ஒருவர் மற்றவரை அங்கீகரிப்பதுதான் தஃவாவின் அடிப்படை
Posted by Kattankudi Web Community (KWC) on 13/12/2010
கலாநிதி எம்.இஸட்.எம். மல்ஹர்தீன்
தலைவர் கணிதவியல்துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம்
கலாநிதி எம்.இஸட்.எம். மல்ஹர்தீன் அவர்கள் களுத்துறையைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1974ம் ஆண்டு கணிதவியல் துறையில் பட்டம் பெற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக முதல் நியமனம் பெற்றார். 1983ம் ஆண்டு வரை அங்கு கடமையாற்றிய அவர் ஸ்கொட்லாந்து, எடின்பரோ நகரிலுள்ள ஹெரியட்-வொட் (Heriot-Watt) பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கலாநிதிப் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு Stability of Non-conservative Dynamical Systems என்பதாகும்.
1983ம் ஆண்டு ஜோர்தான், யர்மூக் பல்கலைக்கழத்தில் உதவிப் பேராசிரியராக இணைந்து ஒன்பது வருடங்கள் கடமையாற்றினார். 1993ம் ஆண்டு மொரட் டுவைப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக நியமனம் பெற் றார். தற்போது மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறைத் தலைவராகப் பணியாற்றுகின்றார். இஸ்லாமிய தஃவாத் துறையில் அவருக்கு மிகுந்த ஈடுபாடும் அனுபவமும் இருக்கிறது. அவருடனான நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹுதீன், ஏ.எல்.எம். ரிஸ்வி
* உங்களுக்கும் இஸ்லாமிய தஃவா பணிக்கும் இடையிலான தொடர்பு பற்றிச் சொல்ல முடியுமா?
கொழும்பை அடுத்து தப்லீக் பணிகள் ஆரம்பித்த ஊர் களுத்துறைதான். எனது தந்தைக்கு தப்லீக் ஜமா அத்தில் நல்ல ஈடுபாடு இருந்தது. 1960க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வருடா வருடம் களுத்துறையில் தான் அகில-இலங்கை இஜ்திமாக்கள் நடைபெற்று வந்தன. சின்ன வயதிலேயே எனக்குத் தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பேராதனையில் படிக்கும் போதும் மார்க்க விடயங்களில் ஈடுபட்டேன். யாழ்ப்பாணத்திலும் அதற்கான அதிக வாய்ப்புக்கள் கிடைத்தன. எடின்பரோவிலும் மார்க்க விடயங்களில் அதிகமாக ஈடுபட முடிந்தது. ஏனெனில் நான் தங்கியிருந்தது ஒரு பள்ளிவாயலில் ஆகும். ஜோர்தானிலும் நல்ல தொரு இஸ்லாமிய சூழல் எனக்குக்கிடைத்தது. அங்கு அதிகமாக இஃவான்கள் இருந்தார்கள். அவர்களது வகுப்புக்களிலே நான் கலந்துகொண்டேன். மேலும் ஸலப் அறிஞர்களது வகுப்புகளிலும் கலந்துகொண்டேன்.
* இலங்கையின் தஃவா களம் பற்றி உங்களது அவதானம்…
தஃவா களத்தின் இன்றைய நிலை பற்றிச் சொல்வதாக இருந்தால் கடந்த காலங்களை விட அனைவருக்கும் மத்தியில் புரிந்துணர்வு அதிகரித்தி ருப்பதைக் காணமுடிகிறது. ஜாமிஆ நளீமிய்யா இதில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளது. ஒருவர் மற்ற வரை அங்கீகரிப்பதுதான் தஃவாவிற்கு அடிப்படையானது. அந்த நிலை தற்போது வளர்ந்து வருவதாக எனக்குத்தெரிகிறது. ஒருவர் எந்த தஃவா அமைப்புடனும் இருக்கலாம். ஆனால், மற்றதை அங்கீகரிக்க வேண்டும். அதனை மதிக்க வேண்டும். ஒரு வரை ஒருவர் குறைவாகப் பார்க்கக்கூடாது. ஒருவர் தனக்கு எது நல்லது, சிறந்தது எனக் கருதுகிறாரோ அதில் அவர் மனத்தூய்மையுடனும் தியாகத்துடனும் கட்டுக் கோப்புடனும் ஈடுபட வேண்டும்.
