பாவ மன்னிப்பு (சிறுகதை)
Posted by Kattankudi Web Community (KWC) on 15/12/2010
-காத்தான்குடி நசீலா-
ஹமீது நாநா இந்தமுறையும் ஹஜ்ஜுக்குப் போறாராம். ஹமீது நாநாவின் உறவுமுறை தெரிந்தவர்களிடையே பேசப்பட்ட சாதாரண விடயம் அது. அருந்தி வருந்தி கஷ்டப்பட்டு உழைத்து காசு சேர்த்து, பயணம் போக வெளிக்கிட்டால் அந்தப் பயணத்திற்குரிய பெறுமதியோடு பேச்சும் இருந்திருக்கும்.
ஆனால் ஹமீது நாநாவுக்கு ஏதோ அடுத்த ஊருக்கு போய்வருவது போலத்தான். அவரிடம் இருக்கும் சொத்திற்கும், சுகத்திற்கும் வருடத்திற்கு ஒரு தரம் ஹஜ்ஜுக்குப் போய்வரலாம். கஷ்டப்பட்டவர்கிட்டத்தான் காசு பணம் சேர்ரதுக்கும் கஷ்டப்படும். ஹமீது நாநா போன்றவங்க ஆடி ஓடியெல்லாம் உழைக்கத் தேவையில்லை. காலையில் எழும்பி உக்கார்ந்தா பல்துலக்க முதல் கையில இருக்கிற ஹேன் போன் மூலமாகவே ஆயிரக்கணக்கில் யாவாரம் பார்த்திடுவாங்க. அது ஹலாலா ஹராமா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. அது அவங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தான் வெளிச்சம். பணம் பணத்தோடுதான் சேரனும்.
தான் எத்தனையாவது தரம் ஹஜ்ஜுக்குப் போறனென்பதை எண்ணிப் பார்த்துச் சொல்லும் நிலைதான் ஹமீது நாநாவுக்கு. தொழில்ல கொஞ்சம் டல்லா…? அங்க போறாப்போல போய் ஒரு யாவாரமும் பார்த்துவிட நிய்யத்து பண்ணிவிடுவார். உடம்புக்கு ஏதும் சுகக்குறைவா… உடனே மௌத்துடைய பயம் வந்துவிடும் அவருக்கு…
‘ஏண்ட அல்லா! உண்ட பாக்கியமான ஸ்தலத்திற்கு வந்து சேர்ந்திடுவன் நாயனே.! என்ட உடம்ப நீதான் தேத்தனும்’ என்று நிய்யத்து பண்ணி தான தருமமும் செய்து பயணமும் வெளிக்கிட்டு விடுவார். அல்லாஹ் கொடுத்தும் சோதிப்பானாம் எடுத்தும் சோதிப்பானாம் பணம் சேர்ராப் போல ஹமீது நாநாவச்சுத்தி ஏற்படும் பிரச்சினைகளுக்கும் குறைச்சலில்லை.
கோடியாய் கொட்டிக் கொடுத்து கொழும்பில் எடுத்த புது பங்களா சாஹிரா பானுக்கு அதான் ஹமீது நாநாட வீட்டுக்காரிக்கு அறவே பிடிக்காமல் போய்விட்டது. ‘மகளுக்குத்தானே வாங்கிப்போட்டேன் உனக்குப் பிடிக்கல்லேன்னா நீ இங்கேயே இரு, அவளக் கட்டிக் கொடுக்கிற நேரம் மத்ததப்பத்தி யோசிக்கலாம்’ என்று சொல்லி அந்தப் பிரச்சினையை அப்போதைக்கு முடித்தாலும் அதைத் தொட்டு அடிக்கடி வீட்டில் ஏற்படும் மனஸ்தாபத்தால் அவருக்கு மண்டை காய்ந்து போவதென்னவோ உண்மைதான். கோடியில வாங்கிப்போட்டது கூடப்பிடிக்கல்லேன்னு சொல்ர சம்சாரமெண்டா வீட்டில என்ன சம்பவம்தான் எளிமையா இருக்கு மென்று நினைக்கிறீங்க.
காலைச்சாப்பாட்டை முடித்துக்கொண்ட ஹமீது நாநா புருஷனுக்காக மாம்பழம் சீவிக்கொண்டிருந்த சாஹிராபானுவை நிமிர்ந்து பார்த்தார். கண்கள் கொள்ள வில்லையோ என்னவோ ஒருதரம் கண்களை மூடித்திறந்து கொண்டார்.
