மெழுகுவர்த்தி அணைகிறது
Posted by Kattankudi Web Community (KWC) on 22/10/2011
காத்தநகர் முகைதீன்சாலி எழுதிய வாழ்தல் மீதான வன்முறைகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து மற்றுமொரு சிறுகதை இன்போ வாசகர்களுக்காக
பால் நிலவின் ஒளிக்கீற்றுகள் இருளை விரட்டிக்கொண்டிருந்தன. ஊரெங்கணும் ஒரே நிசப்தம். ஆங்காங்கே நாய்களின் ஊளைச்சத்தம் அமைதியை குலைத்துக் கொண்டிருந்தது.
ஊரே உறங்கிக்கொண்டிருக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ‘றிழ்வான்’ மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.
ஊரிலுள்ள ஒவ்வொருவரும் தாங்களும் தங்கள் வேலையுமென்று பகலெல்லாம் ஓடிஆடி உழைத்து விட்டு யாரைப்பற்றியும் எந்த சிந்தனையுமின்றி உறங்கிக் கொண்டிருக்கும் போது இவன் மட்டும் தூக்கம் தொலைத்து சிந்தனைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் தான் மற்றவர்களுக்கு செய்யும் சேவை மட்டுந்தான் மனநிறைவைத்தரும் என்பது அவனது வாதம். தீமைகளை கண்ட இடத்தில் தடுக்காமல் அவனால் இருக்க முடிவதில்லை. நன்மைகளில் எதையும் எதிர்பாராது முந்திக்கொள்வதில் அவனை யாரும் விஞ்சிட முடியாது.
சமூகத்தைப் பற்றியதான சிந்தனையில் தூக்கம் தொலைத்திருந்தான். ஐந்து நேரம் முன்ஸப்பில் அவ்வல் தக்பீருடன் தான் தொழுவது போன்றும், காகம் கோழிக்கு முன்பாக அதிகாலை எழுந்து தஹஜ்ஜத் தொழுவது போன்றும், பேதங்கள் பாராது முதியோர் சிறியோர் ஏழை பணக்காரர் எல்லோரிடத்திலும் முந்திக்கொண்டு ஸலாம் சொல்வது போன்றும், அன்பு செலுத்துவது போன்றும் எல்லோரும் செய்ய வேண்டுமென்பது அவனது எதிர்பார்ப்பு.
கண்டவற்றைக் கண்ட இடத்தில் சுட்டிக்காட்டும் அவனது இயல்பு அநேகர் இவனைப்பார்த்து முகஞ்சுழிக்க வைத்தன. இருந்தாலும் அவ்வப்போது இவன் செய்து வந்த சேவைகள் இவனை சமூகத்திற்கு தேவையான ஒருவனாக இனங்காட்டின. ஊரில் எங்காவது மையித்து விழுந்தால் முதலில் நிற்பது இவந்தான். மையித்தை அடிக்கழுவுவது முதற்கொண்டு மையவாடிக்கு ஜனாஸாவைக் கொண்டு சென்று அடக்கம்செய்து திரும்பும் வரை இவன் ஓய்வு கொள்வதில்லை. வீதியில் சேரும் குப்பைகூழங்களை அள்ளுவது முதற்கொண்டு அடைத்திருக்கும் காண்களை துப்புரவாக்குவது வரை அவன் செய்யும் சேவை இவனை சமூகத்தின் மத்தியில் இளக்காரமானவனாக காண்பித்திருந்தது. ஊரிலுள்ளவர்கள் பாவம் செய்யும் வேளைகளில் இவனைக்கண்டு அஞ்சுவதும், தேவைகள் ஏற்படும் போது இவனுக்காய் ஏங்குவதும் வாடிக்கையாகி விட்டிருந்தது.
பாவங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஊருக்கு இவன் எதிரியாய் மாறிக்கொண்டிருந்தான். பிறப்பதற்கு முன்னே தகப்பனை இழந்த இவன் தாயின் அரவணைப்பில்தான் இதுவரை காலமும் வளர்ந்திருக்கிறான். அவனது தாய் அவனுக்காக தன்னையுருக்கி அவனை வளர்த்து விட்டாலும் அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் தலையிடுவதில்லை. அவள் அவனுக்கு ஊட்டியதெல்லாம் மார்க்கக் கல்வியை மாத்திரந்தான். அதுவும் தனக்குத் தெரிந்த முறையில். இவன் இஸ்லாத்தில் ஊறியிருந்தான் தன்னைப்போல் தன் தாயைப்போல் எல்லோரும் வாழவேண்டும் என்ற சிந்தனையில் மற்றவை மறந்திருந்தான்.
