காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

இன்போ பக்கச்சார்பாக செயற்படுவது போல எனக்கு தோன்றுகின்றது – முனீர் ஆசிரியர்

Posted by Kattankudi Web Community (KWC) on 04/08/2011

- நேர்காணல்: மர்சூக் காசிம் / MM. ஜெலீஸ் -

அண்மையில் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது நேயர்கள் அறிந்ததே.

இதன் தலைவரான அபூபக்கர் முனீர் ஆசிரியர் அவர்களுடன் நேர்காணல்    ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கம் அதன் செயற்பாடுகள் உட்பட பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன. இந்நேர்காணல் இன்போ வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றது.   

குறுகிய கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட எமது வேண்டுகோளை ஏற்று இந்நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கித்தந்த முனீர் ஆசிரியர் அவர்களுக்கு எமது நன்றிகள்.

கேள்வி: காத்தான்குடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளையினை தற்பொழுது ஆரம்பிப்பதற்கு  உந்து சக்தியாக அமைந்த காரணிகள் எவை?

பதில்: எமது பாடசாலை மிகவும் பழமை வாய்ந்ததும் எமது ஊரின் முக்கிய கல்வி நிறுவனமுமாகும். பல வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் இன்னோரன்ன துறைகளில் பிரகாசிக்கும் பல கல்விமான்களையும் உருவாக்கிய பெருமை கொண்ட பாடசாலை ஆகும்.

அண்மையில் நமது படாசாலைக்கு ஒரு திறமையான சமூக அக்கறையுள்ள அதிபர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பாடசாலையில் முன்னேற்றகரமான பல மாற்றங்கள் உருவாகின.

அவற்றில் ஒன்று பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் புனரமைக்கப்பட்டமையாகும். இதை தொடர்ந்து கொழும்பிலும் பழைய மாணவர் சங்க கிளை ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக ஐக்கிய இராச்சியத்திலும் இதன் மற்றொரு கிளை ஆரம்பம் செய்வதன் அவசியம் எமது பாடசாலையின் பழைய மாணவரும் தற்போது ஐக்கிய இராச்சியத்துக்கான பதில்  இலங்கைத் தூதுவராக பணி புரியும் சகோதரர் அம்சா அவர்கள் உட்பட ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பல தரப்பட்ட பழைய மாணவர்கள், நமது ஊரைச்சேர்ந்த அரசியல் வாதிகள் ஆகியோரால் உணரப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேட்கொள்ளப்பட்டு எமது ஐக்கிய இராச்சிய கிளை ஆரம்பிக்கப்பட்டது.

எமது கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகள் தமது பழைய மாணவர் சங்க கிளைகளை கொண்டுள்ள வேளையில் நமது பாடசாலை ஒரு பழைய மாணவர் சங்க கிளை இல்லாதது ஒரு குறைபாடாக இருந்து வந்தது. இப்போது வல்ல அல்லாஹ்வின் அருளினால் அக்குறை நீங்கியுள்ளது என்றே நான் கருதுகிறேன்.

கேள்வி: பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளையின் அங்குரார்ப்பணம் எவ்வாறு நிகழ்ந்தது?

பதில்: இதன் அங்குரார்ப்பணத்துக்கான ஆரம்ப கூட்டம் சகோதரர் அம்ஸா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

அதன் பின்னர் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நிர்வாக குழு தெரிவுசெய்யப்பட்டது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பழைய மாணவர்கள் இக்கூட்டத்துக்கு வருகை தந்தனர். இக்கூட்டத்தில் ஐக்கிய இராச்சியத்தின் எல்லாப்பகுதிகளுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவ்வப்பகுதிகளில் உள்ள சகல பழைய மாணவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுகொண்டிருக்கின்றன.

தற்போதைய காலநிலையில் அநேகமான குடும்பங்கள் விடுமுறையில் இருக்கிறார்கள். இவர்கள் உட்பட அனைத்து பழைய மாணவர்களும் உள்வாங்கப்பட்டு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

கேள்வி: பழைய மாணவர் சங்க கிளை நமது பாடசாலையின் வளர்ச்சியில் எவ்வாறான பங்களிப்பை அளிக்க முடியும் என கருதுகிறீர்கள்?

