தாயா தாரமா?
Posted by Kattankudi Web Community (KWC) on 08/04/2011
மழை பெய்து வீதியில் தேங்கியிருந்த வெள்ள நீரில் மூழ்கி சந்தோசமாய் நீராடி, தனக்கு எந்த கவலையோ பிரச்சினையோ இல்லையென்று சொல்வதுபோல சிறகை அடித்து நீரை தெளித்து பறந்து சென்று கிளை பரப்பி செழித்து நிற்கும் மரத்திலிருந்து சிறகுலர்த்தும் பறவையை பார்க்க பொறாமையாய் இருந்தது நசீருக்கு.
‘எவ்வளவு சுதந்திரம், எவ்வளவு நிம்மதி, எதைப்பற்றியும் எந்தக் கவலையுமில்லாமல் என்ன அழகாக நிம்மதியாக பறந்து திரிகிறது. நான் இந்த பறவையாய் பிறந்திருக்கக்கூடாதா?’
உள்ளத்தில் நினைத்துக் கொண்டே கட்டிலில் சாய்ந்திருந்த நசீரின் இதயம் வாழ்க்கையின் விரக்தி நிலையிலிருந்து விடுபட்டு சுதந்திர உலகில் சஞ்சரிப்பதற்கு சிறகடித்துக் கொண்டிருக்கும் போது அவனது நினைவுகள் பின்நோக்கி நகருகின்றன.
அவன் எத்தனை தடவைகள் உம்மாவிடம் சொல்லியிருப்பான்.
‘எனக்கு கல்யாணம் வேணாம், என்ன கொஞ்ச நாளைக்கு தனியா இருக்க விடுங்க’ என்று. அவனுடைய தாய் எதையும் கேட்கவில்லை.
‘நான் உன்ட வாப்பாவும் இல்லாம எவ்வளவு கஷ்ட்டப்பட்டு உன்ன வளர்த்து ஆளாக்கி படிக்கவெச்சி, எல்லாத்தையும் செஞ்சி போட்டு கல்யாணம் மட்டும் பண்ணித்தரலேன்னா உன்ன வளர்த்ததிலேயே அர்த்தமில்லாம போயிடும்.’
உம்மாவின் கோரிக்கையை நசீரினால் தட்ட முடியவில்லை, இது வரைக்கும் தாய் சொன்ன எதையும் அவன் தட்டி நடந்தது கிடையாது. திருமணத்திற்கு சம்மதித்து விட்டான்.
அவன் திருமணத்தை வெறுத்தது தன்னுடைய தாய் தனிமைப்பட்டு விடுவாள் என்ற காரணத்தினால்தான். ஆனால் திருமணத்தின் பின்பும் தாய் அவனுடனேயே இருப்பாள் என்ற உறுதி மொழிக்கு பின்புதான் திருமணம் நிறைவேறியது.
*********************************************************************************************************
வழமை போல் நசீர் வேலை முடிந்து வீட்டுக்கு வருகிறான்.
‘உம்மா பசீனா எங்க’
மகனின் குரல் கேட்டதும் குசினியில் வேலையிலிருந்த அவனுடைய தாய் ஓடி வருகிறாள்.
‘மகன் நீ இல்லாத நேரத்தில அவ வீட்ல இருக்கிறதில்ல பக்கத்து வீட்லதான் அவட பொழுது கூடுதலா கழியுது. அவவ கொஞ்சம் கண்டிச்சு வைப்பா’.
தாயுடைய அறிவுரை அவனை சிந்திக்க தூண்டிற்று. அதுவே அவனை ஆத்திரப்படுத்திற்று. குரலை உயர்த்தி பலமாக, ‘பசீனா.. பசீனா…’ என்றழைத்தவனின் கண்கள் சிவந்துபோயிற்று.
கணவனின் குரல் கேட்டதும் பசீனா ஓடி வருகிறாள். ஆத்திரத்தில் நடுங்கிக்கொண்டிருந்த நசீரின் கரம் பசீனாவின் கன்னத்தை பதம் பார்த்தது.
பசீனாவிற்கு விடயம் விளங்கிப் போயிற்று. மாமியாரை ஒரு தடவை எரிப்பது போன்று பார்த்து விட்டு அழத்தொடங்கி விட்டாள். நசீரின் ஆத்திரம் அடங்குவதாயில்லை. அவனுடைய தாய் மகனை சமாதானப்படுத்தினாள். தாயின் அமுத மொழிகள் அவனை ஆறுதல் படுத்தி விட்டது. அவனுடைய கோபம் அடங்கிற்று. பசீனாவின் உள்ளத்தில் மாமியாரை பற்றிய கரும்புள்ளி விழுந்து விட்டது.