இருபது வருடத்துக்கு முதல் கொடிப்பட்டுப் போல் என்று சொல்வார்களே அப்படியொரு உடல்வாகு சாஹிராபானுக்கு. பிந்திய இருபது வருடத்திற்குள்தான் இப்படியோரு மாயாஜாலம்… உண்மைதான் கழுத்து இடுப்பெல்லாம் எங்கு போனதென்றே தெரியவில்லை. மொத்தமாய் ஒரு உருவம்தன் அவர் கண்ணுக்குத் தெரிந்தது. கையை நீட்டி ஒரு மாம்பழத்துண்டை எடுத்தவரை பதறித்தடுத்த சாஹிரா…! ‘என்ன பச்சப்புள்ளயாட்டம் அவசரப்பர்ரீங்க. ரெண்டு மூணு சாதியில வாங்கின மாம்பழம். எது நல்ல இனிப்பெண்டு நான் திண்டு பாத்திட்டு தருவன்தானே’.
அவள் சொன்னதைக் கேட்ட ஹமீது நாநாவின் நெச்சில் சுருக்கென்ற ஒருவலி. இதுதான் இந்த கவனிப்பும் கரிசினையும்தான் இப்போது அவர் மனசாட்சியை அடிக்கடி பிராண்டும் விடயமாக மாறி வருகின்றது.
புருஷனுக்கு வயதாகிவிட்டது, நாம் கூடுதலாக அக்கறை காட்ட வேண்டுமென்று அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் வயதாகியும் அவர் புரியும் வாலிப விளையாட்டுக்களை கீறி வலிக்க வைக்கும் ஆயுதமாகி விட்டது. டிப்டாப்பாக உடுத்தி வெளிக்கிட்ட ஹமீது நாநாவுக்கு நாற்பத்தெட்டு வயது முடியப்போகின்ற தென்று சொன்னால் சத்தியமாக யாருமே நம்ப மாட்டார்கள்.
பகல் சாப்பாட்டுக்குரிய நேரம் மேசையை சுற்றியிருந்த நண்பர்கள் அனைவரும் பாரின் வரை போய் பிஸினஸ் பார்க்கும் பணக்கார நபர்கள். நடுத்தர வயது நாகரிகமான தோற்றம்…. பாரினில் பார்த்த பிகரிலிருந்து நேற்று நடந்த தாக்குதல் வரை அவர்கள் பேச்சில் அலசப்பட்டது.
‘என்ன பேசி என்ன மச்சான் பிரயோசனம், எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் இந்தா கடல் போங்கி வந்து ரெண்டு மூணு வருடமாச்சி இப்ப சனம் அதக்கூட மறந்திடிச்சி. அல்லாஹ்… அல்லாஹ்… எண்டு இருந்த மக்கள் இப்ப நப்ஸு நப்ஸூ எண்டு அலையிராங்க.’
‘ஓசி’யில சுகம் அனுபவிச்சுப் பழகி இப்ப உழைக்கக் கூட உடம்பு கூசுது. யாரு என்ன தருவாங்கெண்டே அலையிராங்க. அப்படிப்பார்த்தா மறதியும் அல்லாஹ் தந்த பாக்கியம் எண்டுதான் சொல்லனும். இல்லையா?’
‘அதுசரி அழிவுகள் வரக்க அகதிகள் ஏற்பர்ரதும்… அரசாங்க கொடுப்பனவுகள்ள அதிகாரிகள் கை வைக்கிறதும்… போர்ர பிச்சைய கொள்ளயடிக்கிற மாதிரி… நாம பண்ர பிஸ்னஸ் பரவால்ல மச்சான்; நாம தேடிற சொத்து சுகமெல்லாம் நம்மட சந்ததியும் அனுபவிக்கக் கூடியளவு கொஞ்சம் ஹலாலா இருக்கோனுமில்லியா…’
ஓரு நண்பன் ஆதங்கப்பட்டதற்கு கொஞ்சம் சாலிஹுத்தனமும் நேர்மையும் கொண்ட கபூர் பௌஸ் சொன்ன பதிலோடேயே அவர்கள் சம்பாஷனையும் முடிவுக்கு வந்தது. ஒவ்வொருவராக விடை பெற்றுக்கொள்ள கடைசியாக மிஞ்சியது ஹமீது நாநாவும் அவரது நெருங்கிய நண்பரான அஸன் ஹாஜியாரும்தான். அவர்கள் இருவருடைய கடையும் ஆபிஸூம் பக்கத்து பக்கத்திலேயே இருந்த படியால் பொடி நடையாகவே இருவருக்குள்ளும் இருவரும் வெளிக்கிட்டார்கள். ஒருவருக்கொருவர் அந்தரங்களை பகிர்ந்து கொள்ளக் கூடியளவு நட்பு இருந்தது. பிஸினஸைத் தாண்டி குடும்ப ரீதியாகவும் ஆழமாக அந்த நட்பு வியாபித்திருந்தது.