பதில்: ஒரு பாடசாலையை பொறுத்தவரை பல தரப்பட்ட தேவைகள் அதற்கு உள்ளன. பௌதீக வளம் மற்றும் ஆளணி வளங்களில் நமது நாட்டின் அநேகமான பாடசாலைகளில் குறைபாடுகள் நிலவுகின்றன. இக்குறைபாடுகள் அனைத்தும் அரசாங்கத்தினால் தீர்க்கப்படும் என கருத முடியாது. பழைய மாணவர் சங்கங்கள் இக்குறைபாடுகள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு பழைய மாணவர் சங்கத்தின் சக்திக்கேற்ப முதன்மையான தேவைகளை முன்னிலைப்படுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்கு பாடுபட முடியும் என நான் நினைக்கிறேன்.

கேள்வி: தற்போது அவ்வாறான ஏதாவது தேவைகள் இனம் காணப்பட்டு அவற்றை தீர்ப்பதற்கு ஏதும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளனவா?

பதில்: எமது பாடசாலையில் தற்போது உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதை தீர்ப்பதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். ஆறு மாதங்களுக்கு வெளியிடங்களில் இருந்து தகுதியான ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு நமது கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு அனுசரணை வழங்க முடிவு செய்யப்பட்டு இதற்கு தகுதியான ஆசிரியர்களை ஏற்பாடு செய்யுமாறு பாடசாலை நிர்வாகம் கோரப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு மாதமொன்றுக்கு ஏறத்தாள ஒரு இலட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தின் நடுவில் குறித்த ஆசிரியர் பற்றாக்குறை அரசினால் தீர்க்கப்படும் பட்சத்தில் இத்திட்டத்துக்கான நிதி வேறொரு முக்கிய தேவை இனம் காணப்பட்டு அதை தீர்க்க பயன்படுத்தப்படும்.

கேள்வி: இது தவிர வேறு ஏதாவது தேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா?

பதில்: நமது பிரதேசம் மற்றும் பாடசாலையை பொறுத்தவரை நல்ல திறமையான மாணவர்கள் மிகவும் வறுமையான குடும்பப்பின்னணியை கொண்டுள்ளனர். எமது நகரம் பகட்டாக காட்சிதரும் அதே வேளை 50% மான மக்கள் இன்னும் வறுமை நிலையிலேயே உள்ளனர். இவ்வறுமை நிலை காரணமாக குறித்த திறமையான மாணவர்கள் தமது கல்வியை இடை நடுவில் கைவிட வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறான மாணவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு நிதி ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டு அவர்களின் தொடர்ச்சியான கல்விக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணமும் எமது சங்கத்துக்கு உண்டு.

கேள்வி: பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்படும் நிதி மற்றும் ஏனைய வளங்கள் சரியான முறையில் உரித்துடையவர்களை சென்றடைந்து அதன் நோக்கம் வெற்றிகரமாக ஈட்டப்படுவதினை உறுதி செய்ய எவ்வாறான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்: இது ஒரு முக்கியமான விடயமாகும். இங்கு பாடசாலை மற்றும் சமூக நல திட்டங்களுக்காக நன்கொடை புரியும் எமது பிரதேச சகோதரர்களின் பங்களிப்பு மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். தமது குடும்பங்களின் சுக துக்கங்கள், மற்றும் வாழ்வின் முக்கியமான விடயங்களை இழந்து தாங்க முடியாத குளிரில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் இருந்தே அவர்கள் தமது நன்கொடைகளை வழங்க இருக்கிறார்கள். இவ்வாறான நிதி மற்றும் வளங்கள் சரியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யாத விடத்து மறுமை நாளில் நான் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இங்கு பாடசாலை நிர்வாகத்துக்கு எம்மால் அனுசரணை செய்யப்படும் திட்டங்களின் அனுகூலங்களை அடைவதற்கு அவர்கள் இதய சுத்தியுடன் பாடு பட வேண்டும். அனுசரணையாளர்கள் என்ற வகையில் திட்டங்களின் முன்னேற்றங்கள் எம்மிடம் சரியான விதத்தில் ஆவணப்படுத்தப்பட்டு காண்பிக்க பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

