காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

சிறகு முளைத்த சிட்டுக் குருவி

Posted by Kattankudi Web Community (KWC) on 30/09/2011

-காத்தநகர் முகைதீன் சாலி-

‘எவ்வளவு நேரமாடா இந்த பாத்திரத்தையே தேச்சிட்டு இருப்ப’ என் எஜமானியின் குரல் கேட்டு நிமிர்கிறேன். பத்திரகாளி போன்று காணப்பட்டாள் அவள். கையில் தடி வேறு. அடி விழுவது நிச்சயம். மனதை கட்டுப்படுத்தி அடக்கமாக தேய்க்கிறேன். முதுகில் விழுந்தது அடி. தாங்கிக் கொள்கிறேன். கண்கள் தாங்குமா என் கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் கண்ணங்கள் வழியே வழிந்து கழிவு நீருடன் சங்கமிக்கிறது. இந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் இப்படித்தான் ஏச்சும்,அடியும்,சூடும். அடிபட்டு சூடுபட்டு என் உடம்பே சுரணை கெட்டுப்போனது.

‘என்ன செய்வது ஏழையாய் பிறந்த நாம் அணுபவித்துதானே ஆகனும்’ அம்மாவின் அறிவுரை ஆழமாய் மனதிலிருந்து அன்னாந்து பார்க்கிறது. தேய்த்து முடித்த பாத்திரங்களை குசினியில் வைத்து விட்டு குசினியில் உள்ள பொருட்களை துடைக்க ஆரம்பிக்கிறேன். நான் வீட்டுல மனிசனில்ல ஏழையாய் படைக்கப்பட்ட இயந்திரம். இயந்திரத்திற்கு கூட வேளைக்கு எரிபொருள் ஊத்துவார்கள். ஆனால் எனக்கு அதுகூட வேளைக்கு கிடைப்பதில்லை. என் கண்கள் என்னையறியாமலே கண்ணீரை சொரிகின்றன.

டேய்! எஜமானியின் குரல் கேட்டு ஓடுகிறேன். ‘பெரியய்யா மார்க்கட்ல கறியெல்லாம்வாங்கி வெச்சிருப்பாரு சீக்கிரம் தூக்கிட்டு வந்திரு’ மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நடக்கிறேன்.

எத்தனை சிறுவர்கள் என்னைப் போன்றவர்கள் அழகான ஆடையுடனும், புத்தக பையுடனும், பெற்றோருடனும், தனியாகவும் பாடசாலைக்கு போகிறார்கள். ஏன் என்னால் இப்படியெல்லாம் போக முடியாதா? நான் என்ன தப்பு செஞ்ச நான்? நான் இந்த உலகத்துல பிறந்ததே தப்புத்தானா? என் பெற்றோர்கள் என்ன செய்வார்கள் பாவம் அவர்கள் பாவமே அறியாதவர்கள். அப்பாதான் என்ன செய்வார்? சகோதரிகள் மூன்று பேருடன் அம்மாவுக்கும் சேர்த்து எவ்வாறு அவரால் உழைக்கமுடியும்? இந்த பாழாய்போன யுத்தம் அவர்ர ஒரு காலை எடுத்துட்டே. அவர் விற்கும் கடலையை கொண்டு எத்தனை நாளைக்கு குடும்பத்தை நடத்தமுடியும்? அதனால்தானே என்னை இந்த சின்ன வயதில் வேலைக்கென்று யாரோடோ அனுப்பி வைத்தார்கள்.

‘டேய் எரும பார்த்து போவியா?’

சைக்கிளினால் ஒருவன் தட்டிவிட்டு அவன் பாட்டிற்கு போய்கொண்டிருக்கிறான். விழுந்த நான் எழும்பி நடக்கிறேன். யாருடைய கண்ணுக்கும் நான் மனிதனாக தெரியவில்லை போலும்? எனக்கு கூட வலிக்கவேயில்ல எனக்கு இப்போது எதுவுமே வலிப்பதில்லை. மனமே ரணமாக கிடக்கும் போது உடம்பு எப்படி வலிக்கும். தூக்கமுடியாத சுமையை கையிலும், மனதிலும் சுமந்து கொண்டு வீடு வந்து சேர்கிறேன்.

‘டேய் சனியன் இவ்வளவு நேரத்திற்கு என்னடா செஞ்ச சும்மா ரோட்ட சுத்திட்டு வாறியா? கறிய குசினியில வெச்சிட்டு சின்னய்யாட ஸ்கூல் பேக்க எடுத்துட்டு வா அப்புறம் அந்த மருந்துப் பெட்டியையும் தூக்கிட்டு வந்திடு சின்னய்யா காலில அடிபட்டிருக்கு’

அவன் காலில் எந்த காயமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு சின்ன கீறல் அவ்வளவுதான். என்ன கவனிப்பு. என்னுடைய உடம்ப கவனிக்க யாரு இருக்கா?

