காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

‘ஹர்த்தாலும் காவி நுளம்பும்’ – சிறுகதை

Posted by Kattankudi Web Community (KWC) on 13/02/2011

-முகைதீன்சாலி-

கூட்டம் ஆரம்பமானது. அதிகாரி பேச ஆரம்பித்தார்.

“எந்த வகையிலும் நோய் காவிகளான நுளம்புகளையும் அதன் வாழ்விடங்களையும் அழிக்க முடியவில்லை. டெங்கு, யானைக்கால், மலேரியா போன்ற பயங்கர நோய்களை கடத்துகின்ற நோய் காவிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நமது திணைக்களம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கிறது. ஊரில் ஆங்காங்கே காணப்படுகின்ற பழைய டயர்கள், உக்கிய மரக்குற்றிகள், வெற்றுக்குரும்பைகள், சிரட்டைகள் என்பவற்றை அழிப்பதற்கு எவ்வளவு முயற்சியை மேற்கொண்டாலும் மக்கள் அதை கவணத்திலெடுப்பதாயில்லை.

எனவே நாளை நடைபெறுகின்ற ஆலோசனைக்கூட்டத்தில் மேலே சொன்ன நோய் காவிகளின் வாழ்விடங்களை அழித்தொழித்து, நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய முறை பற்றிய நல்ல ஆலோசனையை யார் முன்வைக்கிறார்களோ அவர்களுக்குத் திணைக்களத்தினால் பெறுமதிமிக்க பரிசில் வழங்கப்படுவதோடு பாராட்டு விழாவும் நடைபெறும்.”

பேசி முடித்த அதிகாரி அமர்கிறார். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் அந்தப் பரிசினையும் பாராட்டுதலையும் தாங்களே பெற வேண்டுமென்ற ஆசை மேலெழுகின்றது.

இவனையும் அந்த ஆசை பீடித்துக்கொள்கிறது. பரிசும், பாராட்டும் கண் முன்னே நிழலாடுகிறது. கூட்டம் முடிந்த கையோடு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்தவனால் உண்ண முடியவில்லை உறங்க முடியவில்லை. விழித்த கண்களுடன் கட்டிலில் புரண்ட இவனிடம் காரணத்தை வினவுகிறாள் மனைவி. இவன் காரணத்தை விளக்குகிறான்.அவளுக்கும் அந்தப் பரிசும் பாராட்டும் தன் கணவருக்கே கிடைக்க வேண்டுமென்ற ஆசை சிறகடிக்கிறது.

நேரம் நல்லிரவை தாண்டியும் இவனும், மனைவியும் தூக்கத்தை தொலைத்திருந்தார்கள். ஒரே சிந்தனை. கட்டிலில் புரண்டிருந்த இவன் மனைவி துள்ளிக்குதித்தபடி எழுந்தமர்கிறாள். புரிந்து கொண்ட இவன். ‘என்ன யோசித்தாய் சொல்’ என்று சொல்லும்படியாக மனைவியை நோக்குகிறான். மனைவி சொன்ன யோசனை இவனைச் சந்தோசத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. தூக்கமும் கண்ணை முட்டுகிறது.

மறுநாள் கூட்டம் ஆரம்பமானது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஆலோசனைகளை முன்வைத்தார்கள். எந்த ஆலோசனையும் அதிகாரியைத் திருப்திப் படுத்தவில்லை. இவனின் முறை வந்தது. இவன் கூறிய ஆலோசனை அதிகாரியை பரிசீலிக்கத் தூண்டியது. ஈற்றில் இவனது ஆலோசனையே முடிவாக அறிவிக்கப் பட்டது. இவனது திட்டத்தை நடைமுறைப்படுத்த இவனது தலைமையிலேயே குழு அமைக்கப் படுகிறது. பரிசிலை நோக்கிய இவனது பயணம் ஆரம்பமாகிறது.

*******************************************************************************************************

இரண்டு டாக்டர்கள் இரத்தம் தோய வீதியில் கிடக்கிறார்கள். இவனது தலைமையில் சென்ற குழு அவர்களை மீட்கிறது. அன்றிரவே இவனது தலைமையில் குழு கூடுகிறது. “இரண்டு டாக்டர்கள் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை பூரண ஹாத்தால் அனுஷ்ட்டிக்கப்படும். எனவே நாளை கடைகள், பாடசாலைகள், திணைக்களங்கள், அனைத்தினையும் மூடி, போக்குவரத்தை தடைசெய்து ஹர்த்தால் அனுஷ்ட்டிக்குமாறு வேண்டுகிறோம்.” வேகமாக போஸ்ட்டர்கள் அச்சடிக்கப்பட்டு வீதியெங்கும் ஒட்டப்படுகிறது.

நாளை விடுமுறையென்பதால் கடைகளில் வேலைசெய்யும் சிப்பந்திகளுக்கும், கட்டாயத்திற்காய் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும், ஏகப்பட்ட சந்தோசம். வேலையற்ற இளைஞர்களுக்கு நாளை தங்கள் பொழுது ஹர்த்தால் களையுடன் காணாமல் போகும் என்ற நிம்மதி.

அன்றைய பொழுது அமைதியாக விடிகிறது. அதிகாரி சகிதம் இவனது குழு நிலைமைகளை அவதானிக்கிறது. ஊரெங்கினும் மூலை முடுக்குகளில் கவனிப்பாரற்று, கண்கானிக்க முடியாதவாறு புதையுண்டு, சிதையுண்டு, நீர்நிறைந்து நோய்க்காவிகள் குடியிருந்த டயர்கள், உழுத்தமரக்குற்றிகள், வெற்றுக்குரும்பைகள், சிரட்டைகள், எல்லாமே பலவந்தமாக வீதிக்கு வருகின்றன. அனைத்தும் தீ மூட்டி எரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு சந்தியிலும் எரிக்கப்பட்ட டயர்களினால் ஏற்பட்ட புகையினால் ஊரிலிருந்த நுளம்புகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்கின்றன. இவனது திட்டம் நினைத்தது போலவே நிறைவேறிப்போக சந்தோச மிகுதியால், ஆலோசனை சொன்ன அன்பு மனைவியை அள்ளி அணைக்க ஓடோடிப்போகிறான்.

மறுநாள் நோய் காவிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் அழிப்பதற்கு சிறந்த ஆலோசனை வழங்கி அதனை செயற்படுத்தியமைக்காக, தனக்கு பரிசும் பாராட்டு விழாவும் நடைபெறப் போகிறது என்ற சந்தோச மிகுதியுடன் வானொலியை திருப்புகிறான். “நேற்று இனந்தெரியாதோரால் இரண்டு டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்துப் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹாத்தாலின் போது ஏற்பட்ட ரகளையில் இரு இளைஞர்கள் பலியாணார்கள்.”

இது எதுவும் தெரியாமல் தாக்கப்பட்தாக கூறப்பட்ட இரண்டு டாக்டர்களும் சுகமாக உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். இலேசாக இருண்டிருந்த வானம் எதிர்பாராத விதமாக பலத்த மழையை பொழிவிக்கிறது. எரிந்த டயர்களின் எச்சக்கரிகள் மழை நீரினூடு கழுவப்பட்டு கடலினை அடைகிறது.

(தினமுரசு வாரமலரில் காத்தநகர் முகைதீன்சாலி எழுதி பிரசுரமான சிறுகதை இன்போ வாசகர்களுக்காக)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s