எமது தரப்பில் இருந்து இவ்விடயத்தில் ஆலோசனைகள் வழங்கப்படும். உதரணமாக எம்மால் அனுசரணை செய்யப்பட இருக்கும் மேற்சொன்ன திட்டத்தில் மாணவர்களின் முன்னேற்ற அளவீடு பற்றி நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். திட்ட அமுலாக்கத்தின் போது தனித்தனியாக மாணவர்களின் குறித்த துறைக்கான பொருத்தப்பாடு ஆராயப்பட்டு இப்பிரிவுகளில் கல்வியை தொடர்வது கடினமாக காணப்படும் மாணவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு பொருத்தமான ஏனைய துறைகளில் கல்வியை தொடர ஆலோசனைகள் வழங்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் கணித விஞ்ஞான பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுவதை அதிகரிப்பதோடு ஏனைய மாணவர்கள் மற்ற துறைகளில் பிரகாசிப்பதையும் அதிகரிக்கலாம். எமது இந்த யோசனை அதிபராலும் பாராட்டப்பட்டது.

கேள்வி: ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கக்கிளை, காத்தான்குடி பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை இடையான தொடர்பாடல் எவ்வாறு உள்ளது?

பதில்: பாடசாலையை பொறுத்த வரை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். நிறைய விடயங்களை பற்றி நாங்கள் அதிபருடன் கலந்துரையாடுகின்றோம். எமக்குள் ஒரு சுமுகமான, ஆரோக்கியமான உறவு உள்ளது. காத்தான்குடி பழைய மாணவர் சங்க நிருவாகிகளுடனும் நாம் ஒரு நல்ல உறவை கட்டியெழுப்பி வருகிறோம். செயலாளர் மாஹிர் எம்முடன் நல்ல தொடர்பை கொண்டுள்ளார்.

கேள்வி: ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளை கூட்டத்தில் கலந்து கொண்டமை தமது பங்களிப்புக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்முடன் பேசிய பல பழைய மாணவர்கள் தெரிவித்தனர். இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்க உருவாக்கத்தில் மற்றவர்களுடன் சேர்த்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்க நகரசபை உறுப்பினர், பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்களின் பங்களிப்பும் மிகவும் காத்திரமானதாகும். இவ்வாறு ஒரு அமைப்பு உருவாக வேண்டும் அதன் மூலம் பாடசாலை நன்மை அடைய வேண்டும் என்பதற்காக அவர் முயற்சிசெய்தார். அவரின் இந்த செயல்பாடுகளில் எந்த விதமான அரசியல் நோக்கங்களுமில்லை என்பதை நான் இங்கு உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளை கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களை இணைத்துக்கொள்வதற்கு என்ன முயற்சியில் ஈடுபடவுள்ளீர்கள்?

பதில்: பழைய மாணவர் சங்க நிகழ்வில் கலந்துகொள்ளாதவர்களை நாங்கள் தனிப்பட்டரீதியில் சந்தித்து எமது செயற்பாடு தொடர்பாக விளக்கவுள்ளோம். எல்லோரையும் இணைத்து எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லவே நாம் முயற்சி செய்கின்றோம்.

கேள்வி: பாடசாலை அபிவிருத்தியில் மற்றைய சமூக கட்டமைப்புக்கள் எவ்வாறான பங்களிப்பை வழங்க முடியும்?

பதில்: சமூகத்தின் சகாத் நிதியில் கல்விக்கும் ஒரு பங்கு ஒதுக்கப்பட முடியும் என்பதால் சம்மேளனம் தனது சகாத் நிதியில் இருந்து ஒரு பகுதியை பாடசாலைகளின் அபிவிருத்திக்கு ஒதுக்க வேண்டும். அத்துடன் பாடசாலையின் தற்போதைய நிலை அதன் தேவைப்பாடுகள் என்பன ஜும்மாக்களில் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு தமது பிள்ளைகள் மற்றும் கல்வியின் மீதான அவர்களின் அக்கறை அதிகரிக்கப்பட வேண்டும்.

ஊடகம் என்ற வகையில் காத்தான்குடி இன்போவும் கல்வி மட்டும் பாடசாலை முன்னேற்றத்துக்கான விழிப்புணர்வு உருவாக்கத்தில் பங்களிக்க முடியும்.

