத்த நெருப்பாக்கி சம்பாதிச்சி சேத்த சாமான்’

‘அதான, சம்மதந்தி அவங்க சம்பாதிச்சது நமக்கென்னத்துக்கு’
செய்னம்பு நாச்சி மெல்லிய புன்னகையை முகத்தில் படர விர்றா.

‘நல்ல சைக்கிளொண்டும் கொண்டு வந்தயெண்டு கேள்விப்பட்டன் உண்மயா சம்மந்தி’

‘ஓஞ்சம்மந்தி, அத அவட தம்பிக்கெண்டு கொண்டு வந்தா அவன் படிக்கிற புள்ள வெளிநாட்டு சைக்கிளெல்லாம் ஓட மாட்டான். பெருத்தத்துக்கு புறகு ஓடட்டுமெண்டு நான்தான் சென்ன. அது அப்பிடியே பொட்டிக்க கிடக்கு’

‘நீங்க செல்றதும் செரிதான். படிக்கிற புள்ளக்கி என்னத்துக்கு வெளிநாட்டு சைக்கிளெல்லாம். உங்குட மருமகனுக்கு குடுத்தீங்கெண்டா, யாவாரத்துக்கு போற புள்ள ஓடிக்குவான சம்மந்தி’

செய்னம்பு நாச்சியின் நெஞ்சுக்குள் ‘பக்’ என்கிறது. புள்ள கேள்விப்பட்டா மனவருத்தப் படுவான, அவன எப்பிடியென்டாலும் சமாளிச்சிக்கலாம் இந்த சைக்கிகளால சம்மந்தம் குலங்சிட்டென்டா என்ன செய்யிறது அல்லா இருக்கான். புள்ளயிட்ட சென்னா புரிஞ்சிக்குவான் மனசுக்குள் நினைத்தவாறே.

‘அதிலென்ன இருக்கி சம்மந்தி அத மருமகனுக்கே குடுத்துருவம்’

இப்போது மரியம்பு சப்பிய வெற்றிலைச்சாறெல்லாம் உறிஞ்சப்பட்டு மாவாகிப்போகவே, அதை படிக்கத்தினுள் துப்பிவிட்டு அடுத்த வெற்றிலையை கையிலெடுத்து அதன் காம்பை நோண்டிய வாறே கேட்கிறா.

‘நக நட்டெல்லாம் எப்பிடிப் போடுவீங்க’

‘அவக்கு காதுல ரெண்டு, கூடமின்னி கிடக்கு, நாலு காப்பு கிடக்கு, கழுத்துல பென்டனோட முறுக்குச்சங்கிலி கிடக்கு, மறுகா வெளியில இருந்து கொண்டாந்த அஞ்சு மோதிரம் கிடக்கு. எல்லாம் அவக்குத்தான் சம்மந்தி’

‘அப்ப எல்லாஞ் சேத்து எத்தின பவுன்வரும்’

‘ஒரு பத்து பவுன் எதிர்பாக்கலாம் சம்மந்தி’

‘பத்து பவுன் காணாத சம்மந்தி…’

‘என்ன செல்றீங்க…’

‘ஒரு பதினெஞ்கி பவுனாவது போட்டாத்தான மாப்பிள்ளக்கி மரியாதியா இரிக்கும்’
இப்போது செய்னம்பு நாச்சியின் முகம் கறுத்துக் குறுகிப்போகிறது.

‘என்ன செய்ய பொண்ண பெத்தா எல்லாத்தையும் தாங்கத்தான வேணும்’ மனதுக்குள் நினைத்தவாறே,

‘இன்னும் அஞ்சி பவுனுக்கு நான் எங்க போவன்’

‘ஏன் சம்மந்தி உங்குட கழுத்துல கிடக்கிற மல்லியமொட்டுச் சங்கிலி ஒரு அஞ்சாறு தேறும் போல கிடக்கே’

‘அது அவகிட வாப்பா எனக்கு தாலி கட்டின சங்கிலி. பறவால்ல புள்ளக்கித்தான குடுக்கப்போறம். இதயும் போட்டுர்றன் சம்மந்தி’

‘உம்மா இஞ்ச கொஞ்சம் வாங்களன்’
ஊட்டுக்குள் இருந்து மகள் பரீதா கூப்பிட்டாள்.

‘என்னம்மா வாப்பா போட்ட சங்கிலியத் தாறனென்டு செல்றிங்க. வாப்பா மௌத்தாகி மையத்துச் சிலவுக்கு காசில்லையெண்டு கஷ்ட்டப்பட்டப்போ கூட இத நீங்க கழட்டல்லயே உம்மா’
‘நீ பேசாம இரு புள்ள உன்ன கர சேக்குறவரக்கிம் நான் வகுத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இரிக்கன்’
‘என்ன சம்மந்தி, மகள் என்ன செல்றா’
‘அவக்கு வேலல்ல சம்மந்தி சும்மா உம்மா உம்மாண்டு கூப்பிடுவா நீங்க செல்லுங்க’
‘நல்லதா போச்சி, கலியாணத்துக்கு முன்னால எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டா பின்னால காதிக்கோடு அது இதெண்டு அலயத்தேவெல்ல சம்மந்தி’

