பேரீத்தம் பழம்
Posted by Kattankudi Web Community (KWC) on 09/08/2011
அண்மையில் காத்தான்குடியில் வெளியிடப்பட்ட, காத்தநகர் முகைதீன்சாலி எழதிய ‘வாழ்தல் மீதான வன்முறைகள்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘பேரீத்தம் பழம்’ எனும் சிறுகதை இன்போ வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது.
ரமழான் மாதம் வந்துவிட்டால் எல்லோர் மனதிலும் ஒருவித மகிழ்ச்சி. அதிலும் ஏழைகளுக்கு என்றுமில்லாத சந்தோசம். ஏனெனில் இந்த ரமழான் மாதம்தான் அவர்கள் உத்தியோகபூர்வமாக பசித்திருக்கக்கூடிய மாதம். இருந்தாலும் இன்று அவ்வூரில் இரட்டிப்பு சந்தோசம்.
ஒன்று ரமழான் என்பதனால் மற்றது வெளிநாட்டிலிருந்து இனாமாக வழங்கப்பட்ட பேரீத்தம் பழத்தை பள்ளி வாசலில் பகிர்ந்து கொடுக்கிறார்கள் என்பதனால். ஊரெல்லாம் இதே பேச்சு.
‘இண்டெக்கி பள்ளியில பேரீச்சம் பழம் குடுக்கிறாங்களாம். மூணு நோம்பையும் தண்ணிய குடிச்சிட்டு தொறந்திட்டம் இண்டைக்கு தாற பேரீச்சம் பழத்த வெச்சி மிச்ச நோம்பயெல்லாம் தொறந்திடலாம். வாப்பா வந்தவுடன இத சொல்லிப் புடணும்.’
றகுமா பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டாள்.
பிள்ளைகள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்கள். தாங்கள் இன்று பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கப் போவதையெண்ணி.
********************************************************************************************************
காசீம் கல்சுமந்து, மண் சுமந்து தன்னையுருக்கி உழைக்கின்ற பணத்தை கொண்டுதான் அந்த குடும்ப வண்டி ஓடுகிறது. இந்தப் புனித ரமழான் மாதத்தில் வயிறு நிறையச் சாப்பிட்டு நோன்பு நோற்பதற்குக் கூட இடந்தராமல் வறுமை அவர்களை வாட்டிக்கொண்டிருந்தது. தண்ணீரைக் கொண்டு நோன்பு திறந்து விடுவார்கள். நோன்புக் கஞ்சியைக் கொண்டு முன்னேரச் சாப்பாட்டை ஒப்பேற்றிக் கொள்வார்கள். காசிம் மாடாய் உழைத்து ‘குருவி சேர்ப்பது போல்’ சேர்த்துக்கொண்டு வரும் உணவை கொண்டு நோன்பு வைத்துக்கொள்வார்கள். ஏழைகள் என்பதால் இவர்களை பலரும் மதிப்பதில்லை. ஆனால் ஊரை ஏய்த்துப் பிழைக்கும் பணக்காரர்களை விட இவர்கள் இறைவனிடத்தில் உயர்ந்தவர்கள் என்பது மனசாட்சியில்லா மனித உள்ளங்களுக்கு எங்கே புரியப்போகிறது.
*******************************************************************************************************
மணி மூன்றையும் தாண்டிக்கொண்டிருந்தது. காசிம் உச்சி வெயிலில் உன்னதமான நோன்புடன் ஊரெல்லாம் உலாவி வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் ஸகருக்கென கொஞ்சம் உணவை வாங்கிக் கொண்டு, உடை அழுக்குடனும் உடல் களைப்புடனும் தன் குடிசையை அடைகிறார்.
‘புள்ள, இன்டெக்கி இவ்வளவுதான் தேட முடிஞ்சிச்சி. புள்ளங்களுக்கு நோன்பு துறக்க எதுவெண்டாலும் வாங்கலாமெண்டு பார்த்தா காசி மிஞ்சல. என்ன செய்யிறது அல்லாஹ் தந்தத பொருந்திக்கனுமில்லையா?’ தான் கொண்டு வந்த பொட்டலத்தை றகுமாவிடம் நீட்டியவாறு பெருமூச்சொன்றை விடுகிறார்.
