காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

வடக்கு கிழக்கு இணைப்பு: கழுவிய மீனில் நழுவிய மீனாய் முஸ்லிம் காங்கிரஸ்

Posted by Kattankudi Web Community (KWC) on 26/07/2010

தமிழர் தாயகக் கோட்பாட்டில் வடக்குக் கிழக்கு இணைப்பு மைய விடயமாக நீண்டகாலமாக இருந்து வந்தது; இன்னும் இருந்து வருகிறது. இவ்விணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி ஏறத்தாழ நான்கு வருடங்கள் முடிந்துள்ள நிலையில், இப்பிரச்சினை மீண்டும் கிளம்பியுள்ளது.

வரவு-செலவுத் திட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் இவ் வாறு கூறியுள்ளார்: “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா சென்று வடக்குக் கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நட வடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கின்றது. இதை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காது. இந்தியாவில் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்து விட்டு இங்கு வந்து முஸ்லிம்களு டன் பேச வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. கூட்ட மைப்பின் இந்த இரட்டை நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் ஏற்காது. வடக்குக் கிழக்கை மீண்டும் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கும் உரிமை கூட்டமைப்புக்கு இல்லை.”

இது இவ்வாறிருக்க, வடக்குக் கிழக்கு இணைப்பு தொடர்பாக அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாத நிலையில், அது பற்றி முஸ்லிம் காங் கிரஸ் அலட்டிக் கொள்ளவில்லை என வும் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருப்பதாகவும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

“வடக்கும் கிழக்கும் நிரந்தர மாக இணைக்கப்பட வேண்டும் என்ற நிலைப் பாடு உருவானால் முஸ்லிம்களுக்கென்று தனியான அதிகார அலகொன் றினை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைப்போம். வடக்குக் கிழக்கு இணைப்பு தொடர்பான ஆலோசனைகள் வரும் போது முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் வடக்குக் கிழக்கு இணைப்பை திட்டவட்டமாக எதிர்க்கிறார். கூட்டமைப்புக்கு இரட்டை நிலைப்பாடு இருக்கி றது என்று சாடுகிறார். ஆனால், கட்சித் தலைவரோ இது பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று மிகச் சாதாரண மாக கருத்துத் தெரிவிக்கி றார். உண்மையில் இரட்டை நிலைப்பாடு இருப்பது முஸ்லிம் காங்கிரஸி னுள்தான் என்பது இதிலி ருந்து தெளிவாகிறது.

கட்சியினுள்ளேயே தெளிவான நிலைப்பாடொன்றை எடுக்க முடியாத இக்குழப்ப நிலை, மு.கா. வின் உள் அரசியல் நிலையை திட்டவட்டமாக வெளிப்படுத்தி நிற்கிறது. இது இன்று நேற்று தொடங்கிய ஒரு நோயாக இருந்தால் கண்டும் காணாதது போல் இருந்து விடலாம். ஆனால், வடக்குக் கிழக்கு இணைப்பு தொடர்பான விவகாரம் மு.கா. முன்னாள் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் காலத்திலிருந்தே பேசப்பட்டு வரும் விடயம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் வடக்கு கிழக்கு இணைப்பு ஒரு பலவீன மான கோரிக்கை யாகவே பொது அரங்கில் நோக் கப்பட்டு வருகிறது. இதற்கு நீதி மன்றத் தீர்ப்பு மட்டும் காரண மல்ல. அதற்குப் பின்னர் உருவான இரா ணுவ அரசியல் சமநிலை மாற்றமும் இதற்கு கணிசமாகப் பங்களித்திருக்கி றது. குறிப்பாக புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், வடக் குக் கிழக்கு இணைப்பு பற்றிய வாதங்கள் மைய அரங்கில் சூடுபிடிக்க வில்லை. ஈழக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யும் வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு தமிழ்த் தேசிய சக்திகள் ஆளாகியுள்ளன.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாகவே வடக்குக் கிழக்கு இணைப்பு பேசுபொருளானது. அதிலும், இவ்விணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும், அதற்கு ஆதரவு கிடைத்தால் மட்டுமே இவ்விணைப்பு செல்லுபடியாகும் என வும் திட்டவட்டமாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த யதார்த்தங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு அரசியல் சக்திகளோ அறியாமல் கருத்துச் சொல்ல வில்லை. கிழக்கில் இவ் விணைப் புக்கு ஆதரவான பொதுமன நிலை இல்லை. அதிலும் குறிப்பாக அங்கு வாழும் முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் பிரிப்புக்கு ஆதரவான இந்நிலைப்பாடு பலமாக உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தேசிய இனப்பிரச் சினையில் பரஸ்பரம் கலந்துபேசி பொது இணக்கப்பாடொன்றிற்கு வருவதற் கான சாதகமான சமிக்ஞைகள் அண்மைக்காலமாக பல தடவைகள் வெளிப் படுத்தப்பட்டன.

