காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

யதார்த்தம் (சிறுகதை)

Posted by Kattankudi Web Community (KWC) on 17/10/2010

(வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட சிறுகதை ஒன்று முதல்முறையாக எமது இணையத்தளத்தில் பிரசுரமாகிறது. கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. அனுமதியற்ற மீள்பிரசுரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது)

-அபூ ஹம்ஸா-

 

1.

தொழிலை முடித்து வீடு வந்த களைப்பில் சற்று நேரம் சாய்வு நாட்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காதர் நானாவின் கண்கள் வீட்டுக்கூரையை மேய்ந்து கொண்டிருக்க அவரது மனது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது. கடந்த மாரியில் தன் குடும்பம் பட்ட கஷ்டங்கள் ஒவ்வொன்றாய் கண்முன் தோன்றின. ஒவ்வொறு மாரிக்கும் ஒரிரு கண்களால் அழும் இந்த கூரை கடந்த மாரியில் பல கண்களால் அழுது இவர்களை படாத பாடுபடுத்தி விட்டது. இந்த வருட மாரி வருவதற்கு முதல் எப்பாடு பட்டாவது கூரையை புனர்நிர்மாணம் செய்வதுதான் இந்த ஆண்டு வரவு செல்வு திட்டத்தின் பிரதான பணியாக இருந்தது அவருக்கு.


காதர் நானா அன்றாடம் அயல் கிராமங்களுக்கு சென்று வியாபாரம் செய்யும் ஒரு ஏழை வியாபாரி. வறுமை கோட்டுக்குள் வாழ்ந்தாலும் தன் அயராத உழைப்பினால் யாரிடமும் கையேந்தாமல் மூன்று பெண்பிள்ளைகளையும் மனைவி சுபைதா உம்மாவையும் நன்றாகவே கவனித்து வருகிறார். படிப்பறிவு குறைவானாலும் மார்க்க விடயத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கடற்கரைக்கு அருகாமையில் இவர்களுக்கு இருந்த காணி சுனாமியால் பாதிக்க பட்டபோது கூட அதில் வீடு இருந்ததாக சொல்லி மனு செய்தால் புது வீடு பெற்றுக் கொள்ள முடியும் என்று பலர் ஆசை காட்டியும் காதர் நானா அதை விரும்ப வில்லை. ஹராமான எந்த சொத்தும் என் குடும்பத்தில் சேர கூடாது என்பதில் அவர் உறுதியாகவே இருந்தார்.

இந்த வருட ஆரம்பம் முதலே வீட்டு கூரைக்காக சிறுக சிறுக சேர்த்து வந்த பணத்தை தன் மூத்த பிள்ளைக்கு எதிர்பாராமல் வந்த சுகயீனத்திற்காக செலவளிக்க வேண்டி ஏற்பட்டதால் கூரையை பழுதுபார்க்கும் திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலை அவரை ஒவ்வொருநாளும் ஆட்கொண்டது. சிந்தனைகளில் முழ்கியிருந்தவரை வாசலில் யாரோ அழைக்கும் குரல் நிதர்சனத்திற்கு கொண்டுவந்தது.

 

வாசலில் அயல் வீதியில் வசிக்கும் ஓரிரு இளைஞர்கள் நிற்பதை கண்டு அவர்களை நோக்கி சென்றார்.

 

“நானா, எதிர்வருகின்ற தேர்தலில் நமது சேரை ஆதரித்து வோட்டு கேட்டு வந்திருக்கோம். நாம எல்லோரும் சேர்ந்து சேரை எப்படியாவது வெல்ல வைக்கணும். உங்களுக்கே தெரியும் நமது வீதி மேடும் பள்ளமுமாக இருந்ததால நாம எவ்வளவு கஷ்டபட்டோம். சேர்ர முயற்சியாலதான் இன்டைக்கு கொங்க்றீட் வீதியா மாறியிருக்கு, இதுக்கெல்லாம் நன்றி கடனாக நாம அவருக்கே ஓட்டு போடனும்..”

மூச்சு விடாமல் பேசி முடித்தான் நன்றாக அறிமுகமுள்ள ஒரு இளைஞன். காதர் நானா தலை ஆட்டியவாரே அவர்கள் கொடுத்த பிரசுரங்களை பெற்று கொண்டார். கதவறுகில் நின்று கேட்டு கொண்டிருந்த சுபைதா உம்மா “நாங்க என்றைக்கும் சேர்ர பக்கம் தான் மன, அவருக்குதான் ஓட்டு போடுவோம்” என்று சொன்னது கேட்டு மலர்ந்த முகத்துடன் அடுத்த வீடு நோக்கி சென்றது இளைஞர் அணி.