‘அதான் இன்டெக்கி அல்லாஹ் ஒரு வழிய காட்டிருக்கான்’
‘என்ன றகுமா சொல்ற’
‘உங்களுக்கு விசயம் தெரியாதா? வெளிநாட்ல இருந்து பேரீச்சம் பழம் அனுப்பியிருக்காங்களாம். அத அஸர் தொழுத பின்னால குடுக்காங்களாம். போய் வாங்கிட்டு வந்திருங்க.’
செய்தி கேட்டதும் காசிமுக்கு கை கால் ஓடவில்லை.
‘அல்லாஹ் இண்டெக்கி கண்துறந்திட்டான். இண்டெக்கி செரி புள்ளங்க பேரீச்சம் பழத்தோட நோன்பு தொறப்பாங்க’
மனசுக்குள் நினைத்துக் கொண்டே மேலைக்கழுவிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பள்ளிவாசலை அடைகிறார். அஸர் தொழுகை முடிந்தவுடன் தலைவர் எழுந்து பேசினார்.
‘வெளிநாட்ல இருந்து பேரீச்சம் பழம் வந்திருக்கு. அத ஊர் மக்களுக்கு பிரிச்சி வெச்சிருக்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில புள்ளயல் ஒங்கட வூட்டுக்கு கொண்டாந்து தருவாங்க யாரும் பேரீச்சம் பழம் கேட்டு என் வூட்டுக்கு வரப்படாது’
தலைவரின் பேச்சைக் கேட்டதும் ஊர் மக்கள் வீடுகளை நோக்கி விரைந்தனர்.
றகுமாவும் பிள்ளைகளும் காசிமை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். காசிம் வெறுங்கையுடன் வருவது கண்டு,
‘என்ன வாப்பா பேரீச்சம் பழம் தரல்லயா?’
‘இல்ல றகுமா இன்னும் கொஞ்சத்தால புள்ளயலுட்ட குடுத்தனுப்புவாங்களாம். நமக்கும் அனுப்புவாக’
‘நம்மிளயெல்லாம் ஞாபகம் வெச்சி அனுப்புவாகளா?’
‘இல்லாம என்ன றகுமா நாமென்ன வேற ஊருலயா இருக்கம் நம்மலப் போல ஏழைகளுக்குத் தாறத்துக்குத்தான வெளிநாட்டுக் காரங்க பேரீச்சம் பழம் அனுப்புறாக’
‘ஏதோ தந்தாங்கன்னாச் செரிதான்’
றகுமா அலுத்துக் கொண்டாள்.
மணி ஆறையும் நெருங்கிக் கொண்டிருந்தது. பிள்ளைகள் நோன்புக் களையினால் உறங்கிப்போனார்கள். றகுமாவும், காசிமும் பேரீத்தம் பழத்திற்காக காத்துக்கிடந்து களைத்துப் போனார்கள். காசிமால் இன்னும் பொறுக்க முடியவில்லை. தலைவரின் வீட்டை நோக்கி நடக்கிறார்.
**************************************************************************************************************
‘மரைக்கார் எங்கிட வூட்டுக்கு பேரீச்சம் பழம் வரல்ல. அதான் வாங்கிட்டு போகலாமெண்டு வந்த’ காசீம் கைகட்டி மரியாதையாய்க் கேட்டார்.
‘உங்கிட்ட பள்ளிக்காட் இருக்கா’
‘இல்ல மரைக்கார்’
‘பள்ளிக்காட் இல்லாம பேரீச்சம் பழம் எப்பிடி அனுப்புவம்’
‘மரைக்கார், நாங்க ஏழைங்க எங்கிறதால பள்ளிக்கு காசு கட்ட முடியிறதில்ல நாங்க உழைக்கிற காசி ஒரு வேள சாப்பாட்டுக்கே பத்திறதில்ல அதனால எங்கிட்ட பள்ளிக்காட் இல்ல’
‘மாசம் இருபது ரூபா கட்றது உங்களுக்குப் பாரமா?’
