காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

சுயமரியாதையாளர்களின் வெற்றி நிச்சயம்! -வேட்பாளர் புவி. றஹ்மதுல்லாஹ் நம்பிக்கை-

Posted by Kattankudi Web Community (KWC) on 27/03/2010

http://vaarauraikal.files.wordpress.com/2010/03/puvi-21.gif?w=116&h=145காத்தான்குடிப் பிரதேசத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிலும் சுய மரியாதையாளர்களின் வெற்றியே நிச்சயமானதாகும் என்று ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரும், ‘ஒக்கம வெசியோ ஒக்கம ரஜவரு’ (எல்லோரும் பிரஜைகள் எல்லோரும் மன்னர்கள்) கட்சியின் 5ம் இலக்க வேட்பாளருமான புவி. எம்.ஐ. றஹ்மதுல்லாஹ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது பத்திரிகை மற்றும் இணையதள வாசகர்களுக்கும், காத்தான்குடிப் பிரதேச வாக்காளர்களுக்கும் விடுத்திருக்கும் தேர்தல் பிரச்சார அறிக்கையின் விபரமாவது:

நான் இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு அரசியலைத் தொழிலாகச் செய்துவரும் மக்கள் பிரதிநிதியாகச் செல்லும் நோக்கத்துடன் போட்டியிடவில்லை. அரசியல் அதிகார அடக்குமுறைகளாலும், அடாவடித்தனங்களாலும் தங்களுக்கு நேருகின்ற அவலங்களையும், அநியாயங்களையும் வாய்திறந்து சொல்ல முடியாத இப்பிரதேசத்தின் நலிவுற்ற மக்களின் குரலாகவும், சமூகத்தின் காவல் நாயான இப்பத்திரிகை வெளியீட்டுப் பணியை சுதந்திரமாக எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லவும், ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படை உரிமைகளையும், சுய மரியாதையையும் இப்பிரதேசத்தில் உறுதிப்படுத்தும் நோக்கத்துடனுமே போட்டியிடுகின்றேன்.

இப்பிரதேசத்தில் மக்களின் ஆணைகளைப் பெற்று அதிகாரத்திற்கு வருகின்ற அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த பல்லாயிரக் கணக்கான மக்களின், மார்க்க அறிஞர்களின், கல்விமான்களின், புத்திஜீவிகளின் மன ஆதங்கங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் ஒரு சிறு தொகையிலான அடிமட்ட வட்டத்தினரை மாத்திரம் தங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்றபடி மக்களை அடக்கியொடுக்கி குந்தச் செய்துள்ளதுடன், அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் தரகுப் பணங்களைப் பெற்று உழைக்கும் வழிகளையே மேற்கொண்டும் வந்துள்ளனர். எந்தவொரு அபிவிருத்தி வேலையிலும் தரகுப்பணம் பெறாமல் அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் மக்கள் நலன் கருதிச் சேவை செய்வதில்லை. செய்ததாக வரலாறும் இல்லை.

இந்த இலட்சணத்தில் இந்த அரசியல் தாதாக்கள் சில அடியாட்களையும் தங்களுடன் வைத்துக் கொண்டு மக்களை அடக்கியாளவே இன்னமும் முனைகின்றனர்.  உலமாக்கள் என்றோ, கல்விமான்கள் என்றோ, ஏழை எளியவர்கள் நலிவுற்றவர்கள் என்றோ அவர்கள் தராதரம் பார்ப்பதில்லை. அவர்களது விருப்பத்திற்குமாறான கருத்துடையவர்களாக எத்தகையோர் காணப்பட்டாலும் குண்டர்களைக்கொண்டு இருட்டடியும், தீவைப்புமாக அடாவடித்தனம் செய்து அச்சுறுத்தி இம்மக்களை அடக்கியே ஆளுகின்றனர்.

தேர்தல்கள் வந்தால் மாத்திரம் மேடைகள் போட்டும், தடீர் அலுவலகங்கள் திறந்தும், அபிவிருத்தி என்றும், வேலைவாய்ப்பு என்றும் ஒப்பாரி வைத்து தங்களது பேச்சுவன்மையால் மக்களைத் திசை திருப்பி மீண்டும் மீண்டும் வாக்குகளைக் கொள்ளையிடும் முயற்சியிலே இவர்கள் ஈடுபடுகின்றனர். நமது மக்களும் கடந்த காலங்களில் தமக்கு நடந்தவைகளை எல்லாம் அறவே மறந்துவிட்டு மீண்டும் இந்த மாயாஜால வார்த்தைகளுக்கு மயங்கி தமது வாக்குகளை இந்த தாதாக்களுக்கே வழங்கு கின்றனர்.