‘ஓமோம், கலியாணமென்டா ஒரு நாளையோட முடிஞ்சுபோற கூத்தா, இரிங்க சம்மந்தி குசினிக்க போயிட்டு வாறன்’

செய்னம்பு நாச்சி குசினிக்குள்ளிருந்து சம்ஸா ஒரு றெக்காவியிலும், பறங்கிவாழைப்பழம் ஒரு றெக்காவியிலும், வெட்டுக்கேக்கு ஒரு றெக்காவியிலும் வைத்து வெள்ள கட்டின தட்டினால் மூடி மரியம்பு முன் வைத்து விட்டு வாழைப்பழத்தை எடுத்து தோலை உரித்து சம்ஸாவையும் எடுத்து மரியம்புவிடம் நீட்டுறா.
‘எடுங்க சம்மந்தி’

மரியம்பு வாங்கிக்கொண்டு.

‘நீங்களும் எடுங்க சம்மந்தி’

‘நான் புறகு எடுக்கன் நீங்க தின்னுங்க சம்மந்தி’

‘நஸீலா நீயும் எடுகா’

வாழைப்பழத்தை வாயில் திணித்தவாறே மரியம்பு கேட்கிறா.

‘சம்மந்தி இந்த வீடு வாசல் யார்ர பேருல இருக்கு’

‘என்ட பேருலதான் சம்மந்தி’

‘அப்ப முன்னுக்கு கிடக்கிற வளகு’

‘அதுவும் என்ட பேருலதான் கிடக்கு மகனுக்கெண்டு உட்டு வெச்சிருக்கன்’

‘முன்னுக்கு வளகு கிடந்தா ஒருகாலத்துல ஊடு வாசல் கட்டினா இந்த ஊடு பின்னால போயிடுமே சம்மந்தி’

‘அதுக்கு என்ன செய்யிற’

‘அந்த வளகையும் சேர்த்து உங்கட மருமகன்ட பேருக்கு எழுதிப்போடுங்க’

செய்னம்பு நாச்சியின் முகம் மாறிப் போகிறது. நஸீலாவை உற்றுப் பார்க்கிறா.

‘நஸீலா குசினிக்க கொஞ்சம் வாமன’

நஸீலா செய்னம்பு நாச்சியுடன் குசினிக்குள் போகிறாள். செய்னம்பு நாச்சி காதும்காதும் வைத்தாற் போல கேட்கிறா.

‘என்ன புள்ள இப்பிடி இருக்கிறதயெல்லாம் கேட்டா நான் எங்க போறது’

‘இஞ்ச பாருங்க செய்னம்பு நாச்சி மாப்புள்ள தங்கமான புள்ள இந்த சம்மந்தத்த உட்டிட்டிங்கென்டா வெளிநாட்டுக்குப் போய் வந்த உங்கட மகளுக்கு ஜென்மத்துக்கும் மாப்புள்ள தேர்ற கஷ்ட்டம்’

‘சரி புள்ள வா போய் எல்லாத்துக்கும் ஓம் எண்டு செல்லுவம்’

குசினியிலிருந்து வெளியே வந்த செய்னம்பு நாச்சி,

‘செரி சம்மந்தி எல்லாத்தையும் எழுதித் தாறம்’

‘மறுகா என்ன உங்குட புள்ளதான இருந்து வாழப் போகுது’

மரியம்புவின் கண்களில் திருப்தியின் அடையாளம் தெரிகிறது.

‘அப்ப கலியாணத்த எப்ப சம்மந்தி வெச்சிக்குவம்’
செய்னம்பு நாச்சி ஆர்வத்தோட கேக்குறா.

‘கலியாணத்துக்கு இப்ப என்ன அவசரம் சம்மந்தி, முதல்ல எல்லாத்தையும் பேசி முடிச்சுக்குவமே’

‘இன்னும் என்னத்த பேசப்போறா?’
செய்னம்பு நாச்சியின் இதயம் படக் படக் கென அடித்துக் கொள்கிறது.

‘கலியாணச் சிலவெல்லாம் கிடக்கு சம்மந்தி. எங்கிட குடும்பம் பெரிய குடும்பம். அழைச்சா ஊரெல்லாம் அழைக்கணும். அதனால பெரிசா நீங்க ஒண்டும் தர வாணா. மத்தாக்களப் போல நான் அஞ்சு பத்து அது இதெண்டு கேக்க மாட்டன். ஏதோ உங்களால முடிஞ்சது ஒரு லட்சன்றுவாத் தந்திருங்க’

‘என்ன சம்மந்தி செல்றிங்க’

‘கவலப்படாதீங்க சம்மந்தி. நீங்களும் ஆம்புளப் புள்ளயத்தான பெத்துவெச்சிருக்கிறிங்க நாளக்கி வட்டியும் முதலுமா வாங்கத்தான போறிங்க’

செய்னம்பு நாச்சியினால் பேச முடியவில்லை. இதயம் கனத்துக் கல்லாகிக் கிடக்கிது. அழ நினைத்தாலும் கஸ்ட்டப்பட்டு மறைக்கிறா.

