மனிதம்
Posted by Kattankudi Web Community (KWC) on 22/01/2011
-காத்தநகர் முகைதீன்சாலி-
ஏன், எப்படி, என்று எதையுமே அவன் யோசிப்ப தில்லை. இந்த உலகம், உலகத்தில் நடக்கும் ஆயிரமாயிரம் விந்தைகள் எவை பற்றியுமே அவன் அலட்டிக் கொள்வதில்லை. சாதாரன மனிதனுக்கு இருக்க வேண்டிய அன்பு, பாசம், இன்பம், துன்பம் போன்ற எந்த உணர்வுகளுமே அவனைப் பாதிப்பதில்லை. மொத்தத்தில் அவன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு மிருகத்தனங்களை தன்னில் வளரவிட்டு அரக்கத்தனமாய் வாழும் ஒரு பிறவி. அவனுக்கு தேவைப் படுவதெல்லாம் பணம், போதைப்பொருள்.
போதைப்பொருள் கிடைத்தால் உறக்கத்தில் இவன் மனிதன், கிடைக்கவில்லையாயின் விழிப்பில் இவன் மிருகம். பணத்திற்காக எதையுமே செய்யத் துணிந்த இவனிடம் பயம் துளியும் கிடையாது.
அதிகாலையிலேயே நகரம் விழித்தக்கொண்டது. ஆங்காங்கே மக்கள் அவசரமாய் நடமாடத் தொடங்கவே இவன் இரவு ஏற்றிய போதையின் வீரம் குறைந்து போயிற்று. போதையில்தான் இவன் தூக்கம் கூட உயிர்வாழ்கிறது. விழித்துக் கொண்டான், சட்டைப்பையை தடவிப்பார்க்கிறான். அங்கு வெறுமை குடியிருக்கிறது. பணத்தேவை மனதை உறுத்த தூங்கிய மிருகம் துயில் விட்டெழுகிறது. உணர்வுகளற்ற வெறுமை மனதில் கோழை வீரம் குடிகொள்கிறது. சலனமில்லாமல் மின் கம்பத்தின் பின்னால் ஒழிந்து கொள்கிறான்.
ஏதோ அவசரத்தில் ஒரு கிராமவாசி வந்து கொண்டிருக்கிறார். இவன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். எவருமில்லை. இதுதான் சந்தாப்பம், கிராமவாசி முன்னே திடீரெனத் துள்ளிக்குதிக்கிறான். இவனைப் பார்த்ததும் கிராமவாசி மிரண்டு போகிறார். அந்த அதிகாலைப் பொழதிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டிற்று. அவருடைய நடுக்கமோ, பயமோ இவன் மனதை எதுவும் செய்து விடவில்லை. இவனுக்குத் தேவை போதை, அதற்குத் தேவை பணம்.
இடுப்பில் சொருகியிருந்த கத்தியை உருவிக் கண்ணிமைக்கும் நேரத்தில் அக்கிராம வாசியின் சட்டைப்பையை அறுத்துக் கொண்டு ஓடுகிறான். அதற்குள் இருந்த இரண்டாயிரம் ரூபாவும் அவனோடு போகிறது. கிராவாசி, பணத்தை பறிகொடுத்த கவலையில் தலையில் அடித்து அழறும் ஓசை இவன் காதில் இன்னிசையாய் ஒலித்திற்று.
*******************************************************************************************************
அதிகாலையெழுந்து, மனிதனாயிருந்து செய்ய வேண்டிய கடமை மறந்து போதைக்காய் போராட்டம் நடத்திப் போதையினால் உடல் நிரப்பி சாலையோரமாய் விழுந்து கிடக்கிறான். வாகனப் புகையும், வீதிப்புழுதியும் இவன் உடலை வருடிச்செல்கிறது.
எந்த உணர்ச்சிகளுமின்றி அவனுக்கே உரித்தான தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். வாகனத்தில் பயணித்த முதியவர் ஒருவர் தன் வெற்றிலை வாய் திறந்து காறி உமிழ்கிறார். அது இவன் முகத்தில் சிவப்பு முத்திரை குத்திற்று. அருகில் படுத்துக் கிடந்த சொறி நாய் அதை முகர்ந்து பார்த்து முகத்தை சுழித்து ஓடி மறைந்திற்று.
ஐம்பதுக்கும், நூறுக்கும் போதையேற்றி அவசரமாய் எழுந்திருக்கம் இவன் ஆயிரத்திற்கு மேல் ஏற்றியதால் இரண்டு நாட்களாய் அவ்விடத்திலேயே புரண்டு கிடக்கிறான். வானம் இருளடையத் தொடங்கிற்று. வீதியில் நடமாடியோர் அவசர அவசரமாக வேலைகளை முடித்துக்கொண்டு வீடுகளை நோக்கி நடக்கிறார்கள்.
பலத்த மழை, புயலுடன் சேர்ந்து பூமியை அடைகின்றது. இவனுக்குப் பக்கத்தில் படுத்துக்கிடந்த சொறி நாய் ஓடிப்போய் ஒரு கூரையின் கீழ் மண் தோண்டி சுருண்டுகொள்கிறது. பெரிதாய் முழங்கிய இடியோ புயலுடன் கூடிய மழையோ இவனை அசைக்கவில்லை. சோவெனப் பெய்த மழைநீரில் இவன் உடல் அழுக்குகளெல்லாம் கழுவப்படுகிறது. அவன் உள்ளம் மட்டும் அதே ஊத்தையுடன்.
