வாத்தியார்
Posted by Kattankudi Web Community (KWC) on 06/10/2011
காத்தநகர் முகைதீன்சாலி எழுதிய ‘வாழ்தல்மீதான வன்முறைகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து மற்றுமொரு சிறுகதை சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு…
மழை சோவெனப் பெய்துகொண்டிருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் மனைவியுடன் வெளியே எங்கேனும் போய் வருவது வழமை. பழக்க தோசத்தில் வெளியில் செல்வதற்காக பரீதா அலங்காரம் செய்த போது மழை திடீரெனக் கொட்டத் துவங்கிற்று. ‘இந்த மழைக்கு நேரம் காலம் தெரியாது இன்டெக்கிதானா பெய்யணும்’ மழையை பார்த்து அவள் சபித்ததும் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.
‘ஏன் பரீதா, மழை பெய்யிறது அல்லாஹ்ட ஏற்பாடு அத நம்மிலால தடுக்க முடியுமா? இன்றைக்கி போக முடியாட்டி அடுத்த கிழமை பார்ப்பம்.’
நான் சொன்னதும் அவள் முகம் மழை மேகமாய் மாறிப் போயிற்று. குழந்தையில்லாத குறையை மறைக்க ஓய்வு வேளைகளில் மனைவியை எங்கேனும் அழைத்துப்பபோய் சந்தோசப்படுத்த வேண்டியதேவை எனக்கிருந்தது.
எனக்கு கூட உடம்பு அசதியாக இருக்கவே சோபாவில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடுகின்றேன். மழை தழுவிய குளிர் காற்று உடம்பைத் தழுவிச் செல்கிறது. நித்திரை இலேசாக கண்ணை அரவணைக்கத் துவங்குகையில் ‘கோலிங் பெல்’ ஒலிக்கிறது. எழும்புவதற்கு மனமில்லாமல், மனைவியிடம் யார் என்று பார்க்கச் சொல்லிவிட்டு போன நித்திரையை திரும்ப அழைக்கையில், ‘யார் நீங்க என்ன வேணும்?’ மனைவியின் குரல் கேட்டு காதை கூர்மையாக்குகிறேன்.
‘நான் சாஜித் சேர கொஞ்சம் பார்க்கணும். அதுதான்…..’
‘அவங்க தூங்குறாங்க, போயிட்டு அப்புறமா வாறிங்களா?’
‘பறவாயில்ல, வெளியில சரியான மழையாயிருக்கு நான் குடை கூட கொண்டு வரல்ல, இங்கேயே இருந்திட்டு மழை விட்டதுக்கப்புறம் போயிர்றன்.’
‘சரி இருந்துட்டு போங்க’
சொல்லி விட்டு மனைவி உள்ளே நுழைகிறாள்.
என்னால் தூங்க முடியவில்லை. வெளியில் கேட்ட அந்த முதியவரின் குரலை எங்கோ கேட்டு அனுபவித்ததாக மூளைக்குள் ஒரு பொறி பறக்கவே வெளியில் போய்ப் பார்க்கிறேன். என்னால் அடையாளம் காண முடியவில்லை. குழி விழுந்த கண்கள், நரைத்து வெண்பஞ்சாய் நெஞ்சுவரை நீண்டதாடி, விழுந்த பற்களின் இடைவெளி நிரப்ப குழியான கண்ணங்கள், வறுமையை பறைசாற்ற ஒட்டுப்போட்ட ஜூப்பா, நிமிர்ந்து நிலையாய் நிற்க முடியாதபடி உடம்பை அசைத்துக் கொண்டிருக்கும் முதுமை. அவரைக் கூர்ந்து நோக்குகிறேன். யார் என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் அவரின் பார்வையில் தெரிந்த தெளிவு ஏதோவொன்றை எனக்கு ஞாபகமூட்டிற்று.
‘உள்ள வாங்க வாப்பா’ என அழைக்கின்றேன். முகத்தில் ஒரு புன்னகையை படரவிட்டவாறு என் பின்னே வருகிறார். அனுபவிப்பதற்கு வாரிசின்றி கப்பல் போன்றிருக்கும் எனது வீட்டை அவர் அண்ணாந்து பார்க்கிறார். இருந்தாலும் இந்த ஆடம்பரங்களை அவரின் கண்கள் சிறுமையாக நோக்குவதை என்னால் உணர முடிகிறது.