 

காதர் நானாக்கு அரசியலில் ஆர்வமில்லை. அவரது குடும்ப சுமை அதற்கெல்லாம் அவருக்கு இடம் கொடுக்கவுமில்லை. ஆனால் சுபைதா உம்மா தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் பேசுவா, அயல் வீடுகளில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் தனது அபிமான அரசியல்வாதிக்கு ஆதரவாக‌ ஆர்வத்துடன் பிரச்சாரம் செய்வா.

 

“என்னங்க, இந்த முறையும் வோட்டு போடாம இருக்காதீங்க நமது வீதிய கொங்க்றீட் ரோட்டா மாற்றிதந்த‌ நன்றிக்காவது சேருக்கு வோட்டு போடுங்க” என்று முணுமுணுத்தவாறே சமயலறை பக்கம் சென்றார் சுபைதா உம்மா.

 

காதர் நானாக்கு எல்லாமே ஒரு காதுவழி புகுந்து மறுகாது வழி சென்றதே தவிர மனது முழுக்க கூரை பற்றிய சிந்தனையே ஆட்கொண்டிருந்தது. அல்லாஹ்தான் ஒரு வழி காட்ட வேண்டும் என்ற பெருமூச்சோடு இஷா தொழுகைக்கு செல்ல தயாரானார் காதர் நானா. தொழுது முடிந்து வீடு வந்த வருக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.

 

வழமை போல் சாய்வு நாட்காலியில் அமர்ந்து திக்ர் செய்து கொண்டிருந்தவர் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் மூத்த மகள் ஆயிஷா. ஆயிஷா படிப்பில் நல்ல திறமைசாலி வகுப்பில் அனேகமாக முதல் பிள்ளையாகவே வருபவள். காதர் நானாக்கு ஆயிஷா என்றால் உயிர். திருமணம் முடித்து நான்கு வருடங்கள் பிள்ளை இல்லாமல் இருந்து கிடைத்த முதல் பிள்ளை. தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை என்று காதர் நானா அடிக்கடி சொல்வார்.

 

காதர் நானாவின் திக்ரை கலைத்து ஆயிஷா பேச்சை ஆரம்பித்தாள்.

 

“வாப்பா, டிசம்பர்ல எனக்கு பரீட்சை இருப்பது தெரியும் தானே, போன மாரியில மாதிரி இந்த மாரிக்கும் வீடு ஒழுகிட்டு இருந்தா என்னால எப்படி வாப்பா ஒழுங்கா படிக்க முடியும்? கூரையை திருத்த வைத்திருந்த பணத்தில்தானே எனக்கு வைத்தியம் செய்தீங்க அதனால என்ட இந்த பதக்கத்த விற்று கூரை வேலையை பாருங்க வாப்பா..!”

 

ஆயிஷாவின் வார்த்தைகள் காதர் நானாவின் மனதில் இருந்த கவலையை மேலும் அதிகரித்தது. தன் பிள்ளைகளுக்கு தங்க நகை போட்டு பார்க்க முடியலயே என்று அடிக்கடி கவலைபடுவார். ஆயிஷா அகில இலங்கை ரீதியாக நடந்த தமிழ் தின விழா போட்டிகளில் கலந்து கொண்டு பெற்று வந்த தங்க பதக்கம் மட்டுமே அவர்கள் வீட்டில் தங்கம் என்று இருந்து வந்தது. தன் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக அவள் அதை பாதுகாத்து வந்தாள். வீட்டில் பண நெருக்கடி வரும் போதெல்லாம் சுபைதா உம்மா எப்படியாவது அதை அடகு வைக்க முயற்சிப்பார் ஆனால் வட்டிக்கு வைக்க நான் ஒருபோதும் தரமாட்டேன் என்று ஆயிஷா அதை கொடுத்ததே இல்லை. காதர் நானாவும் அதற்கு விரும்புவதில்லை. இப்போது அதை விற்று விட சொல்லும் மகளின் வார்த்தைகள் முள்ளாய் மனதில் குத்தினாலும் அதை விட வேறு வழியும் அவருக்கு இருக்க வில்லை. குடும்ப சூழலை உணர்ந்து நடக்கும் பிள்ளையாக ஆயிஷாவை பார்த்து அல்லாஹ்வை புகழ்ந்துகொண்டார்.

 

***

2.