அன்று ஆரம்பித்த முறுகல்தான் ஒரு வருடமாகியும் இன்னும் தீர்ந்தபாடில்லை. இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை நசீருக்கு. அன்புகாட்டி அரவனைத்து ஒருவருடமாய் அவனுடன் ஒன்றித்துப் போன மனைவி ஒரு புறம். வளர்த்து ஆளாக்கி அவனுடைய ஒவ்வொரு இன்பத்திலும், துன்பத்திலும் பங்கெடுக்கும் தாய் மறு புறம். யார் சொல்வதை நம்புவது?.
தாய் சொல்வது உண்மையா ?
மனைவி சொல்லவது உண்மையா?
நசீர் வீட்டில் இல்லாத நேரங்களில் நடந்த சண்டைகளின் சாராம்சங்கள் அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் அடுக்கப்படும். உழைத்து களைத்து வீடு வரும் அவனுக்கு ஆத்திரம் பொங்கிவரும்.
மனைவிக்கும் தாய்க்கும் இடையில் அடிக்கடி நிகழும் பனிப்போரில் இவன் எந்தப் பக்கமாவது சாய்ந்தாக வேண்டிய நிலை எற்பட்டு போனது.
இருபத்தியாறு வருடங்கள் அவனோடு ஒன்றியிருந்த தாயின் உறவை விட, ஒரு வருடமே அவனுடன் வாழ்ந்த மனைவியின் உறவே அவனுக்கு பெரிதாய் தெரிய ஆரம்பித்தது. அமிர்தமாய் இருந்த தாயின் சொற்கள் இப்போதவனுக்கு வேப்பங்காயாய் கசக்க ஆரம்பித்தது. உயிரினும் மேலாய் நினைத்திருந்த தாயை மறப்பதற்கு மனசு தயாராகி விட்டது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் மந்திர வலையில் சிக்கிக்கொண்டிருந்தான்.
திருமணத்திற்கு முன்பு தாயை எந்த வேலையை செய்வதற்கும் நசீர் அனுமதிப்பதில்லை. தண்ணீர் குடம் சுமப்பதிலிருந்து காய்கறி வெட்டுவது வரைக்கும் தானே செய்து கொடுப்பான். தாய்க்கு ஒரு முள் தைத்தால்கூட அவனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
இப்போது தாய், அந்த வீட்டின் ஆயாவாக மாறியிருந்தாள். காலையில் எழுந்தது முதல் மகனினதும், மருமகளினதும் வேலைகளை கவனிப்பதிலேயே அவளது பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தது. சமைப்பபது, அழுக்காடைகள் துவைப்பது வீடுவாசல் சுத்தம்செய்வது என்று அத்தனை வேலைகளையும் அவளே நிறைவேற்றிக் கொண்டிருந்தாள். அநேக நேரங்களில் வீட்டில் இல்லாத நசீர் இந்த வேலைகளையெல்லாம் தனது மனைவிதான் செய்கிறாள் என்று நினைத்துக் கொள்வான்.
*******************************************************************************************************
புகைந்து கொண்டிருந்த மாமியார் மருமகள் பிரச்சினை இன்று பூதாகாரமாக வெடித்துப்போயிற்று. பசீனா, சீறிய பாம்பாக சினங்கொண்டு வார்த்தைகளை கொட்டினாள்.
‘இந்த வீட்ல ஒன்று நானிருக்கணும் இல்ல உங்க உம்மா இருக்கணும் நானா? இல்ல உங்க உம்மாவா? இப்பவே எனக்கு முடிவு தெரிஞ்சாகணும்’.
பெட்டிப் பாம்பாய் தனக்குப் பின்னால் நின்றிருந்த நசீரை, பசீனாவின் கண்கள் எரிப்பது போன்று நோக்கிற்று. ஆத்திரப் படவேண்டிய நசீரின் உணர்வு மனைவியின் பார்வையில் அடங்கிக் கிடந்தது. அவன் தாயை திரும்பிப் பார்த்த பார்வை ‘நான் சொல்றதுக்கு முன்னாடியே நீ இங்கிருந்து போயிடு’ என்று சொல்வது போலிருந்தது.
தான் ஆசையாய் வளர்த்து ஆளாக்கிய தன் உயிரான மகனை விட்டும். தான் கேவலப்படுத்தப்பட்ட அந்த வேளையில் கூட பிரிந்து செல்ல அந்த தாயின் மனம் இடந்தரவில்லை. இருந்தாலும், தன்னால தண்ட பிள்ளையின் வாழ்க்கை சீரழிஞ்சிடக்கூடாது என்ற தாய்மைக்கே உரிய உயர்ந்த குணந்தான் அந்த தாயின் உள்ளத்தில் நிறைந்திருந்தது. தனது உடமைகளை சுருட்டியெடுத்து மூட்டை முடிச்சோடு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். அந்த சுமையை விட நெஞ்சிலிருக்கும் சுமை விஞ்சிக்கொண்டிருந்தது.
