காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஆயிரம் ரூபாவும் அரிசிபேக்கும்

Posted by Kattankudi Web Community (KWC) on 25/08/2011

(c) AFP

-காத்தநகர் முகைதீன் சாலி

ஆடுமாடுகள் நுழைகின்ற அளவு இடைவெளியுடைய முட்கம்பி வேலியினால் காவலிடப்பட்ட முகாம். ஆங்காங்கே ஆமைகள் குந்தியிருப்பது போல கிழிஞ்சல் நிறைந்த, காற்றடித்தால் விழுந்திடும் நிலையில் குடிசைகள். முகாமின் மத்தியில் ஆண்பெண் வேறுபாடுன்றி ஒன்றாக சங்கமிக்கும் மறைக்கும் வேலியற்ற திறந்தவெளிக் கிணறு. கிணற்றைச் சுற்றி இதுவரை காலமும் குளித்து, கழுவி, அழுக்கு நீக்கிய அசுத்தநீர்தேங்கி  நுளம்புகளினதும், நோய்க்காவிகளினதும் குடியிருப்பாக…..

ஆங்காங்கே காணப்படும் குப்பை குவியல்களில் சில சொறிநாய்கள் கழிவுகளுக்காய் சண்டையிட்டபடி…… சின்னஞ்சிறுசுகள் அம்மணமாக, அழுக்குப்படிந்த உடலும், பறட்டைத் தலையுமாய் காவிப்பல் தெரிய இழித்துக்கொண்டும் அழுது கொண்டும் ஆங்காங்கே…… வேலையற்று தண்டச்சோறாய் தென்னை மரத்தடியில் நேரம்காலம் தெரியாமல், வாயில் குறைபீடித் துண்டுடன் குந்தியிருந்து ஊர்பலாய் கழுவும் பெரிசுகள்….

வாழ்க்கையை கஸ்ட்ப்பட்டு பலவந்தமாக கழிக்கும் அந்த அகதிமக்களுக்குள் அமீன் வித்தியாசமானவன். சீர்கேடுகளுக்கு அப்பாற்பட்டவன் கொஞ்சம் படித்தவன். இன்று கடலுக்கு போன அமீனுக்கு கறிக்கு மட்டுந்தான் மீன் கிடைத்தது. கிடைத்த மீனுடன் முகாமிற்கு திரும்பி விட்டான். மனைவி ஆய்ஸாவும், மகன் சுலைமானும் நல்ல நித்திரை. ஆய்ஸாவை தட்டி எழுப்பி மீனை கொடுத்துவிட்டு போத்தலில் இருந்த தேனீரை குடித்து விட்டு பாயில் சாய்கிறான். அவனை எப்போதும் குடைகின்ற சிந்தனை இன்றும் வந்து தூக்கத்துடன் சண்டையிடுகின்றது.

அழுக்குகளும், சாக்கடை நாற்றமும், அழிந்த குடிசைகளும், கலாச்சார பாரம்பரியங்கள் அற்றுப்போன மக்களும். பாடசாலைக்குப்போகாத குழந்தைகளும், சுகாதாரமில்லாத அந்த முகாமும் அவனை மேலும் மேலும் சிந்திக்கத் தூண்டின. வௌவ்வேறு அந்தஸ்துக்களிலும் சிந்தனைகளிலும் வாழ்ந்து வந்த மக்கள் அகதி என்ற சொல்லினால் பிறந்த மண்ணிழந்து, சொத்திழந்து, சொந்தங்கள் இழந்து இணைந்த போது இவ்வாறான வாழ்க்கைக்கு இசைந்து போயிருப்பதை நினைக்க அவனுக்கு அதிசமாயிருந்தது.

இவ்வாறான ஒரு சூழலில் வாழ்வது பற்றியோ, தங்களின் எதிர்காலம் பற்றியோ அம்மக்கள் சிந்தித்ததாக தெரியவில்லை. எல்லாவற்றையும் இழந்து மேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லையென்ற நிலையில் வாழும் அந்த மக்களின் உரிமைகள் பற்றியும் அபிவிருத்தி பற்றியும் அவ்வப்போது அமீன் மட்டுந்தான் சிந்தித்திருக்கிறான்.

நித்திரையின்றி சிந்தனையில் இருந்த அமீனுக்கு இப்போதுதான் அந்த யோசனை பிறக்கிறது. அந்த யோசனையுடன் உறங்கிப்போகிறான்.