மகளின் தங்க பதக்கத்தை விற்ற காசோடு ஒருநாளைக்கு இரண்டு சந்தைகளுக்கு சென்று வியாபாரம் செய்து இடைவிடாது உழைத்து ஒருவாறு கூரையின் திருத்த வேலைகளை செய்துமுடித்தார் காதர் நானா. பல மாதங்களாக மனதை அடைத்திருந்த பெரும் சுமையை இறக்கி வைத்த நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது.

 

முன்பெல்லாம் வானம் கொஞ்சம் இருட்டி விட்டாலே காதர் நானாவின் மனதிலும் கவலை வந்து ஒட்டிவிடும். ஆனால் இன்று வானம் நன்றாகவே இருட்டி ஒரு அடைமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டும் காதர் நானா நிம்மதியாக உறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தார்.

மழை பெய்யும் இரவுகளில் கூரை எங்கெங்கே அழுகிறது என்று மோப்பம் பிடித்து அங்கங்கே பாத்திரம் வைக்கவேண்டிய அவஸ்தை இன்று இல்லை. “மாரி தொடங்க இன்னும் ரெண்டு மூனு மாசம் இருக்கே, இன்டைக்கு என்ன திடீரென இப்படி மழை பெய்கிறது..” என்று மனதிற்குள் எண்ணியவாரே உறங்கிப் போனார்.

 

சுபஹுக்கு பாங்கு சொல்ல இன்னும் சற்று நேரம் இருக்கையில் ஆயிஷாவின் குரல் கேட்டு திடீரென விழித்தார்.

 

“வாப்பா, மண்டபத்துக்குள்ள தண்ணி வருது..”

 

காதர் நானாவுக்கு ஒன்றும் புரியவில்லை. கூரையயை அங்கும் இங்கும் பார்த்தார் அது எங்கும் அழுவதாக தெரியவில்லை. வீதியில் இருந்துதான் வெள்ளம் வீட்டுக்குள் வருகிறது என்று புரிந்து கொண்ட அவர் இன்னும் தாமதிதால் மண்டபத்துக்குள் வந்த தண்ணீர் உள்வீட்டுக்குள்ளும் நுழைந்துவிடுமென்பதால் உடனடியாக தண்ணீரை வடிக்கும் வேலையில் இறங்கினார். மொத்த குடும்பமும் தூக்கம் மறந்து தண்ணீரை தடுக்கும் போராட்டத்தில் இறங்கியது.

மழை சற்று ஓய்ந்த கையோடு சுபஹ் தொழுகைக்காக புறப்பட்டு சென்றார் காதர் நானா. பள்ளியில் இருந்து வரும் வழியில் பக்கத்து வீட்டு கணித ஆசிரியர் பஷீர் சேருடன் பேசிக்கொண்டே வந்தார்.

 

“சேர், இன்று இரவு கடும் மழை பெய்திருக்கு போல, என்றைக்குமில்லாதவாறு எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிட்டது”

 

“காதர் நானா, உங்களுக்கு இன்னும் புரியவில்லையா.? அப்படி ஒன்றும் வரலாறு காணாத மழை பெய்யவில்லை. நமது வீதி முதல் பள்ளம் குழியுமாக இருந்தாலும் பெரும்பாலான வீடுகளின் மட்டத்துக்கு கீழே இருந்ததால் மழைநீர் நன்றாக வடிந்தோடக்கூடியதாய் இருந்தது ஆனால் இப்போது கொங்க்றீட் வீதி அமைத்தவர்கள் வீடுகளின் மட்டங்களை கவனத்தில் கொள்ளாமலும் சீரற்ற முறையிலும் இந்த வீதியை அமைத்து இருப்பதால் மழைநீர் அனைத்தும் வீடுகளை நோக்கி வழிந்தோடுகிறது. ஒரு இரவு மழைக்கே உங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிட்டது, வருகின்ற மாரியில் உங்கள் நிலைமைய நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது, என்ன செய்வது காதர் நானா மக்களுக்கான அபிவிருத்தி என்று சொல்பவர்கள் மக்களின் நலனை கவனத்தில் கொள்வதாக இல்லையே!”