ஆனால், கூட்டமைப்பின் ஒருதலைப்பட்சமான வடக்குக் கிழக்கு இணைப்புக் கோரிக்கை அக்கட்சி இன்னமும் முஸ்லிம் மக்கள் விடயத்தில் அக்கறை யற்ற அலட்சியப் போக்கைக் கைக்கொள்வதையே புலப்படுத் துகிறது. கடந்த காலத்திலிருந்து அது எந்தப் பாடங்களையும் கற்றுக்கொள்ள விரும்பவில் லையோ என்றுதான் எண்ணத் தோன்று கிறது.

ஆனால், மு.கா. தலைவரின் நிலைப்பாடுதான் புருவங்களை உயர்த்த வைக் கிறது. எப்பாடு பட்டாவது தமிழ்க் கூட்டமைப்பைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் அவர் மிகவும் குறியாக இருக்கிறார். மீண்டும் இணைப்பு, இணைப்புக்குள் தனி முஸ்லிம் அலகு என்ற பழைய வாய்ப்பாட்டையே அவர் ஒப்புவிக்கிறார்.

போதாததற்கு இதை அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று வேறு சொல்கிறார். எதை அலட்டிக் கொள்ளத் தேவை யில்லை? ஒன்றாகக் கலந்து பேசி சிறுபான்மையினருக்கான பொதுநிலைப்பாட்டை எடுப் பதை மறந்து விட்டு, ஒருதலைப் பட்சமாக்க கூட்டமைப்பு செயல்படுவதை அவர் அலட்டிக் கொள்ள வில்லையா? அல்லது முஸ்லிம் களது விவகாரத்தை கூட்டமைப்பு எவ்வளவு தூரம் குறைத்து மதிப்பிடுகிறது என்பதை அவர் அலட் டிக்கொள்ள வில்லையா?

அவ்வாறாயின், எதைத்தான் அவர் அலட்டிக்கொள்ளப் போகிறார்? நட்பு வேறு, அரசியல் நிலைப்பாடு வேறு. கூட்டமைப்பைத் திருப்திப்படுத்த பேசும் அதே வசனங்கள் முஸ்லிம் சமூகத்தைத் திருப்திப்படுத்தாது என்பதை அவர் புரிந்து கொண்டு தான் பேசுகிறாரா? இது இரு முனைகள் கொண்ட கத்தி என்ற உண்மை மு.கா. தலைவருக்கு உறைக்கவில்லையா?

கிழக்கு மாகாணம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக அடையாளம் காணப்படுவது வழக்கம். ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.கா.வை விடவும் அரச ஆதரவு கட்சிகளுக்கே அங்கிருக்கும் முஸ்லிம்கள் அதிகளவு வாக்களித்திருப்பதை மு.கா. மறந்துவிட்டதா?

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை புனரமைக்கும் வேலைத்திட்டங்களை முன் னெடுத்துவரும் நிலையில், இவ்வாறான தொலைநோக் கற்ற பார்வைகள் எங்கு போய் முடியும்? வரலாற்றுத் தவறுகள் தொடரத்தான் போகின்றனவா?

கட்சியின் ஒரு தரப்பினர் அரசுடன் இணையப் போவதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும் ஒரு நிலையில், பூசி மெழுகும் வார்த்தைகளை ஒதுக்கியே ஆக வேண்டும். நிலைப்பாடுகளை மழுப்பல் இல்லாமல் திட்டவட்டமாக எடுத்தாக வேண்டும்.

முஸ்லிம் தரப்பின் நியாயத்தை உறுதியாகப் பேசுவதற்குத்தான் மு.கா. என்ற தனிக் கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர். தமிழர் தரப்பு தப்பாக நினைத்து விடுமோ என்று அங்கலாய்ப்பதை விட்டுவிட்டு, முஸ்லிம் தரப்பு வாதங்களை வலுவான நியாயங்களுடன் முன்வைப்பதையே முஸ்லிம் தலைமைகளிடமி ருந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நிலைப்பாடு என்பது வேறு. விட்டுக்கொடுப்பு என்பது வேறு. நிலைப்பாடு இல்லாமல் எதை விட்டுக் கொடுப்பது? விட்டுக் கொடுக்க விரும்பினால் முதலில் திட்டவட்டமான நிலைப்பாடு வேண்டும். இதை முஸ்லிம் காங் கிரஸ் தலைமை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

கழுவிய மீனில் நழுவிய மீனாக இருப்பதை இனியாவது மு.கா. தலைமை கைவிடுமா? அப்படி எதிர்பார்ப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவா கவே உள்ளன.

சிராஜ் மஷ்ஹூர்

Courtesy: மீள்பார்வை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s