******************************************************************************
நல்லிரவு தாண்டி தூக்கத்திலிருந்து கண்விழிக்கிறான். பனியில் உறைந்து கிடக்கும் கிணற்று நீரை அள்ளி வுழு வெய்து கொண்டு வந்து உம்மாவை எழுப்பிவிட்டு பாயை விரித்து தொழ ஆரம்பிக்கிறான். தொழுகை முடிந்ததும் உம்மாநீட்டிய தேனீரை சீனியை நக்கிக்கொண்டு குடித்து விட்டு குர்ஆனை விரித்து ஓத ஆரம்பிக்கின்றான். ஸுபுஹுத் தொழுகைக்கான அதான் ஒலிக்கவே தொழுகைப் பாயில் படுத்திருக்கும் உம்மாவை எழுப்பி விட்டுப் பள்ளியை நோக்கி விரைகிறான். ஸுபுஹுத் தொழுகையை முடித்துவிட்டு பொழுது புலரும்வரை இறை சிந்தனையில் ஆழ்கிறான்.
பொழுது புலர்ந்ததும் பள்ளியை விட்டும் புறப்பட்டு மையவாடியை அடைகிறான். அங்கு மண்டிக்கிடக்கும் புதர்களைச் சுத்தப்படுத்திவிட்டு வீதியில் வருகையில் சிறு பிள்ளைக் கூட்டம் இவனை சூழ்கிறது. அனைவருக்கும் ஸலாமுரைத்து நபியவர்களின் போதனைகளைச்சொல்லி உவகையடைகிறான். வீதியில் கொட்டியிருக்கும் கல்மண் குவியல் கண்ணில் படவும் தொழில் கிடைத்த மகிழ்ச்சியிலில் அவற்றினை அள்ள ஆரம்பிக்கிறான். தொழில் முடித்து உடம்பு அலம்பி கூலியாய்க் கிடைத்த சிறு தொகையை சட்டைப்பையினுள் திணித்து சந்தயை அடைகிறான். எங்கும் ஏமாற்றம், கலப்படம், பொய் புரட்டு. குவித்திருக்கும் மாம்பழத்தில் ஒன்றையெடுத்து உற்றுப் பார்க்கிறான் வெளியில் நன்றாக இருந்தாலும் உள்ளே புழுக்கள் ஊடுருவி பழுதடைந்திருப்பதை அவதானித்து வைத்துவிடுகிறான். ஒரு முதியவர் மாம்பழம் கேட்கவும் இவனது உணர்வு கொந்தழிக்கிறது. சத்தமாகக் கத்துகிறான் ‘இதை வாங்காதீங்க இது பழுதடைஞ்சிருக்கு அநியாயமா ஏமாத்தி விக்கிறாங்க’ கோபமடைந்த வியாபாரிகள் இவனை சந்தையை விட்டும் அடித்து விரட்டுகிறார்கள்.
இவன் கலைப்படவில்லை. அவர்கள் அடித்து விரட்டியதை விட அவர்கள் ஏமாற்றுவதே இவன் மனதை உறுத்திற்று. கையில் கிடைத்த காசுக்கு மீன் வாங்குவதற்காக கடற்கரையை நோக்கி நடக்கின்றான். கடற்கரையில் கைவிடப்பட்ட குடிசையொன்றிலிருந்து சத்தம் வரவும் குடிசையை நோக்கி நடக்கிறான். குடிசைக்கதவை திடீரெனத் திறக்கிறான். அங்கு சில இளைஞர்கள் கையிலிருக்கும் ஏதோ ஒன்றை இவனைக்கண்டதும் பின்னால் மறைக்கிறார்கள். கஞ்சாப் புகையின் நெடி இவன் மூக்கைக் கரிக்க புரிந்து கொண்டான். நபியவர்களின் பொன் மொழி இவன் மனக்கண்முன் நிழலாடிற்று. ‘தீமையைக்கண்டால் கையினால் தடுங்கள். அதற்கு முடியாவிட்டால் நாவினால் தடுங்கள் அதற்கும் முடியாவிட்டால் மனதினால் வெறுங்கள் இது ஈமானின் கடைசிப் படிநிலை’ இவன் ஈமானின் முதற்படிநிலையில் நின்று கொண்டு கையில்கிடைத்த தென்னம் மட்டையினால் அடிக்க ஆரம்பிக்க அனைவரும் தப்பி ஓட ஒருவன் மட்டும் மாட்டிக் கொண்டான். ‘என்னை விடு நான் யாரென்டு தெரிஞ்சா நீ அடிக்கமாட்ட நான் தலைவர்ற மகன்’ அவன் சொன்னதும் இவனது அடி இடியாய் இறங்கிற்று.