ஓலைக் குடிசையின் ஓட்டைகளுக்குள்ளால் காலைக்கதிரின் ஒளிக்கீற்றுகள் அமீனை உரசத் தொடங்கிய போது கண்விழிக்கிறான். ஆய்ஸா ஏற்கனவே எழுந்து தேனீர் வைத்துக்கொண்டிருந்தாள். அமீன், சுலைமானை தட்டி எழுப்புகிறான்.

‘சுலைமான் எழும்புடா , எழும்பி இந்தக் கரியால பல்லத்தீட்டிட்டு முகத்தக் கழுவு. ஓதுற பள்ளிக்கு போகணும்.’
வாப்பாவின் குரல் கேட்டதும் சுலைமான் எழுந்து துள்ளிக்குதித்து ஓடுகிறான்.

அமீன் பல் துலக்கி வாய் அலம்பி மனைவி நீட்டிய தேனீரை முட்டாசை கடித்துக்கொண்டு குடித்து விட்டு தலையில் முண்டாசுடன் முகாமை சுற்றி வலம் வருகிறான்.

‘வரும் போது அம்பது அறுபது குடும்பங்கள் இப்போ முன்னூறு நானூறு குடும்பங்கள்’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

பொழுது புலர்ந்தும் ஏராளமானோர் எழுந்திருக்கவில்லை. அமீன் ஒவ்வொரு குடிசையாக சென்று தடடியெழுப்புகிறான்.

‘ஆதங்காக்கா எழும்பி தென்ன மரத்தடிக்கு வா’
‘ஆரு அமினா என்ன சங்கதி’
‘சங்கதிய புறகு சொல்றன் முதல்ல மரத்தடிக்கு வா’
‘சீனி மாமா கொஞ்ச நேரத்தால தென்ன மரத்தடிக்கு வாங்க’
‘எதுக்குடாப்பா காலங்காத்தால’
‘ஒரு கூட்டமிருக்கு’

சம்மதங்கள் எதிர்ப்புகள் வேண்டா வெறுப்புகளுடன் முகாமிலுள்ள பெரியவர்கள் அனைவரையும் அமீன் அழைத்து விட்டு தென்னை மரத்தடியில் குந்திக்கொண்டான்.

அமீனின் அழைப்பு வீண் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சனம் கூடத் தொடங்கிற்று. எல்லோரும் அமீன் எதற்காக அழைத்தான் என்று தெரியாதவர்களாக அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அமீன் ஆரம்பித்தான்.

‘எல்லாரும் வந்தாச்சா?’
‘ஓண்டாப்பா எல்லாரும் வந்தாச்சி என்ன சங்கதியெண்டு சொல்லு’

‘இஞ்ச பாருங்க , நம்மிட முகாமில ஒருத்தருக்கும் சுத்தமான இடமில்ல சுத்தமான தண்ணியில்ல, ஒண்டுக்கு ரெண்டுக்கு போறதுக்கு ஒழுங்கான கக்கூசில்ல, நம்மிட புள்ளயல் படிக்கிறதுக்கு பள்ளிக்கூடமில்ல, நம்மிட இளந்தாரிகளுக்கு ஒழுங்கான தொழிலில்ல இது எல்லாத்தையும் நாம எப்படியெண்டாலும் பெற்றாகணும்’

‘எப்பிர்றாப்பா பெர்றது’ ‘அதானே’
கூட்டத்தில் ஒரே சலசலப்பு.
‘சத்தம் போடாதீங்க’
‘………………………….’

‘போனமுற நடந்த இலக்சனில நம்மிட ஆயிரம் வோட்டையும் சுல்தான் எம்பிக்குத்தான் போட்டம். நம்மிட ஆயிரம் வோட்டாலதான் அவரு ஜெயிச்சாரு. ஆனா அவரு எம்பியானதுக்கு பின்னாடி இந்தப்பக்கம் தல வெச்சும் படுக்கல. ஏன்னா அவரோட நாம எழுத்து மூலமா எதையும் எழுதி வாங்கல. அதனால இந்தமுற இலக்சனில வேற ஒருத்தருக்கு நாமெல்லாம் கையெழுத்து போட்டு நம்மிட தேவையையெல்லாம் எழுதி குடுப்பம் ஒத்துகிட்டா நம்மிட வோட்டையெல்லாம் அவருக்கே போடுவம்.’

ஆதங்காக்கா ஆத்திரத்துடன் எழுந்து கொண்டார்.