எமது வீடுகளில் நிம்மதியாக இராப்பொழுதில் மனைவி மக்களுடன் தூங்க முடியாதுள்ளது. முகமூடிக் குண்டர்கள் திடுதிப்பெனப் புகுந்து தாக்குதல்களை நடத்திவிட்டுச் செல்கின்றனர். எமது வர்த்தகங்களைப் பொருட்படுத்தாது, வர்த்தகர்களின் கருத்துக்களைக் கருத்திற் கொள்ளாது அவர்களுடைய வருமானமீட்டும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அதிகாரத்தை மக்கள் மீது திணிக்கின்றார்கள். நினைத்தால் அடிக்கின்றார்கள். நினைத்தால் உடைக்கின்றார்கள். நினைத்தால் கட்டுகின்றார்கள். தமக்கு ஆணையும், அதிகாரமும் தந்த மக்களையோ பிரதேசத்தின் புத்திஜீவிகளையோ இந்த அதிகாரவெறி பிடித்த அரசியல்வாதிகள் ஒரு பொருட்டாகக் கொள்வதேயில்லை.

இவ்வாறான மனித உரிமைகளை மதிக்காத, மார்க்க வரையறைகளை கணக்கெடுக்காத, தான்தோன்றித்தனமாக காட்டுதர்பார் ஆட்சியை எதிர்வரும் காலத்திலும் நமது பிரதேசத்தில் யாரும் முன்னெடுக்கத் துணியக்கூடாது என்பதற்காகவும், அவ்வாறான அராஜகப்போக்குடையவர்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிப்பதற்காகவுமே இம்முறை நான் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

நான் தெரிவு செய்துள்ள கட்சியின் பெயர்கூட வாக்காளர்களான உங்களை அரசர்களாக கௌரவப்படுத்தியுள்ளதை நீங்கள் முதலில் அவதானிக்க வேண்டும்.  இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனுக்கு மாத்திரமே அடிமையாகவும், அச்சப்பட்டவனாகவும், பணிந்தவனாகவும் வாழ வேண்டும்.  இறைவனல்லாத எந்தவொரு தனிமனிதனுக்கும் இறைவிசுவாசமுள்ள சுயமரியாதையுள்ள மனிதனால் ஒரு போதும் பணிந்து, பயந்து, கைகட்டி, தலைதாழ்த்தி ஒரு கணமேனும் வாழ முடியாது.

நமது இல்லங்களிலும், நமது பிரதேசத்திலும் நமது சுய மரியாதையையும், நமது அடிப்படை உரிமைகளையும் ஒரு அரசியல்வாதி அங்கீகரித்தால்தான் அவரால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகளைப்பற்றியும், அவரை நமது அரசியல் பிரதிநிதியாக்குவதைப் பற்றியும் நம்மால் சிந்திக்க முடியும். நமது கடைகளை உடைத்து, நமது கடைகளுக்குத் தீவைத்து, நமது மக்களின் மண்டைகளைப் பிளந்து, நமது மக்களின் முகங்களில் அசிட் வீசி, நமது வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தி காட்டுமிராண்டித்தனமான அரசியல் அராஜகம் புரிவோரின் அபிவிருத்திகள் நமக்கு எதற்கு? அவர்களின் பிரதிநிதித்துவம்தான் எதற்கு?

மக்களின் மண்டைகளைப் பற்றியும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், சேமிப்பு, மூலதனம் போன்றவைகள்பற்றியும் கடுகளவும் கணக்கெடுக்காத இந்த அராஜகவாதக் கும்பல் மீண்டும் மீண்டும் ஆட்சிக் கட்டிலேறி மக்களுக்குச் சண்டித்தனம் காட்டி அவர்களை அடிபணிய வைத்து அவர்களின் உணர்வுகளையும், கருத்துக்களையும் காலில் போட்டுக் கசக்கி மிதித்து சாறு பிழிவதற்கா
நாம் எதிர்வரும் 08ம் திகதி இன்னொரு முறை இவர்களுக்குப் புள்ளடியிட வேண்டும்?