 

பஷீர் சேர் சொன்ன வார்த்தைகளால் ஆடிப்போனார் காதர் நானா. சூறாவளியில் இருந்து தப்பித்தவனை சுனாமி வந்து தாக்கியதுபோல் ஆகிவிட்டது அவரது நிலைமை. நீர் இறைத்த களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கி போய் இருக்க காதர் நானாவுக்கு தூக்கம் தொலைந்து போய் விட்டது. இன்று தொழிலுக்கு போகும் மனோ நிலையும் அவருக்கு இல்லை. பஷீர் சேரின் வார்த்தைகள் மனதுகுள் திரும்ப திரும்ப ஒலிக்க சாய்வு நாட்காலியில் அமர்ந்தவாறே சிந்தனையில் ஆழ்ந்தார்.

காதர் நானா யாருடனும் எந்த வம்புக்கும் போகாதவர் தான் எவ்வளவு வறுமையில் வாழ்ந்தாலும் தன்னால் யாருக்கும் அநீதி நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். தனக்கு நிகழ்ந்திருக்கும் இந்த அநீதிக்கு யாரிடம் நியாயம் கேட்பது என்பது அவருக்கு புரியவில்லை. தேர்தல் வந்தால் மட்டும் வாசல் வரை வரும் அரசியல் வாதிகள் நமக்கு ஒரு கஷ்டம் என்று வரும் போது அவர்களை சென்று சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியா இருக்கின்றார்கள்? இன்றய நிலையில் அவரை சந்திப்பது என்னை போன்ற ஏழைகளுக்கு முடியுமான காரியமா? இவ்வாறு பல்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்தவருக்கு இறுதியாக நகரசபைக்கு சென்று தன் நிலைமையை எடுத்து சொல்வதுதான் ஒரே வழியாக தோன்றியது.

பல மணிநேர காத்திருப்புக்கு பின்னால் முக்கிய பொறுப்பில் உள்ள நகரசபை உறுப்பினர் ஒருவரை சந்திக்க முடிந்தது காதர் நானாக்கு. தன் வீட்டின் பரிதாப நிலையை அழாதகுறையாய் எடுத்து சொன்னார்.

 

“இங்க பாருங்க நானா, ஊரின் அபிவிருத்தி என்பது நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண காரியமில்ல. நாங்க எவ்வளவோ அர்ப்பணிப்புடன் மக்களின் நன்மை கருதி எமது தலைவரின் வழிகாட்டுதலில் இவற்றை செய்து வருகின்றோம். உங்கள் வீதி எந்த குறையுமில்லாம சரியாக போடப்பட்டு விட்டது என்ற தொழில்நுட்ப உத்தியோகத்தரின் உத்தரவாதத்துடன் தான் அதற்காக கொடுப்பணவுகளும் கொடுத்து முடிந்து விட்டது. இப்போது யாரோ ஏதோ சொன்னார்கள் என்பதற்காக இங்கு வந்து நீங்கள் முறையிடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. இனிமேலும் இப்படி வந்து எங்க நேரத்தை வீணாக்காதிங்க, எங்களுக்கு எத்தனையோ கடமைகள் இருக்கிறது…”

காதர் நானாக்கு பதில் பேச முடியவில்லை.

“அழுதாலும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது,
அறுகம் புல் புத்தி சொல்லி அரிவாள் கேட்காது,,!

எங்கோ கேட்ட வரிகள் மனதுக்குள் ஒலிக்க நடை பிணமாய் வீடு வந்து சேர்ந்தார். தேநீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு ரேடியோவையும் போட்டுவிட்டு போனாள் ஆயிஷா.

 

“விஷேட அறிவித்தல்:

கிழக்கு மாகாணத்தின் கடலை அண்மித்த பகுதிகளில் தாழமுக்கம் நிலை கொண்டிருப்பதால் சில நாட்களுக்கு கனத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…”

 

வானொலியில் இருந்து ஒலித்த வார்த்தைகள் காதர் நானாவின் காதில் பேரிடியாய் விழுந்தது. மனது மொத்தமாய் நொறுங்கிப் போனவராய் சாய்வு நாட்காலியில் அமர்ந்தவாரே லேசாக கண்ணயர்ந்தவர் காதில் எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்த இன்னுமொரு அறிவிப்பும் விழுந்தது.

” எமது தலைவர், ஏழைகளின் தோழன், மக்கள் நண்பன் …. அவர்களின் அர்ப்பணிப்புடனும் அயராத உழைப்பினாலும் எமதூரில் தொடராக முன்னெடுக்கப் பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் தொடரில்  அமைக்கப்பட்ட 94 வது கொங்கிறீட் வீதி இன்று பிற்பகல் திறந்து வைக்கப் படவுள்ளது ….”