தாயை விட்டும் எந்தச்சந்தர்ப்பத்திலும் பிரிந்திடாத நசீர், தாயை பிரிந்து ஒரு வார காலம் வாழ்ந்த போதுதான் தாயின் அன்பும் மனைவியின் தந்திரமும் அவனுக்கு புரிய அரம்பித்தது. இந்த ஒரு வருட காலமாக வீட்டில் தொலைந்து போன நிம்மதிக்கு யார் காரணம் என்பது புரிய ஆரம்பித்தது. பசீனாவிற்கு கூட மாமியாரை பிரிந்தது வருத்தந்தான், ஒரு வேலைக்காரியை இழந்து விட்டோமேயென்று.
******************************************************************************************************
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த நசீர் களைப்பு மிகுதியால் கட்டிலில் சாய்கிறான். ஆபிசில் இருக்கும்போதே இலேசாக இருந்த வயிற்றுவலி இப்போது அதிகரித்துக்கொண்டே போனது. அவன் வயிற்றைப் பொத்திக்கொண்டு பலமாக கத்தினான். குசினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பசீனா இவன் கத்துவதை பொருட்படுத்தவேயில்லை.
நசீர் எட்டு வயதாயிருக்கும் போது இவ்வாறு அவன் வயிற்று வலியால் துடித்தபோது அவனுடைய தாய் பதறிப்போனாள். வாகன வசதியில்லாத அந்த கிராமத்திலிருந்து ஒருமைல் தொலைவிலுல்ல வைத்திய சாலைக்கு அவனை தோளில் சுமந்து கொண்டே நடந்து சென்ற அந்த காட்சி இப்போது நசீரை உறுத்த தொடங்கிற்று.
‘பசீனா …. இங்க ….வா.. எனக்கு கடுமையா வயித்த வலிக்குது என்ன ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு போ’,
‘என்னது சின்னபிள்ள மாதிரி கத்திட்டு, கொஞ்சம் இருங்க வேலய முடிச்சிட்டு வாரன்’
பசீனாவின் சுடு சொற்கள் இவனை ஆத்திரப் படுத்தவில்லை. தான் தாய்க்கு செய்த துரோகத்திற்குரிய தண்டனை என்று உணர்ந்து கொண்டதால்;.
*******************************************************************************************************
வைத்திய சாலை ஜன்னலினூடாக பறவையை ரசித்தபடி படுத்திருந்த நசீரின் காதுகளில் வைத்தியரின் அறையிலிருந்து வந்த உரையாடல் இடியென இறங்கிற்று.
‘உங்க கணவருக்கு ரெண்டு சிறுநீரகமும் பலமா பாதிக்கப்பட்டிருக்கு அதனால உடனடியா ஒரு சிறுநீரகம் தேவைப்படுது’
‘ப்லீஸ் எப்படியாவது அவர காப்பாத்துங்க ..டொக்டர்’
எனக் கெஞ்சினாள் பசீனா.
‘அவருக்கு யாராவது ஒருத்தர்ர கிட்னிய பொருத்தினாதான் உயிர் பிழைப்பாரு அதற்கான ஏற்பாட்ட பண்ணுங்க’
‘யாருகிட்ட போய்….. இதன்ன கேட்டதும் கிடைக்கிற பொருளா .. டொக்டர் நான் எங்க போவன்’
‘ஏன் நீங்க நெனச்சா கூட உங்க கிட்னியில ஒன்ன கொடுக்கலாமே’
டாக்டர் கூறியதும் அதிர்ச்சியுடன் அவரை ஏறிட்டாள் பசீனா.
‘நானா? நான் வந்து டொக்டர் ….. என்னால…’
பசீனா பயத்தினால் நடுங்கிய போது, விடயமறிந்து ஓடோடிவந்து இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த நசீரின்தாய்,
‘நான் தாறன் டொக்டர்… நான் தாறன். என்ட ரெண்டு கிட்னிய வேண்டுமானாலும் எடுத்து என் புள்ளய காப்பாத்துங்க டொக்டர்’
அழுது புலம்பிக் கொண்டு தாய் கூறிய வார்த்தைகளால் நசீரின் வயிற்றுவலி மறைந்து போயிற்று.
நசீர் பார்த்து வியந்து கொண்டிருந்த பறவை சிறகுலர்ந்ததும் பறந்து போயிற்று.
காத்தநகர் முகைதீன் சாலி
(நவமணி பத்திரிகையில் 2002ம் ஆண்டு பிரசுரமான இச்சிறுகதை இன்போ வாசகர்களுக்காக…)








rifkani said
இந்தக்கதையை வைத்தே ஒவ்வரு ஆண்மகனும் தனக்குள் சத்தியவாக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்
தாய் சொல்வதை மாத்திரமோ அல்லது மனைவி சொல்வதை மாத்திரமோ வைத்து முடிவெடுக்காமல் தான் சிந்தித்து யார்மனதும் புண்படாதவாறு
முடிவு எடுப்பது ஒவ்வோர் ஆண்மகனின் கடமை
ஏனெனில் அவர்கள் இருவருமே பெண்கள்