* முஸ்லிம்களின் கல்வி மொழி மாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கற்கை மொழி -மீடியம் என்பது ஒரு பெரிய பிரச்சினையல்ல என்பது தான் எனது சொந்த அபிப்பிராயம். எந்தப் பாஷையில் பேசுவது என்பதை விட எதனைப் பேசுவது என்பது தான் முக்கியமானது. எந்த மொழி மூலம் கல்வி கற்கிறோம் என்பதை விட எந்த விடயங்களை, எந்த நோக்கத்திற்காக, எப்படிக் கற்கிறோம் என்பதுதான் முக்கியமானது. எனவே, முஸ்லிம் களின் கற்கை மொழி எதுவாக இருக்க வேண்டும்? – தமிழா? சிங்களமா? ஆங்கிலமா? என்பது அவ்வளவு பெரிதாக நாம் அலட்டிக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வியல்ல. ஓரு மாணவரது வீட்டுச் சூழல், மொழி ஆற்றல், பாடசாலை வசதிகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து மாணவரும், பெற்றோரும், ஆசிரியரும் அவ்வப்போது இணைந்து, ஆலோசித்து அதனைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
கற்கை மொழி சம்பந்தமான எமது சமூகத்தின் தீர்மானம், எதிர்காலத்தில் பல்கலைக்கழக அனுமதி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனச் சிலர் நினைக்கலாம். இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இக்கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இஸ்லாம், கல்வி கற்பதை ஆண், பெண் இருபாலாருக்கும் ஓரு மார்க்கக் கடமையாக ஆக்கியுள்ளது. தொழில் வாய்ப்பு போன்ற லோகாயத நோக்கங்களுக்காக மட்டும் கல்வி கற்பதை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. மாறாக, ஒருவரது கல்வியறிவு அவரிடம் நற்பண்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்குப் பிரயோசனம் அளிப்பதாக அமைய வேண்டும்.
இறுதியாக அது ஏகத்துவத்தின் பக்கம் அவனுக்கு வழிகாட்ட வேண்டும். இதனைப் பொறுத்துத்தான் நாம் கற்ற கல்வி எமக்கோ, எமது சமூகத்திற்கோ பிரயோசனமுள்ளதாக அமையும். இம்மை, மறுமை ஆகிய ஈருலகி லும் அவரது வெற்றிக்கும் ஈடேற்றத்துக்கும் காரணமாக அமையும். இதற்கு மாற்றமாக, லோகாயத நோக்கங்களையும் சுய நலத்தையும் அடிப்படையாகக் கொண்ட கல்வி அநேகமாக அவரிடம் வீண் அச்சம், கவலை, விரக்தி, தாழ்வு மனப்பான்மை, தற்பெருமை போன்ற தீய விளைவுகளையே உண்டாக்கும்.
சமூகத்திலும் போட்டி, பொறாமை, குரோதம், அமைதியின்மை என்பவற்றையே ஏற்படுத்தும். இறை அருளை விட்டும் எம்மைத் தூரமாக்கும். எனவே, எம்மொழி மூலம் கல்வி கற்றாலும் பரவாயில்லை. அக்கல்வி மாணவர்களது ஒழுக்க மேம்பாட்டுக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைவதே எமது சமூகத்தின் எதிர்கால நலனுக்கு உத்தரவாதமாகும்.
* நீங்கள் ஒரு கணிதவியலாளர் என்ற வகையில் அல்குர்ஆனை கணிதவியலோடு தொடர்புபடுத்திச் சொல்ல முடியுமா?
எந்தவொரு அறிவியல் துறையிலிருந்து நோக்கினாலும் அல்குர்ஆன் ஒரு அற்புதமே. கணிதவியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போதும் அதன் அற்புதங்கள் பிரமிக்கத்தக்கவை. முஸ்லிமல்லாதவர்கள் கூட கண்டு ஆச்சரியப் படக்கூடிய ஏராளமான கணித விந்தைகள் அல்குர் ஆனில் காணப்படுகின்றன.
ஒரு சிறிய உதாரணம்: அல்குர்ஆனில் மாதம் என்ற பொருளைக் கொண்ட ‘ஷஹ்ர்’ என்ற சொல் 12 இடங்களில் வருகிறது. ஒரு வருடத்தில் உள்ள மாதங்களின் எண்ணிக்கையும் 12 ஆக இருப்பதால் இது எமது கவனத்தை ஈர்க்கிறது. இரு எண்களும் சமமாக இருப்பது ஒரு தற்செயலான விடயமாக எமக்குத் தோன்றலாம். ஆனால், நாள் என்ற பொருளைக் கொண்ட ‘யவ்ம்’ என்ற சொல் எத்தனை முறை அல்குர் ஆனில் வருகின்றது எனப்பார்க்கும் போதுதான் ஒரு அற்புதம் தென்படுகிறது.