மக்கள் சிந்திக்க வேண்டும். ஓவ்வொரு ஆணும், ஆணாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தனது தந்தை, தனது சகோதரன், தனது கணவன் போன்றவர்கள் யாருக்கும் தலை குனியாதவராக இருப்பதை முதலில் ஊர்ஜிதம் செய்துகொள்ள வேண்டும். ஊரில் இரண்டொரு நபர்கள் மாத்திரம்தான் ஆண்களாக புஜம் நிமிர்த்தி அக்கிரமம் செய்து திரிய ஏனைய ஆண்களெல்லாம் இவர்களை ஏனென்றும் கேள்வி கேட்கத் திராணியற்ற பேடிகளாய் வாழ்வதைவிட இவர்களுடனும், இவர்களது அக்கிரமங்களுக்கு எதிராகவும் போராடி இறப்பது எவ்வளவோ மேல் என்ற அந்த வீர புருஷ இலட்சணம் ஒவ்வொரு ஆண்களின் உள்ளத்திலும் எழ வேண்டும்.

முஃமின்களான இறைவிசுவாசிகளுக்கும், முஸ்லிம்களான சத்திய வழியில் வாழ்வோருக்கும் அநியாயத்தையும் அக்கிரமங்களையும் துணிந்து எதிர்க்கும் வீரகுணம் என்பது இறைவனால் அருளப்படும் ஒரு அருட்கொடையாகும்.

நம்றூதின் அரச தர்பாரை, பிர்அவ்னின் ஆட்சி பீடத்தை, அபூஜஹ்லின் அட்டகாசக் கும்பலையெல்லாம் உங்கள் கற்பனையில் எழுப்பிப் பாருங்கள். எவ்வளவோ வல்லாதிக்கமான சக்திகள் எல்லாம் இவர்களைச் சூழ இருந்தபோதிலும் இறைவிசுவாசிகளான இப்ராஹீமும், மூஸாவும், முஹம்மதும் இன்னும் இவர்கள் போன்ற இலட்சக்கணக்கான நபிமார்கள், தூதர்களும் எவ்வாறு இவர்களைத் தனி மனிதர்களாகவே முதலில் எதிர்க்கத் துணிந்தார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஓவ்வொரு தனிமனிதனின் மாற்றமும், எழுச்சியுமே ஒரு சமுதாயத்தின் ஒட்டு மொத்த மாற்றமும் எழுச்சியுமாகும் என்பதற்கு இவர்களின் வரலாறுகள் சான்றாகும்.

அநியாயத்திற்கும், அக்கிரமங்களுக்கும் எதிராக ஆரம்பத்தில் ஒன்றும், இரண்டுமாக இணைந்த மக்கள் பலம் பின்னர் ஆயிரமாயிரமாகத் திரண்டெழுந்து அவர்களின் அட்டகாசங்களையே சமாதிகளாக்கிய வரலாறுகளை எல்லாம் வெறும் ஏட்டுச் சுரக்காய்களாகவா நாம் கொள்வது? அதில் நின்றும் பட்டறிவு ஞானம் பெற்று நாமும் இக்காலப் பாதகர்களுக்கு பாடம் புகட்டத் துணியக் கூடாதா? நாமென்ன வெறும் பூச்சி புழுக்களா?

என்னுடையதும், எனது பிரதேச மக்களினதும் சுயமரியாதையையும், மார்க்கமும் அரசியல் யாப்பும் உறுதிப்படுத்தும் அடிப்படை உரிமைகளையும், ஊடக சுதந்திரத்தையும் இப்பிரதேசத்தில் நிலை நிறுத்தவும், உறுதிப் படுத்தவும் வேண்டியே நான் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி எனது இக்கோரிக்கையை முன்வைத்து உண்டியல் சின்னத்திற்கும், எனக்கு வழங்கப்பட்ட 5ம் இலக்கத்திற்குமாகப் புள்ளடியிட்டு வாக்குப் பெட்டியில் எனது வாக்கைச் செலுத்துவதன் மூலம் இக்கோரிக்கையை நான் ஜனநாயக வழியில் இப்பிரதேசத்தில் முன் வைக்கின்றேன்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த இன்னுமொரு வாக்காளன் சிந்தனையெழுச்சி பெற்று நமது சமூகத்தின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பி,  நீதியும் நேர்மையுமுள்ள நல்லாட்சி முறையை நாடி அந்த உண்டியல் சின்னத்திற்கும், 5ம் இலக்கத்திற்கும் தனது வாக்குரிமையை வழங்கினால் என்னால் பிரேரிக்கப்பட்டுள்ள இக்கோரிக்கை இன்னொரு பிரஜையால் இம்மண்ணில் அமோதிக்கப்பட்டு உள்ளது என்று அர்த்தமாகும்.