‘றிழ்வான்’
உம்மாவின் குரல் கேட்டு சிந்தனை கலைகிறான்.
‘என்னப்பா, இன்னுமா நீ தூங்கல? மணி பனிரண்டையும் தாண்டிட்டு, வெளியில பனியும் பேயுது. உள்ள வந்து தூங்குப்பா.’
தாய் தன் குஞ்சை அணைத்துக் கொண்டது. றிழ்வானின் சிந்னைகளையும் செயற்பாடுகளையும் அங்கீகரித்து தீர்ப்பளிக்கும் ஒரே நீதி மன்றம் அந்தவூரில் அவனது தாய் மட்டும்தான்.
***************************************************************************
வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்குப் போவதற்காக புறப்பட்ட போதுதான் அந்தச் செய்தி றிழ்வானின் காதுகளை எட்டியது. அவன் பயப்படவோ பதட்டப்படவோ இல்லை. சத்தியப் பாதையில் இடர்கள் வருவது சகஜம் என்பதை அவன் நன்குணர்ந்திருந்தான்.
தாயினால்தான் அந்தச் செய்தியை தாங்க முடியவில்லை. இடிந்து போனாள். எந்தத் தாயும் தன் குழந்தையைக் குற்றவாளியாகப் பார்க்க விரும்ப மாட்டாள்.
ஜும்மா தொழுகையின் பின் ஊர் கூடிற்று. தலைவர் தலைமையில் விசாரணை ஆரம்பமாகியது. றிழ்வான் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருந்தான். றிழ்வானின் தாய் தன் மகனை குற்றவாளிக் கூண்டில் காணச் சகிக்காதவளாக முந்தாதனையால் முகத்தை மூடிக்கொண்டாள். கண்ணீர் முந்தானையை ஈரப்படுத்திட்டு.
விசாரனை ஆரம்பமாகியது.
றிழ்வான் ஒரு குற்றத்திற்காகத்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தான். மக்கள், இதுதான் சந்தர்ப்பம் என்று ஆழாளுக்கு குற்றங்களை அடுக்கினார்கள்.
‘இவன் அடிக்கடி கூப்பன் கடக்கி வந்து கஷ்ட்டப்படுத்துறான் இவனால ஒழுங்கா வேல பாக்க முடியல்ல இன்டெக்கி இதுக்கொரு முடிவு கட்டியாகணும்’
கூப்பன்கடை மெனேஜர் முந்திக்கொண்டு தன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
‘ஆமா தராசுக்குக் கீழ காந்தத்த ஒட்டி வெச்சி ஊர்மக்கள ஏமாத்தினா பாத்திட்டிருக்கச்செல்றியா’
இவன் மனதுக்குள் பதிலளித்தான்.
‘ஆத்திரவசரத்துக்கு பேங்குல நகையள அடமானம் வெக்க உர்றானில்ல ஹறாமாம்’
‘ஆரு எங்க பாவஞ்செய்யிறாகளெண்டு பாத்து திரியிறான் இவனென்ன பொலிசுக்காரனா’
‘நாம காலங்காலமா மாப்புள்ளக்கி குடுத்து வாற கைக்கூலிய ஹறாமெங்கான்’
‘இவன்ட கஷ்ட்டம் தாங்க முடியல்ல, பக்கத்து ஊட்டுல படுக்க முடியல்ல நல்லிரவில ஒழும்பி சத்தமா குர்ஆன் ஓதுறான்’
‘பொம்புளப் புள்ளைங்கள வெளிநாட்டுக்கு அனுப்பாதிங்கெண்டு கத்தித் திரியிறான. இவனா அதுகளுக்கு ஊடு கட்டித் தரப்போறான்’
ஊர் மக்கள் முன்னே ஒற்றையாய் நின்ற அவனால் எந்தக்குற்றத்தையும் நிராகரிக்க முடியவில்லை.