மனைவி நீட்டிய தேனீரை நாசுக்காக மறுத்து விட்டு பின்னர் வாங்கிக்கொள்கிறார். அவரை கேள்வியுடன் ஏறிடுகிறேன்.
‘நான் பக்கத்து ஊர்லதான் இருக்கன். எனக்கு மூணு குமருப்பிள்ளைங்க இருக்காங்க. மனைவி அஞ்சு வருசத்திற்கு முன்னாடி வஃபாத்தாகிட்டாங்க. இது வரைக்கும் என் பென்ஷன் பணத்த வெச்சி அல்லாட உதவியால காலத்தக் கடத்திட்டம். இது வரைக்கும் யாரிட்டேயும் உதவி கேட்டு போனதில்ல. ஆனா மூணு குமர்களையும் எப்பிடி கரை சேர்க்கிறதெண்டுதான் கவல. அல்லாவெத்தான் நம்பியிருக்கன்…’ அவரின் குரலில் கவலையின் கரகரப்புத் தெரிந்தது.
‘ஆமா எங்கிட்ட என்ன எதிர் பார்க்கிறீங்க?’
நான் கேட்டதும் அவர் கைகளைப் பிசைந்து கொள்கிறார். தாடியைக் கையினால் கோதியபடியே மெல்லிய புன்னகையை முகத்தில் படரவிட்டாலும் கண்கள் மிரண்டவராக, ஏதோ ஒரு வெட்க உணர்வினால் தூண்டப்பட்டவராக…
‘மூணு பிள்ளைங்களும் நல்லா படிச்சிருக்காங்க… மூத்த ரெண்டு பேரும் வெளியில அவ்வளவா வரமாட்டாங்க ஆனா இளையவ வேலைக்குப் போகப் போறனெண்டு அடம் பிடிக்கா. நானும் பொம்பிளப்பிள்ளைங்கள வேலைக்கு அனுப்புறதில்ல எண்ட முடிவுலதான் இருந்தன். ஆனா எண்ட பென்ஷன் பணத்த கொண்டு குடும்ப வண்டிய சீரா ஓட்ட முடியல்ல அதான்… உங்க கம்பனியில சின்ன மகளுக்கு ஒரு வேல கேட்கலாமெண்டுதான்..?
அவரின் கண்களில் ஈரம் கசிந்தது. எனது இதயத்திலும் கூட…
‘ஆமா நீங்க எங்க வேலை பார்த்தீங்க வாப்பா?’
‘இந்த ஊரு முஸ்லிம் வித்தியாலயத்திலதான் ஆசிரியரா வேல பார்த்தன் சேர்’
என்னால் ஆவலை அடக்க முடியவில்லை. நான்கூட இதே பாடசாலையில்தான் உயர்தரம் வரை கற்றேன். ஒரு வேளை? எனது சந்தேகத்தைக் கேட்கிறேன்.
‘ஆமா உங்க பேரென்ன வாப்பா’
‘வஹாப்தீன்’
பெயரைக் கேட்டதும் என் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிகின்றன. என்னை அறியாமலேயே சட்டன எழுந்து நிற்கிறேன்.
‘வஹாப்தீன்சேரா… நீங்க!’ என்னையும் மீறி எனது வாய் முணுமுணுக்கிறது.
என் அடிமன அசைவுகள் பள்ளி வாழ்க்கையை மீட்டுகிறது. கம்பீரமாய் உயர்ந்து, நிமிர்ந்து, சிரித்த முகத்துடன் எப்போதும் கையில் பிரம்புடன் பாடசாலையை வலம் வரும் வஹாப்தீன் சேர் என் கண்களில் நிழலாடுகிறார்.
வஹாப்தீன் சேர் விஞ்ஞான பாடத்திற்கு வகுப்பிற்கு வந்தாலே ஒரே உற்சாகமாயிருக்கும். அவர் விஞ்ஞானத்தை மட்டுமல்ல ஆன்மீகம், லௌகீகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தே கற்பிப்பார். கையில் பிரம்பு இருந்தாலும் யாரையும் அடித்ததாக ஞாபகமில்லை. எல்லா மாணவர்களிடத்திலும் வயது வித்தியாசமின்றி அன்பாக பேசுவதில் அவரை விஞ்ச ஆசிரியர்கள் கிடையாது.