‘சரி சம்மந்தி நீங்க கேட்கிறாப்போல தந்திர்றன்’
நஸீலாவின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிகிறது.

‘எப்பிடி ஒரு லட்சம் குடுப்பா?’ மனசுக்குள் நினைத்தவாறே மற்று நடப்பதை அவதானிக்கிறாள்.

‘சம்மந்தி காசு தாற விஷயத்த யாருட்டயும் வெளிக்கால விட்றாதீங்க. பள்ளியில கேள்விப்பட்டா காவின் எழுத வரமாட்டாங்க’

‘நான் யாருட்ட சம்மந்தி செல்லப் போறன் எப்பிடியோ கலியாணம் நல்லபடியா முடிஞ்சாச் செரிதான்’

‘செரி எல்லா விசயமும் நல்ல படியா முடிஞ்சிட்டு நான் நினச்சத்த போல எல்லாம் நடந்திட்டு கடைசியா ஒண்ட பேசிக்கணும் சம்மந்தி, பெட்டி சட்டியெல்லாம் எப்பிடி செய்வீங்க’

‘நீங்க என்ன சம்மந்தி எதிர்பாக்குறீங்க’

‘எங்குளுக்கு கொள்ள கோதாரியா வாணா. ஒரு ஐனூறு முட்டயில வட்டிலப்பமும், ரெண்டு மூட சீனியும் தந்தா போதும்’

‘ செரி சம்மந்தி’

‘இன்னொண்டு சம்மந்தி புட்டுப் பொட்டி அனுப்பக்குள்ள இறச்சிச் கோழி ஆக்காதீங்க நான் தின்றதில்ல சாதிக்கீனும் வாப்பாவும் என்ன பலாயென்டாலும் தின்னுவாங்க நாட்டுக்கோழியா ஆக்கி அனுப்புங்க’

‘செரி சம்மந்தி’

‘அப்ப நான் கலியாணத் தேதிய அவருட்ட கதச்சிட்டு நஸீலாட்ட சொல்லியனுப்புறன், அப்ப நாங்க போயிட்டு வாறம்’

‘சம்மந்தி பொண்ண நீங்க பாக்கலயே’
‘என்னத்த பாக்குற சம்மந்தி, படத்தில பாத்ததுதான. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதான, நாங்க போயிட்டுவாறம்’

‘செரி சம்மந்தி அல்லாட காவலாப் போயிட்டு வாங்க’

பரீதா உம்மாவிடம் கேட்கிறாள்,
‘உம்மா, எல்லாத்தையும் தாறனெண்டு சொல்லியிருக்கீங்க காசுக்கு எங்கம்மா போவிங்க’

‘புள்ள வாப்பா, தம்பிடபேரில வாங்கிப்போட்ட வளகு பாலமுனையில கிடக்கு வித்தா ஒரு ரெண்டு மூணு தேறும்’

‘அப்ப தம்பிக்கு’

‘நான் தம்பிட்ட ஒரு ஒசியத்துச் செல்லணும் தம்பிய கூப்பிடு’

பரீதா கூப்பிட்டதும் தம்பி வியர்க்க விருவிருக்க ஓடி வருகிறான்.

‘என்னம்மா கூப்பிட்டயா’

‘ஓந்தம்பி’

‘என்னத்துக்கு கூப்பிட்ட’

‘உம்மா, உனக்கொரு ஒசியத்துச் செல்லுவன். உம்மா கண்ணமூடினாலும் நீ செய்வியாமன’

‘என்னெண்டு சொல்லுங்கம்மா’

‘தம்பி உனக்கு எத்தின வயசானாலும் பறவாயில்ல. நீ உழைச்சி சொந்தமா ஒரு வளகு வாங்கி அதில உன்ட விருப்பப்படி ஒரு வீட்டக்கட்டி ஒரு குமர உடுத்த உடுப்போட அஞ்சி சத காசும் வாங்காம அல்லாவுக்காகத்தான் கலியாணம் முடிக்கனும் செய்வியாமன’

‘ஓம் உம்மா நான் செய்வன்’

4 Responses to “மாப்புள்ள விற்கப் போறம்”

  1. aasathrlan said

    entha kalaththil thevayana kathai onru than ethu
    insha allah nammoor pasangalum etha parthavathu thirunthattum

  2. பழைய சம்பிரதாயங்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் நமது சமூகத்தின் யதார்த்த நிலையை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் முகைதீன் சாலி. இத்தகைய கேவலம் கெட்ட முறையில் இன்னும் நமதூரில் திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதனை “மாப்பிள்ளைமார்கள்” தான் தடுத்து நிறுத்த முன் வர வேண்டும். கதையின் முடிவை முற்போக்கு சிந்தனை ஒன்றுடன் அமைத்திருக்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள்.

  3. roamba arumayaha vilakki irukkereerhal annayvarum kadaysiyaha aluthiya mathiri nadanthal antha yalay kumarum kasdappadathu. allah anayvarukkum arul purivanaka……….aameen

  4. AHAMEED said

    நமது சமூகத்தின் யதார்த்த நிலையை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s