(முற்றும்)

9 Responses to “யதார்த்தம் (சிறுகதை)”

  1. nila said

    ithil yarai krippittu kuruhinreer

  2. Son of kky said

    சூப்பரு யக்கோவ்! சிந்திக்க வைக்கும் கருத்துடன் கதை அருமை, யதார்தத்தை நச்சென்று கூறும் கதை! இவ்வளவு துல்லியமாய் யதார்தத்தை காண்பித்த கதையாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  3. msahamed said

    கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. sema comedy

  4. pothu mahan said

    யதார்த்தங்களை எடுத்து சொல்வதற்கு சிறுகதை ஒரு சிறந்த வழிமுறையே.
    நமது சமூகத்தில் ஊடகத்துறை இன்று வளர்ச்சி கண்டிருந்தாலும் இலக்கியத்துறை இன்னும் வளர்ச்சியடையவில்லை நமதூர் இலக்கிய ஆர்வளர்களின் படைப்புகளும் சரியாக ஆவன படுத்தப் படவுமில்லை.

    ஒரு கால நிகழ்வுகளை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வதற்கு சிறுகதை போன்ற இலக்கிய படைப்புகள் மிகுந்த பங்களிப்பு செய்யமுடியும். அவ்வாறான படைப்புகள் நம் சமூகத்தில் உருவாக வேண்டும்.
    எண்பது, தொன்னூறுகளில் யுத்தத்தால் நம் சமூகம் பட்ட கஷ்டங்கள், அப்போதய மனோ நிலைகள் இன்றய பெரும்பாலான தொன்னூருகளுக்கு பிறகு பிறந்த இளைஞர் யுவதிகளுக்கு தெரியவில்லை. அதே போல எத்தனையோ நமது பழமை வாய்ந்த நடைமுறைகள், வழக்கங்கள் இன்று மறைந்து போய் விட்டது.
    அந்த நாட்களில் இவ்வாறான படைப்புக்கள் தோன்றி இருந்தால் அவற்றை தெரிந்து கொள்ள அவை உறுதுனையாக இருந்திருக்கும்.

    அன்றய காலங்களில் இலக்கிய ஆர்வமுள்ள பலருக்கு தங்கள் படைப்புக்களை வெளிக்கொணர சரியான் ஊடகங்கள் இல்லாத குறை இருந்தது. இன்று ஊடகங்கள் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் படைப்பளர்கள் குறைந்து விட்டார்கள்.

    சமூக விளிப்புணர்வை ஏற்படுத்தும் இவ்வாறான படைப்புகள் இன்னும் நம் சமூகத்தில் வளர்ச்சியடைய வேண்டும்

  5. இது வெறும் கதையல்ல எதிர்காலத்தில் நமதூரின் கறுப்புச் சரித்திரம். முதன் முதலாய் 1ம் குறிச்சியில் மீரா ஜும்மா பள்ளியின் முன்வீதியில் கொங்கிறீட் வீதி போடும் போது நாங்கள் எந்தக் கருத்தில் இருந்தோமோ அந்தக் கருத்தினை கதையாய் கொடுத்த நம்மூர் நண்பனுக்கு நன்றி.

    கதையின் யதார்த்தமும் புரிகின்றது
    நமதூரின் அபிவிர்த்தியின் அவசரமும் தெரிகின்றது.

    “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”

    அல்லாஹ் போதுமானவன்.
    உங்களுடன்…
    பௌமி-கட்டார்.

  6. aboo said

    ITHU KATPANAIYO ITHIL VARUM SAMPAVANGAL KATPANAYO ALLA.YARAIO KURIPPIDDU VIRAL NEEDDI KADDIYULLAR KATHASIRIYAR.CONCRETTE VEETHIKAL NAMATHU ARASIYALVATHIYAL MADDUM MUNNEDUKKUM ORU PANI ALLA.NADU MULUVATHUM NADAKKUM APIVIRUTHTHI.VELAIKAL KURAIPADU KANAPPADDAL SUDDIKKADDA VENDIYATHU NAMATHU KADAMAITHAN AANAL NAMO VELAI MUDINTHAPIN PULAMPA MADDUME THERINTHAVARKAL.APPADI ORU KATHAPATHTHIRAME INGU KADDAPPADDIRUKKIRATHU.GRAVEL PODDA EMATHU OLUNGAIKALIN SEERALIVAI MALAIKKALANGALIL NAM ANUPAVITHTHULLATHA MARUKKA MUDIUMA? EVVALAVU KALATHTHITKU NAM VAIKKOL KADDU NADAYANKALAKA IRUKKAPPOKIROM…..

