இப்படியும் நடக்கிறது- ஊர்குருவி
Posted by Kattankudi Web Community (KWC) on 15/11/2010
ஊர்குருவி தனது நீண்ட தூர பயணத்தின்பின் களைப்பிற்காக அந்த பெரிய பாடசாலையில் ஒதுங்கியது. அப்போது தன்னை யாரோ அழைப்பது கேட்டு திரும்பியபோது, அது எமது ஊரின் பெரிய பாடசாலையின் ஆறாம் தரம் ’G’ பிரிவு வகுப்பு மாணவன். அந்த மாணவன் ஊர்குருவியை நோக்கி:
“ஊர்குருவியாரே! எங்கள் பெரிய பாடசாலையில் ஆரம்ப வகுப்புகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுவதில் பெரும் பின்னடைவு காணப்படுகின்றது. உதாரணமாக எங்கள் வகுப்பு ஆறாம் தரம் ’G‘ பிரிவில் வாழ்க்கைத் தேர்ச்சியும் புவியியலும் எனும் பாடத்தில் நவம்பர் மாத முதலாம் வாரம் வரை வாழ்க்கைத் தேர்ச்சிக்காக கொப்பியில் ஐந்து பக்கங்களும், புவியியலுக்காக மூன்று பக்கங்களுமே குறிப்பெழுதியுள்ளோம், ஆசிரியர் வருவார் ஆனால் வரமாட்டார். மேலும் எங்கள் வகுப்பில் தமிழ் பாடமும் குறைந்தளவே கற்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கற்பிக்கப்பட்டால் நாங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் சம்மேளனத்தின் சாதனையாளர் பட்டியலில் வரமுடியும்” என்று தனது மனக்குறையை ஒப்புவித்தார் அந்த மாணவர்.
ஊர்குருவி சிறகடித்து மேலும் அவதானித்தபோது, இவ்வாறாக பல வகுப்புகளிலும் பல பாடங்கள் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்வதில் மிகவும் பின்னடைந்திருக்கும் கவலையான நிலையே காணப்பட்டது
ஆசிரியர்கள் பாடங்களை உரிய முறையில் தயார் செய்து, பாடவேளைகளை முற்றாகப் பயன்படுத்தி, பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யும் விடயம் புதிய அதிபர் பெறுப்பேற்ற பின்னராவது சீர்ப்படுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
……………………………………………………………………………
எத்தனை காலம்தான் பறப்பது என்று எண்ணியவராக ஊர்குருவியார் அன்று ஊரிலிருந்து ஒவ்வொரு இரவும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் எமதூர் தனியார் பஸ் வண்டியின் மேல் தளத்தில் அமர்ந்து கொண்டார். பயணம் தொடங்கியதும் பஸ் வண்டியில் வித்தியாசமான ஒழுங்குள்ள நிகழ்ச்சி ஒலி – ஒளிபப்பு முறையொன்று நடைமுறையிலுள்ளதை அவதானித்தார் ஊர்குருவியார்.
ஊரிலிருந்து வெளிக்கிட்டு கல்லடி அல்லது மட்டக்களப்பு வரை கிறாத், கஸீதா மற்றும் இஸ்லாமிய கீதங்கள் ஒலிபரப்பாகின. பின்னர், கல்லடியிலிருந்து ஓட்டமாவடி வரை தமிழ் சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதுடன், ஓட்டமாவடியில் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டவுடன் (இரவு பத்து மணி அல்லது அதற்கும் பிந்திய வேளையில்) தமிழ்த் திரைப்பட ஒளிபரப்பு ஆரம்பமாகியது.
இரவு நேரப் பயணங்களில் தூங்க எதிர்பார்த்திருக்கும், அநேகமாக அடுத்த நாள் கொழும்பில் வேலைகளை முடிக்க வேண்டியிருக்கும் பயணிகள் இதனால் பலத்த அசௌகரியத்துக்கு உள்ளாகியதை அவதானித்தார் ஊர்குருவியார்.
மேலும் திரைப்படங்களை பார்ப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத விடயம் என்பதால் அதைத் தவிர்ப்போரும், இப்போது வரும் திரைப்படங்களில் உள்ள முறைகேடான விடயங்களை பஸ்ஸில் பயணிக்கும் அனைவரும் குறிப்பாக சிறுவயது பிள்ளைகளும் பார்த்தே ஆக வேண்டிய நிலை ஏற்படுவது குறித்து பெற்றோரும் இது தொடர்பாக தங்களது அதிருப்தியை ஊர்குருவியாரிடம் வெளியிட்டனர்.
ஊரிலிருந்து இயங்கும் ஏனைய எந்த பஸ் சேவையிலும் இடம்பெறாத இவ்விடயத்தை பிரயாணிகளின் நலன்கருதி நிறுத்த உரிமையாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?






