வெள்ளத்தம்பி வெளிநாடு போறார்
Posted by Kattankudi Web Community (KWC) on 30/10/2010
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக்குழு ஏற்பாடு செய்த ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழா 2010 இனை முன்னிட்டு தேசிய ரீதியில் இடம்பெற்ற சிறுகதைப் போட்டியில் ‘காத்தநகர் முகைதீன் சாலி’ எழுதிய ‘வெள்ளத்தம்பி வெளிநாடு போறார்‘ சிறுகதை முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. இதற்கான பரிசளிப்பும் விருது வழங்கும் நிகழ்வும் 14.10.2010 அன்று கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் இடம்பெற்றது. எமது வாசகர்களுக்காக அந்த சிறுகதை இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.
குடிசையின் முன்னால் கிளைபரப்பி அடர்ந்து கிடக்கும் கறுத்தக் கொழும்பான் மாமரம் மஞ்சள் நிறத்தில் மாம்பூக்களை பிரசவித்து குழந்தைப்பிள்ளை சிரிப்பது போல் பளிச்சென்று கிடக்கிறது. பரண் மேல் தங்கியிருந்த பாணிச்சாவல் படபடவென்று இறக்கையடித்துக் கூவிற்று. கோழிச்சாவலின் காட்டுக் கத்தலில் கண் விழிக்கிறாள் சுபைதா. பக்கத்தில் படுத்துக்கிடக்கும் அஸ்லத்தை தட்டி எழுப்புகிறாள்.
“டேய் அஸ்லம் எழும்புடா மன விடியப்போகுது. வாங்கு சென்னதும் கேக்காம இவளவு நேத்தக்கி படுத்துக்கிடக்கம். போய் டக்கெண்டு தொழுதுட்டு வா நானும் தொழுதுதிட்டு எடுக்கன். கடலுக்குப் போன வாப்பாவையும் இன்னும் காணல்ல மூணு மணிக்கெல்லாம் வந்திருவாரு இவளவு நேத்தக்கி என்ன செய்யிறாரோ தெரியா பயமாவும் கிடக்கு அல்லாதான் காப்பாத்தணும்.”
மகனை எழுப்பி பள்ளிக்கு அனுப்பிவிட்டு பாயை விரித்து தொழுது விட்டு பல் விழுந்த கிழவியைப்போல இழித்துக்கொண்டிருக்கும் ஈர்க்குத்தடியைக் கையிலெடுக்கிறாள்.
“எத்தின நாளக்கித்தான் உன்னவெச்சி வாசல் கூட்றது ஒரு புது ஈக்கிமாறு வாங்குவமெண்டா நடக்கிற காரியமா.”
மனதுக்குள் நினைத்தவாறே வாசலில் கொட்டியிருக்கும் மாஞ்சருகுகளை கூட்டி ஒதுக்கிவிட்டு குடிசைக்குள் நுளைகிறாள்.
நெஞ்சு படபடக்கிறது.
“வானமும் வெளுத்துப் போச்சு இவளவு நேத்தக்கி என்ன செய்யிறாரு, பள்ளிக்குப் போன இவனையும் காணல்ல வந்துட்டானெண்டா கடக்கரக்கி அனுப்பி பாக்கலாம்.”
மனசுக்குள் படபடக்கும் போதே வெள்ளத்தம்பி கையில் அஸ்லத்தையும் பிடித்துக் கொண்டு வந்து விடுகிறார்.
“இவளவு நேத்தக்கி எங்க போன. நான் என்னவோ ஏதோவெண்டு பதறிப்போய்க் கிடக்கன். பள்ளிக்குப் போன இவன எங்க புடிச்சிங்க”
“அவனும் வாப்பா சுணங்கிட்னெண்டு கடக்கரக்கி வந்திட்டான் புள்ள. அதான் கூட்டிட்டு வாரன்”
“இண்டெக்கி எப்பிடி ஏதாச்சும் கிடச்சிதா? இல்ல வழமயப் போலத்தானா?”