கேள்வி: காத்தான்குடி இன்போவை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்: காத்தான்குடி இன்போ பிரபலமான, பலரும் பார்க்கின்ற ஒரு ஊடகமாகும். ஆனால் தற்போது இன்போ குறித்த ஒரு அரசியல் பிரிவின் ஊதுகுழலாக செயற்படுவது போலவும் பக்க சார்பாக செயற்படுவது போலவும் எனக்கு தோன்றுகின்றது. உதாரணமாக அண்மையில் ஒரு பாடசாலை ஆசிரியரும் ஒரு மேலதிக நேர வகுப்பு ஆசிரியரும் சம்பந்தப்பட்ட விவகாரம் ஒன்றில் இன்போ மேலதிக நேர வகுப்பு ஆசிரியருக்கு ஆதரவவாக நியாயமற்ற முறையில் செய்திகளை வெளியிட்டது.

ஊரில் உள்ள  ஏனைய ஊடகங்களுடன் நல்லுறவுகளை காத்தான்குடி இன்போ வளர்க்க வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

This slideshow requires JavaScript.

12 Responses to “இன்போ பக்கச்சார்பாக செயற்படுவது போல எனக்கு தோன்றுகின்றது – முனீர் ஆசிரியர்”

  1. Niyas said

    Welldone sir!
    Good & clear speech !!
    Niyas
    UK

  2. RASOOL said

    காத்தான்குடி இன்போ பிரபலமான, பலரும் பார்க்கின்ற ஒரு ஊடகமாகும். ஆனால் தற்போது இன்போ குறித்த ஒரு அரசியல் பிரிவின் ஊதுகுழலாக செயற்படுவது போலவும் பக்க சார்பாக செயற்படுவது போலவும் எனக்கு தோன்றுகின்றது.

    -சரியா சொன்னீங்க சார்…!

  3. yacare said

    I think ha has mistaken info stay in neutral

  4. abdul said

    kattankudy info unmaiyane seithyai than veliettathu. Athai neengal pakkach sarpake seyal pattathu enru solhireerhal. Neengal unmaiyai aaraithu parungal.

  5. kalid said

    உங்களது செவ்வியில் குறித்த அரசியல்வாதி…. என்று தொடங்கும் கேள்வி ஒன்றுக்கு முனீர் ஆசிரியர், சுத்தி வளைக்காமல் நேரடியாகவே பொறியியலாளர் அப்துல் ரஹ்மானின்பெயரை விளித்து விளக்கமளிக்கின்றார்.இதனை நீங்களும் மறுக்கவில்லை.ஊடகவியலாளர்களிடம் இல்லாத வெளிப்படைத்தன்மை ஒரு முன்னாள் ஆசிரியரிடம் இருப்பதை நினைத்துப்பெருமைப்படுகின்றேன்.பாடசாலையின் முன்னேற்றத்தில் ஒரு அப்துல் ரஹ்மானின் பங்களிப்பு எந்த வகையில் அந்த சகோதரர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது.அதை ஏன் உங்களிடம் முறையிடவேண்டும்.தலைவரிடமே முறையிட்டிருக்கலாமல்லவா?இன்போ பற்றிய அவரது குற்றச்சாட்டுக்கு இதுவரை உங்களிடம் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.இதன் மூலம் வாசகர்களை ,நாங்கள் நடு நிலையானவர்கள்தான்! என்று நம்பவைக்கஉங்களால் எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது .வாழ்க ஊடக தர்மம் !

    • அஸ்ஸலாமு அலைக்கும்,

      சகோதரர் காலித்,

      எங்களுக்கு கிடைத்த தகவல்கள் குறித்து கேள்வி கேட்பது எங்களுக்குள்ள உரிமை. தகவல்கள் குற்றம் சாட்டுபவையாக இருந்ததால், பெயரை நாங்கள் கேள்வியின் போது நாகரிகத்துக்காக தவிர்த்துக் கொண்டோம். பதிலளிக்கும் போது முனீர் ஆசிரியர் பெயரைக் குறிப்பிட்டு தெளிவுபடுத்தியிருந்தார். குற்றச்சாட்டுகள் பிழையாக இருக்கவும் கூடும் என்பதால், பெயரைத் தவிர்த்தது ஊடக நாகரீகத்துக்குள் அடங்கும்.

      ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உடனடியாக மறுப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியமோ நேர அவகாசமோ இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நேர்காணலின் பின்னர் முனீர் ஆசிரியரிடம் இது குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. அவரது கருத்துகள் அப்படியே அவரிடம் மீண்டும் அனுமதி பெற்று வெளியிடப்பட்டன.

      வாசகர்களை எவ்வித பொய்யான நம்பிக்கைக்கும் இட்டுச் செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. இவ்விணையத்தளம் சேவை அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதை தங்கள் வேலைத்திட்டங்களுக்கு (Agenda) அமைய வளைக்க முற்படுபவர்கள், அது நடக்காத போது இது பக்கச்சார்பானது என்று ஊளையிடுவது ஆரம்பம் முதல் நடந்தே வந்துள்ளது.

      நீங்கள் யாருடைய பக்தியில் இக்கருத்தை எழுதியுள்ளீர்கள் என்று வாசகர்கள் அறிவார்கள். இவ்வளவு பெரிய நேர்காணலில் உங்கள் கேள்வி எழும் இடம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அவர் ஊடக விடயத்தில் எவ்வளவு கீழ்த்தரமான, மட்டரகமான திரைமறைவு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதை நிரூபிக்க எம்மிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. பிரச்சினை பெரிதுபடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அவற்றை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை. ஆனால் நேரடியாக குறித்த நபரிடம் நேரடியாகக் கூறியுள்ளோம். அதற்கு அவரும் இதுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை.

      மேலும் ரமழான் காலத்தில் சின்னத்தனமான விளம்பரப் பசிபிடித்தவர்களின் பிரச்சினைகளுக்குள் சிக்கி எமது அமல்களுக்கான நேரத்தை இழக்க நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை.

      இவ்விடயம் தொடர்பில் ரமழான் முடியும் வரை எவ்வித விளக்கமும் அளிக்கப்பட மாட்டாது என்பதை வாசகர்கள் கவனிக்கவும். அதன் பின்னர் தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் விளக்கங்கள் வழங்கப்படும்.

      வஸ்ஸலாம்
      WebAdmin

  6. silmi thajudeen said

    I agree with you and 95% Articles bias supporting one political group, I can prove many occassions

  7. Naseer said

    excellent muneer sir,your speech is very clear,allah will help for your effort to our education.also, still k.info has a correct path to choose in it”s way as a neutral media to our home town.we can see some news items are in neutral but the info.struggle in some time to keep that up.why?info.please think and do the better job to our community.

  8. Ooraan said

    ஊடக நடுநிலைமை பற்றி கருத்து தெரிவிக்க குறித்த அரசியல் குழுவினருக்கு எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது. அவர்களின் பார்வையில் ஊடக நடுநிலைமை என்பதன் வரைவிலக்கணம் மிகவும் சுவாரஷ்யமானதாகும். அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை அதன் நோக்கம், பொருத்தப்பாடு மற்றும் பின்விளைவுகள் போன்ற அளவுகோல்களை உபயோகிக்காமல் கண்ணைமூடிக்கொண்டு புகழும், அங்கீகரிக்கும் எந்த ஊடகமும் அவர்களின் பார்வையில் மிகவும் நடுநிலையான ஒரு சிறப்பான ஊடகமாகும். அவ்வாறான ஊடகங்கள் புரியும் ஊடக அயோக்கியத்தனங்கள் அவர்களின் பார்வைக்கு புலப்படுவதில்லை என்பது வெள்ளிடை மலை ஆகும். இவ்வாறான சில முன்மாதிரி நடுநிலை ஊடகங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள போது நமது இன்போ ஒரு பக்கச்சார்பான ஊடகம்தான்.

    இவ்வாறான ஒரு முன்மாதிரியான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்து வரும் குறித்த அரசியல் குழுவிடம் பொது நிறுவனங்களின் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும் போது அப்பொது நிறுவனங்கள் அரசியல் எல்லைகளுக்கு அப்பால் நின்று எங்கனம் சேவையாற்ற முடியும் என்பது ஒரு பிரதான வினாவாகும்.

