காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

மாணவ சமுதாயத்தின் நடத்தைக் கோலங்கள்

Posted by Kattankudi Web Community (KWC) on 26/07/2010

பல்கலைக்கழகங்களில் உருவாகின்ற வன்முறைகளால் மாணவர் பலரின் எதிர்காலமே சூனியமாகிப் போயுள்ளது. பகிடிவதையென்பதன் பேரில் உருவான சிறிய சேஷ்டைகள் இறுதியில் வன்முறையில் முடிவடைந்து, சம்பந்தப்பட்ட சிரேஷ்ட மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியையே இடைநடுவில் கைவிட்ட சம்பவங்களும் நாட்டில் இடம்பெற்றுள்ளன.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவனான வரப்பிரகாஷ் என்பவர் மிகக் கொடுமையான பகிடிவதைக்கு உள்ளாகி பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதையடுத்து, இவ்விவகாரமானது முன்னர் அனைவரையும் விழிப்படைய வைத்தது. பகிடிவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டதுடன் பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று நடவடிக்கையும் தீவிரமடைந்தது.

ஆனாலும் பகிடிவதை முற்றாக நின்று விடவில்லை. இன்றுவரை ராகிங் கொடுமை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் மாத்திரமன்றி தொழில்நுட்பக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்களிலும் பகிடிவதைகள் தொடருகின்றன.

பல்கலைக்கழகங்களில் தலைதூக்குகின்ற வன்முறைகள் மற்றும் மோதல்களுக்கு பகிடிவதை மட்டுமே காரணமெனக் கூற முடியாது. சிறு சம்பவங்கள் கூட அங்கு பெரும் மோதலாக மாறுவதுண்டு. இருவேறு பீடங்களைச் சேர்ந்த இரு மாணவரிடையே ஏற்படுகின்ற தனிப்பட்ட சச்சரவும் இறுதியில் கோஷ்டி மோதலாகி விடுவதுண்டு. பல்கலைக்கழக உடைமைகளுக்குப் பெரும் சேதம் ஏற்படுவதுடன் பொலிஸார் தலையிட வேண்டிய அவசியமும் உண்டாகிறது.

மூன்றாவது விடயமாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்ற உரிமைப் போராட்டங்களைக் குறிப்பிடலாம். இம்மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக உரிமைப் போராட்டங்களில் இறங்குகின்றனர். பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, விரிவுரையாளர்களுடனான முரண்பாடுகள், உயர் கல்வியமைச்சின் கொள்கைகளுடன் இணங்கிப் போக முடியாமை போன்ற காரணங்களுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்துவதை நாம் காண்கிறோம்.

மாணவர்கள் பகிஷ்கரிப்புடன் மாத்திரம் நின்று விட்டால் பிரச்சினைகள் உருவாகப்போவதில்லை. வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி, உடைமைகளுக்குச் சேதம் விளைவித்து, ஊர்வலமாகப் புறப்படும் போதே வன்முறைகளும் தலைதூக்குகின்றன.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் எவ்விதம் நடைபெறுகின்றன வென்பதை நாம் இங்கு விபரித்துக் கூற வேண்டியதில்லை. தொலைக்காட்சி ஊடகங்களில் அவற்றை நாம் நேரடியாகக் காண்கிறோம். ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் கட்டுமீறிச் சென்று அமைதிக்குப் பங்கம் ஏற்படுகின்ற போது பொலிஸார் தலையிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்ற எல்லா எதிர்ப்பு நடவடிக்கைகளுமே அமைதி வழியில் இருந்து விடுவதில்லை. அவர்களது சில எதிர்ப்பு நடவடிக்கைகள் பொலிஸாரின் தலையீட்டை அவசியத்துக்குள்ளாக்கி விடுவதைப் போன்று அமைகின்றன.

அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டென்பதை ஒருபோதும் மறந்துவிடலாகாது. பொதுமக்களின் பாதுகாப்புக்குக் குந்தகமானதும், சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலையும் வகையிலும் வன்முறைகள் தலைதூக்குகின்றபோது குழப்ப நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.

இதன் போதே மோதலும் ஏற்படுவது வழக்கமாகும். பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் போராட்டங்களின் போது இடம்பெறுகின்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எமக்குப் புதியவையல்ல. சில பல்கலைக்கழகங்களை இதற்கென விசேடமாகக் குறிப்பிடலாம். உயர் கல்விக் கூடங்களில் நிகழ்கின்ற தெருச்சண்டை போன்ற நிகழ்வுகள் சாதாரண மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்துவதுண்டு.

பாமர மக்களை வழிநடத்த வேண்டிய கல்விச் சமூகமே இவ்விதம் வன்முறை யில் ஈடுபடுகின்ற போது சாதாரண மக்கள் இனிமேல் யாரை நம்ப முடியும்? அதேசமயம் கல்விச் சமூகம் மீது சாதாரண மக்களுக்கு அவநம்பிக்கையும் வெறுப்பும் ஏற்படுவது கூட தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

பல்கலைக்கழக வன்முறைகளின் தொடர்ச்சியாக ருஹுணு பல்கலைக்கழகத்திலும் வருந்தத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அருண பண்டார என்ற மாணவர் தாக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேளையில் மரணமடைந்துள்ளார்.

இம்மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இம்மாணவனின் மரணத்துக்குக் காரணமான சம்பவமானது பொலிஸாரின் தீவிர விசாரணையில் உள்ளது. இவ்விடயத்தில் ஜனாதிபதியும் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் மாணவர்களால் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையானது திசைமாறிச் சென்றதை யடுத்தே பரிதாபமான சம்பவமொன்று அங்கு ஏற்பட்டிருப்பது புரிகிறது.

மாணவன் ஒருவனைப் பறிகொடுப்பதென்பது பெற்றோர் மற்றும் உறவினர் மனங்களில் எத்தகைய ஆறாத வேதனையை ஏற்படுத்துமென்பதைக் கூற வேண்டிய அவசியமில்லை. அதேசமயம் குற்றமிழைக்கின்ற மாணவன் மீது பல்கலைக்கழக நிர்வாகங்கள் மேற்கொள்கின்ற ஒழுக்காற்று நடவடிக்கையின் போது அம்மாணவன் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்படும் விபரீதமும் ஏற்படுவதுண்டு. பெரும்பணம் செலவிட்டு எதிர்காலக் கனவுகளுடன் அம்மாணவனுக்குக் கல்வியூட்டி வருகின்ற பெற்றோர் மனதில் ஏற்படும் வேதனை கொஞ்சநஞ்சமன்று…

பல்கலைக்கழக மாணவர்கள் இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாவர். வாலிபத்தின் துடுக்குத்தனங்களால் எதிர்காலம் சீரழிவதற்கு இடமளிப்பது விவேகமன்று! 

Thinakaran:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s