அஸன் ஹாஜியாரின் ஆபிஸ் அறையிலே வந்தமர்ந்து கொண்ட இருவருக்குள்ளும் சில நிமிடத்துளிகள் மௌனம். இரண்டு கிழமை மட்டில் துபாயிலே இருந்து பிஸ்னஸ் பார்த்து விட்டு வந்த நண்பனின் முகத்தில் பழையகளையைத் தேடிய ஹமீது நானா அஸன் ஹாஜியாரின் முகத்தில் தென்படும் இறுக்கம் குறையலாம் என்ற நோக்கத்தில்:
‘பாத்திமா டீச்சர் பிறகு கோல் ஏதும் எடுக்கல்லயா மச்சான்’ என்று இயல்பாகவே கேட்டார். ‘இல்ல’ காட்டமாகவே அஸன் ஹாஜியாரிடமிருந்து பதில் வந்தது மட்டுமன்றி இதற்கு மேல் அதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம் என்பது போல வேலைகளில் அவர் மூழ்கி விட மேற்கொண்டு எதுவுமே பேசத் தோன்றாமல் ஹமீது நாநா விடை பெற்றுக் கொண்டார். பாத்திமா டீச்சரைப் பற்றிய முழுக்கதையுமே ஹமீது நாநாவுக்குத் தெரியும். அதனால் அவரது மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. சலனம் சபலம் இரண்டுக்குமே பணத்தால் தீனி போட்டுக் கொண்டிருப்பவர்தான் ஹமீது நாநாவும். இன்றுவரைக்கும் தன்னைத் திருத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. வீட்டிற்குப் போய் மனைவி குழந்தைகளின் முகம் பார்த்தாரென்றால் உருகிக் கரைந்திடுவார். மனசாட்சியின் பிராண்டல் தாங்க முடியாமல் தௌபாவிலும் மூழ்கிடுவார். மனிதப்பலவீனங்கள் விடாமல் அவரைத் துரத்திக் கொண்டேயிருந்தது. என்னதான் இருந்தாலும் மனைவியென்னும் ஸ்தானத்திற்கு ஈடாக தன்னை நம்பிக் கொண்டிருக்கும் ஓரு உறவை மாத்திரம் இதுவரைக்கும் அவர் தேடிக் கொண்ட தேயில்லை. பணத்தேவை இருப்பவர்கள் பலவீனத்திற்கு மருந்து தருகின்றார்கள். ஆனால் மனசென்ற ஒன்றைத் தொட்டு நம்பிக்கையைக் கொடுத்து பின்வாங்குவ தெல்லாம் அவரைப் பொறுத்தவரைக்கும் கோழைத்தனம். அதைச் செய்ய எப்போதும் அவர் தயாரானதில்லை.
பாத்திமா டீச்சர் அஸன் ஹாஜியாரின் பால்ய சினேகிதனின் தங்கை. ஓருபெண் குழந்தையுடன் புருஷனைப் பறி கொடுத்து இளம் வயதிலேயே விதவையானவள். எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்ட நண்பர்கள் பழைய நட்பை புதுப்பித்துக் கொண்ட போது… பாத்திமா டீச்சரின் அழகு, அறிவு, அடக்கம் என்பன அஸன் ஹாஜியாரின் மனதில் நீங்காத இடத்தைப்பிடித்துக் கொண்டது.
மனைவியானவள் உடல் ஆரோக்கியத்தை இழக்கும் போது புருஷனின் எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றும் வலிமையை இழக்கும் போது வசதியும் உடல் ஆரோக்கியமும் உள்ள ஆண்மகன் இரண்டாம் திருமணம் முடிப்பது ஹலால் என்பது எம் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற வழிமுறையில் ஒன்று. பெண் சுகம் தேடி நிலை தடுமாறி நெறி பிரண்டு வாழ்வதைவிட இந்த வழி காட்டலை நேர்மையாகப் பின்பற்றும் போது அதில் எவ்வளவோ பரக்கத்துகள் இருக்கத்தான் செய்கின்றது.