“அதேன் கேக்கிறா புள்ள. ராவெல்லாம் கண்முழிச்சி இரயப்போட்டதுதான் மிச்சம் ஒரு மண்ணுங் கிடைக்கெல்ல கடைசியா திரும்பி வரக்குள்ளதான் ரெண்டு விள மீன் பட்டுச்சி அதுல ஒண்ட முதலாளி தந்தாரு அதத்தான் கறிக்கிக் கொண்டுவந்திருக்கன்.”
சுபைதாவுக்கு பகீர் என்றது. சுள்ளிகளை அடுக்கி அடுப்பு மூட்டித் தண்ணீர் வைத்திருந்தாள். வெள்ளத்தம்பி கொண்டு வரும் காசில் சீனியும் தேயிலையும் வாங்கலாமெண்டு என்னியிருந்தால் இப்போது வெள்ளத்தம்பி சொன்னபதிலில் இடி விழுந்தது போலிருந்தது. மனசுக்குள் வெப்பிசாரம் பொத்துக்கொண்டு வந்தது.
“இப்பிடியே எத்தின நாளக்கி செல்லியிட்டிருக்கிற அவன் அஸ்லத்த பாத்திங்களா? எலும்பும் தோலுமா இரிக்கான் பெத்த மனசு பத்தியிட்டு எரியிது எத்தினநாளக்கி இப்பிடி பசியும் பட்டினியுமா கிடக்கிற. இன்னும் கொஞ்ச காலத்தில மாரி மழ வரப்போகுது மேல அண்ணாந்து பாருங்க குடில் ஓட்டையும் உடசலுமா கிடக்குது. தின்றதுக்கே வழியக்காணல்ல அதுக்குள்ள எங்கால கூர வேயிறது? புளக்கட வேலி கூட இறந்து போய்க் கிடக்கிது ஒண்டுக்கு ரெண்டுக்கு போறதுக்குக் கூட இரவெக்கி வரக்கிம் காத்துகிட்டிருக்கணும். பேண்டத வெட்டிப்புதக்கிறதுக்கு கூட ஒரு மம்மட்டி கிடையா சிரட்டயால தோண்டிப் புதைக்க வேண்டிக்கிடக்கு. வாங்கின பன்னும் முடிஞ்சி போச்சி எல்லாத்தையும் தின்டு தீத்தட்டம் பன்னவாங்கி பாய இழக்கிறதுக்கும் முதல் வேணுமே நான் எங்க போவன்?”
மனதில் புதைந்து கிடந்த வெஞ்சம் அத்தனையும் புயலாய்க் கொட்டிவிட்டு முந்தானைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழுகிறாள் சுபைதா. சுபைதாவின் ஏக்கம் வெள்ளத்தம்பிக்கு விளங்கிப்போனாலும் தன் இயலாமையை நினைக்கையில் உடல் கூனிப்போகிறது. எழுந்து வந்து சுபைதாவின் தலையைத் தடவிக்கொடுக்கிறார்.
“என்ன, என்ன புள்ள செய்யச்செல்றாய் எனக்கு இந்த மீன் புடிக்கிறத உட்டா வேற தொழில் தெரியுமா புள்ள, சொந்தமா போட்டும் வலையும் இரிந்தா பறவால்ல கடல்ல இல்லாட்டி ஆத்துக்காச்சும் போய் மீன் புடிக்கலாம். நம்மிட போட்டு வலயெண்டா உழக்கிறதெல்லாம் நமக்குத்தான். நானென்ன சொந்த போட்டுலயா கடலுக்குப்;போறன். அவங்கிட போட்லதான போறன். எவளவு மீன புடிச்சாலும் நமக்கு முன்னூறுவாத்தான தருவாக. அதுவும் புடிபடாட்டி சும்மாதான் வரணும். எனக்கு மட்டுமென்ன உங்களயெல்லாம் பட்டினி போடடெனுமெண்டு ஆசயா? நமக்குச் சொந்;தமா ஒரு போட்டும் வலயும் இருந்தா நம்மிட கஷ்ட்டமெல்லாம் தீந்து போகும் புள்ள”
என்னதான் கோபத்தில் மனதில் உள்ளதைக் கொட்டி விட்டாலும் கணவனைப்பார்க்க பரிதாபமாக இருந்தது சுபைதாவுக்கு.