சமூகத்திற்காக எத்தனையோ செய்த அவனுக்காக சமூகத்திலிருந்து ஒருத்தன்கூட குரல் கொடுக்க முன்வரவில்லை. இந்தக் குற்றச்சாட்டையெல்லாம் அவனால் மறுக்க முடியும். ஆனாலும் மறுத்து என்ன பயன்? அவன் பேச்சை நம்ப அங்கு யாரும் தயாரில்லை. கூட்டத்தில் ஒரே சலசலப்பு.
தலைவர் அவையை அமைதிப்பபடுத்திக் கொண்டு அவரின் குற்றச்சாட்டை முதன்மைப் படுத்தி றிழ்வானிடம் காரணம் கேட்டார். இதுவரை பொறுமையாயிருந்த றிழ்வான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உரக்கவே பதிலளித்தான்.
‘ஊருக்குத்தான் நீங்க தலைவரு ஆனா உங்கட ஊட்டுக்கு இல்ல. நீங்க எப்பிடி இரிக்கீங்களோ அப்பிடித்தான உங்கட பிள்ளையும் இரிப்பான். படிக்க வேண்டிய வயசில பசங்க கூட சேர்ந்து கள்ளத்தனமா கஞ்சா அடிக்கிறான் இதப் பார்த்திட்டு என்ன சும்மா இரிக்கச் செல்றிங்களா? அதான் யாராயிருந்தாலும் பறவால்லைன்னு அடிச்சன். இது குற்றமா?
‘யாரப் பார்த்து என்ன சொல்ற என்ட புள்ள கஞ்சா அடிச்சானா, பரீட்ச வருகுதெண்டு குடிசையில கூட்டாளிங்களோட படிச்சிட்டு இருந்திருக்காங்க நீ போய் அவங்கள அச்சுறுகத்தி காசி பறிச்சிருக்க என்ட புள்ள பணக்காரப் புள்ள எங்கிறதால மத்தவங்கள உட்டுட்டு என் புள்ளயிட்ட காசு கேட்டு அடிச்சதுமில்லாம அவனிட்ட இருந்த ஆயிரம் ரூபா காசையும் பறிச்சிட்டு போயிருக்க இதுக்கு எங்கிட்ட சாட்சியிருக்கு’
‘நிச்சயமா உங்கிட்ட சாட்சியிருக்கும். உங்கட பணத்த வெச்சி எத்தின சாட்சி வேணுமானாலும் வாங்கலாம்’
தலைவருக்கருகிலிருந்த எச்சில் முற்புறக்கி எழுந்தார் றிழ்வானை எரிப்பது போன்று பார்த்து சர்ப்பமாக சீறினார்.
‘அற்பப் பயலே என்ன பேச்சுப் பேசுற தலைவர்ற தகுதி தெரியுமா உனக்கு. ஊருல புழுக்க வேல பாக்குற உனக்கு இத்தின கொழுப்பா’
றிழ்வான் புரிந்து கொண்டான் இவர்கள் திட்டமிட்டுத்தான் தன்னை இங்கு அழைத்திருக்கிறார்கள் இவர்களிடம் தான் எதைச் சொன்னாலும் எடுபடப்போவதில்லை.
அவையிலிருந்து பழுத்த தலையொன்று எழுந்தது.
‘பாவம் அவன் பச்சப்புள்ள, சூதுவாது தெரியாதவன் கள்ளம் கபடம் இல்லாதவன். ஏதோ அவனுக்குத் தெரிஞ்ச முறையில இஸ்லாத்த செல்றான் அவன சும்மா விட்டுடுங்கப்பா’
‘ஏன் பெரிசு அவன் செய்யிறதுக்கெல்லாம் நீ பொறுப்பேப்பியா’
பழுத்த தலை வாய் பொத்தி அமர்கிறார். இதற்கு மேலும் றிழ்வானால் பொறுக்க முடியவில்லை.