அஸன் ஹாஜியார் பாத்திமா டீச்சரை இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்த போது முதன் முதலில் அவரை ஆரத்தழுவி வாழ்த்துச் சொன்னது ஹமீது நாநாதான். சென்ற முறை அஸன் ஹாஜியார் மக்கா செல்ல வெளிக்கிட்ட போது கண்கலங்க அவரைப் பயனம் அனுப்பி வைத்தார்.
‘இன்ஷா அல்லாஹ் எல்லாம் ஹயராக முடியும் மச்சான் எல்லாத்தையும் அல்லாஹ்வுடைய பொறுப்பில விட்டுட்டு வா. ஓரு ஏழைத்தாய்க்கும் மகளுக்கும் உனக்கு அல்லாஹ் தந்த பரக்கத்துகள்ள இடம் கொடுக்கப் போறே. ரியலி கிரேட்டா. இந்த தைரியமும் துணிச்சலும் உன்ன விட வயசில பெரியவனான எனக்குக் கூட இன்னும் வரல்லயே. இந்த அசிங்கம் பிடிச்ச பழக்கத்தை யெல்லாம் விட்டுப்போட்டு மஹ்ஸருக்கான வாழ்க்கையை நானும் வாழனும் மச்சான். எனக்காகவும் அந்தப்புனிதமான மண்ணில் வைச்சு துஆ கேட்டுக்கடா’.
ஹமீது நாநா நாத்தழுதக்க உள்ளத்தால் உருகி கூறிய போது அஸன் ஹாஜியாரும் கூடச் சேர்ந்து கண்கலங்கி விட்டார்.
இருந்தும் என்ன மக்காவிலிருந்து வந்த அஸன் ஹாஜியார் சொற்ப நாளைக்குள்ளேயே முழுவதுமாக மாறிப் போனார். மெல்ல மெல்ல பாத்திமா டீச்சரிடமிருந்த தொடர்புகளை யெல்லாம் விலக்கிக் கொண்டவர் பழையபடி பொரின் ட்ரிப் பிஸ்னஸென்று ஓடத்தொடங்கினார். ஏதோ உலக மகா பிஸி மேனாக தன்னைக்காட்டி கொண்டு ஹமீது நாநாவை விட்டும் கூட தூரமே நின்றார். பாத்திமா டீச்சரைப் பற்றி ஹமீது நானாவே வலிந்து ஏதாவது கேட்டால் கூட இப்படித்தான் ஒத்தையாக பதில் சொல்லி மௌனமாகி விடுவார். பணக்காரன் என்ற இமேஜுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும் குடும்பத்தினரின் திருப்தியையும் இழப்பது அத்தனை சுலபமல்ல என்பது ஹமீது நாநாவுக்குப் புரிந்தது.
நண்பனின் கூடவே இருந்து நல்லது கெட்டதை பிரிந்துப் பார்த்ததில் தான் எந்தளவு சரியானவன் என்ற கேள்விதான் அவர் மனதில் ஆழமாக எழுந்தது. பாத்திமா டீச்சருக்கு நண்பன் கொடுத்த வாக்குறுதி நம்பிக்கை கொட்டியே அன்பு எல்லாமே தெரிந்திருந்தும் ஓரு வார்த்தை கூடகேள்வி கேட்க முடியாமல் மௌனித்துப் போனார்.
‘நீ யோக்கியமானவனா…’என்று நண்பன் திருப்பிக்கேட்டு விட்டால் நிச்சயமாக பதில் சொல்ல அவரால் முடியாது. மனச்சாட்சியின் முன் மானசீகமாக தலைகுனிந்த போதுதான் தப்பும் தவறுமான தன் வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்தார். அந்த நாட்களில் ஓரு பொழுது பாத்திமா டீச்சரின் தொலைபேசி அழைப்பிற்கும் ஹமீது நாநா முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அஸன் ஹாஜியாரின் மௌனம் அவள் மென்மையான உணர்வுகளை எந்தளவு காயப்படுத்தியிருக்கின்றதை விபரித்தப் போது அங்கும் பதில் பேச அவரால் முடியவில்லை. ஓரு துணையின் மௌத்தின் மூலம் அடைந்த வேதனைகள் போதும்.. இன்னுமொரு முறை ஏமாற தன்னால் முடியாதென்று கூறி தன் மூச்சுள்ள வரைக்கும் அஸன் ஹாஜியாருக்காக தான் காத்திருக்கப் போவதாகவும் கூறி தொலைபேசியை அவள் வைத்த போது இரண்டு துளிக்கண்ணீர் அவர் கண்களிலும் தேங்கி நின்றது.