‘நீ என்னடாப்பா செல்றாய் சுல்தான் எம்பிதான அகதியான நமக்கு வோட்டு போர்ற உரிமைய வாங்கித்தந்தாரு அவர உட்டுட்டு வேற ஆக்களுக்கு போடச் செல்றியா’

‘வோட்டுப் போர்றது நம்மிட உரிமை காக்கா அத யாரும் வாங்கித்தர தேவல்ல, இந்த அஞ்சு வரிசத்தில சுல்தான் எம்பி நம்மிட முகாம் பக்கம் தலவெச்சிப் படுத்திருக்காரா சொல்லு பாப்பம்’

‘ஓமோம் அமீன் செல்றதுதான் செரி, இந்த முற நாம அமீன் செல்றாப் போல கேப்பம்’
கூட்டத்தில் எல்லோரும் சலசலக்க அமீனுக்கு சந்தோசம் தாழவில்லை.
‘அப்ப நான் எடுக்கிற முடிவுக்கு எல்லாரும் உடன்படுவிங்களா’
‘ஓமோம்’ எல்லோரும் தலையசைக்க கூட்டம் கலைகிறது.

அமீன் காதர் காக்காவையும் கூட்டிக்கொண்டு டவுனுக்கு கிளம்புகிறான். அங்கு ஒரு வக்கீலை பிடித்து எல்லா கோரிக்கைகளையும் எழுதி தங்களுடைய ஆயிரம் வோட்டுகளையும் தருவதாக வக்கீல் மூலம் அரசியல் வாதியிடம் கதைத்து முகாமிலுள்ள அனைவரிடத்திலும் கைநாத்தும் கையெழத்தும் வாங்கி அரசியல் வாதியிடம் கையளிக்கும் வரை அவன் ஓயவில்லை.

அமீன் வீடு வீடாகச் சென்று அந்த அரசியல் வாதியின் வெற்றிக்காக உழைக்கத் தொடங்கினான். இதனால் அவன் தொழிலுக்கு போவது குறைந்து போயிற்று. தானும் தனது குடும்பமும் பட்டினியாயக்; கிடந்தாலும் இந்த மக்கள் உரிமைகளையும் அபிவிரித்திகளையும் அனுபவிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தான்.

இன்று தேர்தல். அமீன் அதிகாலையிலேயே எழுந்து வீடு வீடாகச் சென்று அனைவரையும் எழுப்பிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே சுல்தான் எம்பியின் ஆட்கள் ஸ்பீக்கர் கட்டிய வாகனத்தில் வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

‘மக்களே இன்றைய தேர்தலில் சுல்தான் எம்பிக்கு வாக்களிக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஆயிரம் ரூபாய் பணமும் ஓரு அரிசி பேக்கும் இலவசமாகத் தரப்படும். இவற்றை பெற்று சுல்தான் எம்பிக்கு வாக்களிக்க விரும்புவோர் எம்பியின் ஓய்வு விடுதிக்குச் செல்லவும்’

இது வரையும் அமீன் எழுப்பியும் எழும்பாத மக்கள். அந்த அறிவித்தலைக் கேட்டதும் சாரை சாரையாக எம்பியின் விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆவேசமாக அரிசிக்காகவும் பணத்திற்காகவும் அணிவகுத்துச் சென்ற அந்த மக்களை அமீனால் தனிமனிதனாக நின்று தடுக்க முடியவில்லை. தான் இவ்வளவு கஸ்ட்டப்பட்டு வேதனைப்பட்டு இந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதற்காக போட்ட திட்டங்கள்;; கண்ட கனவுகள் எல்லாமே பணத்திற்காகவும் அரிசிக்காகவும் பாழாய்ப் போவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

யாரினாலும் திருத்த முடியாத யாரோ போடும் எச்சில் முள்ளுக்கு ஆசைப்பட்டு உரிமைகளையும் உணர்வுகளையும் அடமானம் வைக்கும் இந்த மக்களுடன் இனியும் ஒன்றாக வாழமுடியாது என்ற உறுதியான முடிவுடன் அமீன் முகாமை விட்டும் வெளியேறுகிறான்.

(காத்தநகர் முகைதீன் சாலி எழுதிய ‘வாழ்தல் மீதான வன்முறைகள்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து மற்றுமொரு சிறுகதை இன்போ வாசகர்களுக்காக..)

4 Responses to “ஆயிரம் ரூபாவும் அரிசிபேக்கும்”

  1. kaboor said

    its like our UC election and our hometown people

  2. Arsath a.g.m said

    Nice

  3. Mohamed anas said

    Nice story, we want learn more subject from this story.

  4. mohamed said

    Nice story

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s