விஞ்ஞான பாடம் என்றாலே வேப்பங்காயாய் கசந்த எனக்கு விஞ்ஞான பாடத்தை பலாக்கனியாய் மாற்றியதே வஹாப்தீன் சேர்தான். என்னை எப்போதும் தடவிக்கொடுத்து அன்பாய், ஆதரவாய் கல்வி புகட்டி கல்வியில் பற்றை ஏற்படுத்தியவரே வஹாப்தின் சேர்தான்.
பதவியும் பட்டமும் ஏற்றிவிட்ட ஏணியை திரும்பிப் பார்க்காது என்னை தடுத்து விட்டனவா? இந்த இருபது வருடத்தினுள் எத்தனை மாற்றங்கள். பழைய நினைவுகளுடன் நான் அதிர்ச்சியில் நிற்கவே என்னை உற்று நோக்கிய வஹாப்தீன் சேர்,
அவர் ஏதோ கதைக்கக் கூடாததை கதைத்து நான் அதிர்ச்சியடைந்ததாக நினைத்து வியர்க்க விருவிருக்க என்னை நோக்கி,
‘சேர் என்ன ஒரு மாதிரியாகிட்டீங்க’
எனக்கு அறிவுபுகட்டிய ஆசானே என்னை ‘சேர்’ என்று அழைப்பது என் காதுக்குள் ஈட்டியாய் நுழைகிறது.
‘நீங்க, என்ன சேர் என்று கூப்பிடாதங்க சேர் நான் உங்க மாணவன் சாஜித்’
நான் கூறியதும் அவரின் கண்களும் ஆச்சரியத்தால் அகல விரிகின்றன.
‘என் மாணவன் சாஜித்தா நீங்க அல்ஹம்து லில்லாஹ்’
ஆச்சரியத்தோடு என்னை ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்கிறார்.
இப்போது அவரை நேருக்கு நேர் பார்க்க என்னவோ போலிருக்கிறது. சின்ன வகுப்பில் கல்வியில் வெறுப்புற்று வெறும் விளையாட்டுகளில் மாத்திரம் ஈடுபாடு கொண்ட என்னை இந்த உயர் பதவிவரை உயரப்பறக்க இறக்கை கொடுத்த அந்த குருவை, பதவியும் பட்டமும் வந்தவுடன் மறந்தே போய்விட்டோமே என்ற குற்ற உணர்வு என்னை குடையத் துவங்கிற்று. இதுவரை காலமும் எனக்கு அறிவு புகட்டிய ஆசான் வறுமையில் உழல நான் மட்டும் எல்லாவித இன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி, அந்த குரு தன் வீடுதேடி வரும் வரை உணர்வு பெறாமல் போய் விட்டோமே என்று நினைக்கையில் என் கண்கள் பனிக்கின்றன.
என் கடந்தகால, நிகழ்கால வாழ்க்கையை சேருடன் பகிர்ந்து கொள்கிறேன். சேரின் இளைய மகளுக்கு நிச்சயமாக வேலையொன்று பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து சேரின் முகவரியை பெற்றுக்கொண்டு அவரை வழியனுப்பி வைத்தாலும் மனதை ஏதோவொரு குற்ற உணர்வு குத்திக் கொண்டேயிருக்கிறது. சேரின் சேவைக்கு முன்னால் எனது இந்த உதவி தூசாகவே படுகிறது.
சோபாவில் சாய்ந்து சிந்தித்த என்னுள் திடீரென ஒரு யோசனை துளிர் விடவே காரை எடுத்துக்கொண்டு கிளம்புகிறேன். முஸ்லிம் வித்தியாலயத்தில் என்னோடு ஒன்றாக படித்த இன்ஜினியர் றமீஸ், டொக்டர் றியாஸ், றஹீம் மாஸ்டர், பாஹிர், நஸ்மில் எல்லோரையும் தொடர்பு கொண்டு வஹாப்தீன் சேரின் நிலையை உணர்த்தி, சேருக்கு ஒரு பாராட்டு விழா வைத்து அதனூடாக ஒருலட்சம் ரூபாய் பணமுடிப்பு கொடுத்து, பொன்னாடை போர்த்தி கௌரவிக்க வேண்டுமென்ற எனது ஆசையை முன்மொழிகிறேன். அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். விழா அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்று முடிவாகிற்று. விழா ஏற்பாடுகள் வஹாப்தீன் சேருக்குத் தெரியாமலே மும்முரமாக நடைபெறத் தொடங்கிற்று.