ஏழைகளின் உள்ளத்தையும் உணர்வுகளையும் சிதைப்பது எவ்வளவு கொடுமையானது என்பதைப் புரிந்து கொண்டார். பாத்திமா டீச்சரின் அழுகையுடனான குரல் அடிக்கடி காதிற்குள் ஒலித்து, மறக்க நினைத்தாலும் அவர் மனசாட்சியை தூங்க விடாமல் எழுப்பிக் கொண்டேயிருந்தது.
அதன் பிறகு ஓரு நாளல்ல இரண்டு நாளல்ல பலநாள் போராட்டம். யுத்த களத்தில் போராடிக் கூட ஓரு முடிவு கண்டு விடலாம். ஆனால் மனசாட்சியுடன் போராடுவ தென்பது அத்தனை சுலபமானதல்லவே. மனசு ஓரளவு தெளிந்த பின் தீர்மானமாக வெளிக்கிட்டார். காரின் வேகமாக ஓட்டத்திலும் அவர் மனதிற்கு சட்டெனப் பிடித்துப் போன ஓரு ஊரில் தரித்துக் கொண்டார். ஊரின் உள் நுழைந்து சுற்றிப் பார்த்ததில் அமைதியான இடத்தில் எளிமையாக நின்றிருந்த அந்தப்பள்ளி வாயல்… தான் எண்ணி வந்த கருமத்திற்கு தோதான இடம்தான் என்று முடிவெடுத்து பள்ளியினுள் சென்று உட்காந்து கொண்டார்.
இரவின் தழுவலில் அங்குமிங்கும் தென்பட்ட ஒன்றிரண்டு பேரும் காணாமல் போக பள்ளிவாயல் நிஸப்தமாகியது. நிமிட முள் நகர்ந்து நேரம் நடுநிசியைத் தாண்டியதும் ஹமீது நாநா மெல்ல எழுந்து கொண்டார். மனிதர்கள் யாரும் இல்லாவிட்டால் என்ன அல்லாஹ் தன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணமே உடம்பை சிலிர்க்க வைக்க கையில் சாட்டையை எடுத்துக் கொண்டார்.
ஓன்று, இரண்டு, மூன்று, மனம் எண்ணத் தொடங்க கைகள் இயங்கத்தொடங்கியது. ஓவ்வொரு அடியும் அவர் வெற்றுடம்பில விழ… விழ… வெள்ளை மேனியில் சிவப்புக்கோடுகளாக எழத் தொடங்கியது. வாழ்க்கையில் தான் செய்த பாவங்களின் வலிமையை விட இந்த வலியொன்றும் அப்போது அவருக்கு பெரிதாகத் தோன்ற வில்லை. ஹறாமென்று தெரிந்தும் இந்த துனியாவுக்காக ஹமீது நாநா சுமந்த அழுக்குகளெல்லாம் மூச்சோடு கலந்து வெளியேறுவதைப் போலிருந்தது.
ஏழை ஒருத்தன் திருந்தினால் அவன் குடும்பம் மட்டும்தான் நேர்வழி பெறும். பணக்காரன் ஒருத்தன் திருந்தினால் அவன் வாழும் சமுதாயமே பலனடையும். அல்லாஹுவை விட தீர்ப்பாளி யார்? ஹமீது நாநா திருந்த வேண்டுமென்று அல்லாஹ் தீர்ப்பெழுதி விட்டான்.
ஹமீது நாநா இந்த முறையும் ஹஜ்ஜூக்குப் போறாராம். தெரிந்தவர்களிடையே சாதாரணமாக பேசப்பட்ட விடயமாக அது இருந்தாலும் இன்ஷா இல்லாஹ் அவர் மக்காவிலிருந்து திரும்பி வரும் போது பாவங்கள் தொலைத்த அன்று பிறந்த பாலகனைப் போல் வருவார். தன் நண்பனைக் கேள்வி கேட்பார். ஏழை யொருத்திக்கும் வாழ்வு கொடுப்பார். காரில் வீடுதிரும்பிக் கொண்டிருந்த ஹமீது நாநாவின் உடம்பில் வலி இருந்தது, ஆனால் மனசில் இல்லை.