மூன்றாவது பிரஜை ஒருவரும் உண்டியல் சின்னத்திற்கும், 5ம் இலக்கத்திற்கும் வாக்களிப்பாராயின் இக்கோரிக்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.   பத்துப் பேர் வாக்களித்தால்கூட நான் இக்கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்ட இத்தேர்தலில் வெற்றிபெற்றவனாவேன்.

ஓற்றை ரூபா பணத்தைச் செலவளிக்காமல், ஒருவரது வீட்டுக்கும் சென்று வாக்குக் கேட்காமல் மக்களின் சுய மரியாதையையும், சுதந்திர வாழ்வையும் பற்றி என் பேனாமுனை மூலம் இம்மண்ணில் தட்டியெழுப்பி ஒரு நூறு வாக்குளைத்தான் நான் பெற்றாலும்கூட அது என் வாழ்வின் சாதனையாகும்.

நான் பிறந்த மண்ணில் மனதுக்குள் புழுங்கி வாழும் எனது மக்களின் குமுறல்களை வெளிப்படுத்திய பாக்கியமாகும். எனவே இந்த சுய மரியாதை உணர்வை சுதந்திரமான வாழ்வை ஒவ்வொருவரும் தங்களுக்குள் உறுதிப்படுத்திக் கொண்டு அதன்பிறகு பிரதேச அபிவிருத்திகளைப்பற்றியும், கட்டிடங்களைப்பற்றியும், அரபு ராஜ்ய அமைப்புக்களைப் பற்றியும் சிந்தியுங்கள்.

மக்கள் கொத்தடிமைகளாகச் சுருண்டு கிடக்கும் போது இங்கே கட்டிடங்ககள் எதற்கு? காபட் வீதிகள் எதற்கு? ஈச்சந் தோப்புக்கள் எதற்கு? எரியும் மின் அலங்காரங்கள் எல்லாம்  எமக்கு எதற்கு? என்று கேட்கின்றேன். அடாவடித்தனத்திற்கு வாக்குரிமையை வழங்கி அரசியல் அதிகாரத்திற்கு அடிமையாகி விட்டு அபிவிருத்திகளைப் பெறுவதில் எமக்கு என்ன கௌரவம் இருக்கின்றது? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்?

எழுத்தாளனின் கையிலுள்ள பேனாவின் மைத் துளியானது போர் வீரனின் கைகளில் உள்ள வாளில் இருந்து வடியும் இரத்தத்துளியை விட வலிமை வாய்ந்தது என அண்ணல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எமக்கு அருளியுள்ளார்கள்.

எழுத்தளனின் பேனா முனையால் உலகில் எத்தனையோ புரட்சிகளும், எழுச்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. நானும் இன்று உங்கள் கைகளில் இருக்கும் இப்பத்திரிகையுடன் 132 வாரங்களாக இந்தப் பத்திரிகை வெளியீட்டு முயற்சியை எத்தனையோ தாக்குதல்களுக்கும், விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும், எச்சரிப்புக்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் விடாமல் தொடர்ந்து வருகின்றேன்.

இப்பத்திரிகை மூலமாகச் சுட்டிக்காட்டப்பட்ட, வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட பல நூறு விடயங்களுக்காக நானும்தான் சமூகப் பிரக்ஞையுடன் சிந்தித்துள்ளேன். கண் விழித்துள்ளேன். இராப்பகலாகப் பாடுபட்டுள்ளேன். எல்லாத்தரப்பு மக்களுடைய, அமைப்புக்களுடைய சேவைகளையும், குரல்களையும், கோரிக்கைகளையும் இதன் மூலம் வெளிக் கொணர்ந்துள்ளேன். அதனால் நானும்தான் இம்மண்ணை நேசித்துள்ளேன். நானும்தான் இம்மண்ணின் மைந்தனாவேன். என்னைப்போல் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்கள் இம்மண்ணில் வாழ்ந்து வருகையில் ஒருவரை மாத்திரம்தான் இம் மண்ணின் மைந்தன் என்று போற்றப்பட வேண்டுமென்றால் மற்றவர்கள் எல்லாம் இம் மண்ணில் பிறந்த மந்தைகளா? என்றும் கேட்க விரும்புகின்றேன்.