“பாவம் கடலுக்குப்போயி கண்முழிச்சி கஷ்டப்பட்டுட்டு வந்திருக்காரு கண்ணெல்லாம் சிவந்து போய்க் கிடக்கிது காலத்தால ஒரு தேத்தண்ணியாச்சும் ஊத்திக்குடுக்காட்டி…?” மனசுக்குள் நினைத்தவாறே எழுந்து கொள்கிறாள்.
” மன அஸ்லம் கூட்டுக்குள்ள கோழி முட்ட உட்டிருக்காண்டு பாருடா மன”
“உம்மா ரெண்டு கோழிதான் முட்ட உட்டிருக்கு மத்தக்கோழி குறுக்குப் படுக்குது”
“சனியன் புடிச்ச கோழி இண்டெக்கித்தானா குறுக்குப்படுக்கணும்”
கோபத்தில் கோழியைத்திட்டினாலும் மனசு ஏற்றுக்கொள்ள மறுத்து நிற்கிறது.
“அதத் திட்டி என்ன செய்ய எத்தின நாளக்கித்தான் அதுவும் முட்ட போடும். மாசம் பூறா முட்ட போர்றதுக்கு அதென்ன மிசினா? அது தாற முட்டக்கி நாமென்ன தவுடும் குறுனலுமா குடுக்கம், புளிஞ்ச தேங்காப்பூவயும் மண்ணுல உள்ளதயும் திண்டுதான அது நமக்கு முட்ட தருகுது அதுகள்ற கஷ்ட காலம் நமக்கிட்ட வந்து வாச்சிருக்குதுகள். மன அந்த ரெண்டு முட்டயையும் காசிங்காக்காட ஊட்ட குடுத்துட்டு உம்மா ஒள்ளுப்பளம்; சீனியும் தேயிலையும் தரட்டாமெண்டு வாங்கிட்டு வாமென”
அஸ்லம் கிழிந்து தொங்கும் வெள்ளத்தம்பியின் சாறனை வாயில் கவ்வியபடி ஓடிப்போகிறான்.
வெள்ளத்தம்பியின் உள்ளம் வெதும்பிப் போகிறது.
“உள்ளதும் ஒரு புள்ள உடுக்கக்கூட ஒழுங்கான உடுப்பில்லாம என்ட கிழிஞ்ச சாறன உடுத்துட்டுப் போறான. பாவம் சுபைதா என்ன கட்டின நாளக்கி எண்டக்கித்தான் ஒழுங்கான சோறு தின்டிருக்கா? எத்தின நாளக்கித்தான் இந்த கடல நம்பி காலத்த ஓட்றது? நம்மிட குடும்பம் நிம்மதியா வாழணுமெண்டா நாம என்ன வழிப்பட்டாவது காசு சம்பாதிக்கணும் இதுக்கு மேலயும் இப்பிடியே இருந்தா நாம ஆம்பிளயே கிடையாது’
‘இந்தாங்க இந்தத்தேத்தண்ணிய எண்டாலும் குடிங்க ராவெல்லாம் கண்முழிச்ச வகுறு காஞ்சிபோய்க் கிடக்கும்”
“புள்ள, உண்ட கையால ஒருகோப்பத் தேத்தண்ணி வாங்கி குடிச்சா போதும் என்ட வயிறு நிரம்பிபோகும் ஆனா என்னால நீங்க பர்ற கஷ்டத்த என்னால தாங்க ஏலாம கிடக்கு. நான் இந்த தொழில உட்டுட்டு வேற என்னயெண்டாலும் செய்வமெண்டு யோசிக்கன் புள்ள”
“இரிக்கிற தொழில உட்டுட்டு என்னங்க செய்யப் போறிங்க”
“ஒரு ரெண்டு வரிசத்துக்கு வெளிநாட்டுக்குப் போவமெண்டு யோசிக்கன் புள்ள”
சுபைதா அதிர்ந்து போகிறாள். விளையாட்டுக்குக் கூட வெளியூர் போகாத வெள்ளத்தம்பி வெளிநாடு போகப் போறன் எண்டு சொன்னதும் சுபைதாவுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. காலையில், தான் கதைத்ததுதான் வெள்ளத்தம்பியை இந்த முடிவுக்கு வரவைத்ததோ என மனசு நெருடுகிறது. ஏக்கத்துடன் கணவனைப் பார்க்கிறாள்.