மழையிரவு முடிந்து காலை வெளுக்கிறது. இவன் போதையும் கூட. கண் விழிக்கிறான், சுற்றும் முற்றும் பார்க்கிறான். சட்டைப்பையை தடவுகிறான். வெறுமை குடியிருக்கிறது. மிருகம் விழித்துக்கொள்கிறது. பணத்திற்கு என்னசெய்வதென்ற சிந்தனை மூளையைக் குடைய வீதியை வெறிக்கிறான். அங்கே மழையில் மலர்ந்த சிவந்த மலராய் ஒரு சின்ன மழலை வீதியின் குறுக்காய் ஓடி வருகிறது. அதை நோக்கி மின்னல் வேகத்தில் ஒரு வாகனம். வீதியில் பதறிக்கொண்டு கூச்சலிட்டபடி பலபேர். யாருக்கும் குழந்தையைக் காப்பாற்றும் தைரியமில்லை. குழந்தையின் பெற்றோருக்கு கூட. எவற்றையும் சிந்திக்காத இவனுள் ஒரு மின்னல் வெடிப்பு. புயலாய் ஓடுகிறான். குழந்தையை சட்டெனப் பற்றி மறுமுனைக்கு ஓடுகிறான். ஒலியெழுப்பி வந்த வாகனம் ஓடி மறைந்திற்று.
குழந்தையின் பெற்றோர் அழுத கண்களுடன் ஓடி வருகிறார்கள். வந்த வேகத்தில் கட்டியணைக்கிறார்கள் குழந்தையை அல்ல இவனை. இவன் மிரண்டு போகிறான். உள்ளத்தில் ஏதோ ஊசியாய் குத்திற்று. முதன்முறையாக இவன் நெஞ்சு கனத்திற்று. வீதியில் நின்ற எல்லோரும் இவனை வாயார புகழ்கின்றனர்.
‘தம்பி எங்கட குழந்தைய காப்பாத்திட்டீங்க, இந்த உதவிய நாங்க உசிருள்ள வரைக்கும் மறக்க மாட்டம். இந்தாங்க… இந்தச் சின்ன தொகைய எங்க அன்பளிப்பா வெச்சிக்கங்க.’
இவன் கையில் திணித்துவிட்டு அவர்கள் குழந்தையுடன் போகின்றனர். இவன் திக்பிரமை பிடித்தவன் போல் திணறி நிற்கிறான். இதற்கு மேலும் கனத்தினை தாங்க முடியாது, இதயம் கவலையை கண்ணீராய் வெளியேற்றிற்று. கையை விரித்துப் பார்க்கிறான். பத்தாயிரம் ரூபாய் பணம். பணத்தை கண்டவுடன் எப்போதும் இவனுள் எழுந்து நிற்கும் மிருகம் இன்று இறந்து கிடப்பதாய் உணருகின்றான்.
என்றுமே இவனில் எழாத ஏன்? எதற்கு? என்ற உணர்வுகள் இவனில் எழ ஆரம்பிக்கின்றது. மனித உயிருக்கு இவ்வளவு மதிப்பா? என்ற சிந்தனை இவனை உருட்டுகிறது. ஒரு உயிரைக் காப்பாற்றியதற்கே இவ்வளவு சன்மானமும் பாராட்டதல்களுமென்றால் நான் அழித்த உயிர்களின் பெறுமதி எவ்வளவு பெரியது என்பதை இவன் உணர்ந்தபோது முதன் முறையாக மனிதனுக்கே உரித்தான ‘மனிதம்’ ‘கோ’ வென்ற சத்தத்துடன் அழுகையாக வெளியாயிற்று. முடியுமட்டும் அழுகின்றான், அழுது கொண்டே நடக்கின்றான்.
மனிதர்கள் இவனை அதிசயமாய் நோக்குகின்றனர். எதையும் பொருட்படுத்தாமல் அழுகையுடன் கால் போன போக்கில் நடக்கின்றான். என்றுமே அவனில் எழாத உணர்வு இப்போது எழுகின்றது. அந்தக் குழந்தையை பாதுகாக்க அதன் பெற்றோர் இருந்ததுபோல் என்னைக் காப்பாற்ற என் பெற்றோர் இருக்கவில்லையே? என்ற ஏக்கம் இவனுள் எழுந்தபோது உள்ளம் உருகிற்று.
கையில் பணத்துடன் மனதில் வெறுமையுடன் எங்கே போகின்றோம் என்று தெரியாமலேயே நடந்த இவன் மனதில், அன்றொரு நாள் தான் போதைக்காய்ப் பணம் கொள்ளையடித்த அந்த ‘உயிர்களை உபசரிப்போம்’ அநாதைகளின் காப்பகம் நினைவிற்கு வருகிறது. இப்போது இவனது கால்கள் அந்தக் காப்பகத்தை நோக்கியே நடக்கிறது. இனி இவன் தன்னைப் போல் எந்த அனாதை குழந்தையும் சீரழியக்கூடாது என்ற வைராக்கியத்துடன் ‘உயிர்களை உபசரிக்க’த் தன்னையே அர்ப்பணிக்கத் துணிந்தவனாகக் காப்பகத்தை நோக்கி தன் நடையை விரைவு படுத்துகின்றான்.







KMFM said
Good. Thank you brother.