முழங்காலில் அடிபட்டு வடிந்த குருதியினால் என்னுடைய பாதணி சிவந்திருந்தது. என்னவென்று கேட்க கூட எனக்கு நாதியில்ல. நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடமாகிறது. மாதாமாதம் சம்பளத்தை மட்டும் வீட்டுக்கு அனுப்புறன் ஆனா இந்த சின்ன வயசிலேயே பெற்றோரிருந்தும் அனாதையாக.

‘என்னடா அங்கேயே குந்திட்டியா? எந்த நாட்டை பிடிக்க போற பிச்சகார நாய்க்கெல்லாம் யோசன வேறயா?’ எஜமானியின் குரல் என் சிந்தனையை கலைக்கிறது.

‘டேய் பாத்ரூமில துணியெல்லாம் கிடக்குது. அத கழுவிட்டு அப்புறம் டொய்லட்டுக்கும் நல்லா தண்ணியூத்தி கழுவிடு. அப்புறம் சின்னய்யா ஸ்கூல்ல இருந்து வர்றதுக்குள்ளால அவர்ர ரூமையும் சுத்தப்படுத்தி வை’

வேலைகளை அடுக்குகிறாள் எஜமானி. தலையாட்டுகிறேன். இதைவிட என்னால் என்ன செய்யமுடியும்? காலை நான்கு மணிக்கு எழுந்தால் இரவு பதினொரு மணிவரையும் ஓய்வேயில்லை. உடம்பு வலி தாங்க முடியில்லை. பெற்றோருக்காக சகோதரிகளுக்காக வேதனையை கூட சுகமாக மாற்றிக் கொள்கிறேன்.

சின்னய்யாவின் அறைதான் எவ்வளவு அழகு. எத்தனை பொருட்கள், எத்தனை விளையாட்டு பொருட்கள், எத்தனை புத்தகங்கள். ஆசையோடு ஒரு புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன். எனக்குத்தான் படிக்கத் தெரியாதே. பாடசாலையில் சேர்ந்து வறுமை காரணமாக ஒரு மாதத்திலேயே பள்ளி வாழ்வை முடித்துக் கொண்டது ஞாபகத்திற்கு வருகிறது. என் கண்கள் பனித்துப் போகின்றது.

ஏன் என்னால் படிக்க முடியாது. நானும் மனிசந்தானே இவர்களும் மனிசங்கதானே ஆடு, மாடுகள் கூட ஒற்றுமையாகத்தானே திரிகின்றன அவற்றுக்குள் கூட ஏற்றத்தாழ்வு கிடையாதே. ஏன் இந்த மனிதர்கள் மட்டும் இப்படி? ஏன் என்னை எல்லோரும் கீழ்த்தரமாக பார்க்கிறார்கள். எதிரேயிருந்த கண்ணாடியில் என் உருவத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். அழுக்கடைந்த காட்சட்டை, கிழிந்து தொங்கும் மேற்சட்டை, ஆங்காங்கே உடம்பில் சூடுபட்ட வடுக்கள், கத்தரிக்காத சிகை, சிக்குண்ட நிலையில் பரட்டையாக என்னைப் பார்க்கையில் எனக்கே பரிதாபமாக இருக்கிறது. நான் மட்டும் ஏன் இப்படி இருக்க வேண்டும்? நான் செய்த குற்றமென்ன எனக்குள் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு. எரிமலை வெடித்தது போன்ற உணர்வு. என் பிஞ்சு நெஞ்சு அடைக்கிறது. தொண்டையில் ஏதோ சிக்குவது போன்ற உணர்வு. சத்தமிட்டு அழவேண்டும் போலிருக்கிறது. அழுகின்றேன், கத்துகிறேன், கதறுகிறேன்.

‘நானும் மனிதன்தானே, என்னால படிக்கமுடியாதா? சாப்பிடமுடியாதா? உடுத்தமுடியாதா? நானும் மனிசந்தானே!

******************************************************

கண் விழித்துப் பார்க்கிறேன். அம்மாவின் மடியில் தலை. அப்பாவின் மடியில் கால்கள். சுற்றிவர சகோதரிகள் அழுத கண்களுடன். நான் மயங்கி விழுந்துவிட்டேனாம். என் வீட்டில் என்னைக்கொண்டுவந்து விட்டுட்டு போயிட்டார்களாம். இனி அவர்களுக்கு நான் தேவையில்லையாம். இன்னொரு சிறுவனை சீரழிக்கப்போகிறார்களாம். அம்மாவின் கண்ணீர் என் கண்ணங்களை கழுவிக்கொண்டிருக்கிறது.

(தினகரன் பத்திரிகையில் 07.09.2000 அன்று பிரசுரமான காத்தநகர் முகைதீன் சாலி அவர்களின்  முதலாவது சிறுகதை. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்போ வாசகர்களுக்காக) 

One Response to “சிறகு முளைத்த சிட்டுக் குருவி”

  1. aasathrlan said

    masha allah good………….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s