ஞாயிற்றுக் கிழமைக்கு இன்னும் மூன்று தினங்களே எஞ்சியிருக்கின்றன. விழா அழைப்பிதழ்கள் அச்சடித்தாயிற்று. இந்த சந்தோசமான செய்தியை வஹாப்தீன் சேரிடம் சொல்வதற்காக அழைப்பிதழுடன் காரை எடுத்துக்கொண்டு புறப்படுகிறேன். சேர் தந்த முகவரியை மீண்டுமொருமுறை பார்த்து நினைவுபடுத்திக் கொண்டு காரை வேகமா செலுத்துகிறேன்.
என்நினைவுகள் விழாவைச் சுற்றியே வட்டமடிக்கின்றன. விழாவில் சேரின் சேவைகளைப் புகழ்ந்து பேச வேண்டும். திரண்டிருக்கும் மக்களின் முன்பாக சேருக்கு பொன்னாடை போர்த்தும் போது அவர் முகத்தில் எழுகின்ற சந்தோச ரேகையை நானும் அனுபிக்க வேண்டும். சேருக்கு கொடுக்கின்ற பணத்தின் மூலம் அவரின் ஒரு குமரையேனும் கரைசேர்க்க உதவவேண்டும். என் நினைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது.
பிரதான பாதையிலிருந்து குறுக்கு வீதியினூடாக சேரின் ஊரை நோக்கி காரைச் செலுத்தி பாதையின் முடிவிலிருக்கும் பள்ளிவாயல் முன்றலில் நின்ற ஒரு முதியவரின் முன்பாக காரை நிறுத்தி வினவுகிறேன்.
‘இங்க வஹாப்தீன் சேர் வீடு எங்க இருக்கு’
‘வஹாப்தீன் சேர்னா யாரக் கேக்குறீங்க’
‘அதான், ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி பக்கத்து ஊர் முஸ்லிம் வித்தியாலத்தில வாத்தியாரா இருந்தாரே, அவருக்கு மூணு பொம்புளப் பிள்ளைங்க கூட இருக்கு’
‘ஓ நீங்க பழைய வாத்தியார கேக்கிறீங்களா பாவம் மனுஷன் நல்லாத்தான் இருந்தாரு, காலையில திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மௌத்தாகிட்டாரு. இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அடக்கிட்டு வாறம்’
என் நெஞ்சுக்குள் எரிமலை வெடிப்பதாய் உணர்கிறேன். என்னையும் மீறி அழுகை பொத்துக்கொண்டு வரவே கார் கதவை மூடிக்கொண்டு ஓவென அழுகிறேன். கடைசியாய் ஒருதடவை சேரின் முகத்தை பார்க்கக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் என்னைக் குடைகிறது. நூற்றுக்கணக்கில் அறிவாளிகளையும், சிந்தனையாளர்களையும், அதிகாரி களையும் உருவாக்கி கரை சேர்த்த படகொன்று தன் ஓட்டைகளை கூட அடைக்க முடியாமல் மூழ்கி விட்டது. அந்த குருவுக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
ஆம் வஹாப்தீன் சேரின் மூன்று குமர்களையும் என்குழந்தைகளாகத் தத்தெடுத்து அவர்களை வாழவைப்பேன் என்ற உறுதியுடன் சேரின் வீட்டை நோக்கி காரை செலுத்துகிறேன்.
கல்வியும் தந்து , கடைசியில் எனக்கு குழந்தை இல்லை என்ற குறையையும் நீக்கி வைத்த குருவை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.







aasathrlan said
கல்வியும் தந்து , கடைசியில் எனக்கு குழந்தை இல்லை என்ற குறையையும் நீக்கி வைத்த குருவை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்
Sanjayan said
மிக அருமையான பதிவு.
ஏறி வந்த பின் ஏணிகளை மறப்பவர்களே அதிகம்.
நட்புடன்
சஞ்சயன்