    • pothu mahan said

      அபிவிருத்தி பணிகளை அரசாங்கம் அரசியல் வாதிகளூடாகவே முன்னெடுக்கின்றன. அரசாங்கம் அபிவிருத்திக்காக பணம் ஒதுக்குவது மக்கள் பயனடைய வேண்டும் என்பதே அல்லாமல் அரசியல் வாதிகள், மற்றும் அவர்களின் சகாக்களின் பக்கட்டுகள் நிரம்ப வேண்டுமென்பதற்கல்ல. எந்த ஒரு அபிவிருத்திபணியும் மக்களின் நூறு வீத நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப் படுவதற்கு அந்த அபிவிருத்தி நன்கு தேர்ச்சியடைந்த நிபுநர்களின் வழிகாட்டுதலுடனும், திட்டமிடலுடனும் அமுல்படுத்த படவேண்டும். அவ்வாறான நடைமுறை நமதூரில் நடைமுறைபடுத்தப் பட்டதா என்று உங்கள் மனதை தொட்டு கேட்டுகொள்ளுங்கள் அபூ..

      மக்கள் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு நேர்த்தியாக அபிவிருத்தி நடைபெற்று இருந்து அதில் தவரு நேரும் போது நல்ல முறையில் சுட்டிகாட்டவேண்டியதுதான் சரியான நடை முறை. ஆனால் அபிவிருத்தி என்ற மாயை மட்டும் காட்டி அமுல்படுத்தப்படும் தூரநோக்கற்ற அபிவிருத்திகளை இப்படித்தான் மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டியிருக்கிறது.

      குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட கதையாய் அல்லவா போய் விட்டது இன்றய அபிவிருத்தி பணிகள்.

      இவ்வாறான சிறுகதைகள் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை திருத்திக் கொள்ளவோ அல்லது திருந்தி நடக்க கூடியவர்கள் கையில் மக்கள் அதிகாரத்தை கொடுக்கவோ வழியேற்படலாம்.

      சமூகத்தை நிர்கதிக்குள்ளாகும் விடயங்களை சுட்டிக்காட்டுவது வைக்கோல் கட்டு நடயன்களின் வேலை என்றால் அபிவிருத்தி என்ற பேரில் தங்கள் வயிருகளை மட்டுமே கவனத்தில் கொண்டு மக்கள் நலனை குழிதோண்டி புதைப்பவர்களை உங்கள் பார்வையில் என்னவென்று சொல்வீர்கள்..?

      நாட்டில் பற்றும் தீ தன் சட்டை பையில் பற்றாத வரை எவனும் ச்ப்தமிடுவதில்லை என்பது போல நீங்கள் நேரடியாக பாதிக்க படாதவரை பாதிக்க பட்டுள்ள ஏழைகளின் உணர்வுகளை உங்களை போன்றவர்கள் புரிந்து கொள்வது சிரமம்தான்…

  7. Sodukku said

    ஆகா!! ஷோக்கான கத மன!! பொருத்தமான கத!! உன்மையலேயே இது யாதார்த்தந்தான் மன!!! உன்ட திறமைய காட்ட உனக்கு காத்தாங்குடி இன்போ வழி செஞ்சிருக்கு. நம்மட ஊர்ல இப்படியான ஆக்கள ஊக்குவிக்கிற குறைய. மற மன்டையில பிஸினஸும் ஊட்டு வேலயும் தான் ஏறும். வேற ஒன்டயும் ஊக்குவிக்கமாட்டாக.

    இருந்தாலும் மன இப்பவாற படிச்ச பிள்ளயல் இத ஏத்துக்கொள்ளும். உன்ட கதை வாசிக்ககுள்ள அது நல்லா விளங்குது. உட்டுடாத….. அல்லாஹ் உனக்கு தந்த இந்த ஆத்தல நீ நல்ல விசயத்துக்கு பாவிச்சுக்கொள்ளு….

    இந்த ஊருல நடக்குற அநியாயங்கள அக்கிரமங்கள இவனுகள்ற மற மன்டயில ஏத்துறத்துக்கு சிறுகத நல்ல வழி…

    உன்ட முயங்சி தொடரட்டும் … எதிர்காலத்துல சிறந்த சிறுகத எழுத்தாளனா நீ மேலும் மேலும் வளர ஆண்டவன் அருள் செய்யட்டும்!!! இன்ஷா அல்லாஹ்…..

  8. AnniyanN said

    Superb Story…..Thank You Aboo Hamza

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s