‘எங்களுக்கும் பள்ளிக்கு காசு கட்ட ஆசதான் மரைக்கார் அல்லா தந்தா இன்ஷா அல்லா கட்டுவம் இப்ப நாங்க ஒரு வேள ஒழுங்கா சாப்பிர்றதே கஷ்ட்டம் இதுக்குள்ள எப்பிடி இருபது ரூபா கட்றது?’
‘கார்ட் இல்லாம பழம் தர முடியாது. உன்னோட கதைக்க எனக்கு நேரமில்ல’
‘மரைக்கார், அங்க பிள்ளைங்க நோன்போட பேரீச்சம் பழத்துக்காக காத்திட்டிருக்காங்க. நான் வெறுங்கையோட போனா ஏமாந்து போயிடுவாங்க சொஞ்சமாவது தந்திருங்க மரைக்கார்’
காசிமின் கண்களில் ஈரம் கசிந்தது.
‘உனக்குச் சொன்னா விளங்கிறதில்லையா? அதென்ன மூடக்கணக்கிலயா வருது. கொஞ்சம் பழத்த அனுப்புவானுக. றெஸ்ட்டி போட்டுக்கு குடுக்கவே பழம் பத்தல. அப்புறம் காலிதீன் ஹாஜியார் வீடு, மக்கீன் முதலாளி வீட்டுக்கு கூட கொஞ்சப்பழந்தான் அனுப்பினம். ஏன் நம்ம முஸ்தபா முதலாளி வீட்டுக்குக் கூட பழம் அனுப்பல்ல. அப்பிடியிருக்க உனக்கு எங்கால பழம் அனுப்புறது.’
’முதலாளிமார்ர வீட்டுக்கெல்லாம் பழம் அனுப்பியிருக்கீங்க நாங்க ஏழைங்க எங்களுக்கு இல்லையா மரைக்கார்’
‘அவங்களப் போல நீ என்ன பள்ளிக்கு அள்ளிஅள்ளியா கொடுக்கிற, மாசம் இருபது கட்ட வக்கில்ல அதுக்குள்ள பேரீச்சம் பழமாம்’
‘படார்’ என கதவை சாத்திவிட்டு பள்ளித்தலைவர் வீட்டுக்குள் நுழைகிறார். காசிமின் கண்கள் குளமாயிற்று. மனசு கனத்துக் கல்லாயிற்று. அசைவற்று அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.
‘புள்ள இந்த முற நல்ல பேரீச்சம் பழம் வந்திருக்கு நோன்பு துறக்க தேவையானத எடுத்திட்டு மிச்சத்த பத்திரமா வை பென்னாளைக்கு தேவைப்படும்’
தலைவரின் வீட்டுக்குள்ளிருந்து மெல்லக் கசிந்த உரையாடல் காசிமை சுய நினைவுக்கு கொண்டு வருகிறது.
காசிம் இப்போது வருத்தப்படவில்லை. வானத்தை நோக்கி கையேந்தி விட்டு வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்புகிறார்.
அங்கே றகுமாவும் பிள்ளைகளும் பேரீத்தம் பழத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.








Abdullah said
உங்கள் ஆக்கங்கள் சமூகத்தின் காணப்படும் பல கசப்பான உண்மைகளை வெளிக்கொண்டுவருவதாக உள்ளது.
தொடர்ச்சியா உங்களது ஆக்கங்கள் வெளிவர வாழ்த்துக்கள்.
aashamahmud said
அஸ்ஸலாமு அழைக்கும்
வாழ்த்துகள்
riza said
it might be true story…………..
thanks to info.
Mazaa said
உங்களது பேனாவுக்கு உயிருக்கிறது..
அது சமூகத்திற்காக உழைக்கட்டும்..
வாழ்த்துக்கள்..