வாய் தவறி………
Posted by Kattankudi Web Community on 08/10/2011
-கலாபூஷணம் காத்தான்குடி பாத்திமா -
மனம் அமைதியை இழக்க
சொல்லை விதைத்து மௌனமாகி
சொன்ன சொல்லே அரக்கனாகி
சொல்லால் சுடப்பட்டவன் தலைநிமிர
மனிதபலவீனம் வெளிப்படுகிறது…
சொல்லை விதைத்தவன்
சொல்லுக்கே அடிமையாகும் பரிதாபம்…
வார்த்தைகள்
என் கருவறைக்குள் இருந்து வெளிப்பட்டு
அமைதியிழக்கவைத்து
அணுவணுவாய்ச் சாகவைத்து
அப்பப்பா- வாய் தவறுதே!
ஆத்திரம் உன்னை ஆட்கொள்ளும்போது
வார்த்தைகளை அள்ளி வீசாதே!
நிதானமாக நிறுத்தி – நிறுத்திப்பேசு
இனிமையான சிநிதனையுடன்
நிறுத்தி நிறுத்தி பேசு
படபடக்காதே! என்னைப்போல
வேதனைப்படாதே! என்னைப்போல
அமைதியிழக்காதே! அதுவும் என்னைப்போல
நித்திரைக்குச் செல்லுமுன் நினைத்துபப்பார்
நீயிழைத்துக் கொண்ட – ஒரு
பகற்பொழுதின் அநீதிகளை
மீட்டுப்பார் – மீண்டும் மீண்டும்
அதன் அநுகூலம் – பிரதிகூலம்
இரண்டையும் தராசிலிடு
அளந்துபார் – நிறுத்துப்பார்
நீ சிரிக்கையில் – அவனோ அழுகிறான்
உன்னை அவனாகக் கற்பனைசெய்
அழுதுபார் – அறிந்துகொள் வேதனையை
அவனுக்குள் எரியும் நெருப்பை அறி
அப்போது உனக்கு நிதானம் பறக்கும்
நீ இதயமுள்ளவனாய்
ஓரிரவு நித்திரையை நீ இழப்பாய் இதனால்
காலையில் புது மனிதனாகப் பிறப்பாய்
மனச் சாட்சியின் இயக்கம்
பூச்சியமானால்
நான் மட்டும் அழுது அழுது எழுதுவேன்
எழுதிக்கொண்டே இருப்பேன்
ஒருவனாவது திருந்தும் வரை
உறைக்கும் வரை எழுதுவேன் – என்
முகத்தில் காறி உமிழும்வரை எழுதுவேன்
அப்போது உன்னிடத்தில் – நான்
எழுதியதைக் காட்டமாட்டேன்
என் இதயம் இலேசாகிப் போகும்
எழுதியதை மடித்து அடுப்பங்கறையில்
மாட்டிவைப்பேன்
அதுவாக எழுந்து இந்த சமுகத்துக்குச்
சாட்சி சொல்லும் வரை