இம்மண்ணில் பிறந்த மக்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இம்மண்ணுக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். ஜாமிஅதுல் பலாஹ்வைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு பிடி அரிசியைச் சேமித்து மாதாந்தம் கொடுத்த இடியப்பம் அவிக்கும் ஆயிரக்கணக்கணக்கான ஆசியத்தும்மாக்கள் இம்மண்ணின் புத்திரிகளில்லையா? பள்ளிவாசல்களைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு நாளைக்கு ஒரு ரூபாவெனச் சேமித்து மாதம் முப்பது ரூபாய் கொடுத்த ஆயிரக்கணக்கான இஸ்மாயில் நானாக்கள்  இம்மண்ணின் மைந்தர்கள் இல்லையா? மையவாடிகளைச் சுற்றி சுவர்களைக் கட்டுவதற்காக தங்களது கூப்பன் புள்ளிகளை வெட்டிக்கொடுத்த வறிய மக்கள் எல்லாம் இம்மண்ணின் மைந்தர்களும், புத்திரிகளும் இல்லையா?

அன்றிலிருந்து இன்றுவரை நமது காத்தான்குடி வீதிகள் எல்லாம் பள்ளமும் படுகுழிகளுமாகத்தான் இருக்கின்றன. அன்றிலிருந்து இன்றுவரை நமது வடிகான்களெல்லாம் இப்படித்தான் உடைந்தும், அடைத்துக் கொண்டும் காணப்படுகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை நமது மத்திய மகாவித்தியாலய மைதானம் இப்படிக் கிறவலாகவே காட்சி தருகின்றது. ஏறத்தாழ பத்து வருடங்களாக புதிய காத்தான்குடிக்கான தபால் நிலையம் கட்டி முடிக்கப்பட்டும் அது மக்களுக்குத் திறந்து வைக்கப்படாமல் இன்னமும் பூட்டப்பட்டே இருந்து வருகின்றது. ஒரு புறாக்கூட்டுக்குள் புதிய காத்தான்குடி மக்களுக்கான தபாலகம் அடைக்கப்பட்டுள்ளது.

இப்படி அன்றிலிருந்து இன்றுவரை பெரும்பாலான காட்சிகள் அப்படியேதான் இருந்து வருகின்றன. ஆனால் நகரசபைத் தேர்தல் வந்தாலும் சரி, மாகாண சபைத் தேர்தல் வந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தல் வந்தாலும் சரி, இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் நாங்கள் அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம். அப்படியாக்குகின்றோம். இப்படியாக்குகின்றோம் என்று பேய்க்கு மந்திரம் ஓதுவதுபோல் அவர்களும் ஓதியோதிக் கேட்பார்கள். எமது மக்களும் அவர்கள் வந்தால்தான் எல்லாம் நடக்கும் என்று நல்லதும் கெட்டதுமாக வாக்குகளைப் போட்டு பெட்டியை நிரப்பும் வேவைலையைத்தான் பார்க்கிறார்கள்.

நான் இந்த மக்களைப் பார்த்துக் கேட்கின்றேன்: தேர்தல் காலம் வந்தால் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி, மூலை முடுக்குகளெல்லாம் அவருடைய ஒப்பீஸ் இவருடைய ஒப்பீஸ் என்று பல அரசியல் கட்சி ஒப்பீஸ் திறக்கிறார்களே..! தேர்தல் முடிந்ததும் படுத்த பாயைச் சுருட்டுவது போலச் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஆட்கள் மாறிவிடுகிறார்களே..! உங்களுடைய பிரச்சினைகளை உங்களின் மக்கள் பிரதிநிதியிடம் அல்லது அப்பிரதிநிதியின் அரசியல் ஒப்பீசுகள் திறந்த பிரதிநிதிகளிடம் போய்ச் சொல்வதற்கோ, உங்களுடைய கோரிக்கை மகஜர்களைக் கொடுப்பதற்கோ, அதனைக் கை நீட்டி வாங்குவதற்கோ, அப்பிரச்சினைகள்மீது உருப்படியான நடவடிக்கைகளை எடுத்து காத்திரமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கோ ஒரு உருப்படியான பிரதேச அரசியல் அலுவலகத்தை நீங்களும் நானும் வாக்களித்த எந்தவொரு அரசியல்வாதியாவது இந்தப் பிரதேசத்தில் நிறுவி அதனைத் தொடர்ச்சியாகச் செயற்படுத்தி வருகின்றாரா? இதிலிருந்தே இவர்களது தேர்தல் காலப் பம்மாத்துக்களை உங்களால் விளங்க முடிவதில்லையா?