“என்ன லூசிக் கதைங்க கதைக்கிறிங்க. நாம கலியாணம் முடிச்ச இந்த பத்து வருசத்துல ஒரு நாளைக்காவது என்ன உட்டுப் போயிருக்கீங்களா செல்லுங்க பாப்பம். உப்போ தண்ணியோ ஒண்டாக் கிடந்து அனுபவிப்பம். வெளிநாட்டு பத்தாயிரத்த விட நம்மிட பத்து ரூபாதாங்க நமக்குப் பெரிசி, காலத்தால நான் வெஞ்சத்தில கதச்சிப்போட்டன். அத மனசில வெச்சிக்காம இதோட இந்ந எண்ணத்த உட்றுங்க”
மூக்கினாலும் கண்களினாலும் ஒரே நேரத்தில் வடிந்த நீரை சீலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டு அழுகையைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் சுபைதாவையும் மீறி அழுகை பீறிடுகிறது.
“நீ என்ன செல்லு புள்ள. நான் நல்லா யோசிச்சித்தான் இந்த முடிவ எடுத்திருக்கன். அவன் அவக்கரப் பாத்தந்தான புள்ள. மூணு வருசந்தான் வெளியில இரிந்தான். இண்டெக்கி அவன அடிக்க ஆளிருக்கா? மூணு போட்டு வெச்சி முதலாளியா இரிக்கான். வீடென்ன வீட்டுச்சாமானென்ன மோட்டார் சைக்கிலென்ன எல்லாம் எதால கிடச்ச புள்ள. வெளிநாட்டுக்கு போய்ச் சம்பாதிச்சதுதான். இனியும் உங்கள கஷ்டத்துல போட நான் விரும்பல இதோடயெண்டாலும் நமக்கு விடிவு கிடைக்கிதாண்ணு பாப்பம்”
“அப்ப நீங்க போகத்தானா போப்புறீங்க”
“ஓம் புள்ள அப்பதான் நம்மிட கஷ்டமெல்லாந்தீரும்”
“வெளிநாட்டுக்கு போறயெண்டா விளயாட்டு வேலயா? கொள்ளயா காசெல்லாந் தேவப்படும காசிக்கி நாம எங்க போற”
“நம்மிட வளகில பாதிய வித்தப்புடுவம் புள்ள”
*****************
பூத்திருந்த மாமரம் இலைக்கொண்றாக மாம் பிஞ்சுகளால் நிரம்பியிருக்கிறது. மண்டையை பிழக்கும் கத்தரி வெயிலில் உடல் தெப்பமாய் நனைய குடிசைக்கு வருகிறார் வெள்ளத்தம்பி.