சரியாக ‘யவ்ம்’ என்ற இச்சொல் அல்குர்ஆனில் 365 இடங்களில் வருகிறது. ஓரு வருடத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கையும் 365 ஆகவே இருப்பதுதான் இங்குள்ள அற்புதம்.
இது போன்ற எண்ணியல் அதிசயங்கள் ஏராளமானவை அல்குர்ஆனில் உள்ளன. இவையனைத்தும் அல்குர்ஆன் மனித சக்திக்கப்பாற்பட்ட ஒரு தெய்வீக நூல் என்பதனைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துக் காட்டிக்கொண்டிருக் கின்றன.
அத்தோடு, வேறொரு திசையில் நோக்கும் போதும் அல்குர்ஆன் கணிதவியலாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. மனித இனத்தின் ஈருலக வாழ்வின் சந்தோசத்திற்கும், ஈடேற்றத்திற்கும் தேவையான அடிப்படை உண்மைகளையும் வழிகாட்டல்களையும் உள்ளடக்கிய அல்குர்ஆன் அவ்வுண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி விளங்கவைக்கும் முறை அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
கணிதவியல் என்பது மனிதனது சிந்தனாசக்தி, நுண்ணறிவு என்பவற்றின் மூலம் தன்னையும், தன்னைச் சூழவுள்ள இயற்கையையும் பற்றிய அடிப்படை உண்மைகளைத் திட்ட வட்டமாக அறிந்து கொள்வதற்கான ஒரு முறை எனப் பலர் நினைக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. தற்கால நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப, மருத்துவத் துறைகளின் பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களுக்கு கணிதவியல் அடிப்படையாக அமைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் அடிப்படை உண்மைகள் சம்பந்தமாக அதன் போக்கு நடு நிலையானது.
மனிதனது சிந்தனாசக்தியும், தர்க்க சாத்திரமும் ஒரு உண்மையிலிருந்து இன்னொரு உண்மையை ஊகித்து அறிந்து கொள்ள உதவுமேயன்றி அடிப்படையான உண்மைகளைத் திட்டவட்டமாகக் கூறச் சக்தியற்றவை. சில அடிப்படை உண்மைகள் ஆரம்பத்தில் அனுபவங்கள், ஊகங்கள் மூலம் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இவ்வடிப்படை உண்மைகள் கருதுகோள்கள் (Hypotheses, Axioms) என அழைக்கப்படும். இப்படி நாம் ஏற்றுக் கொள்ளும் ஒரு தொகுதி கருதுகோள்களைக் கோட்பாடுகள் (Theories) எனக் கூறப்படும்.
பின்னர் இக்கோட்பாடுகளிலிருந்து இன்னும் பல உண்மைகளை எமது நுன்னறிவைப் பயன்படுத்தித் தர்க்கரீதியாக ஊகித்துப் பெற்றுக்கொள்ளலாம். இப்படிப் பெறப்படும் உண்மைகளைத் தேற்றங்கள் (Theorems) எனப்படும். Number Theory, Group Theory, Field Theory, Calculus, Relativity Theory, Eulidean Theory போன்ற நவீன கணிதவியலின் முக்கிய பிரிவுகள் ஒவ்வொன்றும் இப்படியாகத் தமக்கென உரிய கருதுகோள்களைக் கொண்ட கோட்பாடுகளாகும். இக்கோட்பாடுகள் கூறுவதெல்லாம், தமது கருதுகோள்கள் உண்மையானால் தமது தேற்றங்களும் உண்மையானவை என்பது மட்டும்தான். தேற்றங்கள் சுயமாக, திட்டவட்டமாக உண்மையானவை எனக் கூறவில்லை. ஆனால், நாம் நினைத்தவற்றை எல்லாம் கருதுகோள்களாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
ஒரு தொகுதி கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரு முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். முதலாவதாக, அத்தொகுதியைச் சேர்ந்த கருதுகோள்கள் தமக்குள் ஒன்றோடொன்று முரண்படக்கூடாது. இரண்டாவதாக, அக்கோட்பாடுகளை அடிப்படையாக வைத்துப் பெறப்படும் தேற்றங்கள் எமது அனுபவம் மூலம் கண்டு கொண்ட உண்மைகளுடன் முரண்படக் கூடாது.