‘ஊருல குப்ப கூழமெல்லாம் சேர்ந்தா அசிங்கமாகிடுமெண்டு அப்புறப்படுத்தினா, மையவாடிய சுத்தப்படுத்தினா, பாவங்களத் தடுத்தா பைத்தியக் காரணப்போல பாக்குறிங்க. எனக்கு பைத்தியமா இல்ல உங்களுக்கு பைத்தியமா?’
அவனுடைய நா தளுதளுத்தது. அவனால் மேலும் பேச முடியவில்லை நிறுத்திக்கொண்டான்.
தலைவரின் கண்கள் சிவந்து போயிற்று. போபம்தலைக்கேறிற்று. ‘நான் அப்பவே சொன்னேன். பார்த்திங்களா எங்களையே எதிர்த்துப்பேசறத’
றிழ்வான் பேசிய போது ஊர் மக்களுக்கு அவன் மீது பரிதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும். மாறாக அவர்களுக்கு றிழ்வான் மீது கோபமேயேற்பட்டது. மக்கள் றிழ்வானை அடிக்க பொங்கி எழுந்தபோது, அவனுடைய தாய் ஓடி வந்து நிழ்வானை கட்டிக் கொண்டு கெஞ்சினாள்.
‘அல்லாஹ்வுக்காக என் புள்ளய விட்டுடுங்க. எனக்கு அவன் மட்டுந்தான் இருக்கான். நாங்க எங்க சரி போயிர்றம்.’ தலைவர் ஊர் மக்களை பார்த்து கூறினார்.
‘அமைதியாயிருந்து நான் சொல்றத கேளுங்க. இந்த பைத்தியத்த இனியும் ஊர்ல வெச்சிருக்க ஏலாது. இவன் பணக்காரணும் ஏழையும் ஒன்டெங்குறான். சீதனம் வாங்காதிங்கென்றான், நகைகள அடகு வெக்காதீங்கென்றான்
எங்க என்ன நடந்தாலும் பொலிசப் போல முன்னுக்கு நின்டு தண்டன வழங்குறான். இவன ஊருல வெச்சிட்டிருந்தா எங்கட புள்ளயல் சுதந்திரமா நடமாட முடியாது. ஸக்காத்த அஞ்சும் பத்துமா கொடுக்காம மொத்தமா கொடுக்கச் சொல்றான். எங்கட பணத்த நாங்க விரும்பின மாதிரித்தான குடுப்பம் இத கேக்க இவன்யாரு? இவன ஊர்ல வெச்சிக்கிட்டிருந்தா எங்கட பாரம்பரியத்தையும் முன்னோர்கள்ற சம்பிரதா யங்களையும் குழி தோண்டி புதச்சிடுவான். அதனால இவன ஊரவுட்டு தொரத்தணும். சம்மதமா?
‘……………’
மக்களின் மௌனம் சம்மதமாகிற்று.
தலைவர்களும் பணமுதலைகளும் எதைச்சொன்னாலும் தலையாட்டுகின்ற ஓணான் பழக்கம் அந்த மக்களுக்கு.
உண்மைக்காகவும், உயர்வுக்காகவும் உழைத்த அந்த உயிரும், அதற்கு உறுதுணையாக இருந்த தாயும் ஊரை விட்டும் கால் போன போக்கில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
‘நான் என்ன தப்பு பண்ணினன். நம்ம சமூகம் நல்லாயிருக்கணும் எண்டு ஆசப்பட்டது தப்பா?
நான் நமக்காக வாழாம பிறருக்காக வாழணும் எண்டு நெனச்சது தப்பா?
நம்ம ஊர் எந்த பாவமும் செய்யாம சுவர்க்கம் போகணுமெண்டு நெனச்சது தப்பா?
ஏன் இவங்கெல்லாம் இப்படியிருக்காங்க?
அவங்களா திருந்துறாங்களுமில்ல, நாம திருத்தப்போனாலும் பைத்தியமெண்டு முத்திர குத்துறாங்க, இந்த சமுதாயத்த அல்லாதான் காப்பாத்தணும்.’
றிழ்வானின் மனது வழி நெடுகிலும் அழுது கொண்டே சென்றது ஆற்றமுடியா ரணத்துடன்.
மெழுகுவர்த்தி அணைந்த போதுதான் அவ்வூர் வெளிச்சத்தை தேட ஆரம்பித்தது.







mohammed nafeel said
alhamthu lillah