“இந்தக் காச்சிற வெயிலுக்க எங்க திரிஞ்சிட்டு வாறீங்க உடம்பு என்னத்துக்கு ஆகும்”
“சப்பு சலீமிட்டதான் புள்ள போயிட்டு வாறன். அவரே வளக வாங்குறனெண்டு சென்னாரு. முப்பணமா பத்தாயிரம் தந்தாரு. போட்டுப் போறதுக்கு ரெண்டு மூணு லோங்கிசும் சேட்டும் வாங்கட்டாம் நமக்கு லோங்கிசெல்லம் போட்டு பழக்கமா புள்ள”
“பாம்பு தின்ற ஊருக்குப் போனா நடுத்துண்டு நமக்காம் வெளிநாட்டுக்கு போகத் துணிஞ்ச நீங்க இனி எல்லாம் போடத்தான வேணும்”
“ஓம் புள்ள இதோட நம்மிட கஷ்டமெல்லாம் தீந்தாச் செரிதான். இந்தா புள்ள இதுல ஐயாயிரத்த எடுத்து முதல்ல நம்மிட கடன அடச்சிப்போடு மிச்சக் காச வெச்சி மத்த விசயத்த பாப்பப். போட்டவும் எடுத்துக் குடுத்துட்டன் நாளக்கி வளகுட மிச்சக்காசக் கொண்டாந்து தாறனெண்டு சென்னாரு”
“அப்ப நீங்க உண்மையா போகத்தானா போறிங்க”
“நான் என்ன சும்மாவா புள்ள செல்றன்”
“நானும் சும்மா பேச்சிக்கி செல்லிறிங்கெண்டுதான் நினச்சன். ஆனா உண்மயாத்தான செல்லியிருக்கிறிங்க. எங்கிள தனியா உட்டுட்டுப்போனா நானும் புள்ளயும் தனியாக்கிடந்து என்னபாடுதான் படப்போறமோ தெரியா. எனக்கு நெஞ்செல்லாம் பதறுது”
“கத்தாத புள்ள நான் வெளிநாட்டுக்கு போனாலும் என்ட உசிரு உங்;கிட்டத்தாங்கா இரிக்கும்”
*****************
மணி பன்னிரண்டையும் தாண்டிக்கொண்டிருக்கிறது. வெள்ளத்தம்பி புரண்டு புரண்டு படுத்துப் பார்க்கிறார். தூக்கம் கண்களை அரவணைக்க மறுத்து நிற்கிறது. உள்ளம் உடலை விட்டும் வெளியேறி ஆகாயத்தில் சஞ்சரிக்கிறது.
“கண்ணாடி முன்னின்று பார்க்கிறார் அவரின் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. நீளக்கை சேட்டும் கறுப்பு லோங்கீசும் கண்களைப்பறிக்கிறது. சப்பு சலீமுடன் கொழும்பு பஸ்ஸில் ஏறி பயணிக்கிறார். விமானநிலையத்தை அடைந்து புதிசாக வாங்கிய பயணப் பெட்டியுடன் விமானத்தில் ஏறுகிறார். சற்று நேரம் மலைத்து நிற்கிறார். வானத்தில் கொசுப்போல பாத்த பிலேனா இது சப்பு சென்னாப் போல இது எம்மாட்டு பெரிசு மாடி ஊட்டப்போல கிடக்கு. இதா வானத்துல நம்மளயும் தூக்கிட்டு பறக்க போகுது? மலைத்த வாறே விமானத்தில் ஏறி அமர்கிறார். உடலெல்லாம் நடுங்குகிறது. வெளிநாட்டை அடைகிறார். கை நிறையப்பணம் சுபைதாக்கு நகை அஸ்லத்துக்கு உடுப்பு கொள்ளகொள்ளயா சாமான்கள் வாங்கிக் குவிக்கிறார். ஆஹா நானும் அவக்கரப்போல பணக்காரனாப் போப்புறன்”
வெள்ளத்தம்பி திரும்பித்திரும்பி படுத்துப்பாக்கிறார், ம்ஹும் நித்திரை வர மறுத்தே நிற்கிறது.
மறுபக்கம் சுபைதாவின் எண்ணமெல்லாம் வெள்ளத்தம்பியைச் சுற்றியே வட்டமடிக்கிறது.