    -ஊரான்

  9. இன்போமீதான பக்க சார்பு ஊடகம் என ஒரு நடு நிலையாளர் கூறினால் எல்லோரையும் யோசிக்க வைக்கும் ஆனால் …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… அவரது கண்ணாடியை அணிந்திருக்கும் வரை அவருக்கு காத்தான்குடி இன்போ பக்க சார்பாக தெறிவதில் ஆச்சரியம் யாதும் கிடையாது
    இருந்தாலும் ஒருத்தர் தமக்கெதிராக கருத்துரைதிருந்தும் அதனை பெரு மனதுடன் தங்கள் ஊடகத்திலேயே பிரசுரித்த இன்போவின் நிர்வாகத்தை பாறாட்டமல் இருக்க முடியவில்லை! பணி துணிவும் தெளிவும் உறுதியும் இருந்தால் இலகுவானது என்பது இன்போவின் அழகிய முன்மாதிரிகளை கொண்டு விளங்கி கொள்ள முடிகிறது

  10. Husain said

    Salam, Mr. Muneer may be a supporter of PMMG

  11. ஊர் நலன் விரும்பி said

    காத்தான்குடி இன்போ பக்கச்சார்பற்ற ஊடகம் என்பதை என்பதை எங்களால் நிருபிக்க முடியும்
    உதாரணத்துக்கு ஒன்றை கூறுகின்றேன் தேர்தல் காலங்களில் சகோதரர் KALIDஅவர்களினால் குறிப்பிடப்பட்ட கட்சியினால் ஒரு ஊர்வலம் நடாத்தப்பட்டு அது குழப்ப நிலையில் முடிவடைந்தது என்பதை யாவரும் அறிவர் அதற்கான காரணங்களை கண்டறிந்து முதலில் வெளியிட்டது காத்தான்குடி இன்போ என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது அச்சந்தர்பத்திலும் உங்களைபோன்ற…………மனம் படைத்தவர்கள் ஆளுந்தரப்புக்கு ஆதரவாக காத்தான்குடி இன்போ செயற்படுவதாக பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் ஆனால் அதன் பிற்பாடு காத்தான்குடி இன்போ உண்மை நிலையை விளக்கியவுடன் பொய் குற்றச்சாட்டு வைத்தவர்களே வாயடைத்து நின்றனர்.இது போலவே உங்களது குற்றச்சாட்டும் அமைந்துள்ளது நீங்கள் முதலில் ஒன்றை சிந்திக்க வேண்டும் காத்தான்குடி இன்போ ஆரம்பிக்கப்படுமுன் ஊரை விட்டு பிரிந்து வாழும் நாம் ஊர் செய்திகளை அறிய எவ்வளவு சிரமங்களை எதிர் நோக்கினோம் அனால் தற்போது நாம் ஊரை விட்டு பிரிந்து வாழ்ந்தாலும் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்கின்றோம் இதற்கு முதலில் நாம் காத்தான்குடி இன்போக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் அதன் பிற்பாடே காத்தான்குடியை மைய்யப்படுத்தி பல இணைய தளங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் அவை அனைத்தும் நீங்கள் கூறியது போல் பக்கச்சார்பான ஊடகங்களாகவே காணப்பட்டது அனால் அன்றிலிருந்து இன்று வரை தனித்து செயற்பட்டு 2 மில்லியன் தடவை பார்வை இட்டு தன தனிச்சிறப்பை நிருபித்துள்ளது என்பதை நீங்கள் அறிய வில்லையா?சரி நீங்கள் கூறுவது போன்று பக்கச்சார்பான ஊடகம் என்றால் இவ்வளவு தடவை இவ்வினையப்பக்கத்தை பார்வையாளர்கள் பார்வை இட்டிருப்பார்களா என்று சற்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே………
    “இறுதியாக நாம் ஒன்றை கூற விரும்புகின்றோம் தயவு செய்து ஏதும் உண்மைக்காரணங்கள் இருந்தால் குறை கூறுங்கள் அதை அவர்கள் திருத்திக்கொள்ளட்டும் மாறாக பொய் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சேவை நோக்கிக்கு தடை போடாதீர்கள் எமது ஊரை வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட இவ்வாறான ஒரு ஊடகம் தேவை என்பதை சற்று சிந்தித்துக்கொள்ளுங்கள் ”
    இப்படிக்கு
    ஊர் நலன் விரும்பி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s