மேற்கூறிய விடயங்களை அடிப்படையாக வைத்து நோக்கும் போது அல் குர்ஆனின் காலத்தால் மாசுபடாத பல சிறப்புக்கள் புலனாகின்றன. முதன்மையாக அல்குர்ஆன் அதன் போதனைகளை மனிதன் விளங்கிக் கொள்ளத்தன் சிந்தனா சக்தியைப் பிரயோகிக்குமாறு ஊக்குவிக்கிறது. அதேவேளை, மனிதன் தனது சுயபுத்தியால் தானாக விளங்கிக் கொள்ள முடியாத (மறைவான) பல விடயங்களை அது எடுத்துக் கூறி அவற்றின் மீது நம்பிக்கை, ஈமான் கொள்ளுமாறு பணிக்கிறது. இதற்கு ஆதாரமாக இயற்கையில் நாம் காணக் கூடிய பல அத்தாட்சிகளையும் ஏராளமான வரலாற்று உண்மைகளையும் உதாரணங்களாகச் சுட்டிக் காட்டுகிறது.
அத்தோடு குர்ஆன் தனது வார்த்தைகள் ஓன்றுக்கொன்று முரண்படவில்லை என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. நவீன கணிதவியலின் எல்லாத் துறைகளிலும் சிக்கலான கோட்பாடுகளையும் உண்மைகளையும் விளங்க வைக்கக் கையாளப்படும் கணித முறைகளைப் போன்றே குர்ஆனின் இவ்வணுகு முறையும் அமைந்திருப்பதைக் கண்டுதான் முஸ்லிமல்லாத கணிதவியலாளர்களும் கூட பிரமிக்கிறார்கள்.
ஆனால், இங்கு குர்ஆனின் அணுகுமுறையிலுள்ள சில முக்கிய வேறுபாடுகளை முஸ்லிம்களாகிய நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஈமானின் அடிப்படை அம்சங்களான ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்வு என்பவை சம்பந்தமான கொள்கைகளை நாவினால் மொழியக்கூடிய சில வார்த்தைகளாகவோ எமது மூளையில் பதிவு செய்துவைத்திருக்கும் சில கருதுகோள்களாகவோ அல்குர்ஆன் முன் வைக்கவில்லை.
மாறாக, அதன் போதனைகள் எவ்வித சந்தேகங்களுமற்ற திட்ட வட்டமான உண்மைகளாகும், அவை அல்லாஹ்வினால் எமக்கு அருளப் பட்டவையாகும். எவ்வளவு தூய எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் அதனை நாம் ஓதுவோமோ, விளங்க முயற்சிப்போமோ அதற்கேற்ப அல்லாஹ்வின் புறத்திலிருந்து விளக்கங்கள் கிடைக்கும்.
அடுத்ததாக, அதன் போதனைகள் வெறும் கோட்பாடுகள் மட்டுமன்றி ஈருலக வாழ்வின் ஈடேற்றத்துக்கும் வழிகாட்டும் ஒரு வாழ்கைத் திட்டமுமாகும். இதற்கு அடிப்படையாகத் தொழுகை, நோன்பு, ஸகாத், தஃவா, ஜிஹாத் போன்ற இறை கட்டளைகளை அறிமுகம் செய்கிறது. இவற்றின் மூலம் உண்மை, நேர்மை, பணிவு, இரக்கம், பொறுமை போன்ற உயர்ந்த மனிதப் பண்புகளைத் தம்மிடம் உண்டாக்கிக் கொள்ளுமாறு ஏவுகிறது. இப்படியான நம்பிக்கை, நற்கிரியைகள், நற்குணம் என்பவற்றைக் கொண்டு மட்டுமே அல்லாஹ்வின் திருப்தியையும், ஈருலக வாழ்வின் ஈடேற்றத்தையும் பெறலாம் என்பதை ஒரு கணித நூலில் வரும் தேற்றங்களைப் போன்று தெளிவாகவும், திட்டவட்டமாகவும் கூறிவைக்கிறது. இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வதன் முலம் தான் எமது முஸ்லிம் சமூகத்தின் இன்றைய பிற்போக்கான நிலைமைக்குரிய உண்மையான காரணங்களை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
இங்கும் ஓரு சிறு உதாரணத்தைக் கொண்டு இதனைத் தெளிவு படுத்தலாம் என நினைக்கிறேன். அல்குர்ஆனில் ஏறக்குறைய 37 இடங்களில் ‘முஸ்லிமூன்’ அல்லது ‘முஸ்லிமீன்’ என்ற சொல் வருகிறது. ஆச்சரியப் படத் தக்க விடயம் என்னவென்றால் இந்த 37 இடங்களிலும் ஓரிடத்திலாவது எந்தவொரு வாக்குறுதியும் வெளிப்படையாகத் தென்படவில்லை.
நன்றி: மீள்பார்வை