“புதிதாக வாங்கிய லோங்கீசைப் போட்டுக்கொண்டு வெள்ளத்தம்பி தட்டுத்தடுமாறி நடக்கிறார். தனியாக விமானத்தில் ஏறி உட்கார்ந்ததும் பயத்தினால் வியர்த்துக் கொட்டுகிறார்;;. வெளிநாட்டை அடைந்ததும் திருவிழாவில் காணாமல் போன குழந்தயைப் போல மிரண்டு நிற்கிறார். அவரைக் கூட்டவந்த அரபிக் காரன் பேசியமொழி தெரியாது பரிதவிக்கிறார்;. பாலைவனத்தில் வியர்வை சிந்த ஒட்டகை மேய்க்கிறார். ஏற்கனவே ஒழுங்கான உணவின்றி பட்டினி கிடந்து எலும்பும் தோலுமாய் தேய்ந்த வெள்ளத்தம்பி பாலைவன நெருப்பு வெயிலில் உருகித் துரும்பாகிறார்.”
“என்ன புள்ள புரண்டுபுரண்டு கிடக்காய் இன்னும் நித்திர வரல்லப்போல.”
“நீங்க எண்டெக்கி வெளிநாட்டுக்கு போகப்போறனெண்டு சென்னிங்களோ அண்டெக்கி துலஞ்ச நித்திரதான், அங்க போய் என்ன பாடுபடப்போறிங்களோ தெரியா.”
“ஏங்கா புள்ள அப்பிடிச்செல்றாய்.”
“வளக வித்து எவளவு காசு தாறனெண்டு சலீம் சென்னாரு.”
“எண்பதாயிரம் தருவாராம் புள்ள. அதில பத்தாயிரத்த தந்திட்டாரு, வெளியிலபோக ஒரு லட்சமாம். போய் மிச்சக்காச அனுப்பணுமாம்.”
“அப்ப போறதுக்கு முன்னமே கடந்தானா.”
“கைக்காசுக்கு இதுக்கு மேல நாம எங்க புள்ள போற?”
“நான் சென்னா நீங்க கேக்கயா போறீங்க, நீங்க வெளிநாடு போறதில எனக்கு அஞ்சி சதத்துக்கும் விருப்பமில்ல.”
“அப்ப நாம பட்டினி கிடந்தே காசிறதா புள்ள.”
“ஏன் பட்டினி கிடந்து சாகணும்? உங்குளுக்குத்தான் கையில தொழில் இரிக்குதே. வளகு வித்த காச எடுத்து ஒரு போட்டும் வலையும் வாங்கினா ராசா மாதிரி கைநிறையச் சம்பாதிக்கேலாதா?”
வெள்ளத்தம்பிக்கு பக் எண்கிறது. தொண்டை வரண்டு செருமுகிறது.
“கோப்பயில கொஞ்சம் தண்ணிதா புள்ள, தொண்டயெல்லாம் காஞ்சி போய்க் கிடக்குது. கொள்ளயா யோசிக்காம பேசாம படு புள்ள எல்லாத்தையும் விடிஞ்சதுக்குப் புறகு பாப்பம்.”
சுபைதா நீட்டிய தண்ணீரைக் குடித்து விட்டு தூங்க நினைத்தாலும் வெள்ளத்தம்பியின் மனசு வெளிநாட்டைச்சுற்றியே வட்டமடிக்கிறது.
*****************
கையில் பையுடன் சப்பு சலீம் வருகிறார்.
“வெள்ளத்தம்பி எல்லா வேலையும் முடிச்சிட்டன் பாஸ்போட்டும் வந்திட்டு. விசாவும் நாளக்கி செரிவரும் போல கிடக்கு. பெரிசா ஒரு வேலயும் இல்ல ரோட்டுக் கூட்ற வேலதான் காலையில எட்டு மணியில இருந்து பின்னேரம் அஞ்சி மணி வரைக்குந்தான் வேல. வெள்ளிக்கிழம மட்டும் லீவு. நம்ம நாட்டுக் காசில முப்பதாயிரம் சம்பளம். சாப்பாடு தங்குமிடமெல்லாம் உன்னோட. ரோட்டுக் கூட்றதெண்டா சும்மாயில்ல வெள்ளத்தம்பி. நல்ல சாமான் எல்லாம் கிடைக்கும் அங்க குப்பயில போர்ற சாமான் நம்மிட ஊருல புதுச்சாமான்.”