- முற்றும் -







kkymovlavi said
நல்ல படிப்பினை தரும் இச்சிறு கதைக்கு என் மனம் திறந்த வாழ்த்துக்கள்.தொடராக எழுதவும் அருமை காத்தான்குடி நசீலா
mohammed niyas said
நல்ல படிப்பினைக்கதை இன்னுமின்னும் இம்மாதிரியான கதைகள் எழுத வாழ்த்துக்கள்
fabulous from usa said
best of luck mom keep it up…
remaamm said
எழுத்தாலர்கள் என்பதட்காக இஸ்லாமிய ஷரிஅத்தில் இல்லாத விடயங்களை பகிரங்கபடுத்தி பிரபல்ய படுத்த வைப்பது ஈமான் உள்ள யாறாலும் ஜீரனிக்க முடியாதது. கதை யாசிரியர் தன்கதா பாத்திரத்தில் வரும் ஹமீது நானா தனது பாவங்களுக்காக தானே தன்னை கத்தடி அல்லது சவுக்கடி கொடுத்து தனக்கு தண்டனையை நிறை வேற்றி கொள்ளுவது போன்ற விடயங்களுக்கு இஸ்லாம்ய ஷரிஅத்தில் எங்கிருந்து ஆதாரத்தை பெற்றார்……. தனது கட்பனையை இஸ்லாமிய ஷரிஅத்தாக முயல்வது எவ்வளவு பாரதூரமான விடயம்………. இந்த கதையை சமூகத்தில் பிரபல்யபடுத்துவதன் மூலம் செய்த பாவத்துக்கு நாங்களே எங்களுக்கு தண்டனை கொடுது கொண்டால் சரி என்பதல்லவா விளம்பரம் ஆகும். எனவே
கட்பனைகாகவும் தனது கட்பனைகளை இஸ்லாமிய ஷரிஅத் உடன் ஒப்பிட வேண்டாமென எழுத்தாலரை தாள்மையாக வேண்டிக்கொள்வதோடு காதான்குடி இன்போ இப்படிபட்ட ஆக்கங்களை பிரசுரிக்கு முன் எதட்கும் ஒரு மார்க அரிஞரின் ஆலோசனைகளை பெருவது சால சிறந்தது என்பது எனது தாள்மையான கருத்து…..
அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்
zana said
வாழ்த்துக்கள்…………………..நசீலா…….
abufarzeen said
manithanin vaalkaiku padipinai thara koodiya story.quran hadees in oodaha oruvar second thirumanam saivathai koori irukinraar.but oruvar saihinra paavankaluku oruvar sollikoduka matravar aamin sollamal,thannai thaan thandithu kollamal, paavam saithavar thanimail irunthu Allahvidam ketpathuthan quran hathees kaatithantha vali murai enpathai intha story oodaha thelivu paduthu vathu mukiyamaahum.enava inimal veli idum story halil ithai kavanathil edukumaru sahothari avarhalai kettu kolhgiran.
pothumahan said
சமூகத்தில் உள்ள யதார்த்த நிலைமையை கண்முன் கொண்டுவந்து சிந்திக்க வைக்கும் சிறுகதை. கதாசிரியரின் சொல் வளம் சிறப்பாக உள்ளது.
ஆனால்
பாவமண்ணிப்பு என்ற விடயத்தில் இஸ்லாத்தின் சட்டத்திற்கு முரணாக கதாபாத்திரத்தின் நடைமுறை
காட்டப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளகூடியதல்ல. இவ்வாறான நடவடிக்கை இஸ்லாத்தில் கண்டிக்கப் பட்டுள்ளது.
பாவமண்ணிப்பு என்ற விடயம் மிகவும் தெளிவாக இஸ்லாமிய சட்டத்தில் சொல்லபட்டிருக்கின்ற வேளை அந்நிய மதங்களில் உள்ளது போல் தன்னை தானே வருத்தி பாவமண்ணிப்பு கேட்கின்ற நடைமுறை இஸ்லாத்தில் இல்லை இதுபோன்ற நடைமுறை அநேகமாக முஸ்லிம்கள் மத்தியில் நடைமுறையிலும் இல்லை. யதார்த்த ரீதியான
கதைகளத்தில் இது மிகை படுத்த பட்ட ஒன்றாகவே தென்படுகின்றது. வீரகேசரி போன்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இச்சிறுகதை மாற்று மத அன்பர்களுக்கு மத்தியிலும் இஸ்லாம் பற்றிய பிழையான தகவல் சென்றடைய
வழிவகுத்திருக்கலாம். எனவே கதாசிரியர் எதிர்காலத்தில் இவ்வாறான இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படும்
விடயங்களில் கூடிய கவனம் செலுத்துவது சிறந்தது.