வளமான எதிர்காலம் என்று திரும்பும் திசை யெல்லாம் வசனம் பொறித்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்கள். யாருக்கு வளமான எதிர்காலம்? மக்களுக்கா? அல்லது வேட்பாளர்களுக்கா?

மக்களுக்கு என்றால் இதுவரை ஏன் அந்த வளமான எதிர்காலம் முறையாக வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படவில்லை? என்னைப் பொறுத்தவரை ஒன்றுமில்லாத நிலையிலிருந்த சாதாரண நபர்கள்தான் மக்களின் அரசியல் அதிகாரங்களைப் பெற்றதும் இத்தேசத்திலும், இத்தேசத்திற்கு அப்பால் வெளிநாடுகளிலும் நல்ல வளமான எதிர்காலத்தை அடைந்துள்ளார்கள். செல்வத்தில் குளிக்கிறார்கள். பணத்திமிரில் பஞ்சமா பாதகங்களையெல்லாம் இறைவனுக்கும், மறுமைக்கும் அஞ்சாமல் செய்கின்றார்கள். இதுவரை எமது மக்களுக்கு இவர்களால் கிடைக்காத வளமான எதிர்காலமா, இனிவரும் காலத்தில் கிடைக்கப் போகின்றது?

உண்மையான வளமான எதிர்காலமென்றால் அது மக்கள் சுதந்திரமாகவும், சுய மரியாதையாகவும், சபீட்சமாகவும் தத்தம் பிரதேசங்களிலும், வீடுகளிலும் வாழ்வதேயாகும். அதற்கான நிலைமையை மக்களான நீங்களேதான் உங்கள் வாக்கு ஆயுதத்தால் உருவாக்க வேண்டும்.

எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் இப்பிதேசத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்காகப் போட்டியிடும் அரசியல் வியாபாரிகளான வேட்பாளர்களுக்கு மத்தியில் நான் நமதூரில், நமது தெருக்களில் நின்றவனாக நமது மக்களின் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் குரலெழுப்பிப் பேசுபவனாகவும், எழுதுபவனாகவும் மக்களின் சுய மரியாதையை வலியுறுத்தி, மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்தி, ஊடக சுதந்திரத்தை முன்னிறுத்தி வித்தியாசமான கோரிக்கைகளுடன் நோக்கத்துடன் போட்டியிடுகின்றேன்.

எனவே இப்பிரதேசத்திலுள்ள நற்சிந்தனையுடைய, நல்லாட்சியை விரும்புகின்ற, சுய மரியாதையை அடிப்படை உரிமைகளை விரும்புகின்ற, அதிகாரத்தரப்பின் அடக்கு முறைகளால் பாதிக்கப்பட்ட, மனம் வெதும்பிய, தமது தொழில் துறைகளையும் மூலதனங்களையும் சேமிப்புக் களையும் பறிகொடுத்துப் பரிதவிக்கின்ற சகல தரப்பு மக்களையும், கல்விமான்களையும், புத்திஜீவிகளையும், சமூக மாற்றத்திற்கான அரசியல் மாற்றத்திற்கான வேலைத் திட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் சமூக ஆர்வ லர்களையும் எனது கோரிக்கையையும், நோக்கத்தையும் உங்களது கோரிக்கையாகவும், நோக்கமாகவும் கொண்டு உங்களின் ‘உண்டியல்’ சின்னத்திற்கு நேரேயும், 5ம் இலக்கத்திற்கு மேலுமாக இரண்டு புள்ளடிகளை மாத்திரம் இட்டு உங்கள் சுயமரியாதைக்கான வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Courtesy: வார உரைகல் News

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s