“அப்ப சாப்பாடு, றூம் காசெல்லாம் போக எவ்வளவு சலீம் மிஞ்சும்.”
“ஒரு பதினையாயிரம் சுளையா மிஞ்சும் வெள்ளத்தம்பி.”
“சலீம், இப்ப ஒரு போட்டு எஞ்சினும் வலயும் வாங்கிறதெண்டா எவளவு மட்டுல போகும்.”
“பாவிச்சதாப் பாத்து வாங்கினா ஒரு எண்பதாயிரம் மட்டுல போகும். புதிசா வாங்குறதெண்டா லச்சத்துக்கு மேல போகும். நீதான் வெளிநாட்டுக்கு போகப்போறியே வெள்ளத்தம்பி உழைச்சிட்டு வந்தா உண்ட விருப்பம் போல வாங்கலாம்.”
“சலீம் நான் ஒண்டு சென்னா நீ கோவிக்க மாட்டியே.”
“என்னெண்டு சொல்லு வெள்ளத்தம்பி”
“வளகு வித்த காசில எனக்கொரு போட்டும் வலயும் வாங்கித்தா சலீம்”
‘அப்ப வெளிநாட்டுக்குப் போறதுக்கு காசி.”
“இக்கரைக்கு அக்கரை பச்சை சலீம். இஞ்ச பெண்டாட்டி புள்ளயல உட்டுட்டு வெளிநாடு போய்ச் சம்பாதிச்சாலும் ஊருக்கு வந்து ஏதாச்சும் தொழில் செய்யத்தான வேணும். அத இப்பபே செஞ்சா நல்லந்தான சலீம். இரிக்கிற காசிக்கி ஒரு போட்டும் வலயும் வாங்கினா நமக்குத் தெரிஞ்ச தொழில ஊருலயே செஞ்சி நிம்மதியா புள்ள குட்டிகளோட இருக்கலாந்தான. அவ சுபைதாவும் இதத்தான் சென்னா. அவ செல்றத்திலேயும் நியாயம் இரிக்கிமெண்டு நான் யோசிச்சி பாத்ததில எனக்;கும் அதான் நல்லதா படுகுது”.
சுபைதா முந்தானைத் தலைப்பை வானை நோக்கி உயர்த்துகிறாள்.
“யா அல்லா நான் நினைச்சா போல அவர்ற மனச மாத்திப்போட்டாய்”
——-(முற்றும்)———
காத்தநகர் முகைதீன் சாலி
0777971414
mohideensaly62@yahoo.com
(அனுமதியற்ற மீள்பிரசுரம் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளன)
*****************







ahamed said
very nice story
Faizeraman said
Congratulation to mr.SaliMohideen. great.
umar mohamed anzaar said
BROTHER MOHIDEEN SALY,
MUCHE APPRICIATED, FANTASTIC
raheem said
excellant story,everyone should read who has decided to go to abroad.
pothumahan said
ஒரு சிறந்த படைப்புக்காக முகைதீன் சாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இது உங்கள் முதலாவது படைப்பாக இருக்காது என்று நினைக்கிறேன். இதற்கு முந்தைய தங்களது இலக்கிய படைப்புகளையும் இன்போவினூடாக வாசகர்களோ பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இது போன்ற இன்னும் பல சிறந்த படைப்புகளை உருவாக்குங்கள். ந்மது இலை மறை காயாக இருக்கும் உங்களை போன்ற பலருக்கு காத்தான்குடி இன்போ போன்ற ஒரு ஊடகம் ஒரு வரப்பிரசாதம் தான்.
AnniyanN said
very good story…Congratulations Mr.Mohideen Saly.